search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்க வாலிபர்கள்"

    • காவல் ஆய்வாளர், காவலர்கள் பொதுமக்கள் என அனைவரையும் துரத்தி துரத்தி தாக்கினார்.
    • காவல்துறை வாகனத்தில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.

    சென்னை:

    சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல நட்சத்திர விடுதியில் அமெரிக்க வாலிபர்கள் 2 பேர் மது குடித்தனர்.

    பின்னர் மற்ற வாடிக்கையாளர்களிடம் அவர்கள் தகராறில் ஈடுபட்டனர். நிதானமற்ற மது போதையில் இருந்த 2 பேரையும் பாதுகாவலர்கள் ஓட்டலில் இருந்து வெளியேற்றி ஆட்டோவில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

    இதனை அடுத்து அந்த இரண்டு அமெரிக்க வாலிபர்களில் ஒருவர் ஜெமினி சிக்னலில் ஆட்டோவில் இருந்து வெளியே குதித்து சாலையில் நடந்து சென்றவர்கள், வாகனத்தில் சென்றவர்கள் என அனைவரையும் கண்மூடித்தனமாக தாக்கினார். அதில் கோபம் அடைந்த பொதுமக்கள் சிலர் பதிலுக்கு அந்த அமெரிக்க இளைஞரை தாக்கி சாலையோர நடை பாதையில் அமர வைத்தனர்.

    மேலும் இது தொடர்பாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அங்கு விரைந்து சென்ற போலீசார் காயமடைந்த இளைஞரை முதல் உதவி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்காக 108 ஆம்புலன்சில் ஏற்ற முற்பட்ட போது மது போதையில் இருந்த அந்த இளைஞர் வெறிபிடித்தது போல் கூச்சலிட்டு மீண்டும் அங்கிருந்த காவல் ஆய்வாளர், காவலர்கள் பொதுமக்கள் என அனைவரையும் துரத்தி துரத்தி தாக்கினார்.

    இதனைப் பார்த்த அவ்வழியாக சென்ற இளைஞர்கள் சிலர் காவலர்களின் உதவியோடு அந்த இளைஞரை மடக்கி பிடித்து கைகளை கட்டினர். காவல்துறை வாகனத்தில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.

    போலீஸ் விசாரணையில், மது போதையில் அராஜகம் செய்த இளைஞர்கள் அமெரிக்காவில் கலிபோர்னியா பகுதியை சேர்ந்த அலெக்ஸ் மற்றும் மெல்கார் என்பதும் இவர்கள் இருவரும் நுங்கம்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற விருந்தில் அதிக அளவில் மது குடித்து நிதானமற்ற நிலையில் இவ்வாறு நடந்து கொண்டதும் தெரிய வந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.

    சென்னையில் மிக முக்கிய சாலையில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பரபரப்பு நிலவியது.

    ×