search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிப்பிக் கறி"

    • எண்ணூர் கடற்கரை, காட்டுப்பள்ளி ஏரிகளில் இந்த மட்டிகள் அதிகம் காணப்படும்.
    • ஏராளமான தொழிலாளர்கள் சிப்பிகளை மூட்டை மூட்டையாக சேகரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

    பொன்னேரி:

    மீன்பிடி தடைகாலம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை நடைமுறையில் இருக்கும். இந்த கால கட்டத்தில் ஆழ்கடலில் மீன்பிடிக்கும் விசைப்படகுகள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்படும். இதனால் மார்க்கெட்டுகளில் பெரியவகை மீன்கள் விற்பனைக்கு வராது. மேலும் மீன்களின் விலையும் வழக்கத்தைவிட சற்று அதிகமாக இருக்கும்.

    இந்நிலையில் பழவேற்காடு மற்றும் மீஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் சிப்பிக்கறி (மட்டி) விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

    இந்த சிப்பிகள் எண்ணூர், காட்டுப்பள்ளி, பழவேற்காடு பகுதிகளில் ஏரிக்கரை ஓரம் அதிகமாக காணப்படும். இதனை தற்போது ஏராளமான தொழிலாளர்கள் சிப்பிகளை மூட்டை மூட்டையாக சேகரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

    ஒருகிலோ சிப்பி ரூ.50 முதல் 60 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனை இல்லத்தரசிகள் போட்டி போட்டு வாங்கி செல்கின்றனர். இது மூல வியாதிக்கு நல்லது என்றும், நோய் எதிர்ப்பு சக்தி இதில் அதிகம் இருப்பதாகவும் நம்பப்படுகிறது. இதனால் தற்போது ஏராளமான பெண்கள் சிப்பிக்கறி விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து சிப்பிக்கறி வாங்கிய பெண்கள் கூறும்போது, சிப்பியை நன்கு கழுவி வேகவைத்தால் இரண்டாகப் பிரியும். பின்னர் அதனுள் இருக்கும் சதைப் பகுதியை எடுத்து மசாலா போட்டு கிரேவி வைத்து சாப்பிட்டால் அதன் ருசி தனிதான். மேலும் கோடை வெயிலுக்கு குளிர்ச்சி. மூல வியாதிக்கு அருமருந்தாகும். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகம் உள்ளது. குழந்தை, கர்ப்பிணி பெண்கள் சாப்பிட்டால் நல்லது. இதனால்அதிகமான பெண்கள் போட்டி போட்டு வாங்கி செல்கின்றனர் என்றார்.

    இதுகுறித்து 5 வருடமாக சிப்பி விற்பனை செய்து வரும் மீஞ்சூரை அடுத்த பட்டமந்திரி பகுதியை சேர்ந்த சாவித்ரி என்பவர் கூறும்போது, சிப்பி எனப்படும் மட்டிக்கறி விற்பனை தற்போது அதிகமாக உள்ளது. எண்ணூர் கடற்கரை, காட்டுப்பள்ளி ஏரிகளில் இந்த மட்டிகள் அதிகம் காணப்படும். இதனை சாப்பிட மூலம் நோய் உள்ளவர்கள் அதிகம் விரும்புவார்கள். உடல் சூடு தணியவும் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் நல்லது. தற்போது மீனின் விலை அதிகம் காணப்படுவதால் மட்டிக் கறியை அதிகமானோர் வாங்குகிறார்கள்.

    இதுகுறித்து மீன்வளத்துறை உதவி இயக்குனர் வேலனிடம் கேட்டபோது பொதுவாக இவற்றை மட்டி என்ற சிப்பி எனவும் பிளாம்ஸ் எனவும் கூறுவார்கள். இவை அண்ணாமலைச்சேரி எண்ணூர் காட்டுப்பள்ளி பழவேற்காடு ஏரிகளில் மண்ணில் புதைந்து கூட்டம் கூட்டமாக காணப்படும். இவற்றைப் பிடித்து சமையல் செய்யும்போது உப்பு தண்ணீரில் மற்றும் மஞ்சள் தண்ணீரில் நன்கு கழுவி சமையல் செய்ய வேண்டும். பச்சை மட்டிக் கறி என்ற வகை ஸ்டார் ஓட்டல்களில் பயன்படுத்தி விற்பனை செய்யப்படுகிறது என்றார்.

    ×