search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனம் தளர வேண்டாம்"

    • நல்லதை செய்பவர்களுக்கு கெடுதல்கள் அதிகம் நடக்கிறது.
    • நீங்கள் செய்த புண்ணித்தின் பலனை அடைவது உறுதி.

    கெட்டதை செய்பவர்களுக்கு நல்லதாக நடக்கிறது. நல்லதை செய்பவர்களுக்கு கெடுதல்கள் அதிகம் நடக்கிறது. இது எதனால்? என்ற கேள்வி நீண்ட நாட்களாக எல்லோருடைய மனதிலும் இருக்கும். இதற்கு பதில் சொல்கிற மாதிரியான கதையை தான் நாம் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். இந்த கதை உங்களது மனநிலையை மாற்றும். வாங்க கதைக்குள்ள போகலாம்.

    சொர்க்கத்தில் ஒரு பெரிய தேவதையும், சின்ன தேவதையும் வாழ்ந்து வந்தார்கள். அந்த பெரிய தேவதை, வயது முதிர்ந்த, அனுபவம் வாய்ந்த தேவதை. ஆனால் சின்ன தேவதைக்கோ வயதும் கிடையாது. அனுபவமும் கிடையாது. இப்படி இருக்கும்போது சின்ன தேவதையை தன்னுடைய சிஷ்யையாக ஏற்றுக்கொண்டு நல்லது, கெட்டதை சொல்லிக்கொடுத்து, பாவ-புண்ணியங்களை சொல்லிக்கொடுத்து வளர்த்து வந்தாள் பெரிய தேவதை.

    ஆனால் சின்ன தேவதைக்கு, பெரிய தேவதை மேல் ஒரு மனக்குறை. பெரிய தேவதை சரியே இல்லை. வாய்கிழிய பேசுகிறதே தவிர ஒன்றுமே தெரியவில்லை. செய்வதெல்லாம் தாறுமாறு. நல்லவர்களுக்கு எல்லாம் கெட்டது செய்கிறார். கெட்டவர்களுக்கு எல்லாம் நல்லது செய்கிறார். ஏன் தான் இவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்று எண்ணியது சின்ன தேவதை.

    இந்த மனக்குறையை பெரிய தேவதையிடம் சென்று கேட்கவும் செய்தது சின்ன தேவதை. அப்படியா! பெரிய தேவதைக்கோ ஒரே ஆச்சரியம், நாம் எப்போது இவ்வாறு நடந்துகொண்டோம் என்று மனதில் நினைத்துக்கொண்டு அதை சின்ன தேவதையிடமே கேள்வி கேட்டது.

    சின்ன தேவதையே, இப்படி சொன்னால் எனக்கு புரியவில்லை. நான் எந்த இடத்தில், எந்த சம்பவத்தில் இவ்வாறு நடந்துகொண்டேன் என்று தெளிவாக கூறு. நான் அதை திருத்திக்கொள்கிறேன் என்றது பெரிய தேவதை.

    அதை கேட்டதும் சின்ன தேவதை சம்பவத்தை நியாபகப்படுத்தியது. சரியாக 6 மாதத்திற்கு முன்பு அதாவது சின்ன தேவதை சிஷ்யையாக சேர்ந்த போது, பெரிய தேவதை பாவ-புண்ணிய கணக்கை சொல்லிக் கொடுக்க பூமிக்கு அழைத்துக்கொண்டு வந்தது. அந்த நேரத்தில் பூமியில் இடியுடன் கூடிய பெரிய மழை. அப்போது ஒரு பெரிய பணக்காரரின் வீட்டு முன்னாள் சென்று நின்று கொண்டிருந்தனர்.

    அப்போது பெரிய தேவதை ஒரு மந்திரத்தை சொன்னவுடன் அந்த பணக்கார வீட்டின் ஏழை உறவினர்கள் போல் இருவரும் உருவம் மாறினர். இருவரும் நாம் தேவதை என்பதையே மறந்து உறவுக்காரர்களாக மாறி செல்லலாம். அங்கு சென்று அவருடைய பாவ-புண்ணிய கணக்கை எழுதலாம் என்று பெரிய தேவதை, சின்ன தேவதையிடம் சொன்னது.

    சின்னதேவதை ஒரே சந்தோசத்தில் சென்று அந்த வீட்டு கதவை தட்டியது. உடனே அந்த வீட்டின் உரிமையாளர் கதவை திறந்தார். இவர்கள் ஏழை உறவினர்கள் என்று வேண்டாவெறுப்பாக முகத்தை சுழித்தவாறு வீட்டிற்குள் அழைத்தான். சுத்தமாக இல்லாத அறையில் அவர்களை தங்க வைத்து மனவிசனத்தோடு அவர்களை உபசரித்தான்.

    இதனை இரு தேவதைகளும் பொறுமையாக கவனித்து வந்தன. அன்று இரவு பெரிய தேவதை, சிறிய தேவதைக்கு பாடம் சொல்லிக்கொடுத்தாள். ஒரு மனிதன் தேடி தேடி தவறு செய்ய வேண்டும் என்று எதுவும் இல்லை. இந்த மாதிரி சுற்றி இருப்பவர்களிடம் பாரபட்சம் பார்த்தாலும், அவர்களை அலட்சியமாக நடத்தினாலும் பெரிய பாவம் தான். இன்றைக்கு இரவு இவனது பாவக்கணக்கு கூடியது என்று கூறியது.

    சின்னதேவதைக்கு இந்த பாடம் விளங்கியது. இதனால் பெரிய தேவதை மீது மதிப்பும், மரியாதையும் வந்தது. அப்படியே அந்த இரவு அங்கேயே உறங்கினர். ஆனால் பாதி ராத்திரியில் அந்த அறையில் ஒரு சத்தம் கேட்டது. சின்ன தேவதை கண்விழித்து பார்த்தபோது பெரிய தேவதை அந்த அறையில் உள்ள பொத்தல்களை சரிசெய்துகொண்டு இருந்தது.

    சின்ன தேவதைக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. இன்று தான் இவன் பாவம் செய்துள்ளான் என்று பாடம் புகட்டியது. ஆனால் இவனுக்கு உதவி பெரிய தேவதை உதவி செய்கிறதே என்று நினைத்தது. ஆனால் பெரிய தேவதையிடம் இதனை கேட்கவில்லை.

    அதேபோல் வேறுஒருநாள் இதேபோன்று பாடம் புகட்ட சின்ன தேவதையுடன் பூமிக்கு வந்தாள் பெரிய தேவதை. அன்றைக்கும் பூமியில் பெரிய மழை. அன்றைக்கு பெரிய தேவதை தேர்ந்தெடுத்தது ஒரு நடுத்தர வசதிகொண்ட மனிதனின் வீட்டை. இப்போதும் பெரிய தேவதை ஒரு மந்திரத்தை சொல்ல இருவரும் அந்த வீட்டு சொந்தக்காரர்களின் ஏழை உறவினர்களாக உருவம் எடுத்தனர்.

    வழக்கம்போல் அந்த வீட்டின் கதவை தட்டினர். அந்த வீட்டுக்காரன் கதவை திறந்தான். அவர்களை பாரபட்சம் பார்க்காமல், அலட்சியம் காட்டாமல் தன்னுடைய வீட்டுக்கு முகமலர்ச்சியுடன் உபசரித்து நல்ல சாப்பாட்டை கொடுத்து, நல்ல அறையை அவர்களுக்கு வழங்கினான்.

    உடனே பெரிய தேவதை, சின்ன தேவதைக்கு பாடம் புகட்டியது. புண்ணியம் என்றால் எங்காவது சென்று பெரிய பொருளை தான் கொடுக்க வேண்டும் என்று இல்லை. தன்னை சுற்றி இருக்கும் மனிதர்களை சமமாக பாவித்து சமமாக அவர்களை நடத்தினாலே பெரிய புண்ணியம் தான். எனவே இன்று இரவு இவனது புண்ணிய கணக்கு கூடுகிறது என்று கூறியது பெரிய தேவதை.

    சின்ன தேவதைக்கு இந்த பாடமும் விளங்கியது. இந்த சின்ன விஷயத்தை கூட இவ்வளவு அழகாக புரிய வைத்ததை எண்ணி பெருமையாக நினைத்தது சின்ன தேவதை. அந்த இரவு நிம்மதியாக தூங்கவும் சென்றது. நடுராத்திரியில் அதேபோன்று ஒரு சத்தம் கேட்டது. சின்ன தேவதைக்கு ஒரே அதிர்ச்சி. என்னவென்றால் பெரிய தேவதை அந்த வீட்டின் தரையில் பல இடங்களில் பொத்தல்களை ஏற்படுத்திக்கொண்டு இருந்தது. சின்னதேவதைக்கு கோவம் தாங்கவில்லை.

    என்ன இது, போனதடவை பாவம் செய்தவனின் வீட்டில் இருந்த பொத்தல்களை எல்லாம் சரி செய்தது. ஆனால் புண்ணியம் செய்தவனின் வீட்டில் இருக்கும் அறையை இப்படி சேதப்படுத்துகிறதே, இவருக்கு என்ன தான் பிரச்சினை என்று யோசித்துகொண்டு இருந்தது சின்ன தேவதை. ஆனால் பெரிய தேவதையிடம், சின்ன தேவதை எந்த கேள்வியும் கேட்காமல் விட்டுவிட்டது.

    இந்த இரு சம்பவங்களும் தான் எனக்கு உங்கள் மீது அதிருப்தி ஏற்பட காரணம். இதைவைத்து தான் நான் சொல்கிறேன், நீங்கள் கெட்டவர்களுக்கு நல்லது செய்கிறீர்கள். நல்லவர்களுக்கு கெட்டது செய்கிறீர்கள் என்று சின்ன தேவதை, பெரிய தேவதையிடம் கூறியது.

    இதை எல்லாவற்றையும் கேட்ட பெரிய தேவதைக்கு ஒரே சிரிப்பு. சின்ன தேவதையிடம் ஒரு காரியத்தின் முற்பகுதியை வைத்து அதன் முடிவை கணிக்க கூடாது. பிற்பகுதியையும் பார்க்க வேண்டும். அதைவைத்து தான் கணிக்க வேண்டும். எனவே அந்த கதையின் பிற்பகுதியை பார்க்க நான் உன்னை மறுபடியும் பூமிக்கு அழைத்து செல்கிறேன் என்று இருவரும் பூமிக்கு சென்றனர்.

    முதலில் சென்றது பணக்கார மனிதனின் வீட்டுக்கு அந்த வீட்டில் எந்த மாற்றமும் இல்லை. இரண்டாவது அவர்கள் சென்றது நடுத்தர வசதியில் இருக்கும் மனிதனின் வீட்டுக்கு. ஆனால் அந்த மனிதனின் வீடு முன்ன மாதிரி ஓடுவீடாக இல்லாமல் பெரிய பணக்கார வீடாக மாறி இருந்தது. அந்த வீட்டுக்கு அருகில் இருந்த வீடுகளும் கூட நன்றாக வசதிபடைத்தவர்கள் இருக்கும் வீடுகளாக மாறி இருந்தது. உடனே சின்ன தேவதைக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.

    அப்போது தான் பெரிய தேவதை தான் செய்த வேலைகளை சொல்ல ஆரம்பித்தது. 6 மாதத்திற்கு முன்பு இந்த இரண்டு வீடுகளுக்கும் நாம் சென்று தங்கி இந்த அறைகளுக்கு அடியில் ஒரு புதையல் இருந்தது. அதை யோசித்து இந்த பணக்காரனுக்கு ஏற்கனவே மனிதனை மனிதனாக மதிக்க தெரியவில்லை. அவனுக்கு இந்த புதையல் கிடைத்தால் அவன் தலைகால் புரியாமல் ஆடுவான். எனவே பொத்தல்கள் வழியாக புதையல் தெரிந்துவிடக்கூடாது என்று எண்ணி பொத்தல்கள் எல்லாவற்றையும் அடைத்தேன்.

    ஆனால் மனிதனை மனிதனாக மதிக்கத்தெரிந்த அந்த நடுத்தர வசதிகொண்ட அந்த மனிதனுக்கு புதையலை காட்ட வேண்டும் என்று நினைத்து பொத்தல்களை உருவாக்கி புதையலை காண்பித்தேன். ஆனால் இந்த செயலை மட்டுமே பார்த்துவிட்டு என்னை தவறாக புரிந்துகொண்டாய் என்று சின்ன தேவதையிடம் விளக்கி கூறியது பெரிய தேவதை.

    அவரவர்கள் செய்த செயல்களுக்கான பலன்களை தான் அவரவர்கள் அனுபவிப்பார்கள். வேண்டுமென்றால் காலதாமதம் ஆகலாம் வேறுமாதிரி நடப்பதாக தோன்றலாம். ஆனால் இறுதியில் நல்லது தான் நடக்கும். இது தான் இயற்கையின் நியதி. அதைக்கேட்டு சின்ன தேவதைக்கு ஞானம் கிடைத்தது.

    இன்றைக்கு இந்த கதையை கேட்கிற நீங்களும் உங்கள் வாழ்க்கையில் உள்ள பொத்தல்களை பார்த்து பயந்துகொண்டு இருக்கிறீர்கள் என்றால், எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு கெடுதல்கள் நடக்கிறது என்று வருத்தப்பட்டுக் கொண்டு இருக்கிறீர்களானால் அந்த பொத்தல்கள் தான் உங்களுக்கு புதையல்களை காட்டப்போகிறது.

    அந்த கீறல்கள் தான் உங்களை முன்னேற்றம் அடையச்செய்யும். காலதாமதம் ஆகலாம், என்னடா நம்மளோட வாழ்க்கை இப்படி போகிறது என்று தோணலாம். நீங்கள் செய்த புண்ணித்தின் பலனை அடைவது உறுதி.

    ×