search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தக்காளி- வெங்காயம் பயிர்கள்"

    • தோட்டக்கலை பயிர்களுக்கு பயிர்க்காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படு கிறது.
    • கிராம நிர்வாக அலுவலருக்கும், வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலகத்திற்கும் தெரிவிக்க வேண்டும்.

    உடுமலை:

    மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் மடத்துக்குளம் வட்டாரத்தில், தக்காளி, சின்ன வெங்காயம் அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. இயற்கை சீற்றத்தினால் பயிர்கள் பாதித்து விவசாயிகளுக்கு ஏற்படும் பொருளாதார இழப்புகளை ஈடு செய்யும் வகையில் பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் மடத்துக்குளம் வட்டாரத்தில், தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்களுக்கு பயிர்க்காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படு கிறது.

    நடப்பு ராபி பருவத்தில் நடவு முதல் அறுவடை வரையிலான நிலைப்பயிர்களில் ஏற்படும் வறட்சி ,வெள்ளம், பூச்சி நோய்த்தாக்குதல், நிலச்சரிவு, ஆலங்கட்டி மழை, புயல், சூறாவளி, இடி, மின்னல் ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புக்கு இத்திட்டத்தின் கீழ் காப்பீடு பெறலாம். துங்காவி குறுவட்டத்தில் தக்காளி, வெங்காயம் சாகுபடி செய்துள்ள விவசாயிகளும், மடத்துக்குளம் குறுவட்டத்தில் தக்காளி சாகுபடி செய்துள்ள விவசாயிகளும் வருகிற 2024 பிப்ரவரி 28 வரை இத்திட்டத்தில் சேரலாம்.

    மடத்துக்குளம் வட்டாரத்தில் தக்காளி, வெங்காயம் பயிர்க்காப்பீடு செய்ய வருகிற 2024 ஜனவரி 31 கடைசி நாளாகும். காப்பீட்டு திட்டத்தில் மத்திய, மாநில அரசுகள், 95 சதவீதம் தொகையும், விவசாயிகள் பங்களிப்பு தொகை 5 சதவீதம் ஆகும். வெங்காயம் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.2,228, தக்காளி ரூ. 1,495- பிரீமியம் செலுத்த வேண்டும். பயிர் காப்பீடு செய்து முழுமையான பாதிப்பு ஏற்பட்டால், வெங்காயம் பயிருக்கு ஒரு ஏக்கருக்கு 44 ஆயிரத்து 550 ரூபாயும், தக்காளி பயிருக்கு ஒரு ஏக்கருக்கு 29 ஆயிரத்து 500 ரூபாயும் இழப்பீடு வழங்கப்படும்.

    இத்திட்டத்தின் கீழ் பயிர்க்காப்பீடு செய்ய விரும்பும் விவசாயிகள் முன்மொழிவு படிவம், பதிவு விண்ணப்பம், அடங்கல், விதைப்பு அறிக்கை, வங்கி புத்தக நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் இ - சேவை மையங்கள், வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில் காப்பீடு செய்து கொள்ளலாம். பங்களிப்பு கட்டணத்தை செலுத்தியதற்கான ரசீதை பெற்றுக்கொள்ள வேண்டும். உள்ளூர் பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்டால் 72 மணி நேரத்திற்குள் காப்பீட்டு நிறுவனத்தின் கட்டணமில்லா தொலைபேசி 18001035490 என்ற எண்ணில் தெரிவிக்க வேண்டும்.

    மேலும் கிராம நிர்வாக அலுவலருக்கும், வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலகத்திற்கும் தெரிவிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட தோட்டக்கலைத்துறை வருவாய்த்துறை மற்றும் காப்பீட்டு நிறுவன அலுவலர்கள் கூட்டாய்வு மேற்கொண்டு பயிர்ச்சேத மதிப்பீட்டு அறிக்கை அளித்த பின்னர் இழப்பீட்டுத் தொகை சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்தால் விவசாயிகளுக்கு வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு உதவி தோட்டக்கலை அலுவலர்கள் தாமோதரன் 96598 38787 என்ற எண்ணிலும், நித்யராஜ் 63821 29721 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

    ×