search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆவணங்கள் மோசடி"

    • உயில் பத்திர பதிவு புத்தகத்தில் ஆவணங்களை மாற்றி வேறு ஆவணங்களை இணைத்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது.
    • உயில்களின் அடிப்படையில் பதிவு செய்யப்படும் சொத்துக்களின் ஆவணங்களை உன்னிப்பாக ஆய்வு செய்யுமாறு துணை பதிவாளர்களுக்கு மாவட்டப் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவையில் 2000-ம் ஆண்டு முதல் போலி ஆவணம் மூலம் சொத்துக்களை அபகரிக்கும் சம்பவம் நடந்து வருகிறது.

    பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களின் சொத்துக்கள் அதிகளவில் அபகரிக்கப்பட்டது. இது சர்வதேச அளவிலான பிரச்சனையாக உருவெடுத்தது.

    இதன்பின் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு நில அபகரிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இருப்பினும் அவ்வப்போது புகார்கள் எழுந்து முறைகேடுகள் தொடர்ந்தது.

    சமீபத்தில் காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி மதிப்புள்ள நிலம் போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டு வீட்டு மனைகளாக விற்பனை செய்யப்பட்ட பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது. இந்த நிலையில் பத்திரப்பதிவு துறையில் பதிவான உயில் சொத்துக்களில் ஆவணங்களை மாற்றி நூதன மோசடி நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

    உயில் பத்திர பதிவு புத்தகத்தில் ஆவணங்களை மாற்றி வேறு ஆவணங்களை இணைத்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுதொடர்பாக முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஒரு வீடியோ ஆதாரத்தை வெளியிட்டார். இதனிடையே மாவட்ட பதிவாளர் கந்தசாமி, உயில் பத்திரங்களை ஆய்வு செய்யும்படி உத்தரவிட்டார். இதில் 8 உயில் பத்திரங்களில் உள்ள விரல் ரேகை பதிவு பொருந்தாமல் முரண்பாடாக இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

    இதையடுத்து வருவாய்த்துறை மூலம் சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் முதல்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர். இதுபோல மோசடிகளில் பத்திரப்பதிவுத்துறை ஊழியர்கள் துணையின்றி செய்திருக்க முடியாது. இதனால் பத்திரப்பதிவு துறை ஊழியர்களிடம் முழுமையான விசாரணை நடத்தவும் சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    மேலும், உயில்களின் அடிப்படையில் பதிவு செய்யப்படும் சொத்துக்களின் ஆவணங்களை உன்னிப்பாக ஆய்வு செய்யுமாறு துணை பதிவாளர்களுக்கு மாவட்டப் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.

    அதேபோல் துணை பதிவாளர் அலுவலகங்களில் கடந்த 5 ஆண்டுகளில் இதுவரை பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத மனைகளின் விவரங்களை சேகரிக்கும் பணியையும் பதிவுத்துறை தொடங்கியுள்ளது. அடுத்தடுத்து வெளிவரும் மோசடி சம்பவங்கள் சொத்துக்கள் வைத்திருப்போரை பீதிக்கு ஆளாக்கியுள்ளது.

    ×