search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காஞ்சிபுரம் கோவில்கள்"

    • காஞ்சிபுரத்தில் கோவில்கள் அருகே வாகனங்களை நிறுத்தும் வசதி உள்ள இடங்களை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
    • கோவில் அருகிலேயே வாகனங்களை நிறுத்த இடம் தேர்வு செய்து இருப்பது வரவேற்கத்தக்கது.

    காஞ்சிபுரம்:

    கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன், வரதராஜ பெருமாள்கோவில், உலகலந்த பெருமாள் கோவில், வழக்கறுத்தீஸ்வரர்கோவில், ஏகாம்பரநாதர் கோவில், கைலாசநாதர் கோவில், குமரகோட்டம் முருகன்கோவில் உள்ளிட்ட சிறப்பு பெற்ற தலங்கள் உள்ளன. தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.

    இந்த கோவில்கள் அருகே பக்தர்களின் வாகனங்களை நிறுத்த போதிய இடவசதி இல்லை. இதனால் கோவில் திருவிழாக்கள் மற்றும் முக்கிய நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் வரும்போது வாகனங்களை நிறுத்த முடியாத நிலை நீடித்து வருகிறது. மேலும் பக்தர்கள் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து கோவில்கள் அருகேயே பக்தர்களின் வாகனங்களை தனியாக நிறுத்த இடம் அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

    இதைத்தொடர்ந்து காஞ்சிபுரத்தில் கோவில்கள் அருகே வாகனங்களை நிறுத்தும் வசதி உள்ள இடங்களை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தற்போது வாகனம் நிறுத்தும் இடங்களை கண்டறிந்து தேர்வு செய்து உள்ளனர்.

    வரதராஜப் பெருமாள் கோவிலின் உள்பகுதியில் உள்ள இடம், நகரேஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான மைதானம், உலகளந்த பெருமாள் கோவில் பின்புறம் உள்ள மைதானம், ஒலி முகமதுபேட்டையில் உள்ள இடங்கள் வாகனங்களை நிறுத்த தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் வரதராஜப் பெருமாள் கோவிலில் உள்ள தோட்டத்தை சுத்தம் செய்யும் பணி தொடங்கி உள்ளது. மற்ற இடங்களிலும் பணி விரைவில் தொடங்கும்.

    இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, கோவில் நகரமான காஞ்சிபுரத்திற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வதால், வாகனங்களை நிறுத்த போதிய இட வசதி இல்லாதது பெரும் பிரச்னையாக இருந்தது. சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனவே தற்போது கோவில் அருகிலேயே பக்தர்களின் வாகனங்களை நிறுத்த இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இதனால் காஞ்சிபுரத்தில் இனி நெரிசல் குறையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து பக்தர்கள் கூறும்போது, கோவில் அருகிலேயே வாகனங்களை நிறுத்த இடம் தேர்வு செய்து இருப்பது வரவேற்கத்தக்கது. நீண்டநாள் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது. ஒலி முகமதுபேட்டையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வாகன நிறுத்துமிடம் திறக்கப்பட்டது. இங்கு 250 வாகனங்கள் மட்டுமே நிறுத்த முடியும். இங்கு வாகனங்களை நிறுத்திவிட்டு, பக்தர்கள் நீண்ட தூரம் நகருக்குள் செல்ல வேண்டிய நிலை உள்ளது என்றனர்.

    ×