search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சர்ப்ப வழிபாடு"

    • சுமங்கலிகள் அருகேயுள்ள அம்மன் கோவில்களில் உள்ள புற்றுகளுக்கு ஆடி வெள்ளிக்கிழமைகளில் பால் தெளித்துக் குடும்ப சேமங்களைப் பெறலாம்.
    • ஜென்ம நாக தோஷம் உடையவர்கள் அரசாங்க உத்தியோகத்தில் இருந்தால் கூட, சக நண்பர்களால் இடைஞ்சல் அடைவர்.

    ஆடி மாதம் முழுவதும் நாகதேவி பூஜை என்னும் சர்ப்ப பூஜை செய்வார்கள். இது காலங்காலமாக வழக்கத்தில் உள்ளது. ஆதிசேஷன் என்ற நாகத்தின் மடியில்தான் விஷ்ணு பள்ளி கொண்டுள்ளார். சிவபெருமான் நாகத்தை பூஷணமாகக் கொண்டுள்ளார். சுப்பிரமணிய சுவாமியின் காலடியில் படம் எடுத்தபடி நாகம் உள்ளது.

    சர்ப்ப வழிபாடு வேத காலத்திலேயே இருந்திருக்கிறது. ஜாதக அமைப்பில் நம்மை ஆட்டிப் படைப்பது நவகிரகங்களாகும். இதில் ராகுவும் கேதுவும் நாக வடிவுடையவனாகும்.

    தெரிந்தோ தெரியாமலோ நாம் முற்பிறவியிலே நாகத்தை அடித்துக் கொன்றிருக்கலாம் அல்லது துன்புறுத்தியிருக்கலாம். அதனால் தற்போது பல வகையான சாபத்துக்குள்ளாகித் துன்பத்தை அனுபவித்த வருகிறோம். சிலருக்குக் குழந்தை பாக்கியம் இல்லாமலும், பிறந்த குழந்தைகள் ஊனமுற்றதாகவும், நோயில் வீழ்ந்தும், பிள்ளைகளால் விரட்டப்பட்டும், குடும்பத்தை விட்டுப் பிரிந்து வாடுதலும் போன்ற குறைகள் நாகதோஷத்தினால் ஏற்படுகின்றன. இதிலிருந்து நிவாரணம் பெற அந்த நாக தேவதைகளை மனமுருகி வழிபட்டால், அவற்றின் கருணையைப் பெற்று தோஷ நிவாரணம் அடைந்து, எஞ்சிய நாட்களை நல்ல முறையில் வளமானதாக அமைத்துக் கொள்ளலாம்.

    முதலில் வீட்டில் நாக தோஷம் நீங்கிச் சுகவாழ்வு பெற என்ன செய்யலாம் என்பதைப் பார்ப்போம். நம் மூதாதையர்களால் உருவாக்கப்பட்ட ராகு-கேது கிரகங்களுக்கான கோலங்களை முறையே செவ்வாய், சனிக்கிழமைகளில் பூஜையறையில் பச்சரிசி மாவினால் போட்டு, குத்து விளக்கேற்றி வைத்து, ராகு மற்றும் கேது நாமாவளியால் அர்ச்சித்து (மலரிட்டு), காயத்ரிகளைப் பாராயணம் செய்து வந்தால் தோஷங்கள் விலகி விருப்பங்கள் பூர்த்தியாகும்.

    ராகு தோஷத்தினால் பாதிக்கப்பட்டு திருமணமாகாத பெண்கள், பிரதி ஞாயிறு ராகு காலத்தில் (மாலை 4.30 - 6.00) துர்க்கையை தீபம் ஏற்றி வழிபடுதல் நன்று. இதுபோல் தொடர்ந்து 11 வாரம் செய்து 12-வது வாரம் குங்கும அர்ச்சனை செய்யவும். மணம் கூடிவரும். திருமணமானவர்கள் இல்வாழ்வில் ஏற்படும் பிரச்சினைகளிலிருந்து விடுதலை பெற பிரதி வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் 10.30 - 12.00) தீபம் ஏற்றி வழிபடுதல் நன்று. 108 எலுமிச்சம் பழத்தை மாலையாக்கி அம்மனுக்கு சாற்றி நாகதேவதையை சந்தோஷப்படுத்தலாம்.

    பலவிதமான இன்னல்களால் சிக்கித் தவிப்பது கேது தோஷமாகும். இத்தகையோர் பிரதி செவ்வாய்க்கிழமை பாம்புப் புற்றுக்கு முட்டை, பால் வைத்து விழுந்து வணங்கி வலம் வந்தால் நலம் உண்டாகும்.

    சுமங்கலிகள் அருகேயுள்ள அம்மன் கோவில்களில் உள்ள புற்றுகளுக்கு ஆடி வெள்ளிக்கிழமைகளில் பால் தெளித்துக் குடும்ப சேமங்களைப் பெறலாம்.

    அரச மரத்திற்கு அடியிலோ அல்லது வேப்ப மரத்திற்கு அடியிலோ பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள நாகர்களுக்கு எண்ணெய் தடவி, பால் அபிஷேகம் செய்து மஞ்சள் பூசி, குங்குமம், சந்தனம் இட்டு, மலர் தூவி அலங்காரம் செய்து மஞ்சள் வஸ்திரத்தை (புதிதாக) உடுத்தி, தேங்காய் உடைத்து, வெற்றிலைப் பாக்கு, பழம், சர்க்கரைப் பொங்கலுடன் கற்பூர ஆரத்தி எடுத்து மனதார பூஜித்து வந்தால் சகல நாக தோஷமும் தீரும்.

    தீய பழக்க வழக்கமுள்ள புத்திரர்களைத் திருத்தவும், அவர்கள் நல்ல படிப்பையும் அறிவையும் பெறவும், அம்மனுக்குப் பால் காவடி எடுப்பது நலம் தரும்.

    நாக தோஷத்தினால் ஏற்படும் அவமானங்கள், பெண்களால் உண்டாகக் கூடிய கசப்பான சம்பவங்களிலிருந்து நிவாரணம் பெற்ற, பிரதோஷம் தோறும் மவுன விரதமிருந்து உமாமகேஸ்வரியையும் நாகவல்லி அம்மனையும் பிரார்த்தனை செய்து வரலாம்.

    சிறிய விபத்துக்களால் பாதிக்கப்படுபவர்களும், மனைவியின் தீராத நோய் நீங்கவும், கண் பார்வை சம்பந்தமான நோயால் அவதிப்படுபவரும், கொடுத்த பணம் இடையூறின்றித் திரும்பக் கிடைக்கவும், பல தாரம் ஏற்படாமல் இருக்கவும், ஏமாற்றங்களைத் தவிர்க்கவும், குழந்தைகளிடையே ஒற்றுமையும் சகோதரத்துவமும் ஏற்படவும் ஆடி வெள்ளி தோறும் புற்றுக்கு பால் தெளிப்பது அவசியம். ராகு-கேது ஸ்தலங்களான ஸ்ரீ காளஹஸ்தி, திருநாகேஸ்வரம் போன்ற தலங்களுக்கு ஆண்டிற்கு ஒருமுறையேனும் குடும்பத்துடன் சென்று தரிசித்து வர வேண்டும்.

    ஜென்ம நாக தோஷம் உடையவர்கள் அரசாங்க உத்தியோகத்தில் இருந்தால் கூட, சக நண்பர்களால் இடைஞ்சல் அடைவர். சொந்த தொழிலில் நஷ்டம் அடைவர். இத்தகையோர் பித்ருக்களுக்கு செய்ய வேண்டியவற்றை முறைப்படி செய்து தானம் அளித்தால் நாக தோஷம் நீங்கி நலமடைவார்கள்.

    காலமும் கணவன்-மனைவிக்குள் சண்டை, தொடர்ந்து வரும் நிலை உள்ளவர்கள் வெள்ளி அல்லது செம்பினால் செய்த ஒன்றைத் தலை நாக தேவதை உருவத்தை, வீட்டில் பூஜை அறையில் வைத்து தினமும் பாலாபிஷேகம் செய்து மலர்களால் அல்லது குங்குமத்தால் 41 நாட்கள் அர்ச்சனை செய்து அதை திருநாகேஸ்வரம் கோவில் உண்டியலில் சேர்ப்பித்தால் பலன் கிடைக்கும்.

    ×