என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "புதிய மின் இணைப்புகள்"
- அதிக விளைச்சல் பெற்ற மூன்று விவசாயிகளுக்கு விருதும், பணப்பரிசும் முதலமைச்சர் வழங்க உள்ளார்.
- இணையவழி சேவைகளைப் பற்றி அறிந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
வேளாண்மை, தோட்டக்கலை தொடர்பான புதிய தொழில்நுட்பங்கள், அரசின் திட்ட உதவிகள், பழக்கன்றுகள், காய்கறி விதைகள் விற்பனை உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டு, ஜூலை 27 முதல் ஜூலை 29 வரை திருச்சி, கேர் பொறியியல் கல்லூரியில் "வேளாண் சங்கமம் 2023" விழாவினை சிறப்பாக நடத்த தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நாளை 27-ந்தேதி வேளாண் கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து, பாரம்பரிய நெல் உற்பத்தியில் சிறந்து விளங்கிய விவசாயிகளுக்கு விருதுகளை வழங்கி வாழ்த்த உள்ளார். தொடர்ந்து, நடப்பாண்டில் விவசாயிகளுக்கு 50 ஆயிரம் புதிய வேளாண் மின் இணைப்புகள் வழங்கும் நிகழ்ச்சியினையும் துவங்க இருக்கிறார்.
வேளாண்மை, தோட்டக்கலைப் பயிர்களில் உயர் விளைச்சல் தரும் புதிய ரகங்கள், பாரம்பரிய நெல் ரகங்கள், நவீன தொழில்நுட்பங்கள் தொடர்பான செயல் விளக்கங்கள், புதிய வேளாண் இயந்திரங்கள், சூரியசக்தி மூலம் இயங்கும் கருவிகள், விளை பொருட்களை மதிப்புக் கூட்டுவதற்கான வழிமுறைகள், வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு, பட்டுப்பூச்சி வளர்ப்பு குறித்தான கருத்தரங்குகள், உழவன் செயலி பதிவிறக்கம், அரசின் திட்டப்பலன்களை பெறுவதற்கு முன்பதிவுகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெறுகின்றன.
இக்கண்காட்சியில், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை விற்பனை, வேளாண் பொறியியல், சர்க்கரைத்துறை, விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று, கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் மீனவர் நலம், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் (ஆவின்), கைத்தறி, தமிழ்நாடு உணவு பதப்படுத்தும் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம், பட்டு வளர்ச்சி, தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம், ஒன்றிய அரசின் வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்கள், பல்வேறு பயிர்கள் சார்ந்த வாரியங்கள், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் மீன்வளப் பல்கலைக்கழகங்களும் பங்கேற்கின்றன.
அரசு நிறுவனங்கள் மட்டுமல்லாது, நுண்ணீர் பாசன நிறுவனங்கள், உர நிறுவனங்கள், பூச்சி மருந்து நிறுவனங்கள், வேளாண் இயந்திர நிறுவனங்கள், விதை நிறுவனங்கள், வங்கிகள், சர்க்கரை ஆலைகள் உள்ளிட்ட பல்வேறு தனியார் நிறுவனங்களும் கலந்து கொண்டு தங்களின் புதிய கண்டு பிடிப்புகளை காட்சிப்படுத்த உள்ளார்கள்.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், நுண்ணீர்ப் பாசனத்திட்டம், இயற்கை வேளாண்மை, ஊட்டச்சத்து மிகுந்த சிறுதானிய இயக்கம், தென்னையில் பயிர்ப்பாதுகாப்பு, பாரம்பரிய நெல் ரகங்கள், ஒருங்கிணைந்த பண்ணையம், பசுமைக்குடில், செங்குத்து தோட்டம், நீரியல் தோட்டம், மாடித் தோட்டம், வேளாண் இயந்திரமயமாக்குதல், மதிப்புக்கூட்டுதல் போன்ற உழவர்களுக்காக அரசு செயல்படுத்தும் பல்வேறு திட்டங்களை தெரிந்து கொள்ளும் வகையில் சிறப்பு கண்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், உழவன் செயலி பதிவிறக்கம், திட்டப்பதிவு மையம், தமிழ் மண்வள இணையதளம் மூலம் மண்வள அட்டை விநியோகம் போன்ற இணையவழி சேவைகளைப் பற்றி அறிந்து கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கண்காட்சியுடன், விவசாயிகள் வாங்கிச் சென்று தங்கள் பண்ணையில் சாகுபடி செய்வதற்கேற்றவாறு, புதிய ரகங்களின் காய்கறி விதைகள், மா, கொய்யா உள்ளிட்ட பழ வகைகளில் ஒட்டு ரகக் கன்றுகள், தென்னையில் வீரிய ஒட்டுக் கன்றுகள், நுண்ணூட்டக்கலவை உரங்கள், உயிர் உரங்கள், விதைகள் போன்ற இடுபொருட்களும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
அங்கக வேளாண்மை, விளைபொருள்களை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள், வேளாண் காடுகள் மூலம் வருமானம், நவீன வேளாண்மையில் புதிய உரங்களின் பயன்பாடு, வேளாண் இயந்திர மயமாக்கல் மற்றும் மதிப்புக் கூட்டல், தோட்டக்கலை சாகுபடியில் புதுமைகள், மின்னணு வேளாண்சந்தை மூலம் மின்னணு வர்த்தகத்தை அணுகுவதற்கான வாய்ப்புகள், வேளாண்மையில் புதிய தொழில் முனைவோர் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள், சிறுதானிய சாகுபடி, முருங்கை சாகுபடி மற்றும் ஏற்றுமதி போன்ற பத்து தலைப்புகளில் கருத்தரங்குகள் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதில், தொழில்நுட்ப வல்லுநர்களும், அனுபவமிக்க விவசாயிகளும், ஏற்றுமதியாளர்களும், உயர் அலுவலர்களும் கலந்து கொண்டு பல்வேறு பயனுள்ள தகவல்களை பகிர்ந்து கொள்ள விருக்கிறார்கள்.
விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் உற்பத்தி செய்த விளைபொருட்களின் விற்பனையினை எளிதாக்கும் வகையில், கொள்முதல் செய்பவர்-விற்பனையாளர் சந்திப்பும் நடைபெற உள்ளது.
பாரம்பரிய நெல் சாகுபடியினை ஊக்குவிக்கும் வகையில் அரசு ஏற்கனவே அறிவித்தபடி, அதிக விளைச்சல் பெற்ற மூன்று விவசாயிகளுக்கு விருதும், பணப்பரிசும் முதலமைச்சர் வழங்க உள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்