search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கபடி போட்டிகள்"

    • போட்டிகள் நடைபெறும் அரங்கத்தில் சாதியை குறிக்கும் வாசகங்கள், பிளக்ஸ் பேனர்கள் வைக்க அனுமதி இல்லை.
    • பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்காத வகையில் போட்டிகள் நடத்தப்பட வேண்டும்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் பகுதிகளில் கபடி போட்டிகள் நடத்தப்படும் போது பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள் குறித்த சிறப்பு ஆலோசனை கூட்டம் காவல்துறை சார்பில் பாவூர்சத்திரத்தில் நடைபெற்றது. இதில் ஆலங்குளம், பாவூர்சத்திரம் பகுதிகளை சேர்ந்த கபடி குழுக்களின் நிர்வாகிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பாவூர்சத்திரம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடத்தப்படும் அனைத்து கபடி போட்டிகளுக்கும் தகுதியான நடுவர்களை நியமிக்க வேண்டும். போட்டிகள் நடக்கும் ஆடுகளங்களில் இரண்டு நடுவர்கள் நியமிக்கப்பட வேண்டும். நடுவர்கள் ஒருதலை பட்சமாக நடந்து கொள்ளக் கூடாது. போட்டிகள் நடத்தும் நேரம் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை என்றும் போட்டிகளை நடத்தும் நபர் அல்லது குழுவில் இருந்து எழுத்துப்பூர்வமாக போட்டி நடத்துவதற்கான உறுதிமொழி கடிதம் பெற வேண்டும்.

    போட்டி நடத்தும் குழுவில் அதன் அணி நேரடியாக இறுதி போட்டியில் அல்லது அரை இறுதிப் போட்டியில் விளையாட அனுமதிக்க கூடாது. போட்டிகள் நடைபெறும் அரங்கத்தில் சாதியை குறிக்கும் அடையாளங்கள், வாசகங்கள், பிளக்ஸ் பேனர்கள் வைக்க அனுமதி இல்லை. சாதிய பாடல்கள், சாதி குறித்த அடையாளங்களை சாதி தலைவர்கள் படம் பொறிக்கப்பட்ட ஆடைகளுக்கு அனுமதி கிடையாது. மேலும் வீரர்கள் மது அருந்தி விளையாட அனுமதிக்க கூடாது என்றும் போட்டிகள் நடைபெறும் போது தேவையில்லாத அசம்பாவித சம்பவங்கள் நடந்தால் அதற்கு போட்டி நடத்துபவர் அல்லது குழுவே முழு பொறுப்பாளர் ஆவார்கள்.

    போலீசார் விதித்துள்ள கட்டுப்பாடுகளை மீறும் பட்சத்தில் போட்டிக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டு போட்டி நிறுத்தப்படும். வருங்காலங்களில் அக்குழுவினர் போட்டிகள் நடத்திட அனுமதி வழங்கப்படாது. பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்காத வகையில் போட்டிகள் நடத்தப்பட வேண்டும். கபடி போட்டி தொடங்குதல் முதல் முடியும் வரை டாக்டர்களுடன் கூடிய ஆம்புலன்ஸ் வாகனம் அங்கு நிறுத்தப்பட வேண்டும். மேற்கண்ட விதிமுறைகளை ஏற்றுக்கொள்ளும் கபடி குழுக்களுக்கு மட்டுமே போட்டிகளை நடத்திட அனுமதி வழங்கப்படும் என முடிவு எடுக்கப்பட்டது.

    இதில் கபடி குழு நிர்வாகிகள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

    ×