search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உத்தரகாண்ட் சுரங்க பாதை"

    • நிபுணர்கள் தரும் தகவல்களின் பேரிலும் மீட்பு பணிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.
    • சுரங்கப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள பகுதியில் பாறையின் தன்மை மிகவும் அடர்த்தியாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

    உத்தரகாசி:

    உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் பிரம்மகால்-யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் மலைப்பகுதி உள்ளது. அங்கு சுமார் 4 ஆயிரத்து 500 மீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது.

    90 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த சுரங்கப்பாதையில் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அடுத்தடுத்து மண் சரிவு ஏற்பட்டதால் சுரங்கப்பாதை முழுமையாக மூடிக் கொண்டது.

    சுரங்கப் பாதைக்குள் அந்த சமயத்தில் 40 தொழிலாளர்கள் கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்தனர். வெளியேற முடியாத நிலையில் அவர்கள் இன்று (வியாழக்கிழமை) 5-வது நாளாக தவிப்புள்ளாகி உள்ளனர். அவர்களுக்கு சிறிய குழாய்கள் மூலம் ஆக்சிஜன் மற்றும் உணவுப் பொருட்கள் அனுப்பப்பட்டு வருகிறது.

    சுரங்கத்தில் மண் சரிந்துள்ள பகுதி சுமார் 30 மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கிறது. எனவே அந்த பகுதியில் துளையிட்டு உள்ளே செல்வதற்காக தேசிய பேரிடர் மீட்பு குழு, மாநில பேரிடர் மீட்பு குழு, இந்தோ-திபெத் எல்லை காவல் படை, அதிவிரைவு படை உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த சுமார் 200 பேர் தீவிர பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    நேற்று முன்தினம் இரவில் ராட்சத குழாய்கள் மூலம் 40 தொழிலாளர்களை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக 900 மி.மீட்டர் குறுக்களவு கொண்ட குழாய்கள் வரவழைக்கப்பட்டன. அந்த குழாய்களை சுரங்கப் பாதைக்குள் செலுத்துவதற்காக கடந்த செவ்வாய்க்கிழமை துளையிடப்பட்டது.

    இந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக 40 தொழிலாளர்களை மீட்கும் பணியில் எதிர்பாராத இடையூறு உருவானது. ராட்சத குழாய்களை சுரங்கப் பாதைக்குள் துளையிட்டு செலுத்தும் பணியை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

    இதையடுத்து சுரங்கம் தோண்டும் மிகப்பெரிய எந்திரத்தை கொண்டு வர அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி டெல்லியில் இருந்து இந்திய விமானப்படை மூலம் நேற்று மாலை ராட்சத எந்திரம் கொண்டு வரப்பட்டது. 25 டன் எடை கொண்ட அந்த எந்திரம் மணிக்கு 5 முதல் 6 மீட்டர் தூரத்துக்கு துளையிடும் ஆற்றலை கொண்டது.

    இந்த எந்திரம் மூலம் சுரங்கப்பாதையை அடைத்துக் கொண்டிருக்கும் நிலச்சரிவு பகுதியில் உள்ள பாறைகளை துளையிடும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. 10 மணி நேரத்துக்குள் சுமார் 50 மீட்டர் தூரத்துக்கு பாறைகளை குடைந்து துளையிட்டு சுரங்கப்பாதைக்குள் சென்று விட முடியும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

    இந்த முயற்சியில் வெற்றி பெற்றால் இன்றே 40 தொழிலாளர்களையும் மீட்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதற்கிடையே மண் சரிந்துள்ள சுரங்கப் பாதை அருகே மற்றொரு சுரங்கம் தோண்டப்பட்டு வருகிறது. அதன்மூலமாகவும் 40 தொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மேலும் சுரங்கப்பாதை மீட்பு பணிகளில் சர்வதேச அளவில் நிபுணத்துவம் பெற்ற தாய்லாந்து மற்றும் நார்வே நாட்டு நிபுணர்களிடமும் ஆன்லைன் மூலம் கருத்துக்கள் கேட்கப்பட்டு உதவிகள் பெறப்பட்டுள்ளன. அந்த நிபுணர்கள் தரும் தகவல்களின் பேரிலும் மீட்பு பணிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.

    சுரங்கப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள பகுதியில் பாறையின் தன்மை மிகவும் அடர்த்தியாக இருப்பதாக தெரியவந்துள்ளது. இதுவும் மீட்பு குழுவினருக்கு கடும் சவாலாக இருக்கிறது.

    ×