search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாதா அரசியல்"

    • ‘தாதா அரசியல்’ உத்தரபிரதேசம், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் சர்வ சாதாரணம்.
    • தமிழகத்தில் ‘தாதா அரசியல்’ தலையெடுக்க தொடங்கி இருப்பது பேராபத்து என்று எச்சரிக்கிறார் போலீஸ் அதிகாரி.

    கத்தியை எடுத்தவனுக்கு கத்தியால்தான் சாவு என்பார்கள். அந்த வகையில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் கத்தியை தூக்கி கொலை உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் ஒரு கட்டத்தில் "வேண்டாம் இந்த ரவுடியிசம்" என்று நினைத்து ஒதுங்கி வாழ நினைத்தால் அது நிச்சயம் நடக்காது. அந்த ரவுடி தூக்கிய கத்தி ஏதோ ஒரு நாள் நிச்சயம் அவனையே காலி செய்து விடும்.

    இப்படி ரவுடியாகி.... பின்னர் 'கேங்ஸ்டர்' ஆக உயர்ந்து தாதா போல வலம் வரும் பல ரவுடிகள் தங்களின் பாதுகாப்புக்காக கடைசியாக அடைக்கலம் தேடும் இடமாக அரசியல் களம் மாறி வருகிறது. இதுபோன்ற 'தாதா அரசியல்' உத்தரபிரதேசம், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் சர்வ சாதாரணம். அங்குள்ள அரசியல்வாதிகளில் பலர் குற்றவாளிகளாக... கொலையாளிகளாக இருந்தே பின்னர் எம்.பி., எம்.எல்.ஏ.க்களாக அதிகாரத்துக்கு வந்திருப்பார்கள். சமீபத்தில் உத்தரபிரதேசத்தில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட அத்திக் அகமது மீது பல்வேறு வழக்குகள் இருந்தன. சுயேட்சையாக நின்றும் கூட அவர் வெற்றி பெற்றிருக்கிறார்.

    இவரை போல தாதாவாக வட மாநிலங்களில் அரசியல் செய்தவர்களை பட்டியலிட்டால் அது நீண்டு கொண்டே செல்லும். தமிழக அரசியல் களத்திலும் எதிர்காலத்தில் அதுபோன்ற நிலை ஏற்பட்டு விடுமோ? என்கிற அச்சம் தமிழக காவல்துறை வட்டாரத்தை சமீபகாலமாகவே கலங்கடித்துக் கொண்டிருக்கிறது. சென்னை மாநகரில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் 'லாக்' அப்பில் வைத்து லத்தியில் செமகாட்டு காட்டிய நபர் ஒருவருக்கு தானே பின்நாளில் 'சல்யூட்' அடிக்க நேரிட்டது என்று வேதனையோடு தெரிவித்தார் போலீஸ் அதிகாரி ஒருவர். வடசென்னை பகுதியை சேர்ந்த அந்த நபர் அரசியலில் புகுந்து 'பெரிய ஆள்' ஆன பின்னர், அவரது வீட்டு திருமணத்துக்கு முக்கிய பிரமுகர்கள் பலரும் படையெடுத்துள்ளனர். அப்போது வாசலில் நின்று கொண்டு என்னால் சல்யூட் மட்டுமே அடிக்க முடிந்தது என்றார் அந்த அதிகாரி. இவரைப்போன்று பலரும் எதிர்காலத்தில் உருவாகி விடும் ஆபத்து அதிகமாகவே இருப்பதாக ரவுடி ஒழிப்பு பிரிவில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் ஆதங்கப்பட்டார்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ரவுடிகள் புதிது புதிதாக உருவாவதும், அவர்களை ஒரு கட்டத்தில் கிள்ளி எறிய தவறும்பட்சத்தில்தான் அவர்கள் இஷ்டத்துக்கு ஆட்டம் போடுவதும்... ஒரு கட்டத்தில் பாதுகாப்புக்காக 'அரசியல்வாதி'யாக அவதாரம் எடுப்பதும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதற்குதான் முடிவு கட்ட வேண்டும் என்கிறார்கள் காவல் துறையினர்.

    சென்னையில் உள்ள பிரபல ஜவுளி கடை ஒன்றில் இருந்து எடுத்துச்செல்லப்பட்ட பணத்தை கொள்ளையடித்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருந்த வடசென்னை பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெட்டி படுகொலை செய்யப்பட்டான். போலீஸ் வட்டாரத்தில் ஜவுளி கடையின் பெயரை அடைமொழியாக குறிப்பிட்டே அந்த ரவுடியை அழைத்து வந்தனர். ஒரு கட்டத்தில் வட மாநிலத்தை சேர்ந்த அரசியல் கட்சி ஒன்றில் அந்த ரவுடி அடைக்கலம் ஆனான். கட்சியில் பெரிய செல்வாக்கு பெற்ற அவனை அக்கட்சியின் தமிழக தலைவர் மாவட்ட செயலாளராக்கியும் அழகு பார்த்தார். அதனால் என்ன பயன்? கடைசியில் அந்த ரவுடி எங்கேயோ விட்டு வைத்த பெரும் பகை உயிருக்கு உலை வைத்தது. எதிராளிகள் நேரம் பார்த்து காத்திருந்து 'ஸ்கெட்ச்' போட்டு அந்த ரவுடியை தூக்கினார்கள்.

    கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த ரவுடி ஒருவன் இளம் வயதிலேயே அப்பகுதியில் 'பெரிய தாதா'வாக வலம் வந்தான். முகத்தில் வெட்டுக்காயத்துடன் காணப்படும் அந்த ரவுடி பிரபல கட்சி ஒன்றில் சேர்ந்து பொறுப்புக்கும் வந்தான். அப்பகுதி யை சேர்ந்த அக்கட்சி பிரமுகரே அந்த ரவுடியை அரசியல் கட்சியில் சேர்த்துக்கொண்டு பொறுப்பையும் வாங்கி கொடுத்திருந்தார்.

    கட்சியில் சேர்ந்தவுடன் ரவுடியை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்து "தான் திருந்தி வாழ ஆசைப்படுகிறேன்" என கூறி மனுவும் அளிக்க வைத்தார். ஆனால் இரண்டே நாட்களில் மூலக்கடை சந்திப்பில் வைத்து எதிரிகள் ரவுடியின் மூச்சை நிறுத்தினர். இதுபோன்று தமிழகத்தில் 'தாதா அரசியல்' தலையெடுக்க தொடங்கி இருப்பது பேராபத்து என்று எச்சரிக்கிறார் போலீஸ் அதிகாரி ஒருவர்.

    தனது பெயரை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட அவர் இந்த 'தாதா அரசியல்'வாதிகள் உருவாவதற்கு அரசியல் கட்சி தலைவர்களே காரணம் என்று குற்றம்சாட்டினார். குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறிப்பிட்ட கட்சியில் சேருவதால் எந்த வகையிலும் அந்த கட்சிக்கு லாபம் இல்லை. முழுக்க முழுக்க அது ரவுடிக்கே லாபம் என்று கூறிய அந்த அதிகாரி ரவுடியாக மட்டுமே இருக்கும் ஒருவன் அரசியல் கட்சியில் சேர்ந்த பின்னர், வெளிப்படையாக தனது அதிகாரத்தை காட்ட தொடங்கி விடுவான். அரசியல்வாதியாகும் முன்பு வரையில் திரைமறைவில் பயந்து பயந்து செய்த செயல்களை கட்சி பேனரில் வெளிப்படையாக செய்ய தொடங்கும் ரவுடி தனது குற்றச்செயல்களுக்கு ஆதரவாக சீனியர் தலைவர்களை பேசச் சொல்வது வாடிக்கையாகி விடுகிறது. அது போன்று பேசும் நபர்கள் "போலீஸ் அதிகாரிகளிடம்... இந்த ஒரு தடவை மட்டும் எச்சரிச்சு விடுங்க சார். இனி பிரச்சினை ஏதும் வராம நான் பார்த்துக் கிறேன்" என்பார்கள். ஆனால் இதுவே தொடர் கதையாகி விடும். இப்படி ரவுடியாக மட்டுமே வலம் வந்த நபர் அரசியல்வாதியான பின்னர் செய்வதை யெல்லாம் தூரத்தில் இருந்தே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் எதிராளிகள் நேரம்... காலம் பார்த்து காத்திருப்பார்கள். ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் 'தாதா அரசியல்வாதி' தனியாக சிக்கினால் சின்னா பின்னமாக்கி விடுவார்கள். சென்னையில் அடுத்தடுத்து நடந்த 2 கொலை சம்பவங்களே இதற்கு சமீபத்தைய பெரிய சாட்சிகளாக மாறிப்போயுள்ளன என்று எச்சரிக்கும் போலீஸ் அதிகாரிகள் தமிழகத்தில் பரவி வரும் இந்த புதிய தாதா அரசியலை வேரறுக்க அதிரடி நடவடிக்கைகளை ஏற்கனவே தொடங்கி மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்த நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த தேவையான பணிகளை மேற்கொள்ளவும் போலீசார் ஆலோசித்து வருகிறார்கள். இது தொடர்பாக அரசியல் கட்சி பிரமுகர்களை அழைத்துப்பேசி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    ரவுடிகளை கட்சியில் சேர்ப்பதால் உங்கள் கட்சிக்குத்தான் கெட்ட பெயர் ஏற்படும் என்பதையும், அதுபோன்ற நபர்கள் கொலை செய்யப்படும்போது இவ்வளவு வழக்குகள் உள்ள ரவுடியையா கட்சியில் சேர்த்து வைத்திருந்தார்கள் என பொதுமக்கள் முகம் சுழிக்கும் நிலையும் ஏற்படும் எனவும் போலீசார் கட்சியினரிடம் தொடர்ந்து கூறி வருகிறார்கள்.

    இருப்பினும் தாதா அரசியல் மோகம் ரவுடிகள் மத்தியில் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனை கட்டுப்படுத்த அரசியல் ஆசையுடன் வலம் வரும்போதே ரவுடிகளின் கொட்டத்தை ஒடுக்க போலீசார் அதிரடி காட்ட துப்பாக்கியை தூக்கலாமா என்பது பற்றி ஆலோசித்து வருகிறார்கள். ரவுடிகள் அரசியல்வாதி ஆவது அரசியல் களத்துக்கும் சமூகத்துக்கும் ஆபத்து என்பதை உணர்ந்தே அதிரடி காட்ட ஆயத்தமாகி இருப்பதாக காவல் துறையினர் கண்டிப்புடன் கூறிவருகிறார்கள்.

    தமிழகத்தில் தாதா அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா. . . என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    ×