search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மிச்சாங் புயல்"

    • ஒவ்வொரு மீனவர்களுக்கும் தலா ரூ.50 ஆயிரம் வரையில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
    • கடற்கரையோரமாக குவிந்து கிடக்கும் காய்ந்த எண்ணெய் கழிவுகளும் பொக்லைன் எந்திரம் மூலமாக அகற்றப்பட்டு வருகிறது.

    திருவொற்றியூர்:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை புரட்டி போட்ட மிச்சாங் புயல், எண்ணூர் பகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்தை ஒட்டுமொத்தமாக சிதைத்துள்ளது என்றே கூறலாம். தாளங்குப்பம், நெட்டுக் குப்பம், எண்ணூர் குப்பம், காட்டுக்குப்பம், சின்னக் குப்பம், முகத்துவாரம் குப்பம், சடையங் குப்பம், சிலிகர் பாதை கிராமம் ஆகிய 8 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் அப்பகுதியில் தேங்கிய எண்ணை கழிவுகளால் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளனர்.

    இந்த கிராமங்களில் வசிக்கும் 30 ஆயிரம் மீனவர்களும் தங்களது படகுகள், மீன்பிடி வலைகள் உள்ளிட்ட உபகரணங்கள் கடுமையான சேதத்துக்கு உள்ளாகி இருப்பதால் இனி என்ன செய்வது? என்று தெரியாமல் தவித்துப்போய் உள்ளனர். மீனவர்கள் பயன்படுத்தி வந்த 797 படகுகளும், வலைகளும் எண்ணை கழிவு மற்றும் வெள்ளத்தில் மூழ்கி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

    இதன் மூலம் ஒவ்வொரு மீனவர்களுக்கும் தலா ரூ.50 ஆயிரம் வரையில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 797 பைபர் படகுகள் மீன்பிடி வலைகள் சேதமாகி இருப்பதன் மூலம் ரூ.4 கோடி அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மீன்பிடி படகுகளை சீரமைத்து பயன்படுத்துவதற்கு பெரும் தொகை செலவாகும் என்பதால் அரசின் நிவாரண உதவிக்காக மீனவர்கள் காத்திருக்கிறார்கள். எண்ணை கழிவுகளில் மூழ்கிய வலைகள் பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதமாகி இருப்பதாகவும், எனவே மீன்பிடி வலைகளை புதிதாகவே வாங்க வேண்டி உள்ளது என்றும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதை தொடர்ந்து தமிழக அரசின் மீன்வளத்துறை சார்பில் சேதமான படகுகளை கணக்கெடுத்து நிவாரணம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. படகுகளுக்கு ரூ.10 ஆயிரம், வலைகளுக்கு ரூ.5 ஆயிரம் என 15 ஆயிரம் வரையில் நிவாரணம் வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சேத மதிப்புகளை கணக்கிட்டு மீனவர்களுக்கு முழுமையான நிவாரணம் வழங்கப்படும் என்றும், இது தொடர்பாக தமிழக அரசு உரிய அறிவிப்புகளை விரைவில் வெளியிடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே எண்ணை கழிவுகளை அகற்றும் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கழிவுகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வந்த போதிலும் நேற்று முதலே அப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    இன்று 2-வது நாளாக படகுகளில் சென்று மீனவர்கள் எண்ணை கழிவுகளை அகற்றி வருகிறார்கள். நவீன எந்திரங்களின் மூலமாக நேற்று தொடங்க இருந்த பணிகள் நடைபெற வில்லை. இன்று அந்த பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கடற்கரையோரமாக குவிந்து கிடக்கும் காய்ந்த எண்ணை கழிவுகளும் பொக்லைன் எந்திரம் மூலமாக அகற்றப்பட்டு வருகிறது. இந்த பணிகள் முடிந்து எண்ணைக் கழிவுகள் முழுவதையும் அகற்றி இயல்பு நிலைக்கு திரும்ப 6 மாதங்கள் வரை ஆகும் என்று மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

    எனவே தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு அதற்கு முன்னரே எண்ணை கழிவுகளை முழுமையாக அகற்ற வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கொரோனா காலத்தில் தி.மு.க. எதிர்கட்சியாக இருந்தபோது, மக்களை தேடி தேடி போய் உதவியது.
    • தகுதியுள்ள அத்தனை பேருக்கும் ரூ.6000 நிவாரண தொகை வழங்கப்படும்.

    சென்னை:

    எழும்பூரில் நடைபெற்ற தி.மு.க. நிர்வாகி பி.கே.மூர்த்தி இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    * மழை வரும் என்று எச்சரித்தார்கள். ஆனால் இவ்வளவு பெரிய மழை இருக்கும் என்று எச்சரிக்கை செய்யவில்லை. இதை அனைத்தையும் மீறி 45 வருடங்கள் இல்லாத மழையை நாம் பார்த்துள்ளோம்.

    * தி.மு.க. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்கு செயலாற்றும் கட்சி.

    * ஆட்சியில் இருக்கும் போது உள்ள வசதி, அதிகாரம் அதை பயன்படுத்தி நாம் சுலபமாக பணியாற்றி விடுவோம். ஆனால் ஆட்சியில் இல்லாத போதும் நாம் பணியாற்றி வருகிறோம்.

    * கொரோனா காலத்தில் தி.மு.க. எதிர்கட்சியாக இருந்தபோது, மக்களை தேடி தேடி போய் உதவியது தி.மு.க.

    * 2015-ம் ஆண்டு முதலமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    * ஏரியை திறக்க அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் அனுமதி கேட்க அதிகாரிகள் பயந்தனர்.

    * 2015-ல் கொஞ்சம் கொஞ்சமாமக ஏரியை திறந்திருந்தால் பலர் உயிரிழக்காமல் இருந்திருப்பார்கள்.

    * 2015-ஐ விட மோசமான மழை பெய்தும் செம்பரம்பாக்கம் ஏரியை நிரம்ப விடாமல் கொஞ்சம் கொஞ்சமாக திறந்து சென்னைக்கும் வந்த பெரும் பாதிப்பை தவிர்த்து உள்ளோம்.

    * இந்த மழை வெள்ளத்தில் மக்களை சந்தித்து உதவிய ஒரே கட்சி திமுக தான். அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என்று அனைவரும் மக்களை சந்தித்து உதவிகரமாக நீட்டினார்கள்.

    * மூன்று நாட்களாக ஆய்வு செய்யும் மத்திய அரசின் அதிகாரிகள் கூட மழை வெள்ளத்தை தமிழக அரசு சிறப்பாக கையாண்டு உள்ளது என்று கூறி உள்ளனர். மத்திய அரசில் இருந்து வந்துள்ள அதிகாரிகள் மனதார பாராட்டி உள்ளனர்.

    * தகுதியுள்ள அத்தனை பேருக்கும் ரூ.6000 நிவாரண தொகை வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ரேஷன் கடைகளுக்கு அரசு ஒரு பட்டியல் அனுப்பி உள்ளது.
    • வருமான வரி செலுத்தக் கூடியவர்கள், அரசு பணியில் அதிகாரியாக இருப்பவர்களின் பெயர் பட்டியலில் இல்லை.

    சென்னை:

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டதோடு மின்சாதன பொருட்கள் உள்ளிட்ட உடைமைகளும் சேதம் அடைந்தன.

    இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக ரூ.6,000 நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

    இதற்கான டோக்கன் வருகிற 16-ந்தேதி முதல் வினியோகிக்கப்படும் என கூறப்பட்டிருந்த நிலையில், முன்கூட்டியே இன்று பிற்பகல் முதல் டோக்கன் வழங்கப்படுகிறது.

    சென்னையில் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர், ஸ்ரீ பெரும்புதூர் (3கிராமங்கள் மட்டுமே) செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், வண்டலூர், திருப்போரூர், (3கிராமங்கள் மட்டுமே), திருவள்ளூரில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூந்தமல்லி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் ஆகிய வட்டங்களில் உள்ள வீடுகளுக்கு டோக்கன்கள் வழங்கும் பணி இன்று பிற்பகல் முதல் தொடங்குகிறது.

    ரேஷன் கடைகளுக்கு அரசு ஒரு பட்டியல் அனுப்பி உள்ளது. அந்த பட்டியலில் உள்ள நபர்களுக்கு மட்டும் டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. எந்த தேதியில் எந்த நாள் பணம் வாங்க வரவேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வருமான வரி செலுத்தக் கூடியவர்கள், அரசு பணியில் அதிகாரியாக இருப்பவர்களின் பெயர் அந்த பட்டியலில் இல்லை.

    பட்டியலில் பெயர் இடம் பெறாத நபர்கள் ரேஷன் கடையில் கொடுக்கப்படும் படிவங்களை வாங்கி பூர்த்தி செய்து அரசிடம் உரிய ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களை கொடுத்து மேல்முறையீடு செய்து நிவாரணம் கோரலாம் என்று தெரிவித்து உள்ளனர்.

    டோக்கன் பெற்றவர்களுக்கு வருகிற 16-ந்தேதி முதல் (சனிக்கிழமை) ரேஷன் கடைகளில் ரூ.6,000 நிவாரணத் தொகை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இது தொடர்பாக இன்று ரேஷன் கடை அதிகாரிகளுக்கு கூட்டுறவு துறை மூலம் பயிற்சியும் வழங்கப்பட்டது.

    • டிசம்பர் மாதம் பெரும்பாலான பகுதியில் மின் கணக்கீடு செய்ய முடியாத நிலை.
    • கடந்த முறை செலுத்திய தொகையை இநத் முறையும் கட்ட அறிவுறுத்தல்.

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. பெரும்பாலான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. நகரப்பகுதிகளில் வெள்ளம் வடிந்து உடனடியாக சகஜ நிலை ஏற்பட்டது. ஆனால் புறநகர்ப் பகுதிகளில் மழை நீர் வடிவ காலதாமதம் ஏற்பட்டது.

    இதனால் பெரும்பாலான வீடுகளில் டிசம்பர் மாதம் மின் கணக்கீடு செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டது. இதன் காரணமாக டிசம்பர் மாதம் மின் கணக்கீடு செய்யாத நுகர்வோர்கள் அக்டோபர் மாதம் கணக்கீடு செய்யப்பட்டு செலுத்தப்பட்ட அதே தொகையை செலுத்தலாம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

    • புயல் வெள்ள பாதிப்பால் மெட்ரோவுக்கு ரூ.210 கோடி அளவுக்கு சேதம் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • சென்னை மெட்ரோ நிறுவனம் சேத மதிப்பு கணக்கீடு செய்து தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளது.

    சென்னை:

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை உள்பட 4 மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்தியக் குழு இரு தினங்களாக ஆய்வு செய்தது. மிச்சாங் புயல் பாதிப்பு குறித்த ஆய்வறிக்கை ஒரு வாரத்தில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என மத்திய குழு அதிகாரி தெரிவித்தார்.

    இதற்கிடையே, மிச்சாங் புயலால் பாதிப்பு அடைந்த மக்களுக்கு வெள்ள நிவாரணமாக 6,000 ரூபாய் அளிக்கப்படுகிறது. இதற்காக வியாழன், வெள்ளி, சனி ஆகிய 3 நாட்களில் டோக்கன் வினியோகம் செய்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை ரேஷன்கடைகளில் மக்களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில், மிச்சாங் புயல் வெள்ள பாதிப்புகளால் மெட்ரோவுக்கு ரூ.210 கோடி அளவுக்கு சேதம் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்ட திட்டத்தில் ரூ.15 கோடியும், 2ம் கட்ட திட்டத்தில் ரூ.195 கோடியும் சேத மதிப்பாக கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ நிறுவனம் சேத மதிப்பு கணக்கீடு செய்து தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளது.

    • மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ரூ.6000 நிவாரணமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் அறிவித்தார்.
    • ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் 3 வருவாய் கிராமங்களுக்கு வழங்கப்படும்.

    சென்னை:

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ரூ.6000 நிவாரணமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் அறிவித்தார். இதுதொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில், இன்று அரசாணை வெளியிடப்பட்டது.

    அதன் விவரம் வருமாறு:-

    * சென்னையில் உள்ள அனைத்து வட்டங்களுக்கு நிவாரணத் தொகை ரூ.6000 வழங்கப்படும்.

    * செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் வட்டங்களில் முழுமையாக, திருப்போரூர் வட்டத்தில் 3 வருவாய் கிராமங்களுக்கு வழங்கப்படும்.

    * காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் வட்டத்தில் முழுமையாகவும், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் 3 வருவாய் கிராமங்களுக்கும் வழங்கப்படும்.

    * திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூவிருந்தவல்லி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் ஆகிய வட்டங்களுக்கு ரூ.6000 வழங்கப்படும்.

    * புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட, 2 நாட்களுக்கு மேல் மழை வெள்ளம் சூழ்ந்து பொருட்களை இழந்தவர்களுக்கு நியாய விலைக்கடைகள் மூலம் டோக்கன் வழங்கி நிதி வழங்கப்படும்.

    * அரசு, பொதுத்துறை உயர் அலுவலர்கள், வருமான வரி செலுத்துவோர், சர்க்கரை அட்டைதாரர்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டிருந்தால் வங்கிக் கணக்கு விவரத்துடன் விண்ணப்பிக்கலாம்.

    * விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, அதன் அடிப்படையில் உரிய நிவாரணம் அவரது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

    * தேவையான அச்சிடப்பட்ட விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட நியாய விலைக்கடைகளில் விநியோகிக்கப்படும்.

    * கூட்டுறவு சங்கப் பதிவாளர், நுகர் பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் நியாய விலைக்கடைகளில் விண்ணப்பங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

    * நியாய விலைக்கடைகளில் கூட்ட நெரிசல் ஏற்படுவதைத் தடுக்க காவல்துறையுடன் இணைந்து மாவட்ட ஆட்சியர், நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநர் உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

    * நிவாரணத் தொகை ரூ.6000 வழங்குவதற்கான டோக்கன்கள் நாளை முதல் வழங்கப்பட உள்ளது.

    * டோக்கனில் கடையின் பெயர், குடும்ப அட்டைதாரர் பெயர், குடும்ப அட்டை எண், நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • செங்கல்பட்டு மாவட்டத்தில் 462 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளன.
    • திருவள்ளூர் மாவட்டத்தில் 442 ஏரிகள் முழுமையாக நிரம்பி விட்டன.

    வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதலே சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள ஏரிகளுக்கு நீர்வரத்து காணப்பட்டது. மிச்சாங் புயல் மற்றும் கனமழை காரணமாக 4 மாவட்ட ஏரிகளுக்கும் நீர்வரத்து அதிகரித்தது.

    இதனால் சென்னையில் 26 ஏரிகள் முழுமையாக நிரம்பின. மீதமுள்ள 2 ஏரிகள் நிரம்பும் நிலையில் உள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில் 462 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளன. 68 ஏரிகள் நிரம்பும் நிலையில் உள்ளன.

    திருவள்ளூர் மாவட்டத்தில் 442 ஏரிகள் முழுமையாக நிரம்பி விட்டன. 59 ஏரிகள் நிரம்பும் நிலையில் உள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 205 ஏரிகள் நிரம்பி உள்ளன. 104 ஏரிகள் நிரம்பும் நிலையில் உள்ளன. 4 மாவட்டங்களிலும் மொத்தம் 1135 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.

    • பல ஆண்டுகளாக கோவில் குளத்தில் நீரின்றி தரை மட்டம் தெரியும் அளவிற்கு இருந்தது.
    • பக்தர்கள் முன்னாள் கவுன்சிலர் வே.வாசுவுக்கு பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்தனர்.

    வில்லிவாக்கம்,டிச.13-

    அயனாவரம் சயானி பஸ் நிறுத்தம் அருகே உள்ளது அருள்மிகு காசி விசுவநாதர் ஆலயம். ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலுக்கு சொந்தமான குளம் கோவில் எதிர் திசையில் சுற்றிலும் குடி யிருப்புகளுக்கு மத்தியில் பரந்து விரிந்து உள்ளது. பல ஆண்டுகளாக கோவில் குளத்தில் நீரின்றி தரை மட்டம் தெரியும் அளவிற்கு இருந்து முற்றிலும் நீர்வரத் தும் குறைந்து இருந்தது. இது குறித்து அயனாவரம் பகுதியில் உள்ள பல்வேறு திருக்கோவில் குளங்களை பராமரித்து வரும் தி. மு.க. பகுதி செயலாளரும் மலர் டிரஸ்ட் நிறுவனரும் முன்னாள் கவுன்சிலருமான வே.வாசுவின் கவனத்துக்கு பக்தர்கள் கொண்டு சென்றனர். இதைத் தொடர்ந்து தனது சொந்த நிதியிலிருந்து சென்னை மாநகராட்சியின் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் ரூபாய் 11, 45,970 (11லட்சத்து 45 ஆயிரத்து 970 ரூபாய்) மதிப்பில் சாலையின் மேற்குப் பகுதியில் இருந்து 150 மீட்டர் நீளத்திற்கு 3 அடி அகலம் 3 அடி ஆழத் திற்கு சொந்த பணத்தில் மழைநீர் கால்வாய் அமைத்து சாலையோரம் ஓடும் மழை நீரினை குளத்திற்கு பைப் மூலம் கொண்டு செல்லும் வகையில் பணியினை நடத்தி முடித்தார். இதன் காரணமாக கடந்த வாரம் மிக்ஜாம் புயலின் தாக்கத் தால் பெய்த கனமழையால் சாலை ஓரத்தில் இருந்த மழை நீர் அனைத்தும் குளத்திற்கு சென்றது. இதையடுத்து சுமார் 30 அடி ஆழத்திற்கு குளம் முழுவதும் மழை நீர் நிரம்பி சுற்றி மழை நீரால் சூழ்ந்து ரம்மியமாக காட்சியளிக்கிறது. இதன் மூலம் அந்த பகுதியை சுற்றியுள்ள வீடுகளில் நிலத்தடி நீர் உயரும். இதனை தொடர்ந்து

    75 ஆண்டுகளுக்கு பிறகு காசி விஸ்வநாதர் கோவில் குளத்தில் மழை நீரை பார்த்து மகிழ்ச்சி அடைந்த பக்தர்கள் முன்னாள் கவுன்சிலர் வே.வாசுவுக்கு பாராட்டுகளையும் நன்றி களையும் தெரிவித்தனர்.

    இதுகுறித்து தி.மு.க. வில்லிவாக்கம் கிழக்கு பகுதி செயலாளரும் மலர் டிரஸ்ட் நிறுவனருமான வே.வாசு கூறியதாவது:-

    பல ஆண்டுகளாக நீர் இல்லாமல் இருந்த இந்த கோவில்குளத்தை நாங்கள் சரி செய்ததால் தற்சமயம் பெய்த பலத்த மழையால் 30 அடிக்கு மேல் மழை நீர் தேங்கி உள்ளது. இதனை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் குளத்தில் மழை நீர் தேங்கும் வகையில் கிழக்குப் பகுதியில் இருந்து 250 மீட்டர் அளவிற்கு மழைநீர் வடிகால் அமைத்து கிழக்குப் பகுதியில் தேங்கும் மழை நீரை குளத்திற்குள் விடும் பணிகள் விரைவில் தொடங்கும். காசி விசுவநாதர் கோவில் நிர்வாகத்தின் கீழ் வரும் இந்த குளத்தினை நாங்கள் சீர் செய்து விட்டோம். ஆனால் கோவில் நிர்வாகத்தினர் கோவில் குளத்தினை முறையாக பராமரிக்காத காரணத்தினால் சுற்றி உள்ள மரத்தில் உள்ள கழிவுகள் அனைத்தும் குளத்தில் மிதிக்கிறது. இதனை சீர் செய்ய எங்கள் பங்களிப்பை நாங்கள் தருவதற்கு தயாராக இருக்கி றோம். கோவில் நிர்வாகம் இந்த கோவில் குளத்தை முறையாக பராமரிக்க வேண்டும் என்பது எனது தாழ்வான கருத்து.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பள்ளி வளாகத்தில் சேறும் சகதியுமாக உள்ளது.
    • ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தண்ணீர் வடிந்து இருந்தாலும் சேறும்சகதியுமாக காணப்படுகிறது.

    பூந்தமல்லி:

    மிச்சாங் புயல் காரணமாக கொட்டி தீர்த்த கனமழையால் பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதியில் மழைநீர் தேங்கியது. தற்போது மழை வெள்ளம் வடிந்து இயல்பு நிலை திரும்பி உள்ளது.

    எனினும் நிலையில் பூந்தமல்லியில் உள்ள அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மழைநீர் செல்ல வழியில்லாததால் தொடர்ந்து தேங்கி நின்றது.

    இதனால் மழைவெள்ள விடுமுறைக்கு பின்னர் மற்ற பள்ளிகள் திறக்கப்பட்டாலும் இந்த பள்ளிகளுக்கு நேற்று விரைவிடுமுறை அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்று முதல் அரையாண்டு தேர்வு தொடங்கி உள்ளதால் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளை இன்று திறக்க வளாகத்தில் உள்ள தண்ணீரை வெளியேற்றும் பணி வேகமாக நடைபெற்றது. எனினும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மழை நீரை இன்னும் முழுமையாக அகற்றமுடியவில்லை. மேலும் பள்ளி வளாகத்தில் சேறும் சகதியுமாக உள்ளது.

    இதைத்தொடர்ந்து மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் நலனை கருத்தில் கொண்டு நுழைவாயிலில் இருந்து வகுப்பறை வரை அவர்கள் நடந்து செல்வதற்கு வசதியாக மரப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

    இன்று காலை பள்ளி திறந்ததும் அந்த பாலத்தில் மாணவிகள் புதிய அனுபவத்துடன் பயந்தபடி வகுப்பறைக்கு நடந்து சென்றனர்.

    இதேபோல் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தண்ணீர் வடிந்து இருந்தாலும் சேறும்சகதியுமாக காணப்படுகிறது. அதில் மாணவர்கள் சென்றனர்.

    வரும் காலங்களில் மழைகாலத்தில் பள்ளி பகுதியில் தண்ணீர் தேங்காமல் இருக்க தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், மாணவிகளுக்கு நோய் தொற்று ஏற்படாத வகையில் மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும் எனவும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • தமிழக அரசின் துரித நடவடிக்கைக்கு மத்தியக்குழுவினர் பாராட்டு தெரிவித்தனர்.
    • மழை, வெள்ளநீர் பாதிப்புகளை மத்தியக்குழுவினர் இரு குழுக்களாக பிரிந்து பார்வையிட்டு வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை உள்பட 4 மாவட்டங்களில் 'மிச்சாங்' புயல் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்தியக்குழு நேற்று நேரில் ஆய்வு செய்தது. அப்போது தமிழக அரசின் துரித நடவடிக்கைக்கு மத்தியக்குழுவினர் பாராட்டு தெரிவித்தனர்.

    2-வது நாளாக இன்று தாம்பரம், வரதராஜபுரம், குன்றத்தூர், நசரத்பேட்டை, மாங்காடு, பூந்தமல்லி, முகலிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை, வெள்ளநீர் பாதிப்புகளை மத்தியக்குழுவினர் இரு குழுக்களாக பிரிந்து பார்வையிட்டு வருகின்றனர்.

    மத்திய குழுவில் இடம்பெற்றிருந்த சிவ்கரே, விஜயகுமார், பவ்யா பாண்டே ஆகியோர் நுங்கம்பாக்கம், லயோலா கல்லூரி அருகே உள்ள கழிவுநீரகற்று பம்பிங் ஸ்டேஷன் கீழ்ப்பாக்கம் குடிநீர் நீரேற்று நிலையம் ஆகிய பகுதிகளை பார்வையிட்டனர்.

    இந்நிலையில் மிச்சாங் புயல் பாதிப்பு குறித்த ஆய்வறிக்கை ஒரு வாரத்தில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்று மத்திய குழுவில் இடம் பெற்றுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜயகுமார் தகவல் தெரிவித்துள்ளார்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நாளை சந்திக்கும் மத்திய குழுவினர் அதன்பிறகு சேத விவரங்களை டெல்லிக்கு சென்று அறிக்கையாக சமர்பிக்க உள்ளனர்.
    • வெள்ளம் வடிந்துள்ள நிலையில் சேத மதிப்பு அதிகமாகி உள்ளது.

    சென்னை:

    'மிச்சாங்' புயல் மழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பெரும்பாலான மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதில் ஏராளமான பொது மக்களுக்கு பொருட்சேதம் அதிகம் ஏற்பட்டுள்ளது.

    வெள்ள சேதத்தை கணக்கிடுவதற்காக மத்திய குழுவினர் சென்னை வந்துள்ளனர். நேற்று முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் வெள்ள பாதிப்பை கணக்கிட்டு வருகிறார்கள்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நாளை சந்திக்கும் மத்திய குழுவினர் அதன்பிறகு சேத விவரங்களை டெல்லிக்கு சென்று அறிக்கையாக சமர்பிக்க உள்ளனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே முதற்கட்டமாக இடைக்கால நிவாரண தொகையாக ரூ.5060 கோடி வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார். இப்போது வெள்ளம் வடிந்துள்ள நிலையில் சேத மதிப்பு அதிகமாகி உள்ளது.

    எனவே கூடுதலாக நிவாரண நிதி கேட்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மத்திய குழுவினர் டெல்லி சென்று அறிக்கை சமர்ப்பித்ததும் தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு ஆகியோர் டெல்லி சென்று கூடுதல் நிவாரண நிதி கேட்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து புயல்-வெள்ள பாதிப்புக்கு கூடுதல் நிவாரண நிதியை வழங்குமாறு வலியுறுத்த உள்ளதாகவும், என்னென்ன சேதத்துக்கு எவ்வளவு நிதி தேவைப்படும் என்ற விவரங்களுடன் பட்டியலை கோரிக்கை மனுவாக வழங்க உள்ளதாகவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

      பூந்தமல்லி:

      சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.

      மிச்சாங் புயல் காரணமாக பெய்த பலத்த மழையால் குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்து முழு கொள்ளளவை எட்டியது.

      இதைத்தொடர்ந்து பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் இருந்து அதிகப்படியான உபரிநீர் வெளியேற்றப்பட்டது. தற்போது மழை இல்லாததால் ஏரிகளில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டு உள்ளது.

      இன்று காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம், புழல் உள்பட 5 குடிநீர் ஏரிகளையும் சேர்த்து மொத்தம் 10 ஆயிரத்து 626 மில்லியன் கனஅடி (10 டி.எம்.சி) தண்ணீர் இருப்பு உள்ளது. இது ஏரிகளின் மொத்த கொள்ளளவில் 90.38 சதவீதம் தண்ணீர் இருப்பு ஆகும். கடந்த ஆண்டு இதே நாளில் 10 ஆயிரத்து 47 மில்லியன் கனஅடி தண்ணீர் இருந்தது குறிப்பிடத்தக்கது.

      பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவான 3231 மி.கன அடியில்3076 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 840 கனஅடி தண்ணீர் வருகிறது. 512 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

      சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவான 1081 மி.கனஅடியில் 737 மி.கன அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 257 கன அடிதண்ணீர் வருகிறது. 396 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

      புழல் ஏரியில் மொத்த கொள்ளளவான 3300 மி.கன அடியில் 3054 மி.கனஅடி தண்ணீர் நிரம்பி உள்ளது. ஏரிக்கு வரும் 189 கனஅடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

      செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்த கொள்ளளவான 3645 மி.கனஅடியில் 3259 மி.கனஅடிக்கு தண்ணீர் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது. ஏரிக்கு நீர்வரத்து 485 கனஅடியாக குறைந்தது. 624 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

      கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவான 500 மி.கனஅடி முழுவதும் நிரம்பி உள்ளது. ஏரிக்கு வரும் 54 கனஅடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

      ×