search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நானோ தொழில்நுட்பம்"

    • உற்பத்தி செலவை குறைக்கவும் அடுத்தகட்ட முயற்சியாக பாலியஸ்டர் துணிக்கு சாயமிடவும் ஆயத்தமாகி வருகின்றனர்.
    • நொடிக்கு 6 மீட்டர் தூரம் பிரின்ட் செய்யும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது.

     திருப்பூர்:

    திருப்பூர் சாய ஆலைகள் அடுத்தகட்ட நகர்வுக்கு தயாராகியுள்ளன. மின் கட்டண உயர்வு உட்பட பல காரணங்களால் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. உற்பத்தி செலவை குறைக்கவும் அடுத்தகட்ட முயற்சியாக பாலியஸ்டர் துணிக்கு சாயமிடவும் ஆயத்தமாகி வருகின்றனர்.

    இதன் ஒரு பகுதியாக சாய ஆலை உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகள் 28 பேர் அடங்கிய குழு குஜராத் சென்று திரும்பியுள்ளது. சூரத் மற்றும் அகமதாபாத் சென்று ஓவன் துணிகளுக்கான சாயம் மற்றும் பிரின்டிங் ஆலைகளை பார்வையிட்டதோடு தொழில் அமைப்பினரை சந்தித்து திரும்பினர்.

    அகமதாபாத் சாய ஆலை கழிவுகள் முதல்கட்ட சுத்திகரிப்பு மட்டும் செய்யப்படுகிறது. உப்புத்தன்மையுள்ள கழிவு கடலில் நேரடியாக கலக்கப்படுகிறது. அங்கு ஜெனரேட்டர் தேவையே இல்லை. ஒரு நாள் மின்தடை நீங்கலாக மற்ற நாட்களில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது. சனி, ஞாயிறு விடுமுறையின்றி ஆலைகள் இயங்குகின்றன. மின் தடை ஏற்பட்டால் 140 டிகிரி வெப்பத்தில் இருக்கும் துணி கருகிவிடும்.தடையில்லா மின்சாரம் இருந்தால் பல சிக்கல்களை தீர்க்கிறது என்கின்றனர் சாய ஆலை உரிமையாளர்கள்.

    பிரின்டிங் தொழிற்சாலைகளில் அதிநவீன மெஷின்கள் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக டிஜிட்டல் பிரின்டிங் மெஷினில் குறைந்தது 10 மீட்டர் முதல் சாயமிடும் வசதி உள்ளது. அதாவது நொடிக்கு 6 மீட்டர் தூரம் பிரின்ட் செய்யும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது.

    அகமதாபாத் நகரில் ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்ற ரஞ்சன் சர்மா என்பவர் உப்பில்லாமல் சாயமிடும் நானோ தொழில்நுட்பத்தில் சாயமிட்டு வெற்றி கண்டுள்ளார். துணியுடன் சிறிது ரசாயனம் கலந்து சாயமிட்டாலே போதும், உப்பு தேவையில்லை.

    பாலியஸ்டர் துணிக்கு குளிர்ந்த நீரிலேயே சாயமிடுவதும் வெற்றி அடைந்துள்ளது. பாலியஸ்டர் துணிக்கு 130 டிகிரி வெப்பத்தில் சாயமிட வேண்டும். ஆனால் அகமதாபாத்தில் குளிர்ந்த நீரிலேயே சாயமிடுகின்றனர்.சாயமிட்ட துணிகளை ஒரு மணி நேரம் சுடு நீரில் நனைத்து வைத்தாலும் சாயம் பிரியாது. இது 100 சதவீதம் பாலியஸ்டர் துணி சாயமிட ஏற்றது.

    சூரத், அகமதாபாத் சென்று தொழில்நுட்ப பகிர்வு செய்து கொள்வதன் மூலம் திருப்பூர் சாயத்தொழில், நிச்சயம் அடுத்தகட்டத்துக்கு நகரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து சாய ஆலை உரிமையாளர்கள் சங்க பொருளாளர் மாதேஸ்வரன் கூறுகையில், அகமதாபாத்தில் பார்த்து வந்தபடி உப்பில்லா நானோ தொழில்நுட்பத்தில், சாயமிட முடிவு செய்துள்ளோம். அதற்காக முறையான அனுமதியுடன் சோதனை முறையில் நானோ தொழில்நுட்பத்தில் உப்பில்லாமல் சாயமிட தீர்மானித்துள்ளோம். விரைவில் சங்க உறுப்பினர்களுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றார்.

    திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் காந்திராஜன் கூறியதாவது:-

    சூரத் பகுதியில் பார்த்த ஸ்டீம் ஹவுஸ் தொழில்நுட்பம் வரவேற்புக்குரியது. அகமதாபாத்தில் குளிர்ந்த நீரில் பாலியஸ்டர் துணிகளுக்கு சாயமிடும் தொழில்நுட்பமும், நானோ தொழில்நுட்பமும் திருப்பூரின் எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்யும். முதல்கட்ட சுத்திகரிப்புக்கு பின் உப்பு தண்ணீரை கடலில் கலப்பதால் செலவு குறைவாக இருக்கிறது. அதற்கு பதிலாக திருப்பூரில் உப்பில்லா சாயமிடும் தொழில்நுட்பமும் ஸ்டீம் இல்லாமல், பாலியஸ்டர் துணிக்கு சாயமிடும் தொழில்நுட்பமும் பின்பற்றப்படும். 4 நாள் பயணமாக சென்று வந்தது.

    திருப்பூர் சாயத்தொழிலுக்கு புத்துயிர் அளிக்கும் அம்சங்களுடன் இருந்தது.இவ்வாறு அவர் கூறினார். 

    ×