search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருமால்"

    • துளசி திருமாலுக்கு மிகவும் உகந்த ஒருவகைச் செடியின் இலையாகும்.
    • துளசி ஊறிய புனித நீரும் நல்ல மருந்தாகிறது.

    துளசி திருமாலுக்கு மிகவும் உகந்த ஒருவகைச் செடியின் இலையாகும். துள+சி எனப் பிரித்து ஒப்பில்லாத செடி என இதனைக் கூறுவர். "திருத்துழாய்" என்று அழைக்கப்படும் துளசியைத்தான் பிரசாதமாக வழங்குகிறார்கள். செம்புப் பாத்திரத்தில் நல்ல சுத்தமான நீரை ஊற்றி அதில் துளசியை இட்டு வைத்திருப்பார்கள். இதைத்தான் தீர்த்தமாக வழங்குவார்கள். துளசி ஊறிய புனித நீரும் நல்ல மருந்தாகிறது. இதனால் மனம்கூட நல்ல தூய்மை பெறும்.

    துளசியை கார்த்திகை பவுர்ணமியில் பூஜிக்க எல்லா சித்திகளும் ஏற்படும். எப்போதும் தர்மம் செய்யும்போது ஒரு துளசி இலை வைத்தே தானம் செய்ய வேண்டும் என தர்மசாஸ்திரம் கூறுகிறது. பொருளைவிட துளசி மேன்மையானதால் துளசிதானம் கொடுக்கப்படுகிறது என்றே கூறுவர்.

    துளசி தீர்த்தம் வயிறை சுத்திகரித்து ரணம் ஏற்பட வழி செய்யும். மரணப் படுக்கையில் இருப்பவர்க்கு துளசித் தீர்த்தம் கொடுக்க, விஷ்ணு லோகம் போக வாய்ப்பு கிடைக்கும் என்பர். துளசிக்கு சமஸ்கிருதத்தில் 'பிருந்தா' எனப்பெயர். காடு போல் துளசி வளர்ந்திருக்கும் தலத்திற்கு பிருந்தாவனம் எனப்பெயர். இதனால்தான் துளசிக் காடாகிய பிருந்தாவனம் ராமருக்குரிய விருப்பமான தலமானது.

    பூஜைக்குப் பூக்களை அர்ப்பணிக்கும் போது அன்று பூத்த மலர்களையே கீழே உதிர்வதற்கு முன்பிருக்கும் நிலையில் பறித்து பயன்படுத்த வேண்டும் என்பது நியதி. இதனால் பழைய பூ, புதிய பூ என்ற வேறுபாடுகள் உள்ளன. ஆனால் பூஜைக்குரிய துளசியில் இம்மாதிரியான நிலைகள் இல்லை. எப்போதும் புதிய நிலையைக் கொண்டது துளசி. எனவே பூஜைக்கு எப்போதும் உகந்ததாகத் துளசி கருதப்படுகிறது. புரட்டாசி மாதம் முழுவதும் தினமும் வழிபாட்டுக்கு துளசி பயன்படுத்துவது மிக, மிக நல்லது.

    பெண்கள் சுமங்கலிகளாக வாழ துளசி பூஜை முக்கியமாகும். வீட்டில் துளசி மாடம் அமைத்து அதற்கு விளக்கேற்றி, காலை, மாலை பூஜை செய்து மாடத்தினை வலம் வந்து வணங்க வேண்டும். துளசி மாடத்தை பூஜிக்க வேறு துளசியில் இருந்தே தழைகள் பறிக்க வேண்டும். கோவில்களில் துளசியைப் பிரசாதமாகக் கொடுத்தால் ஒரு தழையை காதில் வைத்துக் கொள்ள வேண்டும். "யார் துளசி பத்திரம் கொண்டு வருகிறானோ அவனுடன் நானும் ஓடி வருகிறேன்" என்றார் பகவான்.

    துளசிச் செடிகள் அதிகமாக இருக்கின்ற வீடு மிக புனிதம் உடையதாவதால் யமகிங்கரர்கள் அங்கு வர மாட்டார்கள். நர்மதை நதியின் தரிசனம், கங்கையில் குளியல் துளசி தள ஸ்பரிசம் இம்மூன்றும் துளசிக்கு சமமானவை.

    திருமணத் தடைகள் ஏற்பட்டு மன அமைதி இழப்போர், மன அமைதியற்றவர்கள், செல்வம் நிறைய அளவில் இருந்தும் நற்பணிகளைச் செய்ய முடியாத நிலையில் உள்ளோர், நல்ல எண்ணங்கள் கைகூட வேண்டுமென்று முயலுவோர், சமய பேதம் சிறிதுமின்றித் திங்கட்கிழமை தோறும் அதிகாலையில் நீராடி தூய ஆடை அணிந்து, தூய மனத்தினராய், தொட்டாற் சிணுங்கியையும் துளசியையும் ஒன்றாக வைத்து வளர்த்து வரும் தொட்டியைக் கொண்டு வந்து அதற்கு அலங்காரம் செய்ய வேண்டும். தூப தீபம் காட்ட வேண்டும், கற்பூரம் ஏற்றி வழிபட வேண்டும், பழம் ஏதேனும் வைத்து வழிபட வேண்டும். இவ்விதமாக வழிபடும்போது இருபத்தியொருமுறை அந்தத் தொட்டியைச் சுற்றி வந்து வணங்க வேண்டும் இவ்விதம் தொடர்ந்து வழிபட்டு வந்தால் நாலாவது வார இறுதியில் நல்ல பலன்களைப் பெற்று சிறப்படையலாம்.

    • ஏழுமலையானுக்கு தயிர்சாதம் மட்டுமே நைவேத்தியம் செய்யப்படுகிறது.
    • இதுதவிர வேறு எந்த பாத்திரமும் கருவறையின் குலசேகரபடியை தாண்டது.

    திருப்பதி பிரசாதம்!

    திருமலை வாசனுக்கு படைக்கும் பிரசாதங்கள் தாய் வகுளாதேவி முன்னிலையில் தயாரிக்கப்படுகிறது.

    இதற்காக மடப்பள்ளி முன்பு தாய் வகுளாதேவி சிலை உள்ளது.

    இங்கு ஏழுமலையானுக்கு பிடித்த லட்டு பிரசாதத்துடன் பொங்கல், தயிர்சாதம், புளிசாதம், சித்தரன்னம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், பாயாசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரி பருப்பு கேசரி ஆகியவை பெருமளவு தயார் செய்யப்படுகிறது.

    ஆனால் ஏழுமலையானுக்கு தயிர்சாதம் மட்டுமே நைவேத்தியம் செய்யப்படுகிறது. அதுவும் மண்சட்டியில் வைத்து படைக்கப்படுகிறது.

    இதுதவிர வேறு எந்த பாத்திரமும் கருவறையின் குலசேகரபடியை தாண்டது.

    பெருமாளுக்கு நைவேத்யம் செய்யப்பட்ட எச்சில் மண்சட்டியும், தயிர் சாதமும் ஒரு பக்தனுக்கு கிடைத்தால் அது அவன் செய்த பெரும் பாக்கியமாக கருதப்படுகிறது.

    • மூலவர் “சிலா தோரணம்” என்ற அபூர்வ கற்களில் வடிக்கப்பட்டு உள்ளது.
    • ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தில் இருக்கிறது.

    திருமலை அதிசயம்

    ஆஜானுபாகுவாய் சுமார் 9 அடிக்கு மேல் உயர்ந்து கமலபீடத்தின் மீது எழுந்து நிற்கும் ஏழுமலையானுக்கு வெள்ளிக்கிழமை மட்டுமே அபிஷேகம் நடக்கும்.

    மற்ற நாட்களில் எல்லாம் பச்சை கற்பூரம், புனுகுதைலம், வாசனை திரவியங்கள் சாத்தப்பட்டு தங்க, வைர, வைடூரிய நகைகளால் அலங்கரிக்கப்பட்டு வழிபாடு நடக்கிறது.

    மூலவர் "சிலா தோரணம்" என்ற அபூர்வ கற்களில் வடிக்கப்பட்டு உள்ளது.

    மூலவருக்கு தினமும் பச்சை கற்பூரம் சாத்தப்படுகிறது. இது அரிப்பை ஏற்படுத்தும் ஒருவகை அமிலம்.

    இதனை சாதாரண கருங்கல்லில் தடவினால் அது வெடித்துவிடும்.

    ஆனால் 365 நாளும் பச்சை கற்பூரம் சாத்தப்படும் ஏழுமலையான் மூலவர் சிலை வெடிப்பேதும் இல்லாமல் உள்ளது அதிசயமாக கருதப்படுகிறது.

    ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தில் இருக்கிறது.

    திருமலை 3 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம்.

    அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள்.

    அபிஷேகம் முடிந்ததும் ஏழுமலையானுக்கு வியர்க்கும்.

    இதனால் பீதாம்பரத்தால் வியர்வையை வேதபண்டிதர்கள் ஒற்றி எடுக்கிறார்கள்.

    • ஏழுமலையானை திருமலை ஏறி நேரடியாக அவரை தரிசிக்க கூடாது.
    • அலமேல் மங்காபுரத்தில் உள்ள பத்மாவதி தாயாரை தரிசிக்க வேண்டும்.

    ஏழுமலையானை தரிசிக்கும் முறை!

    ஏழுமலையானை திருமலை ஏறி நேரடியாக அவரை தரிசிக்க கூடாது.

    அதற்கு ஒரு மரபு உண்டு.

    முதலில் கீழ் திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ பெருமானை சேவிக்க வேண்டும்.

    ஏன் முதலில் கோவிந்தராஜனை தரிசனம் செய்ய வேண்டும் என்றால் இவர் வேங்கடவனின் அண்ணன்.

    சிதம்பரம் கோவிலில் திருச்சித்திரகூடத்தில் எழுந்தருளி உள்ள கோவிந்தராஜனே இவர் என்று புராண வரலாறு கூறுகிறது.

    தில்லை கோவிந்தராஜன் இந்த பகுதிக்கு வந்ததாகவும், திருப்பதியின் எழிலில் மனதை பறிகொடுத்து இங்கேயே தங்கி விட்டதாகவும், அவருக்காக இங்கு கோவில் எழுப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    வேங்கடவன் கோவில் கொள்வதற்கு முன்பே இவர் இங்கே எழுந்தருளியதால் இவரை ஏழுமலையானின் அண்ணன் என்கிறார்கள்.

    முதலில் இவரை தரிசித்து விட்டு பின்னர் அலமேல் மங்காபுரத்தில் உள்ள பத்மாவதி தாயாரை தரிசிக்க வேண்டும்.

    இவரை தரிசித்து திருமலை ஏற அனுமதி பெற வேண்டும்.

    திருமலையில் வராக தீர்த்தகரையில் உள்ள வராகமூர்த்தியை தரிசித்த பின்னரே திருவேங்கடனை தரிசிக்க செல்ல வேண்டும்.

    • “வேங்”என்றால் பாவம்., “கடா” என்றால் தீர்த்து வைக்கும் சக்தியுள்ளவன் என்று பொருள்.
    • அஞ்சனாதேவி தவம் புரிந்து ஆஞ்சநேயரை பெற்ற காரணத்தினால் அஞ்சனாத்திரி.

    திருப்பதி திருமலை!

    ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட 108 ஆலயங்களையும் "திருப்பதி" என்றுதான் அழைக்கின்றனர்.

    ஆனால் ஊரை சொல்லாமல் திருப்பதி என்று சொன்ன மாத்திரத்திலேயே அனைவரும் புரிந்து கொள்ளக்கூடிய தலம் வேங்கடவன் கோவில் கொண்டுள்ள திருப்பதிதான்.

    "வேங்"என்றால் பாவம்., "கடா" என்றால் தீர்த்து வைக்கும் சக்தியுள்ளவன் என்று பொருள். அதனால்தான் வேங்கடேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.

    கலியுக கடவுளாக பக்தர்களின் கஷ்டங்களை தீர்த்து வைக்கும் இஷ்ட தெய்வமாக திகழும் வேங்கடேஸ்வரரை பக்தர்கள் திருமலைவாசா, ஸ்ரீனிவாசா, ஏழுமலையான், ஏழுகொண்டலவாடு, பாலாஜி, கோவிந்தா, மலையப்பான் என்று பலவாறு உள்ளம் உருகி அழைத்து வழிபடுகிறார்கள்.

    அவரது பெயரை போல திருமலைக்கும் ஏழு பெயர்கள் உண்டு.

    ஆதிசேஷன் உருவத்தை ஒத்திருப்பதால் சேஷாசலம்.

    வேதங்கள் நிலை கொண்டு இருப்பதால் வேதாசலம்.

    கருடனால் பூலோகத்தை அடைந்த காரணத்தினால் கருடாசலம்.

    விருஷன் எனும் அரக்கன் மரணம் அடைந்து மோட்சம் பெற்றதால் விருஷபாத்திரி.

    அஞ்சனாதேவி தவம் புரிந்து ஆஞ்சநேயரை பெற்ற காரணத்தினால் அஞ்சனாத்திரி.

    வாயுதேவனுக்கும், ஆதிசேஷனுக்கும் உண்டான சண்டையால் ஆனந்தகிரி.

    பாவங்கள் தீர்க்கும் காரணத்தினால் வேங்கடாசலம் என அழைக்கப்படுகிறது.

    • வில்வ மரத்துக்கு ஸ்ரீவிருட்சம் என்றும், வில்வ பழத்துக்கு ஸ்ரீபழம் என்றும் பெயருண்டு.
    • மூன்று இலைகள் கொண்ட வில்வதளம் சிவபெருமானின் மூன்று கண்களைக் குறிப்பதாக சொல்வார்கள்.

    சிவ மூலிகைகளின் சிகரம்-வில்வம்

    வில்வ மரத்துக்கு ஸ்ரீவிருட்சம் என்றும், வில்வ பழத்துக்கு ஸ்ரீபழம் என்றும் பெயருண்டு.

    சிவ வழிபாட்டுக்கு எத்தனையோ மலர்கள் உகந்ததாக உள்ள போதிலும், வில்வ இலை தனித்துவம் கொண்டது.

    வில்வ இலையால் சிவனை அர்ச்சனை செய்து வழிபடும் போது கிடைக்கும் பலன்கள் ஏராளம். யார் ஒருவர் தினமும் சிவாலயத்துக்கு சென்று வில்வத்தை வழங்கி ஈசனை வழிபடுகிறாரோ, அவரது சகல பாவங்களும் நீங்கி விடும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

    வில்வமானது பாதிரி, வன்னி, மந்தாரை, மா ஆகிய மரங்களுடன் தேலோகத்தில் இருந்து வந்த 'பஞ்ச தருக்கள்' என்ற சிறப்பைப் பெற்றது.

    பாற்கடலில் இருந்து லட்சுமிதேவி தோன்றிய போது அவளது கரங்களில் இருந்து வில்வ மரம் தோன்றியதாக வராக புராணத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே வில்வ மரத்தை மகாலட்சுமியின் வடிவமாக கருதுகிறார்கள்.

    இதனால் வில்வ மரத்தை வழிபட்டால், ஈசனின் கருணை கிடைப்பதோடு, லட்சுமி தேவியின் பரிபூரணமான அருளையும் பெறலாம். வில்வ மரத்தில் மட்டுமின்றி வில்வ இலைகளிலும் மகாலட்சுமி வாசம் செய்வதால், வில்வ இலைகளுக்கு தனிச்சிறப்பு உண்டு.

    வில்வங்களில் மகாவில்வம், கொடி வில்வம், சித்த வில்வம், கற்பூர வில்வம் உள்பட 21 முக்கிய வகைகள் உள்ளன. வில்வத்துக்கு கூவிளம், கூவிளை என்பவை உள்பட பல பெயர்களும் உண்டு.

    வில்வ இலைகள் மூன்று தளம், ஐந்து தளம், ஏழு தளங்களாக இருப்பதை காணலாம். பெரும்பாலும் மூன்று இலைகளுடன் இருப்பதை வில்வ தளம் என்பார்கள். சிவனை மகிழ்ச்சிப்படுத்த ஒரே ஒரு வில்வதளம் போதும் என்பார்கள்.

    மூன்று இலைகள் கொண்ட வில்வதளம் சிவபெருமானின் மூன்று கண்களைக் குறிப்பதாக சொல்வார்கள். மேலும் வில்வதளத்தில் இச்சா சக்தி, க்ரியாசக்தி, ஞான சக்தி ஆகிய மூன்று சக்திகளும் அதிதேவதைகளாக இருக்கிறார்கள்.

    வில்வத்தில் ஐந்து தளம், ஏழு தளங்களுடன் இருப்பவை அரிதானதாக கருதப்படுகின்றன. இவற்றை மகா வில்வம், அகண்ட வில்வம் என்று உயர்வாக சொல்வார்கள்.

    வில்வ மரங்கள் கிளை, கிளையாக இடையிடையே முட்களுடன் காணப்படும். இதில் வில்வ தளங்களை சிவன் என்றும், முட்களை சக்தி என்றும், கிளைகளை வேதங்கள் என்றும் வேரை முக்கோடி தேவர்கள் என்றும் நம் முன்னோர்கள் போற்றி வழிபட்டுள்ளனர். எனவேதான் சிவபூஜை சமயத்தில் வில்வத்தால் அர்ச்சனை செய்தால் தீய சக்திகள் விலகும். தோஷங்கள் ஓடோடி விடும் என்பார்கள்.

    ஒரு வில்வ தளத்தை சிவனுக்கு அர்ப்பணம் செய்தால், மூன்று ஜென்ம பாவங்கள் விலகும் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனெனில் ஒரு வில்வ தளம் என்பது லட்சம் சொர்ண பூக்களுக்கு சமமானது.

    சிவனுக்கு வில்வ இலைகள் மிகவும் பிடிக்கும் என்பதால் சிலர் வில்வ இலைகளைக் கொண்டு சிவனுக்கு லட்சார்ச்சனை, கோடி அர்ச்சனை செய்வார்கள். அத்தகையவர்களுக்கு சிவபெருமானின் அருள் மிக, மிக எளிதாக கிடைக்கும்.

    அதாவது வில்வத்தின் துணை கொண்டு சிவபெருமானை எளிதாக நாம் அணுக முடியும். வில்வத்துக்கு மட்டும் எப்படி இந்த சிறப்பு கிடைத்தது என்று நீங்கள் யோசிக்கலாம். அதற்கு சில காரணங்கள் உதாரணமாக கூறப்படுகின்றன.

    சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை. இது கடும் வெப்பத்தைக் கொடுக்கக் கூடியது. இதனால் ஈசனை சாந்தப்படுத்தவும், குளிர்ச்சிப்படுத்தவும் முனிவர்கள், ரிஷிகள் வில்வ தளத்தை பயன்படுத்தினார்கள். வில்வம் குளிர்ச்சியூட்டும் குணமுடையது.

    வில்வ தளங்களால் ஈசன் குளிர்ச்சியை பெற்றார். எனவேதான் வில்வம், சிவபெருமானுக்கு பிடித்தமானதாக மாறியது.

    வில்வ இலைகளுக்கு மற்றொரு சிறப்பும் உண்டு. இதை உண்டால் நமது உடலில் இருந்து அதிக சக்திகள் வெளியாகாது. ஜீரணம் செய்த சக்தி கூட சேமிப்பாகி விடும்.

    இதன் மூலம் சிவத்துக்குள் அதிக சக்தியை சேமிக்க செய்யும் ஆற்றல் வில்வ தளங்களுக்கு இருப்பதை நம் முன்னோர்கள் கண்டு பிடித்தனர். எனவே சிவார்ச்சனைக்கு மற்ற மலர்கள், இலைகளை விட வில்வ தளங்களை பயன்படுத்தினார்கள்.

    வில்வம் இத்தகைய முக்கியத்துவத்தை பெற்றதால் 'சிவமூலிகைகளின் சிகரம்' என்றழைக்கப்படுகிறது.

    மூன்று இலைகளைக் கொண்ட வில்வ தளத்தை சிலர் தனி தனியாக கிள்ளி பிரித்து விடுவ துண்டு. அப்படி செய்யக்கூடாது. மூன்று இலை கொண்ட வில்வ தளத்தை அப்படியே அர்ச்சனை மற்றும் வழிபாட்டுக்கு பயன்படுத்த வேண்டும்.

    அப்படி வில்வதளத்தை பயன்படுத்தினால்தான், அதில் சேமிக்கப்படும் அதிர்வலைகள் நமக்கு கிடைக்கும். இந்த அதிர்வலை இடமாற்றம் எப்படி நிகழ்கிறது தெரியுமா?

    ஆயலங்களில் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்படும் மூல மூர்த்தியானது அஷ்ட பந்தனம், ராஜகோபுரம், கும்பாபிஷேகம் மூலம் எப்போதும் அதிர்வலைகளுடன் இருப்பதை நீங்கள் அறிந்து இருப்பீர்கள்.

    பழமையான சிவாலயங்களில் ஈசனிடம் இருந்த வெளிப்படும் அதிர்வு அதிகம் இருப்பதை பலரும் அனுபவப்பூர்வமாக அறிவார்கள்.

    அத்தகைய அதிர்வு கொண்ட ஆலயங்களில், லிங்கத்தின் மீது போடப்படும் வில்வ தளங்கள், அந்த அதிர்வுகளை தம்முள் கிரகித்து வைத்துக் கொள்ளும். பூஜை முடிந்து அர்ச்சகர் அந்த வில்வ தளத்தை நம்மிடம் தரும்போது பக்தியுடன் வாங்கி சட்டை பை அல்லது கைப்பைக்குள் வைத்துப் பாருங்கள்.

    வில்வ இலைகளில் தேங்கியுள்ள ஈசனின் அதிர்வலைகள் நம் உடலுக்குள் ஊடுருவும். அந்த அதிர்வலைகள் அபார சக்தி கொண்டவை. அது நமது உடலிலும் உள்ளத்திலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி விடும். வில்வ தளங்களுக்கு மட்டுமே இப்படி மூலவர் சிலையில் இருந்து நம்மிடம் அதிர்வலைகளை கொண்டு வந்து சேர்க்கும் ஆற்றல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    வில்வத்தின் சிறப்பு பற்றி புராணங்களில் பல கதைகள் உள்ளன.

    ஒரு தடவை காட்டுக்கு வேட்டையாட சென்ற வேடனை புலி துரத்தியது. வில்வ மரத்தின் மீது ஏறியவேடன் தூக்கம் வராமல் இருக்க, இலைகளை பறித்து போட்டுக் கொண்டே இருந்தான். அது மரத்தடியில் இருந்த லிங்கம் மீது விழுந்தது.

    விடிந்த பிறகுதான் அவனுக்கு தான் ஏறியது வில்வ மரம் என்று தெரிந்தது. அன்றைய இரவு சிவராத்திரியாகவும் இருந்தது. வேடன் தன்னை அறியாமல் லிங்கம் மீது வில்வ தளங்களை போட்ட காரணத்தால் அவனுக்கு மோட்சம் கிடைத்தது.

    மகா சிவராத்திரி நாளில் வில்வாஷ்டகம் பாராயணம் செய்து வில்வம் சார்த்தி, சிவபெருமானை வழிபட்டால், ஏழு ஜென்ம பாவம் விலகும் என்பது ஐதீகம்.

    ஊழிக்காலத்தில் அனைத்தும் அழியும் என்று உணர்ந்த வேதங்கள் தாங்கள் அழியாதிருக்க என்ன வழி என்று ஈசனிடம் கேட்க, ஈசனும் திருவைகாவூர் தலத்தில் வில்வ மரத்தின் வடிவில் நின்று தவம் செய்யுமாறு அருளினார். அதன்படி வேதங்களும் வில்வமரங்களாக தவம் இயற்றியதால் திருவைகாவூர் என்ற தலம் வில்வராண்யம் என்று சிறப்புப் பெற்றது.

    இத்தகைய சிறப்புடைய வில்வ மரம் திருவையாறு, திருவெறும்பூர், ராமேஸ்வரம் உள்பட 30 க்கும் மேற்பட்ட ஆலயங்களில் தல விருட்சமாக உள்ளது. வீடுகளிலும் வில்வ மரம் வளர்க்கலாம்.

    வீட்டில் வில்வ மரம் வளர்த்தால் அஸ்வ மேத யாகம் செய்த பலன் கிடைக்கும். ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த புண்ணியம் உண்டாகும். 108 சிவாலயங்களை தரிசனம் செய்த பலனும், புண்ணிய நதிகளில் நீராடிய பலனும் கிடைக்கும்.

    வில்வ மரம் வளர்ப்பவர்களை ஏழரை சனி நெருங்காது. வில்வ மரத்தை தினமும் பூஜித்தால் செல்வம் பெருகும். கடன் தொல்லைகள் மறையும். வெள்ளிக்கிழமைகளில் வில்வ மரத்தின் கீழ் அமர்ந்து லட்சுமி துதி சொல்லி நைவேத்தியம் படைத்து வழிபட்டால் அளவிட முடியாத அளவுக்கு அற்புதங்கள் நடக்கும்.

    வில்வ மரத்துக்கு ஸ்ரீவிருட்சம் என்றும், வில்வ பழத்துக்கு ஸ்ரீபழம் என்றும் பெயருண்டு. எனவே வில்வ மரத்தை பார்த்தும் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொள்ள வேண்டும்.

    மருத்துவ ரீதியாகவும் நிறைய பலன்களை வில்வம் தருகிறது. தினமும் வில்வ மரத்தடியில் தியானம் செய்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஊளைச் சதை குறையும். வில்வ இலை பொடியை சாப்பிட்டால் கண் பார்வை தெளிவாகும். பல் வலி நீங்கும். சளி, இருமல், சைனசுக்கு வில்வ இலை பொடி சிறந்த மருந்தாகும்.

    கொழுப்பு கட்டுப்படும். ரத்த அழுத்த பிரச்சினை தீரும். சர்க்கரை நோய் குணமாகும். அல்சர் பிரச்சினை வரவே வராது. ஜீரணக்கோளாறுகள் சரியாகும். உடல் குளிர்ச்சி பெறும். இதனால் தோல் சம்பந்தபட்ட எந்த வியாதியும் வராது.

    இன்னும் ஏராளமான மருத்துவ பலன் தரும் வில்வ தளத்தை பறிக்கும் போது பயபக்தியுடன் பறிக்க வேண்டும். அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, திங்கட்கிழமை, அஷ்டமி, நவமி, சதுர்த்தி நாட்களில் வில்வம் இலைகளை பறிக்கக் கூடாது.

    வில்வ இலைகளை சுத்தம் செய்து எத்தனை தடவை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். வில்வம் காய், பழத்தை யாகத்துக்கு பயன்படுத்தலாம்.

    வில்வதளத்தை பறித்த பிறகு 6 மாதம் வரை வைத்து வீட்டில் பூஜை செய்யலாம். உலர்ந்த வில்வமும் புனிதமானது.

    ×