search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டவுசர் கொள்ளையர்கள்"

    • கொள்ளையர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சாவூரில் இருந்து தேனி வந்து குடியிருந்துள்ளனர்.
    • தலைமறைவாக உள்ள மற்றொரு கொள்ளையனை பிடிக்க தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

    தாராபுரம்:

    திருப்பூர், தாராபுரம், கொளத்துப்பாளையம், ராம்நகர், பல்லடம், உடுமலை ஆகிய பகுதிகளில் ஆள் இல்லாத வீடுகளில் கதவை உடைத்து பணம், நகைகள் தொடர்ந்து கொள்ளையடிக்கப்பட்டு வந்தன. இதில் தொடர்புடைய கொள்ளையர்களை பிடிக்க திருப்பூர் போலீஸ் எஸ்.பி., சாமிநாதன் உத்தரவின் பேரில் தாராபுரம் துணை சூப்பிரண்டு கவியரசன் மேற்பார்வையில் தாராபுரம் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் 7 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் கொள்ளை சம்பவங்கள் நடந்த பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி., கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது டவுசர் அணிந்த 3பேர் முகத்தை மறைத்து கொண்டு நடமாடுவது தெரியவந்தது. இதனையடுத்து அந்த அடையாளத்தை வைத்து அவர்களை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

    கடந்த  மார்ச் மாதம் தேனி மாவட்டம் ஜங்கிள்பட்டியை சேர்ந்த முனியன் என்பவரின் மகன் முருகேசன் (வயது 52) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மற்ற 2 பேரையும் பிடிக்க தொடர்ந்து தேடி வந்தனர்.

    நேற்று தாராபுரம் எறக்கம்பட்டி பிரிவு அருகே தனிப்படை போலீசார் திடீர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த வாலிபர் ஒருவரை தடுத்து நிறுத்தினர். ஆனால் அவர் தப்பித்து வேகமாக செல்ல முயற்சித்தார். அவரை மடக்கி பிடித்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் பல்வேறு கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டு வந்த டவுசர் கொள்ளையன் தேனி காமாட்சிபுரம் சந்தன மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த சேகர் மகன் அர்ஜூன் (வயது30) என்பது தெரியவந்தது. இவரின் சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம் ஆகும். கொள்ளையர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சாவூரில் இருந்து தேனி வந்து குடியிருந்துள்ளனர். டவுசர் கொள்ளையர்கள் முருகேசன், அர்ஜூன் மற்றும் தேடப்பட்டு வரும் மற்றொரு நபர் ஆகிய 3 பேரும் உறவினர்கள்.

    இவர்கள் கொள்ளையடிப்பதை குலத் தொழிலாகவே செய்து வந்துள்ளனர். குறிப்பாக கொங்கு மண்டலத்தில் ஈரோடு, நாமக்கல், திருப்பூர், பல்லடம், உடுமலை, தாராபுரம், வெள்ளகோவில் ஆகிய பகுதிகளில் தங்களது கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றியுள்ளனர்.

    3 பேரும் இரவு- பகல் என்று பார்க்காமல் அவர்களுக்கு எந்த ஊரில் கொள்ளையடிக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ அங்கே செல்வார்களாம். ஆள் இல்லாத வீடுகளை நோட்டமிடுவார்களாம். அந்த வீட்டுக்குள் புகுந்து தாங்கள் வைத்திருக்கும் ஆயுதங்களால் பூட்டை உடைப்பார்கள். அப்படி முடியவில்லை என்றால் கதவை உடைத்து உள்ளே போய் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். திருட்டு நேரத்தில் பெரும்பாலும் டவுசர் போட்டுக்கொண்டு தான் செல்வார்கள். இரவில் அடையாளத்தை மறைக்க முகமூடியும் அணிந்து கொள்வது இவர்களின் ஸ்டைல்.

    தற்போது கைதாகியுள்ள டவுசர் கொள்ளையன் அர்ஜூன் மீது கொங்கு மண்டலம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் 26 வழக்குகள் உள்ளது. சிறையில் உள்ள அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்றொரு கொள்ளையனை பிடிக்க தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

    ×