search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை பஸ் நிறுத்தம்"

    • சென்னை வாழ் மக்களுடன் பிரிக்க முடியாத அன்றாட வாழ்க்கையுடன் ஒன்றிணைந்த மின்சார ரெயில் சேவையை போலவே பஸ் போக்குவரத்தும் உள்ளன.
    • போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் சேவையும் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.

    'பெருநகரம்' என்ற அந்தஸ்தை பெற்ற சென்னை மாநகராட்சி சுமார் 90 லட்சம் மக்கள் தொகையை கொண்டதாகும். சென்னை நகரத்தோடு புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளிலும் அடிப்படை வசதிகள் கொண்ட கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது.

    சென்னை வாழ் மக்களுடன் பிரிக்க முடியாத அன்றாட வாழ்க்கையுடன் ஒன்றிணைந்த மின்சார ரெயில் சேவையை போலவே பஸ் போக்குவரத்தும் உள்ளன. 620 வழித்தடங்களில் 3 ஆயிரம் மாநகர பஸ்கள் தினமும் இயக்கப்படுகின்றன. அதில் 30 லட்சம் மக்கள் தினமும் பயணம் செய்கிறார்கள். மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்களை அன்றாடம் மாநகர பஸ்கள் சுமந்து செல்லும் சேவையை செய்து வருகிறது.

    இதற்கிடையில் சென்னையை சிங்கார சென்னையாக மாற்றும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்படுகிறது. தூய்மை, பசுமையான எழில்மிகு நகரமாக உருவாக்குவதற்கான பல்வேறு திட்டப்பணிகள் கடந்த 2 வருடமாக முழு வீச்சில் நடைப்பெற்று வருகின்றன. போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் சேவையும் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. மெட்ரோ ரெயிலில் தினமும் 3 லட்சம் பேர் பயணிக்கின்றனர்.

    சென்னையில் நாளுக்கு நாள் வாகன பெருக்கமும், மக்கள் நெருக்கமும் அதிகரித்து வரும் நிலையில் அதனை கண்காணித்து அதற்கேற்றவாறு புதிய மேம்பாலங்களும், ரெயில்வே மேம்பாலங்களும் கட்டும் பணியும் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் மாநகர பஸ்களில் பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை ஒருபுறம் அதிகரித்து வருகிறது. இலவசமாக பயணம் செய்யலாம் என்பதால் தினமும் 10 லட்சம் பேருக்கு மேல் பஸ்களை மகளிர் ஆக்கிரமிக்கிறார்கள்.இதனால் பஸ் நிறுத்தங்களில் கூட்டம் அதிகரித்துள்ளது. சென்னையில் மாநகர பஸ்கள் பயணிகளை ஏற்றி செல்லும் நிறுத்தங்களில் கடந்த சில மாதங்களாக கூட்டமாக உள்ளது.

    மாதவரம், மூலக்கடை, பெரம்பூர், வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், மணலி, மாத்தூர், கொளத்தூர், திருமங்கலம், அண்ணாநகர், முகப்பேர், மதுரவாயல், பாடி, அம்பத்தூர், திருநின்றவூர், வேப்பம்பட்டு, செவ்வாய்பேட்டை, அடையார், திருவான்மியூர், மயிலாப்பூர், வேளச்சேரி, மடிப்பாக்கம், வடபழனி, அசோக்நகர் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு செல்லும் பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. காலை மற்றும் மாலை அலுவலக நேரங்களில் நெரிசலில் பயணம் செய்கின்றனர். பஸ் நிறுத்தங்களில் பயணிகள் கும்பல் கும்பலாக காத்து நிற்பதை காண முடிகிறது.

    ஸ்மார்ட் சிட்டி, சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் அழகுப்படுத்தப்படும் சென்னை நகரத்தில் பஸ் நிழற்கூடங்கள் ஒரு சில இடங்களில் அவலமாக காட்சி அளிக்கின்றன. மேற்கூரை உடைந்தும், இருக்கைகள் சேதம் அடைந்தும் இருப்பதால் பயணிகள் உட்கார முடிவதில்லை. சில இடங்களில் இருக்கைகள் மாயமாகி உள்ளன.

    மழை காலங்களில் ஒதுங்கி நிற்பதற்கு கூட இடம் போதவில்லை. குறுகிய அளவில் இந்த நிழற்கூடங்கள் இருப்பதால் பயணிகள் மழையிலும் வெயிலிலும் நின்று கஷ்டப்படுகிறார்கள். சென்னையில் 2 ஆயிரம் பஸ் நிழற் கூடங்கள் தற்போது உள்ளன. இதில் 730 நிழற்கூடங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. அதில் விளம்பரங்கள் மூலம் மாநகராட்சிக்கு வருவாய் கிடைக்கிறது.

    1000 இடங்களில் உள்ள நிழற்கூடங்கள் மாநகராட்சி தற்போது கவனித்து வருகிறது. அவை கடந்த 5 வருடத்திற்கு முன்பு நிறுவப்பட்ட நிழற்கூடங்கள் ஆகும். இந்த நிழற்கூடங்களை தனியாருக்கு விடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் 2 மாதங்களில் அனைத்து நிழற்கூடங்களும் தனியார் வசம் ஒப்படைக்கப்பட உள்ளது. ஆனால் தற்போது இந்த நிழற்கூடங்களில் சில பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. தற்போது அமைக்கப்படுகின்ற நிழற்கூடங்கள் பெரும்பாலும் 30 அடி நீளம், 8 அடி அகலத்தில் உள்ளன. இவற்றில் மேல் பக்கவாட்டு பகுதி அடைக்கப்படாமல் திறந்து இருப்பதால் பயணிகள் மழையில் நனைகின்ற நிலை உள்ளது. மேலும் நீளமான இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன. 'ஸ்டெய்ன்லஸ்' இரும்பு குழாயால் போடப்பட்டு இருப்பதால் அதில் உட்கார முடியவில்லை என்ற குற்றச்சாட்டையும் பயணிகள் தெரிவிக்கின்றனர்.

    சென்னையில் முக்கிய பிரதான சாலைகளில் உள்ள நிழற்கூடங்கள் அழகாக பளிச்சிடும் அதேவேளையில், உட்புற சாலைகளில் உள்ள நிழற்கூடங்கள் கேட்பாரற்று கிடக்கிறது. அதில் வியாபாரிகளும், சாலையோரத்தில் இருப்பவர்களும் நிரந்தரமாக ஆக்கிரமித்துள்ளனர். பயணிகள் நிற்பதை விட வியாபாரிகளின் வாகனங்களும், கடைகளும் தான் அங்கு உள்ளன.

    இதனால் பயணிகள் சாலையில் பஸ்சுக்கு காத்து நிற்கின்ற நிலை உள்ளது. நிழற்கூடங்களை மது அருந்தி விட்டு புகழிடமாக பயன்படுத்தக் கூடாது என்பதற்காக தனித்தனி இருக்கைகளாக போடாமல் நீளமான இருக்கையாக போடப்பட்டு உள்ளது. அதுவும் ஒரே வரிசையில் இடம்பெற்றுள்ளது. சிறிய பஸ் நிறுத்தங்களுக்கு அது போதுமானதாக இருந்தாலும் கூட மக்கள் அதிகளவில் நிற்கக் கூடிய நிறுத்தங்களில் நிழற்கூடங்களின் அளவை பெரிதுபடுத்தவோ, இருக்கைகளை அதிகப்படுத்தவோ செய்யலாம் என்பது பயணிகளின் கோரிக்கையாக உள்ளது. சென்னையில் பல்வேறு இடங்களில் நிழற்கூடங்கள் சேதம் அடைந்து அமர முடியாமல் இருப்பதை மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக கண்காணித்து அவற்றை சரி செய்ய வேண்டும். நகரை அழகுப்படுத்தும் விதமாக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் சிறப்பாக இருக்கின்ற வேளையில் பஸ் நிழற்கூடங்கள் பயணிகளுக்கு பயன் இல்லாமல் வெறும் காட்சி பொருளாக இருப்பது சரியல்ல. நூற்றுக்கும் மேற்பட்ட நிழற்கூடங்கள் பொதுமக்களுக்கு பயன் இல்லாமல் உள்ளன. அதனை வணிக ரீதியாகவும், தங்கும் இடமாகவும் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். அவற்றை எல்லாம் ஆய்வு செய்து முறையாக பராமரிக்க வேண்டும்.

    உடைந்து சேதம் அடைந்த நிழற்கூடங்களை உடனே சரி செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மாநகராட்சி கொண்டு வர வேண்டும். ஒரு சில பஸ் நிறுத்தங்களில் உள்ள நிழற்கூடங்களை விரிவுப்படுத்தலாம். இடவசதி இல்லாத இடங்களில் சிறியதாகவும், விசாலமான பகுதியில் மக்கள் அதிகம்பேர் நிற்கும் வகையில் பெரியதாகவும் நிழற்கூடங்களை அமைக்கலாம் என கருத்து தெரிவிக்கின்றனர். மேலும் நிழற்கூடங்களில் சிலர் நிரந்தரமாக ஆக்கிரமித்து இருப்பதால் பயணிகள் அதற்குள் செல்ல தயங்குகிறார்கள். அத்தகைய நிலையை மாற்றி அனைத்து நிழற் கூடங்களையும் பயணிகள் முழு பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

    பகலில் மட்டுமின்றி இரவு நேரங்களில் பயணிகள் பாதுகாப்பாக நிற்கவும், இருள் சூழ்ந்த இடங்களில் மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தரவும் கோரிக்கை வைக்கின்றனர். ஒரு சில இடங்களில் நிழற்கூடங்களில் இரவில் பெண்கள் நிற்க முடியாத அளவிற்கு வெளிச்சமின்றி இருளாக உள்ளது. இதனால் அச்சத்துடன் காத்து நிற்கின்றனர். அதுபோன்ற இடங்களில் மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பயணிகள் வலியுறுத்துகின்றனர். நிழற்கூட விளம்பரங்கள் மூலம் வருவாயை ஈட்டும் மாநகராட்சி பயணிகளுக்கு அடிப்படையான சில வசதிகளை செய்து கொடுத்தால் பயன் உள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கின்றனர்.

    ×