search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தண்ணீர் விற்பனை"

    • சட்ட விரோதமாக தண்ணீர் எடுப்பதற்காக பல்லாவரம் எலக்ட்ரிக் நகர் சாலையில் டேங்கர் லாரிகள் அணிவகுத்து நின்றன.
    • லாரிகளால் பல லட்சம் மதிப்பில் போடப்பட்டுள்ள சாலைகள் வீணாகின்றன என்று குடியிருப்புவாசிகள் ஆதங்கப்படுகின்றனர்.

    சென்னை:

    சென்னையை அடுத்த கோவிலம்பாக்கத்தில் 10 வயது சிறுமி தண்ணீர் லாரி மோதி உயிர் இழந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து தாம்பரம் மாநகராட்சியும் மாவட்ட கலெக்டரும் சேர்ந்து ஆழ்துளை கிணறுகளை அகற்றி டேங்கர் லாரிகளில் தண்ணீர் எடுக்காமல் இருக்க மின் இணைப்பை நிறுத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதையடுத்து மாவட்டத்தில் தண்ணீர் லாரிகள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

    இதை தொடர்ந்து தனியார் டேங்கர் லாரி சங்கத்தினர் வேலை நிறுத்தம் செய்வதாக தெரிவித்தனர். போராட்ட அறிவிப்பை தொடர்ந்து கலெக்டர் நிலத்தடி நீரை எடுக்க அனுமதியளித்தார். மேலும் விதிகளின்படி விரைவில் உரிமம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

    இந்நிலையில் சட்ட விரோதமாக தண்ணீர் எடுப்பதற்காக பல்லாவரம் எலக்ட்ரிக் நகர் சாலையில் டேங்கர் லாரிகள் அணிவகுத்து நின்றன.

    பல்லாவரம்-துறைப்பாக்கம் ரேடியல் சாலையை ஒட்டி நிலத்தடி நீரை உறிஞ்சுவதற்காக நேற்று 10 லாரிகள் நின்றன. மீண்டும் விதிகளை மீறி தண்ணீர் லாரிகள் அணிவகுத்து நிற்பதை அப்பகுதி மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தாம்பரம் மாநகராட்சியில் நிறுவப்பட்ட பெயர் பலகையை டேங்கர் லாரி மூலம் இடித்து தள்ளப்பட்டது. இங்கிலிஷ் எலக்ட்ரிக் நகரில் நிலத்தடி நீரை எடுக்க கூடாது என வைக்கப்பட்டிருந்த பலகை கிழே தள்ளப்பட்டு இருந்தது. அப்பகுதி குடியிருப்புவாசிகள், நிலத்தடி நீரை லாரிகளில் உறிஞ்சி எடுத்து செல்வதை எதிர்ப்பதோடு கவலை அடைந்துள்ளனர். நிலத்தடி நீரை வீணடிப்பதால் பணம் விரயமாகிறது. இந்த லாரிகளால் பல லட்சம் மதிப்பில் போடப்பட்டுள்ள சாலைகள் வீணாகின்றன என்று குடியிருப்பு வாசிகள் ஆதங்கப்படுகின்றனர்.

    அறிவிப்பு பலகையை இடித்து தள்ளிய லாரி உரிமையாளர்கள் மீது போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.

    ×