search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மிச்சாங் புயல்"

    • எண்ணெய் கழிவுகள் அப்பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்து பொருட்களை நாசப்படுத்தியது.
    • நவீன எந்திரங்கள் மூலமாகவும் கழிவுகள் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    சென்னை:

    எண்ணூர் முகத்துவாரம் மற்றும் கடல் பகுதியில் மிச்சாங் புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட எண்ணெய் கழிவுகள் அப்பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்து பொருட்களை நாசப்படுத்தியது. பின்னர் எண்ணூர் முகத்துவார பகுதியில் போய் கடலில் கலந்தது.

    இந்த எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணி கடந்த 10-ந் தேதியில் இருந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுமார் 75 படகுகளில் சென்று மீனவர்கள் எண்ணெய் கழிவுகளை அகற்றி வருகிறார்கள். நவீன எந்திரங்கள் மூலமாகவும் கழிவுகள் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் எண்ணூர் முகத்துவார பகுதியில் எண்ணெய் கழிவுகள் அகற்றப்படும் இடத்தை அமைச்சர் உதயநிதி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அமைச்சர் மெய்யநாதன், கலாநிதி வீராசாமி எம்.பி., கே.பி.சங்கர் எம்.எல்.ஏ., சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, கமிஷனர் ராதாகிருஷ்ணன், மண்டலக் குழு தலைவர் தனியரசு மற்றும் அரசு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.


    எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணிகள் எப்படி நடைபெற்று வருகிறது? பணிகள் முடிய இன்னும் எத்தனை நாட்கள் ஆகும் என்பது பற்றி உதயநிதி, அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். எண்ணெய் கழிவுகளால் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் மீனவர்கள் அமைச்சர் உதயநிதியிடம் தங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள் மற்றும் பாதிப்புகள் பற்றி எடுத்துக் கூறி முறையிட்டனர்.

    எண்ணெய் கழிவுகளால் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்புகளை விரைந்து சரி செய்து விரைவில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்து தேவையான உதவிகளை அரசு செய்ய வேண்டும் என்றும் மீனவர்கள் முறையிட்டனர். கோரிக்கை மனுக்களையும் வழங்கினார்கள்.

    மீனவர்களின் குறைகளை கவனமுடன் கேட்டுக் கொண்ட அமைச்சர் உதயநிதி அரசு நிச்சயம் உரிய உதவிகளை செய்யும் என்று உறுதி அளித்தார்.

    • ஏரியின் ஒருபகுதியில் 1300 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
    • வெள்ள நீரை ராட்சத மோட்டார்கள் அமைத்து வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.

    திருநின்றவூர்:

    மிச்சாங் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் பல இடங்கள் மழை வெள்ளத்தில் மூழ்கின. தற்போது வெள்ள நீர் வடிந்து இயல்பு நிலை திரும்பி உள்ளது.

    எனினும் திருநின்றவூர் நகராட்சியில் ஈசா ஏரியையொட்டி உள்ள ராமதாஸ்புரம் பெரியார் நகர், முத்தமிழ் நகர், பாரதியார் தெரு, கம்பர் தெரு, ஆகிய குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் இன்னும் வடியாமல் தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    வெள்ள நீரை ராட்சத மோட்டார்கள் அமைத்து வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதனை நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் சிவராசு, மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது குடியிருப்பு பகுதிகளில் தேங்கி உள்ள மழை நீரை வெளியேற்றும் பணியை விரைந்து முடிக்க நகராட்சி அலுவலர்களுக்கும் பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கும் உத்தரவிட்டனர்.

    இதேபோல் கொட்டாமேடு பகுதியில் தேங்கி உள்ள தண்ணீரை கால்வாய் அமைத்து கல்வெட்டு மூலம் வெளியேற்றும் பணி நடைபெறுகிறது. இதனையும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    பின்னர் கலெக்டர் பிரபு சங்கர் கூறும்போது, கனமழையால் திருநின்றவூர் நகராட்சிக் குட்பட்ட 800 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஈசா ஏரி 11.5 அடி உயரம் நிரம்பியது. இதனால் ஏரியின் ஒருபகுதியில் 1300 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டிற்கு பிறகு மிச்சாங் புயலினால் 2 நாட்களில் 68 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. குடியிருப்பு பகுதிகளில் உள்ள தண்ணீரை மோட்டார் மூலமும், கொட்டமேடு பகுதியில் தனியாக கால்வாய் அமைத்தும் வெளியேற்றப்படுகிறது என்றார்.

    • மாநகராட்சி பூங்காக்களில் நடைபயிற்சி செல்பவர்கள் கடந்த 10 நாட்களாகவே தவித்தனர்.
    • கனமழை எச்சரிக்கை திரும்பபெறப்படும் வரை மாநகராட்சி பூங்காக்கள் மூடப்பட்டு இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சியில் மொத்தம் 786 பூங்காக்கள் உள்ளன. இந்த பூங்காங்களில் தினமும் காலையிலும், மாலையிலும் ஏராளமான பொதுமக்கள் நடைபயிற்சி செல்வது வழக்கம். குறிப்பாக ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினருமே நடைபயிற்சி மேற்கொள்கிறார்கள்.

    மேலும் மாலை நேரங்களில் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து மாநகராட்சி பூங்காக்களில் உள்ள விளையாட்டு உபகரணங்களில் விளையாட விடுவார்கள். மேலும் ஆண்கள், பெண்கள் அனைவருமே பூங்காக்களில் உள்ள உடற்பயிற்சி சாதனங்களை பயன்படுத்தி உடற்பயிற்சியும் செய்து வருகிறார்கள்.

    இந்நிலையில் மிச்சாங் புயல் காரணமாக பெய்த பலத்த மழையால் சென்னை நகரமே வெள்ளக்காடானது. பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதையடுத்து மிச்சாங் புயல் வருவதற்கு முன்பே சென்னையில் உள்ள பூங்காக்கள் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மூடப்பட்டன. கனமழை எச்சரிக்கை திரும்பபெறப்படும் வரை மாநகராட்சி பூங்காக்கள் மூடப்பட்டு இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

    இதையடுத்து மாநகராட்சி பூங்காக்களில் நடைபயிற்சி செல்பவர்கள் கடந்த 10 நாட்களாகவே தவித்தனர். பொதுமக்களும் குழந்தைகளுடன் மாலை நேர பொழுது போக்குக்கு இடமில்லாமல் அவதிப்பட்டனர். மழை ஓய்ந்து இயல்பு நிலை திரும்பியுள்ளதால் பூங்காக்களை திறக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் சென்னையில் உள்ள அனைத்து பூங்காக்களும் இன்று திறக்கப்பட்டன. பல பூங்காக்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. நடைபயிற்சி செல்லும் பாதைகளில் முறிந்து விழுந்து கிடக்கும் மரங்களில் கிளைகள் முதலில் அகற்றப்பட்டு பொதுமக்கள் நடைபயிற்சி செல்வதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது.

    இதையடுத்து இன்று காலை முதலே ஏராளமான பொதுமக்கள் பூங்காக்களில் நடைபயிற்சி மேற்கொண்டனர்.

    • கடந்த 2015-ம் ஆண்டு பெரு வெள்ளத்தின் நிவாரணத் தொகை வங்கி கணக்கில் தான் செலுத்தப்பட்டது.
    • டோக்கன் முறை மூலம் நிவாரணம் வழங்குவது தவறாக பயன்படுத்தக்கூடும்.

    சென்னை:

    மக்களுக்கு வெள்ள நிவாரணம் உடனடி தேவை என்று தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், இடைக்கால உத்தரவு பிறப்பித்து அதை தாமதப்படுத்த முடியாது என கூறி இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுத்து விட்டது.

    மிச்சாங் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களைச் சேர்ந்த 37 லட்சம் குடும்பங்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்க அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ரொக்கமாக வழங்கப்படும் இந்த நிவாரணத் தொகையை சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கில் செலுத்தக் கோரி முன்னாள் ராணுவ வீரர் ராமதாஸ் என்பவரும், நிவாரண தொகையை அதிகரித்து வங்கி கணக்கில் வழங்க வேண்டும் என சட்டக் கல்லூரி மாணவர் செல்வகுமார் என்பவரும் சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.

    இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர்கள் தரப்பில் ரொக்கமாக நிவாரணத்தை வழங்கும்போது முறையானவர்களுக்கு சென்றடையாது.

    கடந்த 2015-ம் ஆண்டு பெரு வெள்ளத்தின் நிவாரணத் தொகை வங்கி கணக்கில் தான் செலுத்தப்பட்டது. டோக்கன் முறை மூலம் நிவாரணம் வழங்குவது தவறாக பயன்படுத்தக்கூடும். பலர் ஒரு முறைக்கு மேல் நிவாரணத்தை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அதனால் சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்த உத்தரவிட வேண்டும் என்று வாதிடப்பட்டது.


    அரசு தரப்பில் ஏற்கனவே 37 லட்சம் குடும்பத்தினர் அடையாளம் காணப்பட்டு உள்ளது. அவர்களுக்கு டோக்கன்களும் வழங்கப்பட்டு விட்டது. ஞாயிற்றுக்கிழமைகளில் இருந்து நிவாரணத் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து நீதிபதிகள், வெள்ள நிவாரணம் என்பது உடனடியாக வழங்க வேண்டியது. மழை வெள்ளத்தால் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதனால், நிவாரணம் வழங்குவதை தாமதப்படுத்த முடியாது, அதை மறுக்க முடியாது. நிவாரணத்தை முடக்க முடியாது.

    நிவாரணம் வழங்குவது தற்போதைய தருணத்தில் உடனடி தேவை என்பதால் இந்த வழக்கில் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க விரும்பவில்லை. வெள்ள நிவாரணத்தை ரொக்கமாக வழங்கலாம்.

    நிவாரணம் வழங்குவதை தாமதப்படுத்துவது மக்கள் நலனுக்கு உகந்தது அல்ல. உண்மை பயனாளிகளுக்கு நிவாரணம் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். விசாரணையை ஜனவரி 5-ந்தேதிக்கு தள்ளி வைக்கிறோம்.

    அன்றைய தினம் நிவாரணம் வழங்கியது குறித்து விரிவான அறிக்கையை அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

    • டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
    • மீனவர்கள் கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் பருவமழை தீவிரம் அடைந்து பல மாவட்டங்களில் கனமழை கொட்டியது. கடந்த வாரம் மிச்சாங் புயல் உருவாகி சென்னை உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்தது. சென்னை வெள்ளக்காடானது.

    மிச்சாங் புயல் ஆந்திராவில் கடந்து சென்றதை தொடர்ந்து தமிழகத்தில் ஒரு வாரமாக மழை குறைந்தது.

    இந்த நிலையில் தொடர்ந்து வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தென் மாவட்டங்களில் மழை பெய்து வந்தது.

    இந்த நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இதன் காரணமாக தமிழகத்தில் நாளை முதல் 19-ந்தேதி வரை 4 நாட்கள் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை (16-ந்தேதி) மற்றும் நாளை மறுநாள் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழை வரை பெய்யும்.

    11 செ.மீ. முதல் 20 செ.மீ. மழை பெய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    இதேபோல 17-ந்தேதி தமிழகத்தின் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் லேசான முதல் மிதமான மழை பெய்யும்.

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் மற்றும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

    தமிழகத்தில் மீண்டும் 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • ஆதார் எண், வங்கி எண், வீட்டின் விபரங்கள் உள்ளிட்டவை விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ளது.
    • விண்ணப்பங்கள் ரேசன் கடைகள் மூலமாக தான் வழங்கப்படும்.

    சென்னை:

    மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதியாக ரூ.6000 ரேசன் கடைகள் மூலமாக வருகிற 17-ந்தேதி முதல் அரசு வழங்க உள்ளது. இதற்கான டோக்கன் நேற்று பிற்பகல் முதல் ரேசன் கடை ஊழியர்கள் மூலம் வீடு வீடாக சென்று வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு நிவாரண நிதி வழங்கப்படுமா? இல்லையா? என்ற எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    * குடும்ப அட்டை இல்லாமல் இருந்தாலும் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்தால் நிவாரணம் பெறலாம்.

    * பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் வருமானவரி செலுத்துவோர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.

    * ஆதார் எண், வங்கி எண், வீட்டின் விபரங்கள் உள்ளிட்டவை விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ளது.

    * விண்ணப்பங்கள் ரேசன் கடைகள் மூலமாக தான் வழங்கப்படும்.

    * விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள 11 கேள்விகளை பூர்த்தி செய்து வழங்கும்போது ஒப்புதல் சீட்டு வழங்கப்படும்.

    * விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கினால் தேர்விற்கு பிறகு நிவாரணத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • முகாமில் காய்ச்சல் மற்றும் மழைக்கால நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
    • மதியம் 1 மணிக்கு மேலும் மருத்துவ முகாமுக்கு பொதுமக்கள் திரண்டு வந்ததால் முகாம் நேரம் நீட்டிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    சென்னை:

    'மிச்சாங்' புயல் மழையினால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதையொட்டி மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் இயக்கத்தினர் நிவாரண பணிகளில் ஈடுபடுமாறு விஜய் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களில் மக்கள் இயக்கத்தினர் பொதுமக்களுக்கு உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினர்.

    இந்த நிலையில் புயல் பாதிக்கப்பட்ட இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இன்று இலவச மருத்துவ முகாம் சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 25 இடங்களில் நடந்தது.

    காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை நடந்த மருத்துவ முகாமில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர்.

    தென்சென்னை மாவட்டம் கோடம்பாக்கம் காமராஜர் காலனியில் நடந்த மருத்துவ முகாமை இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தொடங்கி வைத்தார்.

    முகாமில் காய்ச்சல் மற்றும் மழைக்கால நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    மதியம் 1 மணிக்கு மேலும் மருத்துவ முகாமுக்கு பொதுமக்கள் திரண்டு வந்ததால் முகாம் நேரம் நீட்டிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    தென்சென்னை வட சென்னை, மத்திய சென்னையில் 25 இடங்களில் நடந்த சிறப்பு மருத்துவ முகாமில் பங்கேற்ற பொது மக்களுக்கு மருத்துவர்கள் செவிலியர்கள் சிகிச்சை அளித்ததுடன் மருத்துவ ஆலோசனையும் வழங்கினார்கள்.

    • பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக ரூ.6,000 நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் வழங்கும் பணியை சென்னையில் 17-ந்தேதி தொடங்கி வைக்கிறார்.

    சென்னை:

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி, பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டதோடு மின்சாதன பொருட்கள் உள்ளிட்ட உடைமைகளும் சேதம் அடைந்தன.

    இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக ரூ.6,000 நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

    இதற்கான டோக்கன் வருகிற 16-ந் தேதி முதல் வினியோகிக்கப்படும் என கூறப்பட்டிருந்த நிலையில், முன்கூட்டியே இன்று பிற்பகல் முதல் டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.

    சென்னையில் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர், ஸ்ரீ பெரும்புதூர் (3கிராமங்கள் மட்டுமே) செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், வண்டலூர், திருப்போரூர், (3கிராமங்கள் மட்டுமே), திருவள்ளூரில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூந்தமல்லி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் ஆகிய வட்டங்களில் உள்ள வீடுகளுக்கு டோக்கன்கள் வழங்கும் பணி இன்று தொடங்கியது.

    டோக்கன் பெற்றவர்களுக்கு வருகிற 17-ந்தேதி முதல் (ஞாயிற்றுக்கிழமை) ரேஷன் கடைகளில் ரூ.6,000 நிவாரணத் தொகை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் வழங்கும் பணியை சென்னையில் 17-ந்தேதி தொடங்கி வைக்கிறார்.

    • 4 மாவட்டங்களிலும் ஏற்பட்டிருந்த வெள்ள சேதம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக எடுத்துக் கூறினார்.
    • மத்திய குழுவினர், கண்டிப்பாக தமிழகத்திற்கு தேவையான உதவிகளை பெற்றுத் தருவதாக உறுதியளித்தனர்.

    சென்னை:

    சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மிச்சாங் புயல் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவினர் கடந்த 2 நாட்களாக பார்வையிட்டனர்.

    இந்த குழுவில் இடம் பெற்றிருந்த தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (என்.டி.எம்.ஏ.) ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையில் மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகம் சார்பில் திமான் சிங், வேளாண்மை கூட்டுறவு மற்றும் விவசாயிகள் துறை இணை இயக்குனர் ஏ.கே.சிவ்ஹரே, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் விஜயகுமார், நிதித்துறை சார்பில் ரங்கநாத் ஆடம், மின்சாரத்துறை சார்பில் இயக்குனர் பவ்யா பாண்டே ஆகிய 6 பேர் இடம் பெற்றிருந்தனர்.

    இவர்கள் கடந்த 11-ந்தேதி தலைமைச் செயலாளர் உள்ளிட்ட மூத்த அரசு அதிகாரிகளை சந்தித்து விட்டு அதன் பிறகு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு வந்தனர். அவர்களுடன் சென்னை மாநகராட்சி அதிகாரி டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட அதிகாரிகள் சில இடங்களுக்கு உடன் சென்று பாதித்த விவரங்களை எடுத்துக் கூறினார்கள்.

    இதே போல் மற்ற மாவட்டங்களில் சம்பந்தப்பட்ட கலெக்டர்கள் உடன் சென்று சேத விவரங்களை எடுத்து கூறினார்கள்.

    அதன் அடிப்படையில் மத்திய குழுவினர் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்பட்டுள்ள சேத விவரங்களை கணக்கெடுத்துள்ளனர். 4 மாவட்டங்களிலும் வெள்ளச் சேதத்தை பார்வையிட்டு மத்திய குழுவினர் இன்று தலைமைச் செயலகத்திற்கு சென்று தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

    அதன் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மத்திய குழுவினர் சென்று சந்தித்தனர். தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்யாத்ரி தலைமையில் குழுவில் உள்ள அனைவரும் முதலமைச்சரை சந்தித்தனர். அவர்களுடன் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, பொதுத்துறை செயலாளர் முருகானந்தம் ஆகியோரும் உடன் இருந்தனர்.


    அப்போது சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் ஏற்பட்டிருந்த வெள்ள சேதம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக எடுத்துக் கூறினார்.

    அப்போது இடைக்கால நிவாரணமாக மத்திய அரசிடம் ரூ.5060 கோடி கேட்டிருந்ததைவிட இப்போது சேத மதிப்பு அதிகமாக உள்ளதால் கூடுதலாக நிவாரண உதவி தேவைப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

    புயல் பாதிப்பு தொடர்பாகவும் நிதி ஒதுக்கீட்டிற்கான கோரிக்கை மனுவினையும் மத்திய குழுவின் தலைவரான குணால் சத்யாத்ரியிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

    சென்னை உள்பட 4 மாவட்டங்களில் வரலாறு காணாத பெருமழை வெள்ளத்தால் ஏற்பட்ட மிகப்பெரிய சேதத்தை சரி செய்து மீண்டு உருவாக்கவும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஏழை-எளிய மக்களுக்கு அதனை மீண்டும் உருவாக்கி வழங்கிடவும் தமிழ்நாடு அரசின் நிதி ஆதாரம் மட்டும் போதுமானதல்ல. மத்திய அரசு பங்களிப்பும் பெருமளவு தேவைப்படுகிறது.

    எனவே மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள குடும்பங்களுக்கு வாழ்வாதாரங்களை மீட்க தேவையான உதவிகளை வழங்கவும் பல்வேறு வகையான சமூக கட்டமைப்புகளை மீட்டுருவாக்கம் செய்யவும், மத்திய அரசுக்கு நீங்கள் உரிய பரிந்துரை செய்து தமிழ்நாடு அரசு கோரி உள்ள தொகையை பெற்றுத் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதற்கு மத்திய குழுவினர், கண்டிப்பாக தமிழகத்திற்கு தேவையான உதவிகளை பெற்றுத் தருவதாக உறுதியளித்தனர்.

    • கடந்த ஆண்டு இதே நாளில் 10 ஆயிரத்து 47 மில்லியன் கனஅடி தண்ணீர் இருந்தது குறிப்பிடத்தக்கது.
    • புழல் ஏரியில் மொத்த கொள்ளளவான 3300 மி.கன அடியில் 3054 மி.கனஅடி தண்ணீர் நிரம்பி உள்ளது.

    பூந்தமல்லி:

    சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.

    மிச்சாங் புயல் காரணமாக பெய்த பலத்த மழையால் குடிநீர்வழங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து முழு கொள்ளளவை எட்டியது.

    இதைத்தொடர்ந்து பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் இருந்து அதிகப்படியான உபரி நீர் வெளியேற்றப்பட்டது. தற்போது மழை இல்லாததால் ஏரிகளில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டு உள்ளது.

    இன்று காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம், புழல் உள்பட 5 குடிநீர் ஏரிகளையும் சேர்த்து மொத்தம் 10 ஆயிரத்து 626 மில்லியன் கனஅடி (10 டி.எம்.சி)தண்ணீர் இருப்பு உள்ளது. இது ஏரிகளின் மொத்த கொள்ளளவில் 90.38 சதவீதம் தண்ணீர் இருப்பு ஆகும். கடந்த ஆண்டு இதே நாளில் 10 ஆயிரத்து 47 மில்லியன் கனஅடி தண்ணீர் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவான 3231 மி.கன அடியில் 3076 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 840 கனஅடி தண்ணீர் வருகிறது. 512 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவான 1081 மி.கனஅடியில் 737 மி.கன அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 257 கன அடிதண்ணீர் வருகிறது. 396 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    புழல் ஏரியில் மொத்த கொள்ளளவான 3300 மி.கன அடியில் 3054 மி.கனஅடி தண்ணீர் நிரம்பி உள்ளது. ஏரிக்கு வரும் 189 கனஅடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

    செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்த கொள்ளளவான 3645 மி.கனஅடியில் 3259 மி.கனஅடிக்கு தண்ணீர் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது. ஏரிக்கு நீர்வரத்து 485 கனஅடியாக குறைந்தது. 624 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவான 500மி.கனஅடி முழுவதும் நிரம்பி உள்ளது. ஏரிக்கு வரும் 54 கனஅடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

    • மிச்சாங் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்கள், வர்த்தகர்கள்
    • சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இன்னும் தங்கள் வழக்கமான பொருளாதார நடவடிக்கைகளுக்கு திரும்பவில்லை.

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    மிச்சாங் புயலினால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் வசிக்கும் 37 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதோடு, அவர்களது உடைமைகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

    பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களின் இயல்பு நிலையை மீட்டெடுக்க முடிந்த நிலையிலும், அவர்களின் வாழ்வாதாரத்தின் மீதான தாக்கம் இன்னும் தொடர்வதாகவும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்கள், வர்த்தகர்கள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இன்னும் தங்கள் வழக்கமான பொருளாதார நடவடிக்கைகளுக்கு திரும்பவில்லை.

    புயல் பாதிப்பிற்குள்ளான பலர்/வணிக நிறுவனங்கள் பல்வேறு நோக்கங்களுக்காக வங்கிகளில் கடன்களைப் பெற்றுள்ள நிலையில், தங்களது நிலுவைத் தொகையைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தற்போது தவிக்கின்றனர். இந்த நெருக்கடியில் இருந்து அவர்கள் மீண்டு வரும் வரை கடனைத் திருப்பிச் செலுத்தும் கால அட்டவணைகளைத் தளர்த்திட வேண்டிய அவசரத் தேவை உள்ளது.

    அனைத்து வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், அகில இந்திய நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் வழங்கியுள்ள அனைத்து காலக் கடன்களுக்கும், 2023 டிசம்பர் 1 முதல் 2024 பிப்ரவரி 29 வரை தவணைத் தொகையைச் செலுத்துவதிலிருந்து விலக்கு அளித்து, கடன் தவணையையும், வட்டியையும் செலுத்துவதில் மூன்று மாதங்கள் ஒத்திவைக்க அனுமதிக்கப்படலாம்.

    எனவே, பிரச்சினையின் அவசரத்தை கருத்தில் கொண்டு, இந்த விஷயத்தில் மத்திய நிதியமைச்சர் தனிப்பட்ட முறையில் தலையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களின் திருப்பிச் செலுத்தும் சுமையைக் குறைக்கும் வகையில், தேவையான உத்தரவுகளை உடனடியாகப் பிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    • ரூ.6000 வெள்ள நிவாரணத் தொகையை பயோமெட்ரிக் முறையில் மட்டுமே வழங்க வேண்டும்.
    • நிவாரண தொகை வழங்கப்பட்டதும் பயனாளர்களின் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

    சென்னை:

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டதோடு மின்சாதன பொருட்கள் உள்ளிட்ட உடைமைகளும் சேதம் அடைந்தன.

    இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக ரூ.6,000 நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

    இதற்கான டோக்கன் வருகிற 16-ந்தேதி முதல் வினியோகிக்கப்படும் என கூறப்பட்டிருந்த நிலையில், முன்கூட்டியே இன்று பிற்பகல் முதல் டோக்கன் வழங்கப்படுகிறது.

    நிவாரண நிதி வழங்குவது தொடர்பான நெறிமுறைகளை ரேஷன் கடை ஊழியர்களுக்கு அரசு வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    * நிவாரணத் தொகை விநியோகத்திற்கு ஒவ்வொரு நியாயவிலைக் கடையிலும் நான்கு பணியாளர்கள் பணியமர்த்த வேண்டும்.

    * வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் நிவாரண தொகை வழங்க அறிவுறுத்தல்.

    * ஞாயிற்றுக்கிழமை தொடங்கி 7 நாட்களுக்குள் நிவாரண தொகையை வழங்க வேண்டும்.

    * டோக்கன்களை ரேஷன் ஊழியர்கள் தான் நேரில் சென்று வழங்க வேண்டும். மூன்றாம் நபரை பணியில் ஈடுபடுத்தக்கூடாது.

    * டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாளில் வருலும் குடும்ப அட்டைதாரர்களை எக்காரணம் கொண்டும் ரொக்கத் தொகை இல்லையென திருப்பி அனுப்பக்கூடாது.

    * ரூ.6000 வெள்ள நிவாரணத் தொகையை பயோமெட்ரிக் முறையில் மட்டுமே வழங்க வேண்டும்.

    * நிவாரண தொகை வழங்கப்பட்டதும் பயனாளர்களின் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

    * தினமும் காலை 9 மணி முதல் 1 மணி வரையும், மதியம் 3 மணி முதல் 5 மணி வரையும் நிவாரண தொகை வழங்கப்படும்.

    ×