search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர் வழக்"

    • வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவரிடம் கத்தி முனையில் வழிப்பறி செய்யப்பட்ட சம்பவம் என்பதால் போலீசார் இந்த விவகாரத்தை சீரியசாகவே பார்த்தனர்.
    • ஜெர்மன் வாலிபர் பிரட்ரிச் வின்செண்ட் மீது 182 ஐ.பி.சி சட்ட பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    சென்னை:

    ஜெர்மன் நாட்டை சேர்ந்தவர் பிரட்ரிச் வின்சென்ட். இவர் இந்தியாவை சுற்றி பார்ப்பதற்காக இலங்கையில் இருந்து கடந்த 24-ந்தேதி விமானம் மூலம் சென்னை வந்தார்.

    பின்னர் அன்று நள்ளிரவு 1 மணி அளவில் விமான நிலையத்தில் இருந்து வாடகை காரில் வளசரவாக்கத்துக்கு சென்றார். அங்கு விடுதி ஓன்றில் தங்குவதற்காக அறை எடுத்திருந்த பிரட்ரிச் வின்செண்ட் சாப்பிடுவதற்காக ஓட்டல் அருகில் இறங்கினார். பின்னர் ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு விடுதி அறைக்கு நடந்து சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி பிரட்ரிச் வின்செண்ட் வைத்திருந்த லேப்டாப் , மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் அடங்கிய பையை பறித்து சென்று விட்டதாக தகவல்கள் வெளியானது.

    இது தொடர்பாக ஜெர்மன் பயணி அளித்த புகாரின் பேரில் வளசரவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவரிடம் கத்தி முனையில் வழிப்பறி செய்யப்பட்ட சம்பவம் என்பதால் போலீசார் இந்த விவகாரத்தை சீரியசாகவே பார்த்தனர். இது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து விட்டு விசாரணையை தீவிரப்படுத்தினர். வழிப்பறி சம்பவம் நடைபெற்றதாக ஜெர்மன்காரர் புகாரில் குறிப்பிட்டிருந்த இடம் வளசரவாக்கம் ஸ்ரீதேவிகுப்பம் பகுதியாகும். இதையடுத்து போலீசார் அங்கு சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

    சம்பவம் நடந்ததாக கூறப்படும் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போட்டு பார்த்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் ஜெர்மன் வாலிபரிடம் வழிப்பறி செய்ததற்கான எந்த அடையாளங்களும் தென்படவில்லை. அது தொடர்பான ஆதாரங்களும் சிக்கவில்லை. ஜெர்மன் வாலிபர் கையில் பை எதுவும் இல்லாமல் ஹாயாக நடந்து செல்லும் காட்சிகள் சாலையோர கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பிறகே போலீசார் நன்றாக ஏமாற்றப்பட்டிருப்பதை உணர்ந்தனர். வீடியோ காட்சியை போட்டு காட்டி ஜெர்மன் வாலிபரிடம் விசாரணை நடத்தினர். அதனை பார்த்து அவர் திரு திரு வென முழித்தார். எங்களை பார்த்தால் எப்படி தெரியுது என்று ஜெர்மன் வாலிபரை பார்த்து கேள்வி எழுப்பிய போலீசார் எதற்காக இந்த வேலை என்றும் கேட்டனர். அதற்கு நமட்டு சிரிப்பையே பதிலாக தந்த அவர் சும்மா விளையாட்டுக்கு என்று போலீசை பார்த்து கூலாக கூறி இருக்கிறார்.

    இதைதொடர்ந்து ஜெர்மன் வாலிபர் பிரட்ரிச் வின்செண்ட் மீது 182 ஐ.பி.சி சட்ட பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.அரசு பணியில் இருக்கும் ஒருவரிடம் வேண்டும் என்றே பொய்யை சொல்லி அவரது பணி நேரத்தில் தேவை இல்லாமல் மன உளைச்சலை ஏற்படுத்தும் சட்டபிரிவாகும் இது.

    இதை தொடர்ந்து ஜெர்மன் பயணியின் இந்த செயல் குறித்து முறைப்படி ஜெர்மன் தூதரக அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஜெர்மன் வாலிபரின் செயலால் போலீசார் தேவை இல்லாமல் 2 நாட்கள் சுற்றியது குறிப்பிடத்தக்கது.

    ×