search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோடைகால விடுமுறை"

    • 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 5ம் தேதி பள்ளிகள் தொடங்கும்.
    • 2024ம் ஆண்டு மார்ச் 18ல் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு ஆரம்பமாகும்.

    சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடந்தது.

    கூட்டம் முடிந்ததும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் மாதம் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஜூன் 5ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.

    பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் 18ம் தேதி நடத்தப்படும். பிளஸ்-1 பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் 19ம் தேதி தொடங்கி நடைபெறும். 10ம் வகுப்பு பொதுத் தேர்வு அடுத்த ஆண்டு ஏப் ரல் 8ம் தேதி தொடங்கும்.

    அடுத்த கல்வி ஆண்டுக்கான புத்தகங்கள், பொருட்கள் தாமதமின்றி மாணவர்களுக்கு வழங்கப்படும்.

    கொரோனா காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக பள்ளிகளுக்கு அதிக நாட்கள் விடுமுறை விடப்பட்டன. இந்த ஆண்டு பள்ளி வேலை நாட்களான 230 நாட்களிலும் பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆசிரியர்களுக்கு எந்த ஒரு பளுவும் இல்லாமல் இந்த ஆண்டு கல்வி திட்டத்தை முழுமையாக முடிக்கும் வகையில் திட்டம் வகுக்கப்படும்.

    மாணவர்களின் தேர்வுத் தாள் திருத்தும் பணி நடந்து வருகிறது. தனியார் பள்ளி தேர்வுத்தாள், அரசுப் பள்ளி தேர்வுத்தாள் ஆகியவற்றை ஒன்றாக கலந்துதான் மதிப்பெண் கூட்டுவதற்காக வழங்கப்படுகிறது. அப்படி இருக்கும்போது அரசு பள்ளி மாணவர்களுக்கு குறைவாக மதிப்பெண் வழங்கப்படுகிறது என்கிற தகவல் தவறானது.

    ஆசிரியர்கள் திருத்துவது அரசு பள்ளி மாணவரின் தேர்வுத் தாளா அல்லது தனியார் பள்ளி மாணவர்களின் தேர்வுத் தாளா என்பதை கண்டு பிடிக்கவே முடியாது. மதிப்பெண் கூட்டல் முடிந்த பிறகுதான் அது எந்த பள்ளி மாணவரின் தேர்வுத் தாள் என்பதை ஒன்றாக சேர்ப்போம். எனவே இது போன்ற தகவலை நான் முற்றிலுமாக மறுக்கிறேன். மாணவர்கள் எழுதிய விடைகளுக்கு ஏற்ப மதிப்பெண் வழங்கப்படும்.

    தேர்வு முடிவுகள் வெளியாகும்போது மாணவர்கள் அனைவரும் தன்னம்பிக்கை பெறும் வகையிலேயே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்பட அனைவரும் கருத்துக்களை சொல்கிறோம். கடந்த ஆண்டு கூட மாணவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கும் அளவுக்கு கருத்துக்களை தெரிவித்தோம்.

    தேர்வு முடிவுகள் எப்படி வந்தாலும் சரி மாணவர்கள் தன்னம்பிக்கையோடு இருங்கள். உங்கள் திறமைக்கான ஒரு நாற்காலி இருக்கிறது. இதில் முதலமைச்சர் வைக்கும் வேண்டுகோள் ஒன்றே ஒன்றுதான். மார்க் முக்கியம்தான் அதை இல்லை என்று சொல்ல வில்லை, படியுங்கள். உங்கள் தனிப்பட்ட திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். அந்த திறமைதான் என்றைக்கும் நிலைத்து நிற்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்லி இருக்கிறார்.

    மதிப்பெண் குறைந்துவிட்டால் திறமை இல்லையோ என்று கருதிவிட வேண்டாம். உங்களுடைய திறமைக்கேற்ற நாற்காலி எங்கோ ஒரு இடத்தில் காத்துக் கொண்டிருக்கிறது என்ற வகையில்தான் நீங்கள் அதை அணுக வேண்டும்.

    தற்போது வெயில் காலம் தொடங்கி உள்ளது. பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களில் சிறுவர்கள் நீர் நிலைகளுக்கு செல்ல வேண்டாம். விடுமுறை நாளில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அருகில் உள்ள நூலகத்திற்கு அழைத்து செல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×