search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மிச்சாங் புயல்"

    • அரிசி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அனைவரும் ரேஷன் கடைகளுக்கு சென்று ரூ.6 ஆயிரம் வாங்கி உள்ளனர்.
    • ஒவ்வொரு பகுதியிலும் ஏராளமானோர் ரேஷன் கடைக்கு சென்று விண்ணப்பத்தை வாங்கி பூர்த்தி செய்து கொடுத்துள்ளனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் டிசம்பர் 3 மற்றும் 4-ந்தேதிகளில் வீசிய மிச்சாங் புயல் காரணமாக சென்னை மாவட்டத்தில் கடுமையான மழை வெள்ளம் ஏற்பட்டது.

    செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளில் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு கடும் வெள்ளப் பாதிப்புகள் ஏற்பட்டன.

    இதில் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் ரூ.6 ஆயிரம் ரொக்கமாக வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.


    அதன்படி அரிசி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அனைவரும் ரேஷன் கடைகளுக்கு சென்று ரூ.6 ஆயிரம் வாங்கி உள்ளனர். இதில் இதுவரை 21 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

    ரேஷன் கடைகளில் உள்ள பட்டியலில் பெயர் இல்லாத வசதி படைத்தவர்கள், வருமானவரி செலுத்துபவர்கள், ஏ கிரேடு, பி கிரேடு அதிகாரிகளின் வீடுகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அவர்கள் ரேஷன் கடைக்கு சென்று விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்திருந்தது.

    அதன்படி ஒவ்வொரு பகுதியிலும் ஏராளமானோர் ரேஷன் கடைக்கு சென்று விண்ணப்பத்தை வாங்கி பூர்த்தி செய்து கொடுத்துள்ளனர். அதில் பாதிப்பு விவரங்கள், ஆதார் எண், வங்கி கணக்கு எண், செல்போன் எண்களையும் குறிப்பிட்டுள்ளனர்.

    இந்த மனுக்களை ஆய்வு செய்து அவர்களின் வங்கி கணக்குக்கு ரூ.6 ஆயிரம் பணம் அனுப்பி வைக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

    அந்த வகையில் இப்போது எழுதி கொடுத்த 6 லட்சம் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கு இன்னும் ஓரிரு நாளில் பணம் அனுப்பி வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த திட்டத்துக்காக மொத்தம் ரூ.1,500 கோடியை அரசு ஒதுக்கி உள்ள நிலையில் இதுவரை ரூ.1260 கோடி, பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு விட்டது. பணம் கிடைக்காதவர்களுக்கு சனிக்கிழமைக்குள் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • முந்தைய நிலைமைக்கு திரும்புவதற்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் வரை ஆகும்.
    • கால்நடைகளை கணக்கீடு செய்து அவற்றிற்கான இழப்பீட்டு தொகையையும் அரசு வழங்க வேண்டும்.

    பெருந்தலைவர் மக்கள் கட்சித்தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 3 தினங்களுக்கு முன்னர் தென்மாவட்டங்களில் பெய்த கொடூர மழையால் தென்மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு உடுத்த துணி தவிர மாற்று துணிகளுக்கு வழி இல்லாத நிலைமையை வெள்ளம் உருவாக்கியது. இந்த நிலையில் இருந்து மீண்டும் முந்தைய நிலைமைக்கு திரும்புவதற்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் வரை ஆகும்.

    வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள முதியவர்கள், குழந்தைகள், பெண்கள் மற்றும் அனைவரின் நலனையும் கருத்தில் கொண்டு நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட மக்களின் குடும்ப அட்டைகள் மூலம் தலா 20 ஆயிரம் ரூபாய் உடனடியாக வழங்கிடவேண்டும்.

    தென்காசி மாவட்ட விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுகட்டும் வகையில் அரசு ஏக்கருக்கு குறைந்தபட்சம் ரூ.25 ஆயிரம் வழங்கவும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கால்நடைகளை கணக்கீடு செய்து அவற்றிற்கான இழப்பீட்டு தொகையையும் அரசு வழங்க வேண்டும் என்று பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நிவாரணப் பணியை மாநில அரசு தொடங்கியுள்ளது.
    • மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்.

    பிரதமர் நரேந்திர மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்ற பாதுகாப்புப் படைகளின் உதவியுடன் பெரிய அளவில் மீட்பு மற்றும் நிவாரணப் பணியை மாநில அரசு தொடங்கியுள்ளது. ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியதால், அவை பெருமளவில் சேதமடைந்துள்ளன. வெள்ளம் காரணமாக விவசாயிகள் விளைவித்த காய்கறிகள் மற்றும் பழங்களை சந்தைப்படுத்த முடியாமல், விளைபொருட்கள் அழிந்துவிட்டன. மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதால், வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.

    எனவே, தயவு செய்து மீட்பு மற்றும் நிவாரணப் பொருட்களை விரைந்து வழங்கவும், சேதங்களை மதிப்பீடு செய்ய ஆய்வுக் குழுவை அனுப்பவும், பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்காக தமிழக அரசுக்கு போதிய நிதி மற்றும் நிவாரணங்களை வழங்கவும், விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கி, விரைவில் இயல்பு நிலையை மீட்டெடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • பெரிய வெங்காயத்தின் விலை ஒரு மாதத்துக்கு பின்னர் மீண்டும் உயரத் தொடங்கி இருக்கிறது.
    • பெரிய வெங்காயம் வழக்கத்தை விட பாதி அளவே வருகிறது.

    போரூர்:

    மிச்சாங் புயல் மற்றும் மழை பாதிப்பு காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளதால் கோயம்பேடு சந்தைக்கு வரும் கத்தரிக்காய், வெண்டைக்காய், பாகற்காய், கோவக்காய் உள்ளிட்ட பச்சை காய்கறிகளின் வரத்து வெகுவாக குறைந்து விலையும் அதிகரித்து உள்ளது.

    இதேபோல் பெரிய வெங்காயத்தின் விலையும் ஒரு மாதத்துக்கு பின்னர் மீண்டும் உயரத் தொடங்கி இருக்கிறது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வழக்கத்தை விட தற்போது 50 சதவீத வெங்காயம் மட்டுமே வருவதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர். இதனால் பெரிய வெங்காயம் விலை ரூ.50-ஐ தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

    சில்லரை விற்பனை கடை களில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.65 வரை விற்பனை ஆகிறது. கடந்த அக்டோபர் மாத இறுதியில் வெங்காயத்தின் விலை ரூ.100-ஐ தொட்டது குறிப்பிடத்தக்கது.

    கத்தரிக்காய் கிலோ ரூ.60-க்கும், சின்ன வெங்காயம் கிலோ ரூ.80 முதல் ரூ.90 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, புயல், மழை காரணமாக ஆந்திரா பகுதியில் இருந்து வரும் காய்கறி, வெங்காயம் வரத்து குறைந்து உள்ளது. இதனால் விலை அதிகரித்து உள்ளது. பெரிய வெங்காயம் வழக்கத்தை விட பாதி அளவே வருகிறது. வரும் நாட்களில் இதன் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றனர்.

    • கடல் நீரின் தன்மையை அறிய தண்ணீரை பரிசோதனைக்கும் அனுப்பி உள்ளனர்.
    • எண்ணெய் கழிவுகள் சேகரிக்கப்பட்டு தூய்மைப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

    பொன்னேரி:

    மிச்சாங் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின்போது எண்ணூர் கடல் பகுதியில் எண்ணெய் கழிவு பரவியது. கடலில் மிதந்து வரும் இந்த எண்ணெய் படலத்தை அகற்றும் பணி இன்னும் நீடித்து வருகிறது.

    இதற்கிடையே இந்த எண்ணெய் கழிவு பழவேற்காடு மீனவர் குப்பம் பகுதிகளான அரங்கம்குப்பம், வைர வன்குப்பம், கோரை குப்பம், கருங்காலி, பள்ளப்பாடு ஆகிய பகுதிகளில் உள்ள கடலோரப் பகுதிகளுக்கும் பரவியது.

    ஏராளமான மீன்களும் இறந்து கரை ஒதுங்கின. இதுபற்றி அறிந்ததும் அதிகாரிகள் விரைந்து வந்து கடலில் மிதந்து வரும் எண்ணெய் கழிவு குறித்து ஆய்வு செய்தனர். மேலும் கடல் நீரின் தன்மையை அறிய தண்ணீரை பரிசோதனைக்கும் அனுப்பி உள்ளனர்.

    இதற்கிடையே திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி லிவிங்ஸ்டன் மற்றும் வருவாய்த்துறை, மீன்வளத்துறை அலுவலர்கள் நேரடியாக வந்து பழவேற்காடு கடல் பகுதி, பக்கிங்காம் கால்வாய் பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது துரை. சந்திரசேகர் எம்.எல்.ஏ., மீஞ்சூர் ஒன்றியக் குழு சேர்மன்ரவி ஆகியோர் உடன் இருந்தனர்.

    ஆய்வுக்கு பின்னர் கலெக்டர் பிரபு சங்கர் கூறும்போது, பழவேற்காடு கடல்பகுதியில் ஒதுங்கிய எண்ணெய் கழிவுகள் சேகரிக்கப்பட்டு தூய்மைப்படுத்தும் பணி நடந்து வருகிறது. தற்போது இங்குள்ள மீன்கள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    இதன் முடிவு வந்த பின்னர் மீனவர்கள் மீன் பிடிப்பது குறித்து அறிக்கை வெளியிடப்படும் என்றார்.

    ஆய்வின் போது பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கெத் பல்வந்த், வட்டாட்சியர் மதிவாணன், மீன்வளத்துறை உதவி இயக்குனர் கங்காதரன், ஊராட்சி மன்ற தலைவர் ஞானவேல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். மிச்சாங் புயல் எச்சரிக்கையில் இருந்தே கடந்த 20 நாட்களுக்கு மேலாக பழவேற்காடு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லாமல் உள்ளனர். இதனால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.

    • மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரண தொகை ரொக்கப்பணமாக ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது.
    • காலையில் 100 பேர்களுக்கும், மாலையில் 100 பேர்களுக்கும் பணம் வழங்கப்பட்டு வந்தது.

    சென்னை:

    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரண தொகை ரொக்கப்பணமாக ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது.

    இதற்காக ஏற்கனவே டோக்கன் வழங்கப்பட்டு அதில் தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதன்படி காலையில் 100 பேர்களுக்கும், மாலையில் 100 பேர்களுக்கும் பணம் வழங்கப்பட்டு வந்தது.

    23-ந்தேதி வரை ரூ.6 ஆயிரம் பெற்றுக்கொள்ள டோக்கன் வழங்கப்பட்ட நிலையில் தற்போது ரேஷன் கடைகளில் கூட்டம் இல்லாத காரணத்தால் எந்த தேதி குறிப்பிட்டிருந்தாலும் இன்று வந்துகூட பணம் பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது.

    இது சம்பந்தமாக ரேஷன் கடைகளுக்கு உயர் அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளனர். எந்த தேதி டோக்கனாக இருந்தாலும் பணம் வழங்கி விடுங்கள் என்று அறிவுறுத்தி உள்ளனர்.

    • கலைஞரின் புகைப்பட கண்காட்சியை திறந்து வைப்பது பெருமைக்குரியது.
    • தமிழக மக்களே தெரிந்து கொள்ளும் வகையில் புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் பார்க் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கலைஞரின் நூற்றாண்டு விழா புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியை தி.மு.க. அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி திறந்து வைத்து பார்வையிட்டார்.

    அதனைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பேராசிரியர் அன்பழகனின் பிறந்தநாளான இன்று கலைஞரின் புகைப்பட கண்காட்சியை திறந்து வைப்பது பெருமைக்குரியது. பேராசிரியர் அன்பழகன் மற்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது தமிழகத்திற்கு செய்த சாதனைகளை தி.மு.க.வினர் மட்டுமல்லாது தமிழக மக்களே தெரிந்து கொள்ளும் வகையில் புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.


    கலைஞரின் ஆட்சியில் கட்டப்பட்ட ஓமந்தூரார் சட்டமன்றம் அ.தி.மு.க.வின் குறுகிய மனப்பான்மையினாலும் , பொறாமை எண்ணத்தாலும் மருத்துவ மனையாக மாற்றப்பட்டதை மக்கள் உணர்வார்கள். டெல்லியில் இன்று இரவு பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார்.

    இதில் மிச்சாங் புயல் - தென் மாவட்ட மழை பாதிப்புகள் குறித்து முக்கிய கோரிக்கைகளை தமிழக முதலமைச்சர் முன்வைப்பார். அவர்களும் நல்ல எண்ணத்துடன் நடந்து கொள்வார்கள் என நம்புகிறேன்.

    பேரிடர் தொடர்பாக கவர்னர் ஆய்வுக்கூட்டம் குறித்து விமர்சிக்க விரும்பவில்லை. பேரிடர் காலம் என்பதால் நல்லதை யார் செய்தாலும் அதனை தி.மு.க., வரவேற்கும். இவ்வாறு அவர் கூறினார்.

    • 4 தென்மாவட்டங்களிலும் வரலாறு காணாத மழை பெய்து பெரிய சேதத்தை ஏற்படுத்திவிட்டது.
    • விமானம் மூலம் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டு சென்றார்.

    சென்னை:

    மிச்சாங் புயலால் ஏற்பட்ட மழை வெள்ளத்தால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கடுமையாக பாதிப்பு ஏற்பட்டது. இதை சரிசெய்ய இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடியும், நிரந்தர நிவாரணமாக ரூ.12,659 கோடியும் வேண்டும் என்று மத்திய அரசை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார்.

    இதற்கிடையே, மத்தியக் குழுவும் வெள்ளச் சேதத்தை பார்வையிட்டு டெல்லி சென்றிருக்கிறது. இன்னும் ஒரு சில திட்டங்கள் இந்த மத்திய குழு தனது அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அதற்குள், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 தென்மாவட்டங்களிலும் வரலாறு காணாத மழை பெய்து பெரிய சேதத்தை ஏற்படுத்திவிட்டது. இன்னும் வெள்ளம் வடியாத நிலையில், மக்கள் சொல்லொணாத் துயரத்தை அனுபவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், நேற்று கோவையில் 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை சென்றிருந்தார். ஏற்கனவே, அவர் மழை வெள்ள நிவாரண நிதி சம்பந்தமாக பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பேசுவதற்காக நேரம் கேட்டிருந்தார்.

    கோவையில் இருந்தபோது, அதற்கான அனுமதி கிடைத்ததால், அங்கிருந்தே விமானம் மூலம் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டு சென்றார்.

    இந்த நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 10 மணிக்கு பிரதமர் நரேந்திரமோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார்.

    தமிழ்நாடு இல்லத்தில் தங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்தபடி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி வாயிலாக பேசி, மழை வெள்ள நிவாரணப் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

    இதேபோல், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு உள்ளிட்டோருடனும் மழை வெள்ள நிவாரணப் பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார்.

    அப்போது, மிச்சாங் புயலால் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நிவாரணப் பணிகள் மேற்கொள்வதற்காக மத்திய அரசிடம் நிதி கேட்கிறார். மேலும், தற்போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கும் இடைக்கால நிவாரண நிதி கோருவதுடன் மத்திய குழுவையும் பார்வையிட அனுப்பிவைக்குமாறு பிரதமர் நரேந்திரமோடியை வலியுறுத்த இருக்கிறார்.

    முன்னதாக மாலை 3 மணிக்கு 'இந்தியா' கூட்டணியின் 4-வது ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

    சென்னை திரும்பியதும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென்மாவட்டங்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அதற்கான பயணத் திட்டமும் வகுக்கப்பட்டு வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
    • மிச்சாங் புயல் மற்றும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு விரைந்து நிதி ஒதுக்க வலியுறுத்தல்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

    சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அண்மையில் பெய்த மிச்சாங் புயல் மற்றும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு விரைந்து நிதி ஒதுக்கவும், தற்போது தென் மாவட்டங்களில் பெய்து வரும் அதி கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து எடுத்துக் கூறி ஆலோசிக்கவும், நாளை (19.12.2023) புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கோரி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி புறப்பட்டு செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தெருக்களில் துர்நாற்றம் வீசுகிறது. போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது.
    • குளிர்சாதன பெட்டி உள்ளிட்ட பல மின் சாதன பொருட்களும் நாசமானது.

    சென்னை:

    'மிச்சாங்' புயல் காரணமாக பெய்த பலத்த மழை காரணமாக சென்னை வெள்ளத்தில் மிதந்தது. இதனால் தரைதளத்தில் உள்ள ஏராளமான வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. பல வீடுகளில் 6 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி நின்றது.

    இதனால் வீடுகளில் உள்ள மெத்தை, சோபா, கட்டில், நாற்காலி, மேஜை, துணிமணிகள், புத்தகங்கள் ஆகியவை சேதம் அடைந்தன. மேலும் பல வீடுகளில் டி.வி, வாஷிங் மிஷின், குளிர்சாதன பெட்டி உள்ளிட்ட பல மின் சாதன பொருட்களும் நாசமானது.

    வெள்ளம் வடிந்த பிறகு வீடுகளுக்கு திரும்பிய மக்கள் மழை வெள்ளத்தால் சேதமான சோபா, மெத்தை உள்ளிட்ட பொருட்களை வீடுகளுக்கு வெளியே உள்ள தெருக்களிலும், அருகில் உள்ள குப்பை தொட்டிகளிலும் வீசினார்கள். இதன் காரணமாக சென்னையில் உள்ள சாலைகள் மற்றும் தெருக்களில் அதிக அளவில் குப்பைகள் தேங்கி காணப்படுகிறது. இதனால் தெருக்களில் துர்நாற்றம் வீசுகிறது. போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது.

    எனவே வீடுகளில் மழையால் சேதம் அடைந்த மெத்தை, சோபா, கட்டில் உள்ளிட்ட பொருட்களை அருகில் உள்ள குப்பை தொட்டிகள் மற்றும் சாலைகளில் வீச வேண்டாம் என்றும், மாநகராட்சியின் வாகனத்தை போன் செய்து அழைத்தால் அவர்கள் வீட்டிற்கே வந்து சோபா, மெத்தை உள்ளிட்ட கழிவு பொருட்களை சேகரித்து செல்வார்கள் என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சென்னை மாநகராட்சி, எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

    வீடுகளில் மழைநீரால் சேதம் அடைந்த சோபாக்கள், மெத்தை உள்ளிட்ட பொருட்களை குப்பை தொட்டி அல்லது தெருக்களில் வீசி போக்குவரத்துக்கு இடையூறு செய்ய வேண்டாம். கட்டணம் இல்லாத தொலை பேசி எண்ணான 18005712069 என்ற எண்ணில் அழைத்தால் உங்கள் வீட்டுக்கே வந்து குப்பை கழிவுகளை சேகரித்து செல்வார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • 24 லட்சம் குடும்பங்களுக்கு மட்டும் தான் இழப்பீடு வழங்கப்படும் என்று எந்த அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும்.
    • மழை - வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீண்டும், மீண்டும் வேதனைக்கு உள்ளாக்கக் கூடாது.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் மழை - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000 நிதி உதவி வழங்கும் திட்டம் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் துயரங்களைப் போக்குவதற்கு பதிலாக வேதனையையும், மன உளைச்சலையும் அதிகரித்திருக்கிறது. நிவாரண உதவி வழங்குவதில் நிகழும் குளறுபடிகள் தான் அனைத்துக்கும் காரணம் ஆகும். இந்த தவறான அணுகுமுறை கண்டிக்கத்தக்கது ஆகும்.

    சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் குடிசைகளில் வாழும் ஏழை மக்களுக்குக் கூட நிவாரண உதவி மறுக்கப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளில் அனைத்து வசதிகளுடன் வாழும் பணக்காரர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டிருக்கிறது. எந்த அடிப்படையில் நிதி உதவி பெறுவதற்கான பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்பது தெரியவில்லை. நிவாரண உதவி கண்டிப்பாக தேவைப்படும் நிலையில் உள்ள ஏழை மக்களை புறக்கணிப்பது அவர்களின் துயரங்களை மேலும் அதிகரிக்கும்.

    தமிழக அரசின் நிவாரண உதவி பெறுவதற்கான ஒரே தகுதி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது தான். அதன்படி பார்த்தால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 40 லட்சத்திற்கும் கூடுதலான குடும்பங்கள் மழை - வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. மழை - வெள்ளத்தை பார்வையிட வந்த மத்தியக் குழுவிடம் அளிக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தரவுகளில் இதை தமிழக அரசு ஒப்புக்கொண்டிருக்கிறது. அதன்படி, 40 லட்சம் குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். ஆனால், 24 லட்சம் குடும்பங்களுக்கு மட்டும் தான் இழப்பீடு வழங்கப்படும் என்று எந்த அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும்.

    நிவாரண உதவி மறுக்கப்பட்டவர்கள் அதை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கான முறை நடைமுறைக்கு சிறிதும் ஒத்துவராததாக உள்ளது. அதற்காக கோரப்படும் ஆவணங்களையும், சான்றுகளையும் சேகரித்து வழங்குவது பாமர மக்களால் இயலாத ஒன்றாகும். மழை - வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீண்டும், மீண்டும் வேதனைக்கு உள்ளாக்கக் கூடாது. மழை - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும், மற்றவர்களுக்கும் எந்த நிபந்தனையும் இல்லாமல் ரூ.6000 இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

    • வெள்ளத்தால் கடுமையாக பாதிப்புக்குள்ளான மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
    • நிவாரண உதவி தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    தாம்பரம்:

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை கொட்டி பலத்த வெள்ளசேதம் ஏற்பட்டது. இதில் முடிச்சூர் ஊராட்சிக்குட்பட்ட மதனபுரம், அமுதம் நகர், இந்திராநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த பகுதிகளில் 12 அடிக்கு தண்ணீர் தேங்கியதால் மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர்.

    இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண உதவி தொகையாக ரூ.6 ஆயிரம் ரேசன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான பயனாளிகளின் பெயர்பட்டியல் அந்தந்த ரேசன் கடைகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளன.

    இதில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட முடிச்சூர் மதனபுரம், அமுதம் நகரில் உள்ள ரேசன்கடைகளில் சுமார் 400 பேரின் பெயர்கள் வெள்ள நிவாரண உதவி தொகை வழங்குவதற்கான பட்டியலில் இடம் பெறவில்லை. இதனால் வெள்ளத்தால் கடுமையாக பாதிப்புக்குள்ளான மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

    இதன் காரணமாக முடிச்சூர் மதனபுரம் பகுதியில் நிவாரண தொகை வழங்கும் ரேசன் கடையில் கூட்டமின்றி காணப்படுகிறது. அதே சமயம் நிவாரன தொகை வழங்கும் பட்டியலில் விடுபட்டவர்கள் நிவாரண தொகை பெறுவதற்காக விண்ணப்பம் வாங்கி அதனை பூர்த்தி செய்து கொடுக்க நீண்ட வரிசையில் காத்திருந்து வருகின்றனர்.

    முடிச்சூரில் அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண உதவி தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ×