search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிளாஸ்டிக் நுண்துகள்"

    • மனித ரத்தத்தில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் இருப்பதாக கண்டுபிடித்து இருப்பது இதுவே முதல் முறையாகும்.
    • நெதர்லாந்து ஆராய்ச்சியாளர்கள் ஆரோக்கியமாக இருக்கும் 22 பேரை இந்த ஆராய்ச்சிக்கு பயன்படுத்தினார்கள்.

    சென்னை:

    நெதர்லாந்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் புதிய ஆராய்ச்சி ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். அதில் மனித ரத்தத்தில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் இருப்பதை கண்டுபிடித்து உள்ளனர்.

    மனித கழிவுகளில் பிளாஸ்டிக் இருப்பது 3 ஆண்டுகளுக்கு முன்பே ஆராய்ச்சி மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல் பறவைகள், விலங்குகள், கடல்வாழ் உரியிரினங்கள் ஆகியவற்றின் கழிவுகளிலும் பிளாஸ்டிக் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது,

    இந்த நிலையில் மனித ரத்தத்தில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் இருப்பதாக கண்டுபிடித்து இருப்பது இதுவே முதல் முறையாகும். பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர், குளிர்பானம் குடிப்பது, பிளாஸ்டிக் பார்சல்களில் உணவு பொருட்களை வாங்கி சாப்பிடுவது போன்ற காரணங்களால் மனித ரத்தத்தில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் கலப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    நெதர்லாந்து ஆராய்ச்சியாளர்கள் ஆரோக்கியமாக இருக்கும் 22 பேரை இந்த ஆராய்ச்சிக்கு பயன்படுத்தினார்கள். அவர்களின் ரத்த மாதிரிகளை எடுத்து ஆராய்ச்சி செய்தனர். இதில் 17 பேரின் ரத்தத்தில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் இருப்பது தெரியவந்தது. இதில் குளிர்பான பாட்டில்களில் உள்ள பிளாஸ்டிக் 50 சதவீதம் அளவுக்கு கலந்திருப்பது கண்டறியப்பட்டது. இதற்கு அடுத்த படியாக உணவு பார்சல், டீ, காபி கப்புகள், தண்ணீர் பாட்டில்களின் பிளாஸ்டிக் கலந்துள்ளது. மேலும் 23 சதவீத பிளாஸ்டிக், பழங்களை பார்சல் செய்து விற்பனை செய்யும் பிளாஸ்டிக் கழிவுகள் ஆகும்.

    உணவு, தண்ணீர், காற்று மாசு ஆகிய 3 வழிகள் மூலம் பிளாஸ்டிக் நுண்துகள்கள் மனிதனின் உடலில் கலக்கின்றன. இதில் காற்று மாசு என்பது சுவாசத்தின் மூலம் நுரையீரல் வழியாக ரத்தத்தை அடைகிறது. எனவே பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர், குளிர் பானம் பருகுவதை தவிர்க்க வேண்டும்.

    வீட்டில் அதிக பிளாஸ்டிக் பொருட்களை வைத்து இருந்தால் வீட்டை காற்றோட்டமாக வைத்துக்கொள்ள வேண்டும். அப்போது தான் பிளாஸ்டிக் காற்றுமாசுவில் இருந்து தப்பிக்க முடியும்.

    பிளாஸ்டிக்கால் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகள் தான். பிளாஸ்டிக்கால் ஆன பால் பாட்டில்களை பயன்படுத்துவதால் குழந்தைகள் பிளாஸ்டிக் நுண்துகள்களால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

    மனித ரத்தத்தில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் கலப்பது என்பது ஆபத்தானது. மனித ரத்தத்தில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் கலப்பதால் உடல் உறுப்புகளை பாதிக்கும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது. அது என்னென்ன உடல் உறுப்புகளை பாதிக்கும் என்பது தொடர்பாக ஆராய்ச்சியாளர்கள் அடுத்த கட்ட ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ×