search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரூ.2 லட்சம் மோசடி"

    • பணம் இரட்டிப்பு தருவதாக கூறி ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ. 2 லட்சம் மோசடி செய்த நபர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
    • புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் சின்னமனூர் சிவசக்தி நகரைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 51). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரிடம் வருசநாடு வாலிப்பாறையைச் சேர்ந்த பார்த்திபன் (42) தொழில் முறையில் அறிமுகமாகி உள்ளார்.

    இவர்கள் பழக்கம் அதிகரித்த நிலையில் ரவிச்சந்திரனிடம் பார்த்திபன் தனக்கு ரூ.2 லட்சம் கொடுத்தால் அதனை 100 ரூபாய் நோட்டுகளாக ரூ.3 லட்சம் வரை கூடுதலாக தருகிறேன் என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

    அதன்படி ரவிச்சந்திரன் ரூ.2 லட்சம் பணத்துடன் தாடிச்சேரி செல்லும் கரட்டுப்பாதை நாகம்மாள் கோவில் அருகே காத்திருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் ரவிச்சந்திரனிடம் பணத்தை பெற்றுக் கொண்டு கூறியபடி ரூ.3 லட்சம் பணம் தராமல் ஏமாற்றிச் சென்றனர்.

    அதன் பிறகு பார்த்திபனிடம் செல்போனில் பேசிய போதும், அவர் சரியாக பதில் அளிக்காமல் இருந்துள்ளார். அதன் பிறகுதான் பணத்தை பறித்துச் சென்றது பார்த்திபனின் கூட்டாளிகள் என தெரிய வந்தது.

    இது குறித்து வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் ரவிச்சந்திரன் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேஸ், சப்-இன்ஸ்பெக்டர் கோகுல கண்ணன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து பண மோசடியில் ஈடுபட்ட பார்த்திபன், கடமலைக்குண்டுவைச் சேர்ந்த சாம்சன் (46), வாலிப்பாறையைச் சேர்ந்த சின்னன் (48), பசும்பொன் (40), தர்மாபுரியைச் சேர்ந்த சுபாஷ் (43) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.

    இவர்கள் இதே போல் வேறு யாரிடமாவது பண மோசடியில் ஈடுபட்டுள்ளனரா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ×