search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரிக் இயந்திரம்"

    • முன்னோடி நிறுவனமான பி.ஆர்.டி. நிறுவனம் தயாரித்த ஜி.டி.-5 என்ற நவீன வசதிகள் கொண்ட ரிக்கை பயன்படுத்துகின்றனர்.
    • தொழிலாளர்கள் எவ்வாறு இருக்கிறார்கள்? என்று கண்டறிய கேமரா மற்றும் ஆக்சிஜன் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கொடுக்கப்பட்டு வருகிறது.

    உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் இந்தியா-சீனா எல்லைப்பகுதியில் சாலை அமைக்க கடந்த 12-ந்தேதி சுரங்கப்பாதை தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் 41 பேர் சுரங்கப்பாதையில் சரிவு ஏற்பட்டதால் உள்ளே சிக்கிக்கொண்டனர்.

    11 நாட்களாக அவர்களை மீட்கும் பணிகள் தீவரமாக நடந்து வருகிறது. பல்வேறு தொழில் நுட்பங்கள் பயன்படுத்தி மீட்பு பணி நடந்து வருகிறது. எண்டோஸ்கோபி கேமரா மூலம் 41 தொழிலாளர்களும் உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    இந்த சூழலில் தொழிலாளர்களை பத்திரமாக மீட்கும் முயற்சியில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த தரணி ஜியோ டெக் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்த நிறுவனம் இம்மாதிரியான பணிகளில் நிபுணத்துவம் பெற்ற வல்லுனர்களை கொண்டது ஆகும்.

    இவர்களது முயற்சியால் தான் தொழிலாளர்கள் பத்திரமாக இருப்பது கண்டறியப்பட்டது. தற்போது இடிபாடுகளை அகற்றும் பணியில் இந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதற்கு அவர்கள் ரிக் தயாரிப்பில் முன்னோடி நிறுவனமான பி.ஆர்.டி. நிறுவனம் தயாரித்த ஜி.டி.-5 என்ற நவீன வசதிகள் கொண்ட ரிக்கை பயன்படுத்துகின்றனர்.

    இந்த ரிக் மிகவும் நவீனமானது. 360 டிகிரியிலும் சுழலும் வசதி கொண்டது. அதனால் கீழே, மேலே, பக்கவாட்டு என எந்த நிலையிலும் துளையிடும் திறன் கொண்டது. 6 அங்குல விட்டத்துடன் பாறைகளை உடைத்து 80 மீட்டர் துளை ஏற்படுத்தும் வலிமை கொண்டது. மேலும் துளையிடும்போதே துளையில் குழாயை சொருகும் வசதி உள்ளது.

    இது குறித்து பி.ஆர்டி. நிறுவன மேலாண் இயக்குநர் பரந்தாமன், தரணி ஜியோடெக் நிறுவனத்தின் மேலாளர் இயக்குநர் ஜெயவேல் ஆகியோர் கூறியதாவது:-

    உத்தரகாசியில் சுரங்கத்தில் தொழிலாளர்களை மீட்கும் முயற்சிக்கு தரணி ஜியோடெக் நிறுவனத்தை அரசு அணுகியது. சுரங்கம் அமைத்தல், அணை கட்டுதல், சாலை அமைத்தல் போன்ற பணிகளுக்கு நவீன தொழில் நுட்பங்களை தரணி ஜியோடெக் நிறுவனம் கடந்த 25 வருடங்களாக அளித்து வருகிறது.

    அதேபோல் தொழிலாளர்களை மீட்கும் சவாலான முயற்சியில் பி.ஆர்.டி.யின் ஜிடி-5 ரிக் பயன்படுத்தப்படுகிறது. 6 இன்ச் அகலத்தில் சுமார் 110 அடி ஆழத்தில் துளையமைத்து அதன் மூலம் சிமெண்ட்ரி டெக்னாலஜியை கொண்டு துளை அமைத்து செல்லும்போது கேசிங் பைப்பையும் உடன் அனுப்பி அதன் மூலம் எந்த சரிவு ஏற்படாமல் ஆழத்தில் சிக்கி இருந்தவர்களை எட்டும் வகையில் செய்தோம்.

    இதனால் சுரங்கப்பாதைக்குள் சிக்கி இருப்பவர்கள் பாதுகாப்பாக இருப்பதையும் அவர்களை மாற்று தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மீட்க முடியும் என்ற நம்பிக்கையும் ஏற்படுத்தி கொடுத்தது. இதற்கான துளையிடும் எந்திரம் வெளிநாடுகளில் இறக்குமதி செய்தால் ரூ.2 கோடி ஆகும் என்கிற நிலையில் திருச்செங்கோட்டில் உள்ள பி.ஆர்.டி. நிறுவனம் இதனை 85 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்கிறது.

    சிமெண்ட்ரி சிஸ்டம் என்ற ஒரு சிஸ்டத்தை நாங்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து வைத்திருந்தோம். இந்த சிமெண்ட்ரி சிஸ்டத்தில் துளையிடும்போது உடன் செல்லும் கேஸிங் பைப் ட்ரில்லரை வெளியில் எடுக்கும் போது துளைக்குள்ளேயே நின்றுவிடும் தொழில்நுட்பமாகும். இந்த சுரங்கப்பாதையில் 6 இன்ஞ் துளை அமைத்து பணியை மேற்கொள்ளும் போது முதல் முறையாக இரும்பு ராடு ஒன்று குறுக்கிட்டதால் தோல்வி கண்டோம். 2-வது முறை ஒரு தடங்கல் ஏற்பட்டு 3-வது முறையாக வெற்றி பெற்றோம்.

    இதன் மூலம் தான் தற்போது சுரங்க பாதைக்குள் சிக்கியிருக்கிற தொழிலாளர்கள் எவ்வாறு இருக்கிறார்கள்? என்று கண்டறிய கேமரா மற்றும் ஆக்சிஜன் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கொடுக்கப்பட்டு வருகிறது. உணவு, மருந்து, குடிநீர் ஆகியவையும் இதன் மூலம் வழங்கப்படுகிறது. எங்களுக்கு இந்த எந்திரம் இருந்ததால் தான் இந்த பணியை நாங்கள் செய்ய முடிந்தது. இந்த எந்திரத்தை உருவாக்கிய பி. ஆர். டி நிறுவனத்தை பாராட்டுகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்.

    ×