search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வில்லிவாக்கம் ஏரி"

    • ரூ.11 கோடியில் புதிய திட்டப்பணிகள் உருவாக்கப்பட்டு உள்ளது.
    • கொசஸ்தலை ஆற்றுபடுகையில் மொத்தம் 22 ஏக்கரில் புதிய குளங்களை உருவாக்க திட்டம் உள்ளது.

    அம்பத்தூர்:

    வில்லிவாக்கம் ஏரி 39 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில் 27.5 ஏக்கர் இடம் மாநகராட்சி வசமும், 11.5 ஏக்கர் இடம் சென்னை குடிநீர் வாரியத்தின் கட்டுப்பாட்டிலும் இருந்தது.

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வில்லிவாக்கம் ஏரி சீரமைக்கப்பட்டு பொழுதுபோக்கு பூங்கா, படகு சவாரி, கண்ணாடி தொங்கு மேம்பாலம் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களுடன் பணிகள் நடந்து வருகிறது. விரைவில் இது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது.

    இதற்கிடையே வில்லிவாக்கம் ஏரிப்பகுதியில் சென்னை குடிநீர் வாரியம் நவீன சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் 3 ஏக்கர் நிலம் போக மீதி உள்ள 8.5 ஏக்கர் இடத்தை சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு இருந்தது.

    இதைத்தொடர்ந்து வில்லிவாக்கம் ஏரியில் தண்ணீர் இருப்பை அதிகரிக்கும் வகையில் ஏற்கனவே சீரமைக்கப்பட்டு உள்ள ஏரியுடன், 8.5 ஏக்கர் நிலத்தையும் சீரமைத்து ஏரியுடன் இணைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது. இதனால் ஏரியின் நீர்பரப்பு அதிகரிக்கும்.

    இதற்காக ரூ.11 கோடியில் புதிய திட்டப்பணிகள் உருவாக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, 'வில்லிவாக்கம் ஏரி 219 ஏக்கரில் இருந்தது. தற்போது இது 39 ஏக்கராக சுருங்கிவிட்டது. இதில் 27.5 ஏக்கர் சென்னை மாநகராட்சியிடமும், மீதி உள்ள இடம் சென்னை குடிநீர் வாரியத்திடமும் இருந்தது.

    தற்போது குடிநீர்வாரியத்திடம் உள்ள 3 ஏக்கர் இடத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது. மீதி உள்ள 8.5 ஏக்கர் நிலத்தை மாநகராட்சி சீரமைத்து ஏரியுடன் இணைக்க திட்டமிட்டு உள்ளது. இதனால் ஏரியின் பரப்பளவு விரி வடைந்து கூடுதல் தண்ணீர் சேமித்து வைக்கலாம்.

    ஏரியில் பல வகையான மீன்களை விடவும் திட்டமிட்டு உள்ளோம். கொசஸ்தலை ஆற்றுபடுகையில் மொத்தம் 22 ஏக்கரில் புதிய குளங்களை உருவாக்க திட்டம் உள்ளது.

    வில்லிவாக்கம் ஏரியில் உருவாக்கப்பட்டு உள்ள கண்ணாடி தொங்கு பாலம் அதிகாரிகளின் பல்வேறு ஆலோசனைகளுக்குப் பிறகு விரைவில் பொது மக்கள் பயன்பாட்டுக்கு வரும். மேலும் அங்கு பொழுதுபோக்கு பூங்கா அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும்' என்றார்.

    ×