என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "திருவேற்காடு கருமாரி அம்மன்"
- லிங்க திருவுரு அனைத்து தெய்வங்களின் குறியீடாக திகழ்வது.
- எட்டு லிங்கங்களும் திருவேற்காட்டில் வந்து ஐக்கியமாயின.
சிவம் தனது பார்வையை எண் திசையில் நோக்கியது. எண் திசையிலும் எட்டு லிங்க மூர்த்தங்கள் ஏற்பட்டன.
லிங்க திருவுரு அனைத்து தெய்வங்களின் குறியீடாக திகழ்வது. லிங்கத்தின் அடிப்பகுதி பிரம்மம். மத்திய பாகம் மகாவிஷ்ணு. மேற்பரப்பு ருத்திரன்.
இப்படிப்பட்ட லிங்கம் எண் திசையிலும் எண் வகை லிங்கமாக ஊன்றியது.
1. பார்வதி லிங்கம், 2. நவமணி லிங்கம், 3. பைரவி லிங்கம், 4. சிவநிலை லிங்கம், 5. பூரண லிங்கம், 6. சத்தியமாலிங்கம், 7. காரணி லிங்கம், 8. வாரணி லிங்கம்
அன்னை தானே சிவமாகி அருளாட்சி செய்த போது எட்டு லிங்கங்களும் திருவேற்காட்டில் வந்து ஐக்கியமாயின.
- திருவேற்காடு தலத்துக்கு என்று பல புராண வரலாறுகள் வெளிவந்துள்ளன.
- திருவேற்காடு ஆற்றங்கரை மேட்டில் அவர் புதிய குறிமேடை அமைத்து அருள்வாக்கு கூறினார்.
திருவேற்காடு கருமாரி அம்மன் ஆலயத்தை அடிப்படையாக வைத்து புராண ரீதியாக எத்தனையோ கதைகள் கூறப்படுகின்றன. ஆனால் அவை அனைத்துக்கும் உறுதியான எந்த ஆதாரமும் இல்லை.
ஏனெனில் கருமாரி அம்மன் ஆலயம் இங்கு கட்டப்பட்டு இன்னமும் 100 ஆண்டுகள் கூட ஆகவில்லை.
திருவேற்காடு தலத்துக்கு என்று பல புராண வரலாறுகள் வெளிவந்துள்ளன. திருவேற்காட்டில் உள்ள தேவபுரீஸ்வரர் ஆலயத்துடன் தொடர்புபடுத்தியும் கருமாரி அம்மன் தல வரலாறு எழுதப்பட்டுள்ளது.
ஆனால், உண்மையில் கருமாரி அம்மன், இத்தலம் உருவான இடத்தில் முதலில் குறிமேடையில் அமர்ந்து அருள் வாக்கு கூறியதாக சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் ந.க.மங்கள முருகேசன் தனது ஆய்வு நூலில் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி பார்த்தால் திருவேற்காடு கோவில் கட்டப்படுவதற்கு முன்பே அந்த இடத்தில் ஒரு புற்று இருந்தது என்றும், அங்கு பல நூற்றாண்டுகளாக நாக வடிவில் கருமாரி இருந்து வருவதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதை ஆதாரமாக வைத்தே புராண கதைகளுடன் கருமாரியின் தோற்றம் பின்னிப் பிணையப்பட்டுள்ளது தெளிவாகிறது.
கருமாரி அம்மன் இத்தலத்தில் அருளாட்சி செய்ய எழுந்தது பற்றி மாறுபட்ட சம்பவங்கள், கதைகள் மற்றும் செவி வழி செய்திகள் சொல்லப்பட்டாலும், கருமாரி அம்மன் இத்தலத்தில் ஆண்டாண்டு காலமாக ஆட்சி செய்து வருவதை யாராலும் மறுக்க முடியாது.
இத்தலத்தில் புற்றுக்குள் நாக வடிவமாக இருந்த கருமாரி அம்மன், தன்னை மக்கள் மத்தியில் வெளிப்படுத்தியதை பேராசிரியர் மங்கள முருகேசன் தன் நூலில் தெளிவுப்படுத்தி உள்ளார். குறி சொல்வதன் மூலமாகவே கருமாரியம்மன் தன்னை மக்களிடம் பிரபலப்படுத்திக் கொண்டதாக அவர் எழுதி உள்ளார். அதன் விவரம் வருமாறு:-
சென்னை புறநகர் பகுதிகளில் பழந்தண்டலம் என்ற சிறிய ஊரும் ஒன்று. இந்த சிற்றூர் திருநீர்மலையில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது.
இந்த ஊரைச் சேர்ந்தவர் அலமேலு அம்மையார். வயல்களில் கூலிவேலை செய்து வந்தார்.
கருமாரி அன்னை இந்த ஏழைப்பெண் மூலம் தான் முதன் முதலில் வெளிபட்டாள். வீட்டுக்குள் இருந்த அலமேலு அம்மாள் ஒருநாள் கருநாகம் கடித்து மரணம் அடைந்தார்.
அவரை புதைக்க சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்றனர். அப்போது ஒருவர் திடீரென சாமி ஆடியபடி 'இவள் இறக்க வில்லை கூழ் கரைத்து வாயில் ஊற்றுங்கள் கண் திறப்பாள்' என்றார்.
உடனே ஊர்மக்கள் கூழ் தயார் செய்து அலமேலு அம்மாள் வாயில் ஊற்ற அவர் மீண்டும் உயிர் பெற்று எழுந்தார். மறு வினாடியே அவர் அருள்வாக்கு கூறத் தொடங்கினார்.
'என் நாதன் இட்ட கட்டளைப்படி நான் 21 தலை முறைக்கு இந்த குடும்பத்து வாரிசுகள் மீது இறங்கி அருள்வாக்கு கூறுவேன். என்னை நாடி வருபவர்களுக்கு சாம்பல் அளித்து குறைகளைத் தீர்த்து வைப்பேன்' என்றார்.
கருமாரி அன்னை வெளியிட்ட முதல் அற்புதம் இதுதான். சுமார் 120 ஆண்டுகளுக்கு முன்பு இந்த அற்புதம் நடந்தது.
கருமாரி அம்மன் சொன்னபடி அலமேலு அம்மையார் முதல் தலைமுறையாக கருதப்படுகிறார். அவரது மகன் பூ.பாளையம் சாமி இரண்டாவது தலைமுறையில் கருமாரி அருள் பெற்று குறி சொல்லி வந்தார்.
அவரது மகன் தம்பு சுவாமிகள் மூன்றாவது தலைமுறையில் குறி சொன்னார். இவர் பெருமாளகரத்தில் வசித்தப்படி குறி சொல்லி வந்தார்.
ஒரு தடவை திருவேற்காடு நில உடமையாளர் சித்துக்காடு வையாபுரி முதலியார் என்பவரின் மனைவி கண்ணம்மாள் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிர் பிரியும் தறுவாயில் இருந்தார். அவரை தூக்கி வந்து தம்பு சுவாமி முன்பு கிடத்தினார்கள்.
தம்புசுவாமி பிரம்பால் அந்த பெண் மீது தொட மறு நிமிடம் கண்ணம்மாள் எழுந்து நின்றார். சாம்பலும், கனியும் பெற்ற அவர் நீண்டநாட்கள் வாழ்ந்தார்.
தன் உயிரை மீட்டதால் தம்பு சுவாமி மூலம் குறி சொன்ன கருமாரி அம்மனை வையாபுரி முதலியார் குடும்பத்தினர் கண்கண்ட தெய்வமாக வழிபட்டனர். அவர்கள் அம்மனுக்கு நிலம் தானம் செய்தார். அந்த இடத்தில் சிறு குடிசையில் கருமாரியம்மன் கோவிலை தம்பு சுவாமி உருவாக்கி நிறுவினார்.
1937ஆம் ஆண்டு இது நடந்தது. பூந்தமல்லி துணைப் பதிவாளர் அலுவலகத்தில் இதற்கான பத்திரப்பதிவு நடந்துள்ளது. அந்த பத்திரப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
1937 ஆம் ஆண்டு மே மாதம் 26-ம் தேதி ஸ்ரீபெரும்புதூர் தாலுகா திருவேற்காடு கிராமத்திலிருக்கும் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகராய் எழுத்தருளியிருக்கும் ஸ்ரீ கருமாரியம்மன் தேவஸ்தானத்திற்கு மேற்படி கிராமத்திலிருக்கும் வெள்ளாளர் பயிர் பூவை குழந்தைவேலு முதலியார் குமாரர்கள் கந்தசாமி முதலியார், 1. வையாபுரி முதலியார், 2. மேற்படி தணிகாசல முதலியார் குமாரர்கள் பூவை வேதாசல முதலியார் மைனர் முத்துசாமி மைனர் வைத்தியலிங்கம் இவர்களுக்குக் கார்டியன் தாயார் கண்ணம்மாள் நாங்கள் ஏகோபித்து நல்ல எண்ணத்துடன் எழுதி வைத்த சாசனம்.
கருமாரியம்மன் தேவைக்கு மேற்படி கிராமத்தில் கோயில் இல்லை. மேற்படி கோவில் கட்டி வைப்பதற்காக மேற்படியூர் சேரி பறதம்பு கேட்டபடி நாங்கள் ஒப்புக் கொண்டு எங்கள் குடும்பத்திற்கு பொம்பவும் நன்மையை தர கூடிய மேற்படி கருமாரியம்மன் தேவதையாக இருப்பதால் நாங்கள் 1930 டிசம்பர் 1 சீனிவாசபிள்ளை வகையறாக்களிடம் கிரயம் பெற்ற நிலங்களில் அடியில் கண்ட நிலத்தை மேற்படி தேவதைக்குத் தானமாகக் கொடுத்து சொத்தையும் சுவாதீனம் செய்து விட்டபடியால் இது முதல் மேற்படி கருமாரியம்மனுக்கு கோவில் கட்டி வழிபடலாம்.
இப்பத்திரத்திலிருந்து 1937 ஆம் ஆண்டு வரை திருவேற்காட்டில் கருமாரியம்மன் கோவில் இல்லை என்னும் உண்மை வெளிப்படுகிறது.
அந்த சமயத்தில் நடேசனார், ராமதாசர் இருவரும் தம்பு சுவாமிக்கு உதவி செய்து வந்தனர். அவர்கள் கருமாரி அன்னைக்கு சிலை நிறுவி கோவில் கட்ட முடிவு செய்தனர்.
அன்னையின் வாக்கையும் மீறி நடேசனார், ராமதாசர், இருவரும் மைசூர் மகாராஜாவிடம் பொருள் பெற்று ஆலயம் அமைத்து விடலாம் என எண்ணி மைசூர் சென்றனர். மூன்று தினங்கள் மைசூரில் காத்திருந்தும் மகாராஜாவைக் காண முடியவில்லை. நான்காம் நாள் அரசர் வெளியூர் சென்றுவிட வெறுங்கையுடன் திரும்பினர்.
அன்னையிடம் ஆதிவாரத்தில் அன்பர்கள் சாம்பல் பெற்றபோது ஆலயத்திருப்பணியை ஒருவரிடம் யாசகம் பெற்று நிறைவேற்றுவதை விரும்பவில்லை. அன்பர் காணிக்கை கொண்டு கட்டுங்கள் என்று உத்தரவு கொடுத்தாள்.
1942 ஆம் ஆண்டு கால் கோள் எழுப்பப்பட்டு 1943-ம் ஆண்டு தைப் பூசத்திருநாளில் ஸ்ரீதேவி கருமாரி சிலை வடிவம் பிரதிஷ்டை செய்யப்பெற்றது. சென்னை குயப்பேட்டை கந்தசாமி கோவில் எல்லப்பா ஸ்தபதி பஞ்சலோக விக்ரகங்களைச் செய்தார். திருப்போரூர் கணேசமூர்த்தி ஸ்தபதி கருவறை, சீனிவாசப் பெருமாள் சன்னதி, மகாமண்டபம், மடைப்பள்ளி, திருத்தளம், திருமதில், நவக்கிரகம் முதலியன சாத்திரப்படி கட்டினார்.
8.6.1946 இல் அன்னை கருமாரிக்கும் சுற்றுத் தேவதைகளுக்கும் குடமுழுக்கு நடைபெற்றது. இதுதான் இத்திருக்கோவிலின் முதல் குடமுழுக்கு. இதுதான் ஓலைக் கொட்டகையில் தம்புவினால் எழுப்பப்பட்ட குறிமேடைக் கோவில் எனவும், கருமாரியம்மன் தேவஸ்தானம் எனவும் ஸ்ரீதேவி கருமாரியம்மன் திருக்கோவில் எனவும் அமைந்த எழுந்த வரலாறு.
தம்பு சுவாமியைத் தொடர்ந்து அவரது 2-வது மகன் பரமானந்தம் 4-வது தலைமுறையில் குறி சொல்பவராகவும், அவரது மகன் புண்ணியகோடி சுவாமிகள், 5-ம் தலைமுறையில் குறி சொல்பவராகவும் இருந்தனர். திருவேற்காடு தலத்தில் உள்ள குறிமேடையில் அமர்ந்து அருள்வாக்கு சொல்லி வந்தனர்.
இவர்கள் காலத்தில் சென்னையில் இருந்து ஏராளமான அரசியல் பிரமுகர்கள், சினிமா நட்சத்திரங்கள், வி.ஐ.பி.க்கள் திருவேற்காடு கருமாரி பற்றி கேள்விப்பட்டு அத்தலத்துக்கு படையெடுத்தனர்.
அவர்கள் கேட்ட வரத்தையெல்லாம் அன்னை கருமாரி வாரி, வாரி வழங்கினாள். இதனால் கருமாரியின் புகழ் நாடெங்கும் பரவியது.
மக்கள் அலை, அலையாக வந்து அன்னையின் அருட்சாம்பலை பெற்று சென்றனர். கோவிலும் வளர்ச்சிப் பெற்றது.
இந்த நிலையில் 5-வது தலைமுறையாக குறி சொல்லி வந்த புண்ணிய கோட்டி சுவாமிக்கும் தேவஸ்தான கமிட்டி யாருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் புண்ணிய கோட்டி சுவாமி திருவேற்காடு தலத்தில் இருந்து வெளியேறினார்.
திருவேற்காடு ஆற்றங்கரை மேட்டில் அவர் புதிய குறிமேடை அமைத்து அருள்வாக்கு கூறினார். நடிகர்கள் நாகேஷ், பாலாஜி உள்பட ஏராளமான வி.ஐ.பி.க்கள் அவரை தேடிச் சென்று பலன் பெற்றனர்.
தற்போது அவரது இரண்டாவது மகன் மதுரை முத்து சுவாமிகள் 6-வது தலைமுறையாக அம்மனின் அருள்வாக்கை கூறி வருகிறார் என்று பேராசியர் மங்கள முருகேசன் தன் ஆய்வு நூலில் பதிவு செய்துள்ளார்.
இதன் மூலம் முதலில் குறி மேடையாக இருந்த தலமே சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு- கோவிலாக உருவெடுத்தது தெரிய வருகிறது. கருமாரியின் அருளால் இந்த ஆலயம் காலமெல்லாம் புகழ் பெற்று நீடிக்கும் உன்னதமான சக்தி தலமாக மாறி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்