என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஜீவநதி"
- ஜீவ நதி என்றால் `நதிகளுக்கு உயிர் இருக்கிறது' என்று அர்த்தமாகும்.
- புனித நீராட உதவுவது தீர்த்தம் எனப்படும் திருக்குளமாகும்.
ஒரு ஊருக்கு பெருமை தருவது, அந்த ஊரில் வீற்றிருந்து அருள் பாலிக்கும் தெய்வமே. அந்த மூர்த்தி தினமும் புனித நீராட உதவுவது தீர்த்தம் எனப்படும் திருக்குளமாகும்.
இதனால்தான் ஒரு ஆலயம் என்று எடுத்துக் கொண்டால் `மூர்த்தி, தலம், தீர்த்தம்' மூன்றையும் உன்னிப்பாகப் பார்ப்பார்கள். இந்த மூன்றும் சிறப்புற அமைந்துள்ள ஆலயம் எல்லா வகையிலும் சிறப்பு பெற்று தனித்துவத்துடன் திகழும்.
`மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றை முறையாய் வணங்குவோர்க்கு வார்த்தை சொல்ல குரு வாய்க்கும் பராபரமே' என்று தாயுமான சுவாமிகள் பாடியுள்ளார். எனவே ஒரு ஆயலத்தில் மூர்த்திக்கு இணையான சிறப்பும், மகிமையும் தீர்த்தத்துக்கு இருக்கிறது என்பதை நாம் உணர்ந்து புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டில் 90 சதவீத பக்தர்கள் திருக்குளங்களை கண்டு கொள்வதே இல்லை. அவற்றுக்கு உரிய மரியாதையையும் கொடுப்பது இல்லை. மாறாக புனித தீர்த்தங்களை மாசுபடுத்துகிறார்கள்.
இதனால் தமிழ் நாட்டில் பெரும்பாலான ஆலயங்களில் திருக்குளங்கள் நல்ல நிலையில் இல்லை. ஒரு கோவிலுக்கு சென்றால் அங்குள்ள புனித நீரில் நீராட வேண்டும். கை, கால், அலம்பி, வாய் கொப்பளித்து, ஆசமனம் செய்து கோவிலுக்குள் செல்ல வேண்டும் என்பது ஐதீகம்.
ஆனால் ஆலய திருக்குளங்கள் இதையெல்லாம் செய்யக்கூடிய நிலையிலா உள்ளன? சில ஆலயங்களில் மட்டுமே தீர்த்தப்பகுதி நன்கு பேணப்படுகிறது. அந்த ஆலய தீர்த்தங்கள் மிக, மிக சக்தி வாய்ந்ததாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தண்ணீரில் இருந்துதான் இந்த உலகில் உள்ள எல்லா உயிரினங்களும் தோன்றின. தண்ணீர்தான் அனைத்து ஜீவராசிகளுக்கும் ஜீவாதாரமாக உள்ளது. `நீரின்றி அமையாது உலகு'. திருவள்ளூவர் சொன்னது இதனால் தான்.
இத்தகைய சிறப்பு மிக்க தண்ணீரை ஆன்மீகவாதிகள் `தீர்த்தம்' என்று உயர்வாகக் கொண்டாடுகிறார்கள். இந்த மரபு இன்று நேற்று ஏற்பட்டதல்ல.
சங்க காலத்துக்கும் முன்பே தண்ணீர் பிரவாகமெடுத்து வரும் நதிகளை, வெறும் பயன்பாட்டுக்கு மட்டுமில்லாமல், அவற்றை தெய்வமாக கருதி வழிபடும் வழக்கம் இருந்தது. அதுவும் ஒவ்வொரு நதிக்கும் ஒரு பெயரிட்டு போற்றி வழிபட்டனர்.
அதோடு இந்த புனித நதிகளை ஜீவநதி என்று சொன்னார்கள். ஜீவ நதி என்றால் `நதிகளுக்கு உயிர் இருக்கிறது' என்று அர்த்தமாகும்.
குறிப்பிட்ட நாட்களில் நதிகளில் புனித நீராடினால் நோய்கள் குணமாகும். மூளை சுறு சுறுப்பாக செயல்படும். உடலுக்கு புதுதெம்பு கிடைக்கும்.
சில நதிக்கரைகளில் நம் கண்ணுக்குப் புலப்படாத மகான்கள், முனிவர்கள், சித்தர்கள் கடும் தவம் இருப்பார்கள். அவர்களது தவ வலிமையின் சில துகள்கள் நதி தண்ணீரில் பரவி வரும். அந்த நதியில் நாம் புனித நீராடும் பாக்கியம் கிடைத்தால் நமது இந்த பிறவியில் மட்டுமல்ல முந்தையப் பிறவிகளிலும் சேர்ந்த பாவ மூட்டைகள், தோஷங்கள் நம்மிடம் இருந்து விலகி ஓடிவிடும்.
நாம் ஒரு புது மனிதனாக நம் ஆத்மாவை மேம்படுத்திக் கொள்ள முடியும். பவுர்ணமி தோறும் நதிகளில் புனித நீராடினால் இந்த அபூர்வ பலன் நிச்சயம் கிடைக்கும்.
தியில் புனித நீராடுவதற்கு என்று சில நியதிகள் உள்ளன. எப்போதும் ஓடும் நதியில் நீராடுவதே நல்லது. நதி எங்கிருந்து உற்பத்தியாகி வருகிறதோ, அந்த திசை நோக்கி நீராடுதல் வேண்டும்.
இரவு நேரங்களில் நீராடும் போது கிழக்கு திசை நோக்கி கும்பிட்டு நீராடுவது நல்லது. வடக்கு நோக்கியும் வணங்கி நீராடலாம்.
நதிகளில் நீராட தொடங்கும் முன்பு முதலில் காலை நீட்டி இறங்கக் கூடாது. நதியில் கால் பதிக்கும் முன்பு தலையில் அந்த புனித நீரை எடுத்துத் தெளித்துக் கொள்ள வேண்டும்.
அது நமது உடல் உஷ்ண நிலையை, நதியின் நீர் நிலைக்கு ஏற்ப மாற்றும். அதன் பிறகே நதியில் கால் வைக்க வேண்டும். கடவுளை நினைத்தப்படி புனித நீராட வேண்டும்.
தீர்த்தமாடல் என்பதற்கு பரிசுத்தம் என்றும் ஒரு அர்த்தம் உண்டு. நாம் நதிகளில் தீர்த்தமாட, தீர்த்தமாட நாம் பரிசுத்தமாகி விடுவோம். இதை அடிப்படையாகக் கொண்டே ஆலயங்களில் தீர்த்தவாரி நடத்தப்படுகிறது.
தமிழ்நாட்டில் ஏராளமான நதிகள் உள்ள போதிலும் புனித தீர்த்தமாடுவதற்கு மிகவும் ஐதீகமானதாக காவிரி, தாமிரபரணி நதிகள் கருதப்படுகின்றன. இந்த நதிகளில் பல இடங்களில் தீர்த்த கட்டங்கள் உள்ளன.
காவிரி நதி எந்த ஊரையெல்லாம் தொடுகிறதோ, அங்கெல்லாம் தீர்த்தக் கட்டம் இருக்கும். தாமிரபரணி நதியில் பானை தீர்த்தம், நாதாம்புஜம் (சேரன் மகாதேவி) பிரமாரணியம், (ஸ்ரீவைகுண்டம்) ராமபுரம் (ஆழ்வார் திருநகரி) கோட்டீசுவரம் (ஊர்க்காடு) வேனுவனம் (நெல்லை) நதிப்புரம் (ஆத்தூர்) என பல தீர்த்த கட்டங்கள் உள்ளன. இந்த தீர்த்தங்கள் எல்லாம் இம்மைக்கும், மறுமைக்கும் நற்கதி அளிக்க வல்லவை.
சில தீர்த்தங்கள் நோயில் இருந்து நம்மை காப்பாற்றக் கூடியவை. சில நம் வாழ்வில் வளம் சேர்க்கும். சில தீர்த்தங்கள் பித்ரு பூஜை செய்ய உதவுகின்றன. பொதுவாக பார்த்தால் இந்த தீர்த்தங்களை அதன் சிறப்பை உணர்ந்து பயன்படுத்தினால் நாம் பாவங்களில் இருந்து விடுபடலாம்.
மனிதனை பக்குவப்படுத்தும் தீர்த்தங்கள் நதிகளில் மட்டுமல்ல மலைகளிலும், கடலோரங்களிலும் நிரம்ப உள்ளன. தற்போதும் பொதிகை மலையில் உள்ள 32 தீர்த்த கட்டங்கள் ரிஷிகள் நீராடும் தீர்த்தமாக உள்ளன.இவை தரும் பலன்கள் அளவிட முடியாதவை.
இந்த தீர்த்த கட்டங்கள் தரும் நன்மைகளை ஒருங்கேப் பெற வேண்டும் என்பதற்காகத்தான் நம் முன்னோர்கள் தீர்த்த யாத்திரை செல்லும் பழக்கத்தை வைத்திருந்தனர்.
இந்த தீர்த்தங்களையும் விட மேன்மையானது ஆலயங்களில் ஒரு பகுதியாக உள்ள திருக்குளங்களாகும். ஆலயங்கள் எந்த கால கட்டத்தில் தோன்றியதோ, அதே காலத்தில் திருக்குளமான புஷ்கரணியும் வந்து விட்டது.
கோவில் கட்டுவதற்காக தோண்டப்பட்ட இடத்தில் ஏற்பட்ட பள்ளம்தான் நம் முன்னோர்களால் புஷ்கரணியாக மாற்றப்பட்டது என்று கூறப்படுகிறது. பிறகு அது அத்தலத்தின் இறைவன் நீராடும் இடமாக மாறியது.
அர்ச்சகர் தினமும் அந்த குளத்தில் நீராடி, நீர் எடுத்து வந்து மூலவருக்கு அபிஷேகம் செய்யும் பழக்கமும் உருவானது. தீர்த்தவாரி, ஆராட்டுத் திருவிழாக்கள் தோன்றிய பிறகு தீர்த்தங்களின் மகத்துவம் அதிகரித்தது.
இதையடுத்து தீர்த்தங்களுக்கான வரலாறு உருவானது. ஒரு தலத்தில் சூரியன் குளம் ஏற்படுத்தி, நீராடி ஈசனை வழிபட்டு பேறு பெற்றால், அத்தீர்த்தம் சூரிய தீர்த்தம் என்ற பெயர் ஏற்பட்டது.
ராவணனை கொன்ற பாவம் நீங்க ராமர் நீராடி வழிபட்ட இடங்கள் எல்லாம் ராமதீர்த்தமாக இன்றும் உள்ளன.
சில தீர்த்தங்கள் மற்ற தீர்த்தங்களை விட தனித்துவம் பெற்றிருக்கும். கும்பகோணத்தில் உள்ள மகாமக தீர்த்தக்குளம், திருக்கழுக்குன்றத்தில் உள்ள 12 ஆண்டுகளுக்கு ஒரு தடவை சங்கு உற்பத்தியாகும் சங்கு தீர்த்தம், திருச்செந்தூரில் கடலோரத்தில் உள்ள நாழிக்கிணறு தீர்த்தம், சிதம்பரம் கோவிலில் உள்ள சிவகங்கை தீர்த்தம், தமிழகத்திலேயே மிகப்பெரிய புஷ்கரணியான திருவாரூர் கமலாலயம் போன்ற தீர்த்தங்கள் பல்வேறு மகத்துவங்களைக் கொண்டதாகும்.
கும்பகோணத்தில் உள்ள மகாமக தீர்த்தகுளம் 6.2 ஏக்கர் பரப்பளவு கொண்டது. பாற்கடலில் இருந்து கடைந்து எடுக்கப்பட்ட அமுத்ததில் ஒரு பகுதி இங்கு விழுந்து விட்டதாக புராணக் குறிப்புகள் உள்ளதால் இந்த தீர்த்தம் அமுத தீர்த்தம் என்று அழைக்கப்பட்டு வருகிறது.
சில ஆலய தீர்த்தங்கள் மூலவரின் கருவறையுடன் தொடர்பு கொண்டிருக்கும். மூலவருக்கு செய்யப்படும் அபிஷேகம் `கோமுக தீர்த்தம்' வழியாக வந்து நேரடியாக குளத்துக்கு வந்து விடும்.
திருப்பதி - திருமலையில் இத்தகைய அமைப்புதான் உள்ளது.
ஏழுமலையானுக்கு செய்யப்படும் அபிஷேக நீர், நேரடியாக புஷ்கரிணி தீர்த்த குளத்துக்கு வந்து விடும். வராக சுவாமி சன்னதி முன்பு அமைந்துள்ள இந்த தீர்த்தத்தில் நீராடினால் பாவங்கள் விலகி சுபம் உண்டாகும் என்பது ஐதீகமாகும்.
திருப்பதி மலையில் 300-க்கும் மேற்பட்ட தீர்த்தங்கள் இருந்தாலும் இந்த புஷ்கரணியே உயர்ந்ததாக கருதப்படுகிறது. தமிழ் நாட்டில் உள்ள பழமையான ஆலயங்களின் வரலாறை நீங்கள் விரிவாகப் படித்தால் ஒவ்வொரு தலத்திலும் குறைந்தது 10-க்கும் மேற்பட்ட தீர்த்தங்கள் இருந்ததற்கான குறிப்புகள் இருப்பதை காணலாம்.
பெரும் பாலான ஆலயங்களில் 90 சதவீத தீர்த்தங்கள் கால ஓட்டத்தில் துரதிர்ஷ்ட வசமாக காணாமலேயே போய் விட்டன.
விரல் விட்டு எண்ணக் கூடிய ஆலயங்களில் தான் சங்க காலத்தில் தோன்றிய தீர்த்தங்கள் இன்னமும் அப்படியே உள்ளன. இந்த தீர்த்தங்களில் பழமை சிறப்புடன் தெப்ப உற்சவம் நடத்தப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்