என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நிசும்பசூதனி"
- தஞ்சையில் வடபத்ரகாளியாக அருள்பாலித்துக் கொண்டு இருப்பவள்தான், நிசும்பசூதனி.
- அன்னை, திருமுடியில் தீச்சுவாலையைக் கொண்டு அருள்கிறாள்.
அன்னை பராசக்தியானவள், துர்க்கையாக, காளிதேவியாக என்று பல்வேறு வடிவங்கள் எடுத்து, தீமையின் உருவமாகத் திகழ்ந்த பல அரக்கர்களை வதம் செய்தாள் என்று தேவி மகாத்மியம் சொல்கிறது.
வாழ்வில் வெற்றி, தோல்வி சகஜம் என்றாலும், அனைவரும் தெய்வத்திடம் வேண்டுவது 'செய்யும் செயல்களில் வெற்றிபெற அருள்புரிய வேண்டும்' என்பதைத்தான். அப்படி சோழர்களுக்கு வெற்றியை தேடித் தந்து இன்றும் தஞ்சையில் வடபத்ரகாளியாக பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டு இருப்பவள்தான், நிசும்பசூதனி.
தல வரலாறு
முன்னொரு காலத்தில் சும்பன், நிசும்பன் என்ற இரு அரக்கர்கள், மக்களையும், தேவர்களையும், ரிஷி முனிவர்களையும் துன்புறுத்தி வந்தனர். இவர்களின் கொடுஞ்செயல் தாளாது அனைவரும் பார்வதி தேவியை நாடிச் சென்றனர்.
அன்னையும், அந்த அரக்கர்களை அழிக்க 'கவுசீகி' என்ற அழகிய பெண் வடிவம் எடுத்து வந்தாள். அவள் அழகைக் கண்டு மயங்கிய சும்ப, நிசும்பர்கள், அவளை மணக்க எண்ணினர். ஆனால் அன்னையோ, "இருவரில் யார் மிகுந்த பலசாலியோ அவர்களையே மணப்பேன்" என்று கூறினாள்.
இதையடுத்து சும்ப, நிசும்பர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு அழிந்து போயினர். அவர்கள் அழிவுக்கு காரணமானதால், இந்த அன்னையை 'நிசும்பசூதனி' என்று அழைத்தனர்.
சோழர்களால் குலதெய்வமாக வணங்கப்பட்டவள், இந்த நிசும்பசூதனி. கி.பி. 850-ல் உறையூரில் சிற்றரசனாக பதவி ஏற்ற விஜயாலய சோழன். பின்பு தஞ்சையை ஆண்ட முத்தரையர்களை வீழ்த்தி, பழையாறையில் இருந்து தஞ்சைக்கு தலைநகரை மாற்றினார். அங்கே தனது வெற்றிக்கு காரணமான நிசும்பசூதனி தேவிக்கு கோவில் எழுப்பினார்.
பின்பு வந்த ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் என அனைத்து சோழ மன்னர்களும் போருக்கு செல்வதற்கு முன்னர், இந்த அம்மனை வணங்கி விட்டு சென்று வெற்றியுடன் திரும்பினர். தங்கள் வெற்றிக்கு காரணமான நிசும்பசூதனியை குல தெய்வமாக வழிப்பட்டனர். இவளே தஞ்சையை காக்கும் காவல் தெய்வம் ஆனாள்.
சோழர்கள் நிர்மாணித்த தஞ்சை நிசும்பசூதனி ஆலயம் 1100 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. கருவறையில் 7 அடி உயரத்தில், மெலிந்த தேகம், உடல் சதையற்று எலும்புகள் வெளியே தெரியும்படியான தோற்றத்தில் காட்சி தருகிறாள்.
அஷ்ட திருக்கரங்களுடன் திகழும் இந்த அன்னை, திருமுடியில் தீச்சுவாலையைக் கொண்டு அருள்கிறாள். நிசும்பனின் தலையைக் கொய்து, அந்த தலை மீது தன் திருவடியை வைத்து, தெற்று பற்கள், முப்புரி நூலாக மண்டை ஓடுகள், திரிசூலம் ஆகியவற்றை தாங்கியபடி, அமர்ந்த நிலையில் காட்சியளிக்கிறாள். எட்டு கரங்களில் சூலம், கேடயம், வாள், தனுசு, அம்பு, கபாலம், பாசம், மணியை தாங்கி இருக்கிறாள்.
இந்த கோவில் முன் மண்டபம், கருவறையுடன் கூடிய விமானத்துடன் அமைந்துள்ளது. முன்மண்டப முகப்பில் அம்மனின் அமர்ந்த கோலத்திலான உருவம் காணப்படுகிறது. 55 ஆண்டுகளுக்குப் பின்னர் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு 2016-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோவில்களில் இக்கோவிலும் ஒன்றாகும்.
இக்கோவிலுக்கு தொடர்ந்து 9 வாரங்கள் செவ்வாய்க்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் வழிபாடு செய்தால், ராகு - கேது தோஷங்களான தார தோஷம், செவ்வாய் தோஷம், களத்திர தோஷம், திருமணத் தடை போன்றவற்றுக்கு நிவர்த்தி கிடைக்கும்.
இதேபோல, தொழில், வேலை போன்ற காரியத்தில் தடைகள் இருந்தாலும், தொடர்ந்து 9 வாரங்கள் செவ்வாய் அல்லது வெள்ளி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் சென்று வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும். பெரிய இன்னல்கள் ஏற்படும்போது, பசும்பாலால் அம்பாளுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் நிவர்த்தியாகிவிடும்.
இக்கோவிலில் தை மாதம் முதல் வெள்ளிக்கிழமை தொடங்கி கடைசி வெள்ளிக்கிழமை வரை, 21 நாட்களுக்கு ஆண்டு திருவிழா விமரிசையாக நடைபெறும். இதில் பால்குடம் எடுத்தல், தீச்சட்டி ஏந்துதல், அலகு குத்துதல் உள்ளிட்ட பல்வேறு உற்சவங்கள் நடைபெறுவது வழக்கம்.
இதேபோல, ஆடி வெள்ளிக்கிழமைகள், மாசி மகம், நவராத்திரி, பவுர்ணமி, தேய்பிறை அஷ்டமி, அமாவாசை ஆகிய நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆலயம் காலை 8 மணி முதல் 11 மணிவரையும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையும் திறந்திருக்கும்.
அமைவிடம்
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து கீழவாசல் பகுதிக்குச் சென்று பூமால் ராவுத்தர் கோவில் தெரு வழியாக இக்கோவிலை சென்றடையலாம். தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து ஏறத்தாழ 2 கி.மீ. தொலைவில் உள்ளது.
- சோழ தேசத்து மக்களால் தலையில் வைத்து கொண்டாடப்பட்ட தெய்வம் “நிசும்பசூதனி”
- தேவி காளியாக கௌசீகி எனும் பெயரோடு வெளிப்பட்டு அசுரர்களை வதைத்தாள்.
தமிழகத்தில், இன்று பிளாஸ்டிக் பைகள் மிதக்க பாய்ந்து கொண்டிருக்கும் அதே காவிரி ஆற்றங்கரையில் நாம் கற்பனை கூட செய்து பார்க்காத அளவிற்கு ஆயிரம் வருடங்களுக்கு முன் அற்புதமான நாகரீகம் ஒன்று தழைத்து செழித்திருந்தது. இன்றைக்கு இருக்கும் சாமானிய மக்களை விட அதிக நேர்மையாகவும் நாணயமாகவும் அறிவாற்றல் மிகுந்தவர்களாகவும் அவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.
போரில் அவர்களை அவ்வளவு எளிதில் யாராலும் வெல்ல முடியாது. கட்டிடங்களை அவர்கள் போல் பிரம்மாண்டமாக எழுப்ப முடியாது. கல்லிலும், உலோகங்களிலும் அவர்களைப் போல் கலை வளர்க்க முடியாது, விவசாயம் அவர்களை போல் செய்ய முடியாது.
இப்படி எல்லா வளங்களையும், நலன்களையும் குறைவில்லாமல் அந்த காவிரிக்கரை மக்கள் பெற "நிசும்பசூதனி" என்ற பெண் தெய்வம் துணையாய் இருந்திருக்கிறாள். விஜயாலயச் சோழன் முதல் ராஜராஜன், ராஜேந்திரன் என்று மாபெரும் சோழ அரசர்கள் போருக்கு செல்லும் முன்னரும், கோயில்களை எழுப்பும் முன்னரும் இந்த காளியை வணங்கிச் சென்றுள்ளனர்.
சோழ தேசத்து மக்களால் தலையில் வைத்து கொண்டாடப்பட்ட தெய்வம் அவள். யார் அந்த "நிசும்பசூதனி" பேரரர்சர்கள் வணங்கும் அளவிற்கு அப்படி என்ன சிறப்பு? இன்று எங்கிருக்கிறாள்?
சோழ சாம்ராஜ்யம் பற்றி இன்றும் நாம் பேச காரணம் சாக்த வழிபாடு. ராஜேந்திர சோழனின் திருவாலங்காட்டு செப்பேடுகளின்படி கடைச்சோழர் வம்சத்தைத் தோற்றுவித்த 'விஜயாலயன்' தன் தலைநகரை பழையாறையில் இருந்து தஞ்சைக்கு மாற்றிக் கொண்ட போது, அந்த நகரின் கிழக்கில் அமைந்திருந்த நகரப் பகுதியில் தன் குலதெய்வமான நிசும்பசூதனிக்கு ஓர் ஆலயம் எடுப்பித்தான் என்பது தெளிவாகிறது.
இன்று கீழ வாசலில் உள்ள பூமால் ராவுத்தன் கோயில் தெருவில் உள்ள "ராகு கால காளி" என்ற பெயரில் உள்ள "நிசும்பசூதனி", மற்றொன்று "குயவர் தெருவில்" எழுந்தருளியிருக்கும் "உக்கிர காளி அம்மன்" என்ற பெயரில் உள்ள "நிசும்பசூதனி".
இதில் எது விஜயாலயன் எழுப்பிய "நிசும்பசூதனி" ஆலயம் என்ற சர்ச்சை இன்று வரை இருந்தாலும் நாம் இவ்விரண்டிலும் காலம் விழுங்கிய தன்மையினை உணரலாம்.
புராணம்:
சும்பன், நிசும்பன் எனும் அசுரர்களின் அட்டகாசத்தை பொறுக்க முடியாத தேவர்கள் தேவியை நோக்கி துதித்தனர். தேவி காளியாக கௌசீகி எனும் பெயரோடு வெளிப்பட்டு அசுரர்களை வதைத்தாள். அதனாலேயே "நிசும்பசூதனி" எனும் பெயர் வழங்கப்படுகிறது. இது நாம் அறியும் புராணக் கதை.
நாம் ஏற்கெனவே கண்டது போல விசயாலயன் எதிரிகளை ஒழித்து தஞ்சையையும், வல்லத்தையும் வென்று சோழப் பேரரசை நிறுவியதால், அந்தக் கருத்தமைப்புடன் இந்தத் தேவியின் சிற்பத்தை அமைத்திருக்கலாம் என்பது வரலாற்று ஆராய்ச்சியாளர்களின் கருத்து.
முகத்தில் ஆவேசம் பொங்க சும்பனை ஒரு காலிலும் நிசும்பனை மறு காலிலும் மிக ஆக்ரோஷமாக மிதித்துக் கொல்லும் அந்த சிலையைக் கண்டால், பெண் என்பவள் ஏளனம் செய்யக்கூடியவள் அல்ல சீண்டினால் எந்த ஆணுக்கும் இந்த கதி தான் என்பதை ஒரு நொடிப் பொழுதில் உணரவைக்கும் கலை வடிவம், வற்றிய மார்புகளுடன், மிகுந்த ஒடிசலான தேகமுமான சிற்பமாக "தூமவதி" என்ற சக்தி உடல் ரீதியாக பெண் என்பவள் வலிவு குறைந்தவளாக இருப்பினும் மனதளவில் ஆற்றல் மிக்கவள் என்பதை உணர்த்தும் தெய்வம்.
"தையலை உயர்வு செய் " என்ற பாரதியின் வரிகளை நினைவில் கொண்டு நம் வரலாற்றோடு தாய், மனைவி,மகள் போன்ற பல பரிமாணங்களில் நம்மை சுற்றி இருக்கும் பெண்மையை உணர்ந்தால் வாழ்வும் சிறக்கும். தஞ்சை செல்லும் போது சோழர்கள் வணங்கிய நிசும்பசூதனியை தரிசித்து வாருங்கள், சோழர்களை போல் உங்கள் வாழ்வும் வளமானதாக இருக்கும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்