search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மிச்சாங் புயல்"

    • சென்னை உள்பட 4 மாவட்டங்களிலும் நாளை பள்ளிகள் திறப்பதற்கு தயார் நிலையில் உள்ளன.
    • பள்ளி-கல்லூரி கட்டிட சுற்றுச்சுவர்களில் இருந்து 20 அடி தொலைவு வரை மாணவர்கள் யாரும் செல்லாத அளவுக்கு தடுப்புகளை அமைக்க வேண்டும்.

    சென்னை:

    மழை வெள்ள பாதிப்பால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகள் கடந்த 4-ந் தேதி முதல் மூடப்பட்டிருந்தன.

    இந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தேங்கி நின்ற மழை வெள்ளம் வடிந்துள்ளதால் இயல்பு நிலை திரும்பி வருகிறது. இதையடுத்து ஒரு வார விடுமுறைக்கு பிறகு நாளை (11-ந் தேதி) பள்ளி-கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன.

    இதையொட்டி கடந்த 2 நாட்கள் 4 மாவட்டங்களிலும் பள்ளி-கல்லூரிகளை சுத்தப்படுத்தி குப்பைகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வந்தன. இன்றும் அரசு மற்றும் தனியார் பள்ளி-கல்லூரிகளில் ஆசிரியர்-ஆசிரியைகள் மற்றும் துப்புரவு பணியாளர்களை வரவழைத்து பள்ளி வளாகத்தில் தேங்கி கிடந்த குப்பைகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்றது. லாரிகள் மூலமாக இந்த குப்பைகள் அகற்றப்பட்டன.

    பள்ளி தலைமை ஆசிரி யர்களின் மேற்பார்வையில் நடைபெற்று வரும் துப்புரவு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு பள்ளி வகுப்பறைகளில் மாணவ-மாணவிகள் அமரும் இருக்கைகளும் கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட்டது.

    இப்படி சென்னை உள்பட 4 மாவட்டங்களிலும் நாளை பள்ளிகள் திறப்பதற்கு தயார் நிலையில் உள்ளன. மின்சாதன பெட்டிகளும் சரிபார்க்கப்பட்டு மின்கசிவு ஏதும் ஏற்படுகிறதா? என்பதையும் பள்ளி கல்லூரி ஊழியர்கள் சரிபார்த்துள்ளனர். இது தொடர்பாக தேவையான முன் எச்சரிக்கை ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனது பள்ளி கல்வி துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதை தொடர்ந்து பள்ளி-கல்லூரிகளை திறப்பதற்கு முன்னர் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக பள்ளி கல்வி துறை சார்பில் சுற்றறிக்கையும் கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    பள்ளி-கல்லூரி கட்டிட சுற்றுச்சுவர்களில் இருந்து 20 அடி தொலைவு வரை மாணவர்கள் யாரும் செல்லாத அளவுக்கு தடுப்புகளை அமைக்க வேண்டும். கதவு, ஜன்னல், பெஞ்ச் போன்றவற்றை கிருமி நாசினிகள் மூலமாக சுத்தம் செய்ய வேண்டும் என்பது போன்ற விஷயங்கள் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதன்படி மேற்கண்ட பணிகளில் பெரும்பாலானவற்றை பள்ளி-கல்லூரி நிர்வாகத்தினர் முடித்துள்ளனர். இதை தொடர்ந்து ஒருவார விடுமுறை முடிந்து பள்ளி-கல்லூரிகள் நாளை வழக்கம் போல் செயல்பட உள்ளன.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மழை வெள்ளம் சூழ்ந்து கீழ் தளத்தில் வெள்ளம் புகுந்ததால் பாட புத்தகங்கள், சீருடைகள் சேதமடைந்துவிட்டன.

    இப்படி பாதிப்புக்குள்ளான பகுதிகளில் வசிக்கும் மாணவ-மாணவிகளுக்கு புதிய பாடப் புத்தகங்கள், சீருடைகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக சிறப்பு முகாம்கள் நாளை நடைபெற உள்ளது. தொடர் விடுமுறைக்கு பிறகு நாளை பள்ளிகள் திறக்கப்பட்டு அரையாண்டு தேர்வுகள் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • ஒருநாள் முழுக்க சென்னையில் தேங்கிய மழைநீர் கடலுக்குள் செல்வதில் பிரச்சினை இருந்தது.
    • ஆக்கிரமிப்பு எங்கே இருக்கிறது என்று சொல்லுங்கள். அதை அகற்றுகிறோம்.

    சென்னை:

    சென்னை சைதாப்பேட்டையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சென்னையில் ஏற்பட்டு உள்ள வெள்ள பாதிப்புகள் பற்றி பேச எடப்படி பழனிசாமி, ஜெயக்குமார் ஆகியோருக்கு தார்மீக உரிமை இல்லை. சென்னை, காஞ்சிபு ரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒருவர் கூட விட்டுப்போகாத வகையில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வெள்ள நிவாரணம் வழங்கப்படும். சென்னையில் கடந்த 2 ஆண்டுகளில் தொற்றுநோய் பாதிப்பு குறைந்து உள்ளது.

    சென்னையை பொருத்தவரை புதிதாக கட்டப்பட்ட மழைநீர் வடிகால்களில் தண்ணீர் முழுமையாக போய்விட்டது. முதல் நாளில் கொசஸ்தலை ஆறு, அடையாறு ஆறு, கூவம் ஆறு, பக்கிங்காம் கால்வாய் ஆகிய ஆறுகளில் சென்ற மழைநீர் கடலில் உள்வாங்கவில்லை. கடலின் சீற்றம் மற்றும் மையம் கொண்டிருந்த புயல் ஆகியவை காரணமாக கடல் அலைகள் 7 முதல் 8 அடி வரை உயர்ந்து தண்ணீரை உள்வாங்கவில்லை. அதன் காரணமாக ஒருநாள் முழுக்க சென்னையில் தேங்கிய மழைநீர் கடலுக்குள் செல்வதில் பிரச்சினை இருந்தது.

    அன்று இரவு 12 மணிக்கு மழை முடிந்தவுடன் வெள்ளம் சீராக கடலுக்குள் செல்ல ஆரம்பித்துவிட்டது. அது கடலுக்குள் செல்ல ஆரம்பித்தவுடன் சென்னை நகருக்குள் இருக்கும் 22 நீரோடைகளான கால்வாய்களின் நீர் கடலுக்குள் போக வேண்டும். இந்த கால்வாய்களில் இருந்து நீர் 4 பிரதான கால்வாய்களுக்கு சென்று அங்கிருந்து கடலுக்கு செல்ல வேண்டும். இதனால் தண்ணீர் வடிவதில் 2 நாட்கள் காலதாமதம் ஏற்பட்டது.

    அதன் பிறகு சென்னை நகருக்குள் எங்கும் தண்ணீர் இல்லை. தாழ்வான பகுதிக ளில் தண்ணீர் இருப்பதை கண்டறிந்து மோட்டார்களின் மூலம் மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினார்கள். இப்போது எங்கும் தண்ணீர் இல்லை. எந்த பிரச்சினையும் இல்லை. எனவே இன்னும் சென்னை நகருக்குள் தண்ணீர் இருக்கிறது என்று சொல்லாதீர்கள். ஆக்கிரமிப்பு எங்கே இருக்கிறது என்று சொல்லுங்கள். அதை அகற்றுகிறோம்.

    வேளச்சேரி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், உள்ளகரம், புழுதிவாக்கம் ஆகிய பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதற்கு காரணம் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 40-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி உபரி நீர் வழிந்தோடியதால் ஏற்பட்டதாகும். 7 ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டதால் வந்த நீராகும்.

    இதுவரை வரலாறு காணாத வகையில், வேறு எந்த பருவ மழையோடும் ஒப்பிட்டு பார்க்க முடியாத வகையில் டிசம்பர் 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை 58 செ.மீ. மழை பெய்துள்ளது. இது கடந்த பருவமழை காலங்களில் பெய்த மழையை காட்டிலும் 12 மடங்கு கூடுதலாகும். இதனால் தான் தண்ணீர் தேங்கியது. ஆனால் 2 நாளில் வெள்ளம் வடிந்துவிட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை ஈஷா மருத்துவக் குழு வழங்கி வருகிறது.
    • நிலவேம்பு குடிநீர் தினமும் தயார் செய்யப்பட்டு மக்களுக்கு வழங்கப்படுகிறது.

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் பொழிந்த அதிகனமழை காரணமாக நகரத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது. இவ்வாறு வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை ஈஷா மருத்துவக் குழு வழங்கி வருகிறது.

    இதற்காக கோவை ஈஷா யோக மையத்தில் இருந்து 'ஈஷா அவுட்ரீச்' சார்பில் நடமாடும் மருத்துவ வாகனங்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பலர் சென்னை சென்றடைந்தனர்.

    இவர்கள் மூன்று மருத்துவ குழுக்களாக இயங்கி, வட மற்றும் தென் சென்னையின் வெள்ள பாதிப்பு பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்கி வருகின்றனர்.

    இது தவிர 3 நடமாடும் மருத்துவ வாகனங்களும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. மேலும் நிலவேம்பு குடிநீர் தினமும் தயார் செய்யப்பட்டு மக்களுக்கு வழங்கப்படுகிறது.

    https://twitter.com/Outreach_Isha/status/1733190433667498209?t=ji4hApdq6xBtaPZPQdv8Jw&s=19

    ஈஷா யோக மையம் இதற்கு முன்பு 2004 - இல் ஏற்பட்ட சுனாமி, 2015 ஆம் ஆண்டு சென்னை வெள்ளம், கஜா புயல் மற்றும் 2020 - ஆம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களினால் பாதிக்கபட்ட மக்களுக்கு அப்பொழுது தேவையான மருத்துவ உதவிகள் மற்றும் பிற நிவாரண உதவிகளை பெருமளவில் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • உதயநிதி ஸ்டாலின் 600 பேர்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் வழங்கினார்.
    • அனைத்து இடங்களிலும் அமைச்சர்கள், கவுன்சிலர்கள் ஆய்வு செய்துள்ளனர்.

    சென்னை:

    சென்னையை அடுத்த மவுலிவாக்கத்தில் மழையால் பாதித்தவர்களுக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஏற்பாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 600 பேர்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் இன்று வழங்கினார். அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

    கேள்வி:- சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகை எப்போது வழங்கப்படும்?

    பதில்:- இன்னும் ஒரு வாரத்தில் வெள்ள நிவாரணம் வழங்கத்தொடங்கி விடுவோம். முதலில் அதற்கான டோக்கனை கொடுக்க வேண்டும். சில இடங்களில் ரேஷன் கடைகளில் தண்ணீர் புகுந்தது. அங்கிருந்த பொருட்களும் சேதம் அடைந்தது. அதை சரி செய்த பிறகு ஒரு வாரத்தில் பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கப்படும். அதன் பிறகு வெள்ள நிவாரணம் வழங்கப்படும்.

    கேள்வி:- சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் அமைத்தது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைக்கிறார்களே?

    பதில்:- எதிர்க்கட்சிகள் அப்படி சொல்லிக்கொண்டு தான் இருப்பார்கள். நாம் நமது வேலையை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும்.

    கேள்வி:- சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் திருப்புகழ் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் அமைக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்து உள்ளதே?

    பதில்:- அப்படி அமைத்ததால் தான் இவ்வளவு மழை பெய்தும் 3 நாளில் மழைநீர் வடிந்து மின்சாரம் வந்துள்ளது. இல்லாவிட்டால் நிலைமை இன்னும் மோசமாகி இருக்கும்.

    கேள்வி:- மழை சேதத்தை பார்வையிட வரும் மத்திய குழுவிடம் என்னென்ன விஷயங்களை வலியுறுத்த இருக்கிறீர்கள்?

    பதில்:- ஏற்கெனவே மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் வந்து வெள்ள சேதத்தை பார்வையிட்டார். அவரிடம் எவ்வளவு பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது என்று முதலமைச்சர் விளக்கி கூறியுள்ளார். தற்போது முதல் கட்ட நிதி கொடுத்து இருக்கிறார்கள். விரைவில் அடுத்த கட்ட நிதியை கொடுப்பார்கள் என்று நம்புகிறோம்.

    கேள்வி:- சென்னையில் வெள்ளம் பாதித்த ஒரு சில இடங்களில் கவுன்சிலர்கள் வந்து ஆய்வு செய்யவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்களே?

    பதில்:- அனைத்து இடங்களிலும் அமைச்சர்கள், கவுன்சிலர்கள் ஆய்வு செய்துள்ளனர். மக்கள் மத்தியில் சின்ன அதிருப்தி இருக்கத்தான் செய்யும். இவ்வளவு மழை பெய்ததை யாரும் எதிர்பார்க்கவில்லை. இது கடந்த 50 வருடங்களில் பெய்யாத மழையாகும். ஓரளவுக்கு என்னென்ன செய்ய முடியுமோ அதை களத்தில் இருந்து செய்து இருக்கிறோம். முதலமைச்சர், மேயர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள் எல்லோருமே களத்துக்கு வந்தனர். தன்னார்வலர்கள் கூட களத்துக்கு வந்துள்ளனர். யாரையுமே நான் குறை சொல்லவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உணவுத்துறை கணக்கின்படி சென்னை மாவட்டம் 2 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு செயல்படுகிறது.
    • திருவள்ளூரில் 6.27 லட்சம், காஞ்சிபுரத்தில் 4.01 லட்சம், செங்கல்பட்டில் 4.38 லட்சம் குடும்ப அட்டைதாரர்களும் உள்ளனர்.

    சென்னை:

    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிச்சாங் புயலால் கடும் வெள்ள சேதம் ஏற்பட்டது. இந்த மழை வெள்ளத்தால் மக்கள் பெரிய அளவில் சிரமப்பட்டனர். லட்சக்கணக்கானோர் வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் பொருட்கள் அனைத்தையும் இழந்து தவிக்கின்றனர்.

    அதிலும் குறிப்பாக அடையாறு, கூவம், கொசஸ்தலை ஆற்றங்கரையோரம் வசித்தவர்களும் ஏரி-கால்வாய் நீர்நிலைகள் அருகே வசித்தவர்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள். மற்ற பகுதிகளில் உள்ளவர்கள் 2 நாட்களில் சகஜ நிலைக்கு திரும்பி விட்டனர்.

    இந்த நிலையில் புயல்-வெள்ளத்தால் வாழ்வாதாரம் இழந்தோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணமாக ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

    அதுமட்டுமின்றி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ.5 லட்சம் வழங்குவதாகவும் சேதம் அடைந்த குடிசைகளுக்கு ரூ.8 ஆயிரம், உயிரிழந்த மாடுகளுக்கு ரூ.37 ஆயிரத்து 500, ஆடுகளுக்கு ரூ.4 ஆயிரம், முழுமையாக சேதம் அடைந்த கட்டு மரங்களுக்கு ரூ.50 ஆயிரம், சிறிது சேதம் அடைந்திருந்தால் ரூ.15 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. இதுதவிர பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கும் ஹெக்டேருக்கு ரூ.17 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த புயலால் சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளதால் எந்தெந்த ஏரியா கடுமையாக பாதிக்கப்பட்டது என்ற விவரம் தாலுகா அலுவலகம் மூலம் சேகரிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி சென்னையையொட்டிய காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பகுதிகளும் மழைநீரில் தத்தளித்ததால் அந்த பகுதிகளும் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.

    இதில் உணவுத்துறை கணக்கின்படி சென்னை மாவட்டம் 2 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு செயல்படுகிறது. அதில் தென் சென்னையில் 11 லட்சத்து 51 ஆயிரத்து 858 குடும்ப அட்டைதாரர்களும் வடசென்னையில் 10 லட்சத்து 66 ஆயிரத்து 463 குடும்ப அட்டைதாரர்களும் என மொத்தம் 22 லட்சத்து 18 ஆயிரத்து 121 குடும்ப அட்டைகள் உள்ளது.

    இதே போல் திருவள்ளூரில் 6.27 லட்சம், காஞ்சிபுரத்தில் 4.01 லட்சம், செங்கல்பட்டில் 4.38 லட்சம் குடும்ப அட்டைதாரர்களும் உள்ளனர். இவர்களில் சென்னையையொட்டி உள்ள புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே நிவாரண உதவி தொகை கிடைக்கும் என தெரிகிறது.

    மொத்தத்தில் சென்னை மாவட்டத்தில் 95 சதவீதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.6 ஆயிரம் பணம் கிடைக்கும். மற்ற 3 மாவட்டங்களுக்கு 60 சதவீதம் பேர்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. அந்த வகையில் மொத்தம் 27 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.6 ஆயிரம் கிடைக்கும் என தெரிகிறது.

    இது சம்பந்தமாக தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட உள்ளது. அதில் யார்-யாருக்கு பணம் கிடைக்கும் என்பது தெளிவுப்படுத்தப்படும். அரசாணையில் உள்ள வழிகாட்டி நெறிமுறைகளின் அடிப்படையில் பயனாளிகளின் எண்ணிக்கை உயரவும் வாய்ப்பிருக்கிறது.

    சென்னை மாநகராட்சி பகுதியில் 16 தாலுகா அலுவலகம் உள்ளது. இங்குள்ள மக்களில் பெரும்பாலானோருக்கு ரூ.6 ஆயிரம் கிடைத்து விடும்.

    குறிப்பாக வருமான வரி செலுத்துபவர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பெரும் தொழில் அதிபர்கள் தவிர்த்து மற்ற பொதுமக்களுக்கு ரூ.6 ஆயிரம் கிடைக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

    அதே சமயம் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த சென்னைக்கு மிக அருகில் உள்ள பகுதிகள் அதில் வசிக்கக்கூடிய மக்கள் மட்டுமே புயல் பாதிப்புகளை சந்தித்துள்ளனர். மேல் மருவத்தூர், உத்தரமேரூர் போன்ற உள்புற பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

    எனவே அதுபோன்ற பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு நிவாரண தொகை கிடைக்காது. எனவே யாரெல்லாம் உண்மையாக பாதிப்புகளை சந்தித்து வாழ்வாதாரங்களை இழந்துள்ளார்களோ அவர்களுக்கு மட்டுமே ரூ.6 ஆயிரம் வழங்க அரசு முடிவெடுத்துள்ளது.

    எந்தெந்த பகுதிகள், தெருக்கள், பாதிக்கப்பட்டவை என வி.ஏ.ஓ., தாசில்தார்கள் பட்டியல் எடுத்து கலெக்டர்களிடம் தெரிவிப்பார்கள். அதன் அடிப்படையில் மாவட்ட கலெக்டர்கள் அரசுக்கு பட்டியல் அனுப்பி வைக்க உள்ளனர். அதன் அடிப்படையில் ரேஷன் கடைகள் மூலம் ரூ.6 ஆயிரம் பணம் வழங்கப்படும்.

    எந்த தேதியில் பணம் கொடுக்கப்படும் என்ற விவரம் விரைவில் அரசின் சார்பில் தெரிவிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அசுத்தமான நீரில் காலை வைத்தவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படுவதற்குரிய வாய்ப்பு உள்ளது.
    • பாதுகாக்கப்படாத நீரை மக்கள் பருகியதற்கான வாய்ப்பு இருந்ததையும் யாரும் மறுக்க முடியாது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அண்மையில் பெய்த அதிகனமழை காரணமாக பல இடங்களில் மழைநீர் தேங்கி இருந்ததையும், அந்த மழைநீருடன் கழிவு நீர் கலந்ததையும், அந்த நீரில் மக்கள் நடமாடியதையும், இந்தத் தருணங்களில் பாது காக்கப்படாத நீரை மக்கள் பருகியதற்கான வாய்ப்பு இருந்ததையும் யாரும் மறுக்க முடியாது. இதன் காரணமாக, பொதுமக்களிடையே தொற்று நோய்கள் பரவுவதற்கான அபாயம் உள்ளது. அசுத்தமான நீரில் காலை வைத்தவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படுவதற்குரிய வாய்ப்பு உள்ளது.

    எனவே தொற்று நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதனைக் கட்டுப்படுத்துவதற்கான மருத்துவ முறைகளை மேற் கொள்ளவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டு மென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மழையால் மூலப்பொருட்கள், உற்பத்தி பொருட்களும் சேதமடைந்துள்ளது.
    • இந்நிறுவனங்களை உடனடியாக மீட்டெடுப்பது அவசியம்.

    மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட பெருமழையால் பாதிக்கப்பட்டுள்ள குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்குக் கூடுதல் மூலதனக் கடன் மற்றும் கடன் திரும்ப செலுத்தும் காலத்தை நீட்டித்தல் உள்ளிட்ட முக்கிய உதவிகளை வழங்கிட வேண்டும் என மத்திய நிதி மற்றும் பெரு நிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    மேலும் அந்த கடித்ததில், "சுமார் 4800 சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மழையால் பாதிப்பு, மூலப்பொருட்கள், உற்பத்தி பொருட்களும் சேதமடைந்துள்ளது.

    இந்நிறுவனங்களை உடனடியாக மீட்டெடுப்பது அவசியம்" என்று குறிப்பிட்டிருந்தார்.

    • சென்னையின் புறநகர் பகுதிகளில் வெள்ள நீர் வடியாத சூழலில் இருக்கிறது.
    • தேவைப்படும் இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.

    மிச்சாங் புயலால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் இருந்து சென்னை கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது.

    இருப்பினும், சென்னையின் புறநகர் பகுதிகளில் வெள்ள நீர் வடியாத சூழலில் இருக்கிறது.

    இந்நிலையில், மழை நீர் விரைவில் அகற்றப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

    செய்தியளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில்," சென்னையில் 19 இடங்களில் இன்னும் தண்ணீர் அகற்றப்படாமல் உள்ளது. நாளை மாலைக்குள் இவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

    குப்பைகளை அடுத்த 2 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2 நாட்களில் 20,000 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன.

    சென்னையில் தினசரி 4600 லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தேவைப்படும் இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்" என்றார்.

    • மூன்று மாவட்டங்களில் வரும் 11ம் தேதி சிறப்பு முகாம்.
    • சென்னையில் வரும் 12ம் தேதியும் சிறப்பு முகாம்.

    மிச்சாங் புயலால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பினால் சேதமடைந்த அரசு சான்றிதழ்கள், பள்ளி மற்றும் கல்லூரி சான்றிதழ்களை கட்டணமின்றி வழங்கிட சிறப்பு முகாம்களுக்கு தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

    அதன்படி, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் வரும் 11ம் தேதியும், சென்னையில் வரும் 12ம் தேதியும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    மேலும், சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்கள் மற்றும் தேதிகள் தொடர்பாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பார்கள் என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

    • அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.
    • தகவல் வேகமாக பரவியதை அடுத்து ஆவின் விளக்கம்.

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு என நான்கு மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. யாரும் எதிர்பாராத வகையில், பெய்த அதீத கனமழை காரணமாக சென்னையில் வெள்ளம் சூழ்ந்தது.

    வெள்ள பாதிப்பில் சிக்கி சென்னை இன்னும் முழுமையாக மீளாத சூழல்தான் நிலவுகிறது. வெள்ளம் காரணமாக கிட்டத்தட்ட ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். வெள்ளம் காரணமாக போக்குவரத்து முடங்கியதால், சென்னையில் பால் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.

    இந்த நிலையில், ஆவின் பால் பாக்கெட்டுகள் வீணாக கால்வாயில் கொட்டப்பட்டுள்ளதாக கூறும் தகவல்கள் வெளியாகின. பால் கிடைக்காமல் பொதுமக்கள் பெரும் அவதியுற்ற நிலையில், பால் கீழே கொட்டப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது. இந்த தகவல் வேகமாக பரவியதை அடுத்து ஆவின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "ஆவின் நிறுவனம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 15 லட்சம் லிட்டர் பால் சில்லறை விற்பனையாளர்கள். பால் டெப்போக்கள் மற்றும் மொத்த விற்பனையார்கள் மூலமாக பொது மக்களுக்கு விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் 04.12.2023 தேதியன்று மிக்ஜாம் புயல் காரணமாக அதிக அளவில் மழை பொழிந்ததால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி மின்சாரம் தடைப்பட்டது."

    "எனவே தாம்பரம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் பல பால் விற்பனை நிலையங்கள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகள் மூடப்பட்டன. எனவே சில இடங்களில் 04.12.2023 தேதியன்று பொது மக்களுக்கு பால் விற்பனை செய்ய இயலாத நிலை ஏற்பட்டது."

    "இதனால் 04.12.2023 அன்று விற்பனை செய்ய இயலாத ஆவின் பால் பாக்கெட்டுகள் மற்றும் தனியார் பால் பாக்கெட்டுகளை சில சூப்பர் மார்கெட்டுகள் மற்றும் வியாபாரிகள் அங்கே கொட்டிவிட்டு சென்றதாக தெரியவருகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் மேலும் ஆவின் பால் பாக்கெட்டுகள் வீணாக கால்வாயில் கொட்டப்பட்டது என்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது," என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    • மத்திய குழு 2 நாட்களுக்கு பல்வேறு இடங்களில் ஆய்வு செய்ய உள்ளது.
    • மத்திய குழு தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்திவிட்டு டெல்லி திரும்ப முடிவு.

    மிச்சாங் புயல் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மத்திய குழு சென்னை வருகிறது.

    டிசம்பர் 11ம் தேதி சென்னை வரும் மத்திய குழுவினர், 2 நாட்களுக்கு பல்வேறு இடங்களில் ஆய்வு செய்ய உள்ளனர்.

    பிறகு, டிசம்பர் 12ம் தேதி தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்திவிட்டு மத்திய குழுவினர் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • 4 மாவட்ட சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் மின் நுகர்வோர்களுக்கும் பொருந்தும்.
    • அபராத தொகை இல்லாமல் வரும் 18ம் தேதி வரை மின் கட்டணம் செலுத்த கால நீட்டிப்பு.

    மின் கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த அறிவிக்கப்பட்ட கால நீட்டிப்பானது சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் மின் நுகர்வோர்களுக்கும் பொருந்தும் என மின்சார துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

    மின் கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த அறிவிக்கப்பட்ட கால நீட்டிப்பு சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்ட சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் மின் நுகர்வோர்களுக்கும் பொருந்தும்.

    அபராத தொகை இல்லாமல் வரும் 18ம் தேதி வரை மின் கட்டணம் செலுத்த கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

    மின் கட்டண கால அவகாசம் நிறுவனங்களுகு்கும் பொருந்தும் என மின்சார துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

    ×