என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பஞ்ச கிருத்யம்"
- 9 நாட்களுக்கு மேல் நடக்கும் உற்சவங்களையே பிரம்மோற்சவம் என்பர்.
- பிரம்மனே முன் நின்று நடத்துவதாக ஐதீகம்.
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆலயங்களை கட்டிய நம் முன்னோர்கள், அந்த ஆலயங்களில் தினமும் எத்தனை தடவை பூஜை செய்ய வேண்டும்? எப்போது பூஜை செய்ய வேண்டும்? வாரத்துக்கு ஒரு தடவை எத்தகைய பூஜை முறைகளை கடைபிடிக்க வேண்டும்? மாதத்துக்கு ஒரு தடவை என்னென்ன வழிபாடுகள் செய்ய வேண்டும் என்று கணித்து நடைமுறைப்படுத்தினார்கள்.
அது மட்டுமின்றி எந்தெந்த மாதங்களில் விழாக்கள் நடத்த வேண்டும் என்ற பழக்கத்தையும் ஏற்படுத்தினார்கள். இந்த விழாக்கள் எல்லாம் பக்தர்களை ஆலயத்துடன் நெருங்க வைக்கும் இயல்பு கொண்டவை. அதோடு இந்த விழாக்கள் ஒவ்வொன்றும் இறைவன் மீதுள்ள ஆத்மார்த்தமான பக்தியை மக்கள் மனதில் ஆழப்பதிந்து விட செய்து விட்டவையாகும்.
இந்த விழாக்களில் முதன்மையானது உற்சவங்களில் ஒன்றான பிரம்மோற்சவம் ஆகும்.
தமிழ்நாட்டில் உள்ள பழமையான ஆலயங்கள் ஒவ்வொன்றிலும் ஆண்டுக்கு ஒரு தடவை மிக விமரிசையாக பிரம்மோற்சவம் நடத்தப்படுகிறது. இந்த விழா அந்தந்த ஆலய தல வரலாற்றுடன் தொடர்புடையதாகவும் இருக்கும்.
பொதுவாக உற்சவங்கள் என்பது இந்த உலகில் உள்ள உயர்வான படைப்புகளின் விருத்திக்காகவே நடத்தப்படுவதாக கூறப்படுவதுண்டு. எனவே உற்சவங்கள் ஒவ்வொரு ஆலயத்திலும் தவறாமல் நடத்தப்பட வேண்டும் என்று ஆகம விதிகளில் கூறப்பட்டுள்ளது. இந்த உற்சவங்கள் ஒவ்வொன்றும் ஆலய வழிபாட்டின் சூட்சுமத்தை பொதிந்து வைத்துள்ளது.
ஆகையால் சக்தி வாய்ந்த ஆலயங்களில் முறைப்படி பிரம்மோற்சவம் நடத்தப்படா விட்டால் அது ஆட்சியாளர்களுக்கும், பொது மக்களுக்கும் தீய விளைவுகளை கொடுத்து விடும் என்று ஞானோத்திர ஆகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பிரம்மோற்சவம் நடத்தப்படாவிட்டால் அந்த பகுதி மக்களுக்கு கிரகபீடை, நோய்கள், ஆயுள் குறைவு போன்றவை ஏற்படும் என்றும் அந்த ஆகமத்தில் எழுதி வைக்கப்பட்டுள்ளது.
நம் முன்னோர்கள் ஆலயங்களில் நடக்கும் உற்சவங்களை ஆறு வகையாக பிரித்துள்ளனர் அவை வருமாறு:-
1. பைத்ருகம் எனும் உற்சவம், 12 நாட்கள் நடைபெறும்.
2. சவுக்கியம் எனும் உற்சவம், 9 நாட்கள் நடைபெறும்
3. ஸ்ரீகரம் என்ற உற்சவம், 7 நாட்கள் நடைபெறும்.
4. பார்த்திவம் எனப்படும் உற்சவம், 5 நாட்கள் நடைபெறும்.
5. சாத்வீகம் எனும் உற்சவம் 3 நாட்கள் நடைபெறும்.
6. சைவம் என்ற உற்சவம் ஒரே ஒரு நாள் மட்டுமே நடக்கும்.
9 நாட்களுக்கு மேல் நடக்கும் உற்சவங்களையே பிரம்மோற்சவம் என்று சொல்வார்கள். மிகப்பெரிதாக இருப்பதை `பிரம்மா' என்பார்கள். எனவே நீண்ட நாட்கள் நடக்கும் உற்சவத்தை பிரம்மோற்சவம் என்கிறார்கள்.
பிரம்மோற்சவத்துக்கு இன்னொரு அர்த்தமும் உண்டு. அதாவது திருப்பதி உள்ளிட்ட சில தலங்களில் உற்சவத்தை பிரம்மனே முன் நின்று நடத்துவதாக ஐதீகம் உண்டு. பிரம்மன் நடத்தும் உற்சவம் என்பதால் அதற்கு பிரம்மோற்சவம் என்ற பெயர் ஏற்பட்டதாக சொல்வார்கள்.
இவை தவிர 5 வகை சிருஷ்டி தொழிலை குறிக்கும் உற்சவத்துக்கும் பிரம்மோற்சவம் என்று பெயராகும். இதை `பஞ்ச கிருத்யம்' என்றும் சொல்வார்கள்.
உற்சவ காலத்தில் மேற்கொள்ளபடும் ம்ருதசங்கரஹனம், அங்குரார்ப்பனம், கல்யாணம், த்வஜாரோஹனம், ரட்சாபந்தனம் ஆகிய ஐந்தும்தான் பஞ்ச கிருத்யங்கள் என்று கூறப்படுகின்றன.
பிரம்மோற்சவ கொண்டாட்டம் ஆலயத்துக்கு ஆலயம் மாறுபடும். திருப்பதியில் ஒரு காலத்தில் புரட்டாசியில் ஒன்றும், மார்கழியில் ஒன்றும் என 2 தடவை பிரம்மோற்சவம் நடத்தப்பட்டன.
திருப்பதி ஆலயத்தின் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள ஒரு கல்வெட்டில் 1551-ம் ஆண்டு 11 தடவை பிரம்மோற்சவம் நடத்தப்பட்டதாக பொறிக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் பழமை, வருவாய் மற்றும் மரபுகளை பொருத்தே பிரம்மோற்சவ கொண்டாட்டங்கள் அமையும்.
பிரம்மோற்சவங்கள் ஆலயத்துக்கு ஆலயம் வித்தியாசப்பட்டாலும் வார உற்சவம், மாத உற்சவம், பட்ச உற்சவம் என்ற விதமாகவே நடத்தப்படும்.
சிவனுக்கு ஒருநாள் உற்சவமே உகந்ததாகும். கிராமத்தின் நன்மைக்காக 3 நாள் உற்சவத்தை நடத்தினார்கள்.
பூதங்களிடம் இருந்து தற்காத்துக்கொள்ள 5 நாட்கள் உற்சவம் நடத்தப்பட்டது. அம்பாளுக்கு உகந்தது 7 நாட்கள் உற்சவமாகும். உலக நன்மைக்காக 9 நாட்கள் உற்சவம் நடத்தப்படுகிறது.
ஆனால் தற்போது பெரும்பாலான சைவ தலங்களிலும், வைணவ ஆலயங்களிலும் 9 அல்லது 10 நாட்களாக பிரம்மோற்சவ விழா நடத்தப்படுகிறது. இந்த நாட்களில் ஆலயத்தில் இருக்கும் உற்சவ மூர்த்தி காலையும், மாலையும் வீதியுலா வருவார். இதன் மூலம் ஆலயத்துக்கு செல்ல முடியாத நிலையில் இருப்பவர்கள் உற்சவரை வழிபட்டு பலன் பெறுவார்கள்.
இறைவனே தம் வீட்டு வாசல் வரை வந்து விடுவதால் பிரம்மோற்சவ நாட்களில் பக்தர்களிடம் மகிழ்ச்சி பொங்கி வழியும். உற்சவரை வரவேற்று இறையருள் பெறுவார்கள்.
சைவ ஆலயங்களில் பிரம்மோற்சவ விழாவின் தொடக்கமாக புற்றுமண் எடுத்து முளையிடும் நிகழ்ச்சி நடைபெறும். இது சிருஷ்டி தொழிலை குறிக்கும்.
அடுத்தது கொடி ஏற்றம். அதில் ஈசனுக்குரிய ரிஷபக்கொடி ஏற்றப்படும்.
இரண்டாம் நாள் சூரிய, சந்திர பிரபைகளில் உற்சவர் எழுந்தருள்வார். இறைவன் சூரிய, சந்திரர்கள் மூலம் உலகத்துக்கு தனது கருணை ஒளியைப் பரப்புகிறான் என்பதை இந்த நடைமுறை உணர்த்தும்.
மூன்றாம் நாள் அதிகார நந்தி, பூதவாகனம். இது இறைவனின் அழித்தல் தொழிலை குறிக்கும். 4-ம் நாள் நாக வாகனம், 5-ம் நாள் ரிஷப வாகனம், 6-ம் நாள் யானை வாகனம், 7-ம் நாள் திருக்கல்யாணம், 8-ம் நாள் கயிலாய வாகனம், 9-ம் நாள் பிட்சாடனர் திருவீதியுலா நடைபெறும். பிறகு கொடி இறக்கப்பட்டு, பிரம்மோற்சவம் நிறைவு பெறும்.
வைணவத் தலங்களிலும் பிரம்மோற்சவத்தின்போது காலை, மாலை இரு நேரமும் உற்சவ மூர்த்தி பல வகை வாகனங்களில், விசேஷ அலங்காரத்துடன் உலா வருவார். கொடியேற்றம் நடந்த பிறகு 2-ம் நாள் காலையில் சின்ன சேஷ வாகனம், இரவில் அன்ன வாகனத்தில் உற்சவர் வீதியுலா வருவார்.
3-ம் நாள் காலையில் சிம்ம வாகனம், மாலையில் முத்துப் பல்லக்கு சேவை, 4-ம் நாள் காலையில் கல்ப விருட்ச வாகனம், இரவில் சர்வ பூபால வாகனத்தில் உற்சவ மூர்த்தி உலா வருவார்.
ஐந்தாம் நாள் காலை உற்சவர் மோகினி அலங்காரத்தில் வீதி உலா வருவார். அன்றிரவு கருட சேவை நடைபெறும். பிரம்மோற்சவத்தின் மிக முக்கியமான தினமாக இந்த சேவை நடைபெறும். லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கருட சேவையை தரிசனம் செய்வார்கள். இந்த வழிபாடு பிறவிப் பிணியை நீக்கவல்லது.
6-ம் நாள் காலையில் அனுமன் வாகனம், இரவில் கஜ வாகனம், 7-ம் நாள் காலை சூரிய பிரபை, இரவு சந்திர பிரபை உற்சவம் நடைபெறும். 8-ம் நாள் தேரோட்டம் நடத்துவார்கள்.
பிரம்மோற்சவ நாட்களில் தினமும் மாலை ஊஞ்சல் சேவை நடைபெறும். இந்த ஊஞ்சல் சேவையை காண்பவர்களுக்கு இம்மையிலும், மறுமையிலும் கோடான கோடி இன்பம் பெருகும்.
பிரம்மோற்சவ நாட்களில் கலசங்கள் நிறுவப்படுதல், ஹோமம் செய்தல் ஆகியவையும் நடத்தப்படும். சில தலங்களில் பெரிய புஷ்கரணி இருக்கும். பிரம்மோற்சவ நாட்களில் அங்கு தெப்ப உற்சவம் நடத்துவார்கள்.
அதுபோல பிரம்மோற்சவ தேரோட்டம் பிரமாண்டமாக நடைபெறும். தேரோட்டத்தின் போது ஊர் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சாதி வித்தியாசம் பார்க்காமல் தேர் இழுப்பார்கள். இப்படி மக்களை மனதால் ஒருங்கிணைக்க செய்யும் விழாவாகவும், இறை உணர்வில் மனதை மூழ்க செய்யும் விழாவாகவும் பிரம்மோற்சவம் அமையும்.
அது மட்டுமின்றி பக்தர்களின் மனதை பக்குவப்படுத்தும் ஆற்றல் பிரம்மோற்சவத்துக்கு உண்டு. பிரம்மோற்சவத்துக்கு உள்ள மகத்துவம், சிறப்பும் ஆலயத்தில் நடக்கும் கும்பாபிஷேகத்துக்கும் உண்டு.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்