search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அம்பிகை"

    • திருமண பாக்கியம் வேண்டி பிரார்த்திப்பவர்கள், மஞ்சள் சரடை வேப்பமரத்தில் கட்டி, வேண்டிக் கொள்ளலாம்.
    • முதல் வார பிரார்த்தனையை திங்கள் அன்று துவங்கினால் 9 வாரங்களும் திங்கட்கிழமையில் கோவிலுக்கு வரவேண்டும்.

    சென்னை அருகில் உள்ள புட்லூரில் அமைந்துள்ள அங்காள பரமேசுவரியம்மன் ஆலயத்தில் ஆடி மாதம் முழுவதும் கோலாகலமாக இருக்கும்.

    திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் வேண்டுவோர், கோவிலில் நீராடிவிட்டு, ஈரத்துணியுடன் அம்மனை வணங்கி, பிராகாரத்தை 11 முறை சுற்றி வந்து வழிபட வேண்டும்.

    குழந்தைப் பேறு வேண்டுவோர் எலுமிச்சைப் பழம் மற்றும் தொட்டிலை எடுத்து வந்து, கோவிலின் உள்ளே இடது புறத்தில் புற்றுக்கு அருகில் உள்ள வேப்பமரத்தில், கட்டிவிட்டு பிரார்த்திக்க வேண்டும். திருமண பாக்கியம் வேண்டி பிரார்த்திப்பவர்கள், மஞ்சள் சரடை வேப்பமரத்தில் கட்டி, வேண்டிக் கொள்ளலாம்.

    கருவறையில் உள்ள புற்று வடிவில் கோலோச்சும் பூங்காவனத்தம்மனது பாதத்தில் எலுமிச்சைப் பழத்தை வைத்து, அப்படியே உருட்டிவிடுவார் பூசாரி. இதை பெண்கள், தங்கள் புடவைத் தலைப்பு அல்லது சுடிதார் துப்பாட்டாவால் ஏந்தி எடுத்துவந்து, கோவில் வளாகத்தில் அமர்ந்து அப்படியே தோலுடன் கடித்துச் சாப்பிட வேண்டும்.

    இதே போல் தொடர்ந்து 9 வாரங்கள் இங்கு வந்து அம்மனை தரிசித்து பிரார்த்திக்க வேண்டும். முதல் வாரம் மட்டுமே தொட்டில் கட்ட வேண்டும் (மஞ்சள் சரடும் அப்படியே!). பிறகு ஒவ்வொரு வாரமும் எலுமிச்சைப் பழம் மட்டும் எடுத்துவந்தால் போதும்!

    செவ்வாய், வெள்ளி மட்டுமின்றி எந்த நாளும் வழிபடலாம்! முதல் வார பிரார்த்தனையை திங்கள் அன்று துவங்கினால் 9 வாரங்களும் திங்கட்கிழமையில் கோவிலுக்கு வரவேண்டும். செவ்வாய்க்கிழமை என்றால், ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமையன்று வரவேண்டும். பக்தர்களில் சிலர், ஆடி மாதம் முழுவதும் பிரார்த்தனையைத் தொடர்வதுண்டு. ஆடிப்பூரம் மிகவும் விசேஷ நாளகும். அன்று பெண்கள் தங்கள் வேண்டுதலை நினைத்து பிரார்த்தனையைத் தொடங்கலாம்.

    • கருவறையில் சாந்தமும், கருணையும் பொங்க, அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறாள் முப்பாத்தம்மன்.
    • நாகதோஷம் உள்ளவர்கள் இங்கே வந்து புற்று வழிபாடு செய்து, முப்பாத்தம்மனை வேண்டிக் கொண்டால், தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.

    சென்னை தி.நகர் பனகல்பார்க் அருகில் முப்பாத்தம்மன் கோவில் உள்ளது. சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதி விவசாய பூமியாகத் திகழ்ந்த போது, முப்பாத்தம்மன் தோன்றினாள்.

    முன்பு இங்கு அரசு மற்றும் வேம்புக்கு நடுவே புற்று வளர்ந்திருந்தது. இதைத்தான் ஆரம்பத்தில் வழிபட்டனராம். பின்னர், முப்போகமும் விளையும் நிலத்தில் இருந்து அம்மன் விக்கிரகத்தைக் கண்டெடுத்தனராம்.

    இதை, புற்றுக்கு அருகில் வைத்து வழிபடவும் தொடங்கினார்கள். முப்போகமும் விளையும் நிலத்தில் இருந்து வந்தால், முப்பாத்தம்மன் என்றனர். இந்த கோவிலின் விசேஷங்களில் பிராகார வலம் வருதலும் ஒன்று! செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் 108 முறை பிராகாரம் வலம் வரும் பக்தர்கள் நிறைய பேர் உள்ளனர். இப்படி 108 முறை வலம் வந்தால் பிரச்சனைகள் அனைத்தும் தீரும் என்பது நம்பிக்கை.

    கருவறையில் சாந்தமும், கருணையும் பொங்க, அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறாள் முப்பாத்தம்மன்.

    'இரண்டு நிமிடம் முழு ஈடுபாட்டுடன் நமது பிரார்த்தனையை அம்மனிடம் வைத்து வேண்டிக் கொண்டால் போதும். நினைத்தது நிறைவேறும்' என்கின்றனர் பக்தர்கள்.

    நாக தோஷம் உள்ளவர்கள் இங்கே வந்து புற்று வழிபாடு செய்து, முப்பாத்தம்மனை வேண்டிக் கொண்டால், தோஷம் விலகும் என்பது நம்பிக்கை. எலுமிச்சைப் பழத் தோலில் நெய் விளக்கு ஏற்றி வைத்து, செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமை என ஒன்பது வாரங்கள் தொடர்ந்து முப்பாத்தம்மனை வழிபட்டு வந்தால், விரைவில் திருமண பாக்கியம் கைகூடும். குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவர் என்பது நம்பிக்கை. ஆடி மாத விசேஷ நாட்களில் குறிப்பாக ஆடிப்பூரம் தினத்தன்று எலுமிச்சை மாலை அணிவித்து அம்மனை வேண்டிக் கொண்டால் தீராத நோயையும் தீர்த்து வைப்பாள் முப்பாத்தம்மன்.

    • ஆலயத்தின் மகிமையே, அம்மன் சுயம்புவாக வடிவெடுத்து இருப்பதுதான்.
    • நாகதோஷம் இருப்பவர்கள் முண்டகக்கண்ணி அம்மனை வழிப்பட்டு, நாகக்கன்னி சிலை பிரதிஷ்டை செய்வதாக வேண்டிக்கொள்கிறார்கள்.

    நாகதோஷம் நீங்குவதற்கு தமிழ்நாட்டிலேயே சக்திவாய்ந்த தலமாக விளங்கிவரும் முண்டகக்கண்ணி அம்மன் திருக்கோயில் சென்னை மயிலாப்பூரில் அமைந்திருக்கிறது. சென்னைப் பட்டணம் தோன்றுவதற்கு சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்த அம்மன் அவதரித்ததாக ஆலய வரலாறு கூறுகிறது. ஆனால், அதையும் தாண்டி பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே தோன்றியிருக்கக் கூடும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். இந்த ஆலயத்தின் மகிமையே, அம்மன் சுயம்புவாக வடிவெடுத்து இருப்பதுதான்.

    நாகதோஷம் இருப்பவர்கள் முண்டகக்கண்ணி அம்மனை வழிப்பட்டு, நாகக்கன்னி சிலை பிரதிஷ்டை செய்வதாக வேண்டிக்கொள்கிறார்கள். அதன்பிறகு, 48 நாட்களுக்கு நீரிலேயே நாகக்கன்னியை வைத்திருந்து, அதை ஆலயத்தின் முகப்பில் இருக்கிற மரத்தடியில் பிரதிஷ்டை செய்து, அதற்கு பாலாபிஷேகமும் வழிபாடும் நடத்தி வழிபடுவது இந்த ஆலயத்தின் விசேஷம். அதேபோல ஆடி மாதம் அம்மனுக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம் காப்பு மற்றும் அன்னாபிஷேகம் செய்வதும் இங்கு விசேஷம்.

    ஆடிப்பூரத்துக்கு 1008 மலர் கூடைகள் எடுத்துவந்து அம்மனுக்கு பூச்சுடுதல் நடக்கும். நவராத்தி 10 நாளும் உற்சவ புறபாடு இருக்கும். 10 நாளும் 10 அலங்காரத்தில் அம்மன் காட்சி தருவாள். எல்லா விசேஷ நாளிலும் அம்மனுக்கு தங்கக் கவசம் சாற்றி வழிபாடு நடக்கும்.

    • அம்பிகைக்கு வளையல்கள் சார்த்தியும் வழிபாடுகள் நடைபெறும்.
    • வளைகாப்பு நிகழ்ச்சி என்பது கர்ப்பமான பெண்ணுக்கு மகிழ்ச்சியூட்டும் விதமாக, உறவினர்கள் புடைசூழ வாழ்த்துவார்கள்.

    ஆடி மாதம்-அம்பிகைக்கு உகந்த மாதம். மாரியம்மன் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும் காலம்.

    ஆடி மாதத்தில் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு கிழமைகள் இணைந்தால் அந்நாள் வழிபாட்டுக்கு மிகவும் உகந்தது. (ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி ஞாயிறு.)

    அந்த வகையில் ஆடிப்பூரம் தினத்தன்று அம்பிகை கருவுற்று இருப்பதை முளைப்பயிற்றை அம்பிகையின் வயிற்றில் பிணைத்து, கருக்கோலம் கொண்டிருப்பதாக எண்ணி பிரார்த்தனை செய்வார்கள்.

    முளைப்பயிறின் வடிவமும், நுண்ணோக்கியில் தெரியும் உயிரணுவின் வடிவமும் ஒன்று போலவே இருப்பதைக் காணுங்கள். ஆன்றோர்கள், இவற்றை அறிந்திருந்ததால், இப்படி ஒரு ஏற்பாட்டினைச் செய்திருப்பார்களோ?

    நூற்றுக்கணக்கான முளைப் பயிற்றை ஒரு துணியில் கட்டி, அதை அம்பிகையின் வயிற்றில் பிணைப்பார்கள். முளைப் பயிறு கட்டுவது, வம்ச அபிவிருத்திக்காகவும், நற்குழந்தைப் பேற்றுக்காகவும் கட்டப்படுவது ஆகும்.

    அம்பிகைக்கு வளையல்கள் சார்த்தியும் வழிபாடுகள் நடைபெறும். அகிலாண்ட நாயகிக்கு வளையல்களாலேயே அலங்காரம் செய்து வழிபடும் நாள் ஆடி மாதத்தில், பூரம் நட்சத்திரம் இணையும் நாள் ஆகும்.

    வளைகாப்பு நிகழ்ச்சி என்பது கர்ப்பமான பெண்ணுக்கு மகிழ்ச்சியூட்டும் விதமாக, உறவினர்கள் புடைசூழ வாழ்த்துவார்கள்.

    கர்ப்ப காலத்தில் பெண்ணுக்கு எவ்வித கஷ்டங்களும் உண்டாகதவாறு பார்த்துக் கொள்வார்கள்.

    கருக்கொண்ட காலம் பிள்ளைப் பேற்றுக்கு பூர்வ (முந்தைய காலம்). ஆடி மாதத்தில், பூர்வ பல்குனி எனும் பூரம் நட்சத்திரம் இணையும் நாள் ஆடிப்பூரம்.

    இந்த ஆடிப் பூர தினத்தில் தான் அம்பிகைக்கு வளைகாப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும். அம்பிகை வளையல் அலங்காரத்தின் மனம் மகிழ்ந்து, நெஞ்சம் நிறைந்து, தன் மக்கள் அனைவருக்கும் அருள் பாலிப்பாள்.

    அம்பிகைக்கு வளையல்கள் வழங்கி சார்த்துவதும், வளையல் காப்பு அலங்காரத்தை தரிசனம் செய்வதும்- அற்புதமான பலன்களை வாரி வழங்கக் கூடியது, ஆனந்தத்தை வழங்கக்கூடியது. வளமான வாழ்க்கையை வழங்கக்கூடியது.

    • நாகப்பட்டினம் சிவன் கோவில் 64 சக்திப் பீடங்களுள் ஒன்றாகும்.
    • ஆண்டாள் அவதரித்த துளசி தோட்டத்தில் ஆண்டாளுக்கு ஒரு சன்னதி இருக்கிறது. சன்னதியின் முன்னால் துளசிமாடம் உள்ளது.

    அம்மனுக்கு வளைகாப்பு:

    ஆடிப்பூர தினத்தில் தான் தமிழ்நாடு முழுவதும் உள்ள அம்மன் கோவில்களில் அம்பிகைக்கு வளைகாப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும். அம்பிகை வளையல் அலங்காரத்தின் மனம் மகிழ்ந்து, நெஞ்சம் நிறைந்து, தன் மக்கள் அனைவருக்கும் அருள்பாலிப்பாள்.

    அம்பிகைக்கு வளையல்கள் வழங்கி சார்த்துவதும், வளையல் காப்பு அலங்காரத்தை தரிசனம் செய்வதும் அற்புதமான பலன்களை வாரி வழங்கக் கூடியது, ஆனந்தத்தை வழங்கக்கூடியது, வளமான வாழ்க்கையை வழங்கக் கூடியது.

    அம்பிகைக்கு வளைகாப்பு:

    மனம்போல் மாங்கல்ய பாக்கியமும், பேர் சொல்ல பிள்ளை வரமும் பெற்றுத் தரும் திருநாள்தான் ஆடிப்பூரம். அன்று அம்பிகை பூப்பெய்தினாள் என்று புராணங்கள் கூறுகின்றன. அன்றைய தினம் அவளுக்கு, தங்கள் வீட்டு பெண் போல் வளைகாப்பு வைபவமும், பூப்பெய்தருது சாந்தியும் செய்வார்கள்.

    திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோவிலில் உள்ள வளைகாப்பு மண்டபத்தில் ஆடிப்பூரத்தன்று அம்பாளுக்கு வளைகாப்பு விழா வெகு விமரிசையாக நடைபெறும். இதில் பெண்கள் கலந்து கொண்டு, அம்மனுக்கு படைக்கப்படும் வளையல்களை வாங்கி அணிந்தால் நினைத்த பிரார்த்தனை நிறைவேறும்.

    ஆண்டாளுக்கு கள்ளழகரின் பரிசு:

    ஆடிப்பூரத்தையொட்டி ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெறும் தேரோட்டம் சிறப்பு பெற்றதாகும். அந்த தேரோட்டத்தின் போது, மதுரை கள்ளழகர் கோவிலில் இருந்து அனுப்பப்படும் பட்டுப் புடவையையே ஆண்டாளுக்கு அணிவிப்பார்கள். திருமணத் தடை உள்ள கன்னிப் பெண்கள் ஆடிப்பூரம் அன்று ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்து ஆண்டாளை தரிசனம் செய்தால் அவர்களுக்கு மாங்கல்ய பாக்கியம் உடனே கிடைக்கும் என்கிறார்கள்.

    தம்பதியர் ஒற்றுமை அதிகரிக்க...:

    ஆடித்திருவிழாவின் 7-ம் நாளான இரவு ஆண்டாளின் மடியில் சயனித்த கோலத்தில் ரெங்க மன்னார் காட்சி தருவார். ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் இந்த நிகழ்ச்சி நடக்கும். இந்த அரிய காட்சியை தரிசிக்கும் தம்பதியர் இடையே மேலும் ஒற்றுமை பலப்படும் என்கிறார்கள்.

    கன்னிப் பெண்களுக்கு தாம்பூலம்:

    நாகப்பட்டினம் சிவன் கோவில் 64 சக்திப் பீடங்களுள் ஒன்றாகும். இங்கு கோவில் கொண்டுள்ள நீலாயதாட்சி அம்மன் கன்னி தெய்வமாக அருள்பாலிக்கிறாள். அன்று 9 கன்னிப் பெண்களை அழைத்து வந்து அமர்த்தி, தாம்பூலத்துடன் சீப்பு, குங்குமச் சிமிழ், கண்ணாடி, வளையல், ரவிக்கைத் துணி போன்றவற்றைக் கொடுத்து, மஞ்சள் கயிறும் கொடுப்பார்கள்.

    மஞ்சள் கயிறு பிரசாதம்:

    ஆண்டாள் அவதரித்த துளசி தோட்டத்தில் ஆண்டாளுக்கு ஒரு சன்னதி இருக்கிறது. சன்னதியின் முன்னால் துளசிமாடம் உள்ளது. இதில் இருக்கும் மண்ணை பக்தர்கள் சிறிதளவு எடுத்து கொள்கிறார்கள். இந்த மண்ணை வீட்டில் வைத்தால் தேவையான நேரத்தில் செல்வம் கிடைக்கும் என நம்புகின்றனர்.

    சிலர் இந்த மண்ணை நெற்றியிலும் பூசி கொள்கிறார்கள். ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் சிலைக்கு அணிவிக்கப்படும் மாலையை வாங்கி பெண்கள் தங்கள் கழுத்தில் அணிந்து கொண்டு அருகில் இருக்கும் கண்ணாடி கிணற்றை சுற்றி வருகிறார்கள்.

    தொடர்ந்து கிணற்றை எட்டிப் பார்த்து விட்டு பின் மீண்டும் ஆண்டாளை வழிபடுகிறார்கள். இவ்வாறு வழிபடுகிறவர்களுக்கு கோவில் சார்பில் வளையல், மஞ்சள் கயிறு பிரசாதமாக கொடுக்கின்றனர். இதனால் தடைப்பட்ட திருமணங்கள் நடக்கும் என்பது நம்பிக்கை.

    ×