search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நில பட்டா"

    • தமிழகத்தில் நில ஆவணங்களை டிஜிட்டல் முறைக்கு மாற்றுவதற்கான பணிகள் படிப்படியாக நடந்து வருகிறது.
    • முதற்கட்டமாக பட்டா, நில வரைபடம் உள்ளிட்ட ஆவணங்களை ஆன்லைன் வாயிலாக வழங்கும் பணி செயல்பாட்டில் உள்ளது.

    சென்னை:

    நாடு முழுவதும் நில ஆவணங்களை டிஜிட்டல் முறைக்கு மாற்றவும், ஆதார் பான் உள்ளிட்ட தகவல்களை அதனுடன் இணைக்கவும் மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.

    இதற்கான வழிகாட்டுதல்களையும் மாநில அரசுகளுக்கு அனுப்பி வைத்து செயல்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில் தமிழகத்தில் நில ஆவணங்களை டிஜிட்டல் முறைக்கு மாற்றுவதற்கான பணிகள் படிப்படியாக நடந்து வருகிறது.

    முதற்கட்டமாக பட்டா, நில வரைபடம் உள்ளிட்ட ஆவணங்களை ஆன்லைன் வாயிலாக வழங்கும் பணி செயல்பாட்டில் உள்ளது.

    இதையடுத்து இப்போது பட்டா உள்ளிட்ட நில ஆவணங்களில் உரிமையாளரின் ஆதார் எண்ணை இணைப்பதற்கு நில அளவை மற்றும் வருவாய்த் துறை முடிவு செய்துள்ளது.

    ஏனென்றால் பட்டாவில் தற்போது இடம் பெறும் விவரங்கள் உரிமையாளர் குறித்த அடையாளத்தை உறுதி செய்ய தற்போதைய ஆவணங்களில் போதுமானதாக இல்லை.

    எனவே பட்டா உள்ளிட்ட ஆவணங்களில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஒருவர் பெயரில் எத்தனை சொத்துக்கள் உள்ளது என்பதை அரசு சார்ந்த துறைகள் தெரிந்து கொள்ள இது உதவும் என்றும் நில அபகரிப்பு போன்ற மோசடிகளை தடுக்க இந்த புதிய முறை மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் தெரிவித்தனர். இதுபற்றி சர்வே தீர்வுத் துறை இயக்குனர் மதுசூதனன் கூறியதாவது:-

    நில பரிவர்த்தனைகளின் பாதுகாப்பை மேம்படுத்துவது மற்றும் ஆவணங்களை தவறாக பயன்படுத்துவதை தடுப்பதை நோக்கமாக கொண்டு இந்த புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    தற்போதைய நிலையில் வெறும் ஆவணங்கள் மூலம் ஆள்மாறாட்டம் செய்வதற்கான சாத்தியக் கூறுகள் நிறைய உள்ளதால் ஒருவர் தன்னைத் தானே சட்டபூர்வ நில உரிமையாளராக காட்டிக் கொள்ள முடியும்.

    அதனால்தான் இதை தடுக்கும் வகையில் கணினி மயமாக்கப்பட்ட நிலப்பதிவோடு ஆதாரை இணைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் உண்மையான உரிமையாளர்கள் மட்டுமே பத்திரப்பதிவு பரிவர்த்தனைகளை மேற் கொள்வதை உறுதி செய்ய முடியும். மாநில அரசின் இந்த முன்மொழிவுக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமும் ஒப்புதல் அளித்ததையடுத்து தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×