search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வராக நதி"

    • வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் நீர் பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருகிறது.
    • வைகை அணையின் நீர்மட்டம் 66 அடியை எட்டியவுடன் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் இருந்து தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.

    வைகை அணையின் முக்கிய நீர்வரத்து பகுதியாக வருசநாடு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை உள்ளது. அரசரடி, பொம்மிராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழை நீர் ஓடைகள் வழியே சிற்றாறுகளாக மாறி மூல வைகையாக உருவெடுக்கிறது.

    மேலும் வைகையின் துணை ஆறுகளாக சுருளியாறு, கொட்டக்குடி, வறட்டாறு, வராக நதி, முல்லையாறு, கூட்டாறு, மஞ்சளாறு, நாகலாறு, மருதாநதி, பாம்பாறு உள்ளிட்ட ஆறுகள் உள்ளன.

    இந்த ஆறுகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்யும் மழை நீரை வைகைக்கு கொண்டு வந்து சேர்க்கின்றன. இந்த ஆறுகளில் பெரும்பாலும் மழைக்காலங்களில் மட்டுமே நீர்வரத்து இருக்கும்.

    தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் நீர் பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கொட்டக்குடி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    வைகை அணைக்கு முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வரும் நீர் தேனி, பழனிசெட்டிபட்டி அளவீட்டு மையத்தில் கண்காணிக்கப்படுகிறது. வருசநாடு மூல வைகை ஆற்றில் இருந்து வரும் நீர் அமச்சியாபுரம் அருகே உள்ள அளவீட்டு மையத்தில் கண்காணிக்கப்படுகிறது.

    இந்த நீர்வரத்தை கணக்கில் கொண்டு வைகை அணையில் உள்ள அளவீட்டு மையத்தில் அணையின் நீர்மட்டம் கணக்கிடப்படுகிறது. மழை மற்றும் அவசர காலங்களில் நீர்மட்டத்தில் ஏற்படும் திடீர் உயர்வுக்கு தகுந்தபடி நீர் வெளியேற்றம் செய்யப்படும். கடந்த 3 நாட்களாக வைகை அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்ததால் இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 64.34 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 2273 கன அடியாக உள்ளது. நேற்று வரை மதுரை குடிநீருக்கு மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை முதல் பாசனத்துக்கு சேர்த்து 1199 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 4484 மி.கன அடியாக உள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் 66 அடியை எட்டியவுடன் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும். 68.5 அடியை எட்டியதும் 2ம் கட்ட எச்சரிக்கை விடப்படும். 69 அடியை எட்டியதும் 3ம் கட்ட எச்சரிக்கை விடப்பட்டு அணைக்கு வரும் தண்ணீர் வெளியேற்றப்படும்.

    கடந்த சில நாட்களாக அணையின் நீர் பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் வைகை அணையின் நீர்மட்டம் ஓரிரு நாளில் 66 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு 24 மணி நேரமும் நீர் வளத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். 3 ஷிப்டுகளாக 24 மணி நேரமும் அணைக்கு வரும் தண்ணீர் அளவு, திறக்கப்படும் தண்ணீரின் அளவு ஆகியவற்றை கண்காணித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து வருகின்றனர்.

    இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே வைகை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்ட உள்ளதால் இந்த அணை மூலம் பாசன வசதி பெறும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 124.95 அடியாக உள்ளது. வரத்து 2022 கன அடி. திறப்பு 1100 கன அடி. இருப்பு 3608 மி.கன அடி. மஞ்சளாறு அணை நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி 55 அடியிலேயே உள்ளது. இதனால் அணைக்கு வரும் 184 கன அடி முழுவதும் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டமும் முழு கொள்ளளவை எட்டி 126.28 அடியிலேயே உள்ளது. இதனால் அணைக்கு வரும் 357 கன அடி முழுவதும் உபரியாக வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக வராக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும், ஆற்றை கடக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கும்பக்கரை அருவியிலும் தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அருவியில் குளிக்க இன்று 3-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

    வீரபாண்டி 12.4, பெரியகுளம் 25, மஞ்சளாறு 13, சோத்துப்பாறை 36, போடி 7.2, ஆண்டிபட்டி 2.8, பெரியாறு 5.4, சண்முகாநதி அணை 2, அரண்மனைபுதூர் 1.6, உத்தமபாளையம் 1.8, கூடலூர் 1.2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    • பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி நீர்வீழ்ச்சி பகுதிக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
    • போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு ஆற்றுப்பகுதிக்கு வருபவர்களை திருப்பி அனுப்புகின்றனர்.

    தேனி:

    பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் வராக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சோத்துப்பாறை அணை முழுகொள்ளளவை எட்டியதால் உபரிநீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. மேலும் கல்லாறு, கும்பக்கரை, செலும்பாறு நீரும் அதிகரித்து உள்ளதால் வராக நதியில் இருகரைகளையும் ஒட்டியபடி தண்ணீர் செல்கிறது. இதனால் ஆற்றங்கரை பகுதிகளான பெரியகுளம், வடுகபட்டி, ஜெயமங்கலம், மேல்மங்கலம், குள்ளப்புரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆற்றில் இறங்க வேண்டாம் என பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறையினர் எச்சரித்துள்ளனர்.

    இதேபோல் போடி கொட்டக்குடி, போடி மெட்டு, முந்தல், குரங்கனி ஆகிய பகுதிகளில் பெய்த கனமழையால் கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அணைப்பிள்ளையார் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி நீர்வீழ்ச்சி பகுதிக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. போலீசாரும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு ஆற்றுப்பகுதிக்கு வருபவர்களை திருப்பி அனுப்புகின்றனர்.

    ×