search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருந்துவம்"

    • எந்தவித பின்புலமும் இல்லாமல் தன்னுடைய கடின உழைப்பால் 161 மதிப்பெண்களை பெற முடிந்தது என்று மாணவி கோகிலா பெருமையுடன் கூறினார்.
    • ஒரு வாய்ப்பு கிடைத்தால் நரிக்குறவ சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு மருத்துவ சேவை ஆற்றுவேன் என்றார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகேயுள்ள காரை கிராமம் மலையப்ப நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன்-மஞ்சுளா தம்பதியினர். நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த இந்த தம்பதியின் மகள் கோகிலா.

    ஊசிபாசி மணிகள் விற்று பிழைப்பு நடத்தி வரும் சுப்பிரமணியன் தனது மகளை படிப்பில் உயர்ந்த நிலைக்கு கொண்டு வரவேண்டும் என்ற ஆசையுடன் படிக்க வைத்தார்.

    அதற்கேற்ப தான் சற்றும் சளைத்தவர் அல்ல என்ற நிலையில் கோகிலாவும் படிப்பில் அதிக கவனம் செலுத்தினார். அதன் பிரதிபலனாக தற்போது நீட் தேர்வில் 161 மதிப்பெண்கள் பெற்று நரிக்குறவர் சமுதாயத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் மாணவி என்ற பெருமையை கொண்டுள்ளார்.

    பெரம்பலூரில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளியில் படித்து பிளஸ்-2 தேர்வில் 459 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்த கோகிலாவுக்கு தான் ஒரு டாக்டர் ஆகவேண்டும் என்ற ஆசை துளிர்த்தது.

    பழங்குடியின் மாணவிகள் தேர்ச்சிக்கு 109 மதிப்பெண்கள் போதுமானது என்ற நிலையில் மாணவி கோகிலா 161 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். சராசரி மாணவர்களுடன் ஒப்பிடுகையில் குறைந்த மதிப்பெண்களாக இருந்தபோதிலும் எந்தவித பின்புலமும் இல்லாமல் தன்னுடைய கடின உழைப்பால் 161 மதிப்பெண்களை பெற முடிந்தது என்று மாணவி கோகிலா பெருமையுடன் கூறினார்.

    இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், பல்வேறு சிரமங்களுக்கிடையே ஊசிபாசி விற்று என்னை படிக்க வைத்த பெற்றோருக்கு பெருமை சேர்க்கவும், கல்வி கற்க வறுமையோ, தான் சார்ந்த சமுதாயமோ ஒரு தடையல்ல என்பதை மெய்ப்பிக்கும் வகையில் இந்த நீட் தேர்வை நான் தன்னம்பிக்கையுடன் எதிர் கொண்டேன். அதற்கு தகுந்த பலன் கிடைத்துள்ளது. எனக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்க வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறேன்.

    தற்போது தான் பெற்ற கல்வியை எனது சமுதாயத்தை சேர்ந்தவர்களும் பெறவேண்டும் என்ற எண்ணத்தில் நரிக்குறவ சமூக மாணவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுத்து வருகிறேன். மற்ற நேரங்களில் பெற்றோருக்கு உதவியாக ஊசிபாசி தயாரித்து கொடுக்கிறேன். ஊசிபாதி பிடித்த கையில் ஸ்டெத் தஸ்கோப்பை பிடிக்கும் காலம் வரும் என்று எதிர் பார்க்கிறேன்.

    அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் நரிக்குறவ சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு மருத்துவ சேவை ஆற்றுவேன் என்றார்.

    ×