search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒலிப்பான்கள்"

    • தடை செய்யப்பட்ட ஒலிப்பான்கள் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது.
    • பொது மக்களை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை நகரத்தில் சமீப காலமாக சாலை விதிகளை அதிகளவில் மீறி வருகின்றனர். குறிப்பாக கனரக வாகனங்களில் தடைச்செய்யப்பட்ட ஒலிப்பான்கள் தனியார் வாகனங்கள் மட்டுமின்றி அரசு வாகனங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. ஏதேனும் புகார் வந்தால் மட்டும் அதிகாரிகள் படைசூழ சென்று நடவடிக்கை எடுக்கின்றனர். பின்னர் விட்டு விடுகின்றனர். தொடர் நடவடிக்கை இல்லாத காரணத்தால் மீண்டும் பழைய நிலை தொடர்கிறது. தடை செய்யப்பட்ட ஒலிப்பான்கள் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது.

    அதேபோன்று தேசிய நெடுஞ்சாலை மற்றும் நகரின் நெரிசல் மிகுந்த பகுதிகளில் இரு சக்கர வாகனங்களில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் செய்யும் சாகசங்கள் வாகன ஓட்டிகளுக்கு அச்சறுத்தலாக உள்ளது. இதனால் சில சமயங்களில் எதிரில் வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் சூழல் ஏற்படுகிறது. அது மட்டு மல்லாமல் சாகச பயணம் செய்யும் இளைஞர்கள் விபத்தில் சிக்கும் நிலையும் உள்ளது.

    இது போன்ற சம்பவங்கள் நடைபெறும் போது படிக்கும் பருவத்தில் எதற்காக மோட்டார் சைக்கிள் வாங்கிக் கொடுத்தோம் என பெற்றோர் யோசிக்கின்றனர்.

    நகரின் முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து போலீசார் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி அதன் வாயிலாக ஹெல்மெட் போன்றவற்றுக்கு ஆன்லைன் வாயிலாக அபராதம் விதிக்கிறார்கள். இது ஒரு புறம் இருந்தாலும் அவ்வப்போது காவல் துறையினர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். அதிவேகமாக செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும். ஓட்டுநர் உரிமம் வைத்து ஓட்டுகின்றனரா? என கண்காணிக்க வேண்டும். அதிலும் அதிகமாக வீடுகள் உள்ள பகுதிகளில் சிலர் கண் மூடிதனமாக வாகனங்களை ஓட்டுகின்றனர். அவ்வாறு ஓட்டி செல்பவர்களை பிடித்து உரிய தண்டனை கொடுத்தால் தான் அடுத்தவர்கள் அந்த தவறை செய்ய தயங்குவார்கள். எனவே போக்குவரத்து காவல் துறையினர் மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சிறுவர்களை காப்பாற்ற வேண்டும். பொது மக்களை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×