search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரணாவ் சல்கர்"

    • இவனுடைய தாயார் சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்று தண்ணீர் எடுத்து வந்துள்ளார்.
    • இதனால், தனது வீட்டின் முற்றத்தில் கிணறு தோண்டினால், தனது தாயாரின் வேதனையை குறைக்க உதவியாக இருக்கும் என நினைத்தான்.

    மகாராஷ்டிரா மாநிலம் பல்கார் தாலுகாவின் கெல்வே என்ற பகுதியில் உள்ள குக்கிராமம் தவான்கேபடா. இங்கு சுமார் 600 பழங்குடியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் வழங்கப்படுகிறது.

    வாரத்தில் ஞாயிறு, செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை ஆகிய மூன்று நாட்கள் மட்டுமே குழாய் மூலம் தண்ணீர் வழங்கப்படுகிறது. ஆனால், மூன்று நாட்களும் சிறிது நேரம் மட்டுமே தண்ணீர் வருமாம். இதனால் அங்கு வசிப்பவர்களுக்கு போதுமான அளவிற்கு தண்ணீர் கிடைப்பதில்லை.

    அந்த கிராமத்தில் பிரணாவ் என்ற சிறுவன் வசித்து வருகிறான். இவனுடைய தாயார் சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்று தண்ணீர் எடுத்து வந்துள்ளார். தினந்தோறும் தனது தாயார் நடந்து சென்று, மீண்டும் அரை கிலோமீட்டர் தூரம் வரை தண்ணீர் சுமந்து கொண்டு வருவதை பார்த்து வேதனை அடைந்தான். இதனால், தனது வீட்டின் முற்றத்தில் கிணறு தோண்டினால், தனது தாயாரின் வேதனையை குறைக்க உதவியாக இருக்கும் என நினைத்தான்.

    தனது தாயார் விவசாயக் கூலி வேலை செய்து, தண்ணீர் சுமப்பதற்கும் கஷ்டப்படுவதை பார்த்த அவனுக்கு கிணறு தோண்ட எண்ணம் வந்தது. இது குறித்து தனது தந்தையிடம் எடுத்துரைக்க அவரும் சம்மதம் தெரிவித்தார்.

    2.5 அடி அகலத்தில் கிணறு தோண்ட தொடங்கினான். ஒரு குறிப்பிட்ட ஆழம் சென்ற பின், கீழே இறங்கி மணலை மேல் கொண்ட வர வேண்டியிருந்தது. இதனால், தானாகவே ஒரு ஏணியை உருவாக்கினான். அந்த ஏணியை பள்ளத்தில் இறக்கி, மணலை மேற்கொண்டு வந்து கிணறாக உருவாக்கினான்.

    சுமார் 6 மீட்டர் தூரம் சென்ற நிலையில் பாறை தென்பட்டது. தனது தந்தை உதவியுடன் பாறையை உடைத்து தோண்ட ஆரம்பித்தான். சுமார் 12 மீட்டர் தொடங்கியதும் தண்ணீர் தென்பட்டது.


    தண்ணீர் தென்பட்டதும், பிரணாவ் சந்தோசத்தில் குதித்தான். அதுவும் 30 அடிக்கு மேலான கிணற்றை ஐந்து நாட்களே தோண்டி முடித்தான். இந்த கிணற்றில் கிடைக்கும் தண்ணீர் தனது வீட்டிற்கும் அருகில் உள்ள வீட்டில் உள்ளவர்களுக்கும் போதுமானதாக உள்ளது.

    இதனால் அருகில் உள்ளவர்கள் தனது தாயார் துயரத்தை போக்க கிணறு தோண்டிய பிரணாவை பாராட்டி வருகிறார்கள். இந்த செய்தி வைரலாக பரவ, பஞ்சாயத்து தலைவர் 11 ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்க, அரசு உதவியுடன் வீடும் வழங்கியுள்ளது.

    ×