search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மிச்சாங் புயல்"

    • சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான இடங்களில் இன்னும் மழை நீர் வடியாமல் தேங்கி நிற்கிறது.
    • புயல் பாதித்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    சென்னை:

    மிச்சாங் புயல் மழையால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்து பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    சென்னை சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான இடங்களில் இன்னும் மழை நீர் வடியாமல் தேங்கி நிற்கிறது.

    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திரைத்துறையினர் பலர் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு காசோலைகளை வழங்கி வருகின்றனர். சில நடிகர்கள் பாதிப்பு பகுதிகளில் நேரடியாக சென்று உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.

    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சில தினங்களுக்கு முன்பு நிவாரண பொருட்களை புயல் பாதித்த பகுதிக்கு அனுப்பி வைத்தார்.

    புயல் பாதித்த சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் இன்று நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்தார்.

    கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் இருந்து லாரிகள் மூலம் மளிகை பொருட்கள், பெட்சீட் மற்றும் நிவாரண பொருட்கள் புயல் பாதித்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    • முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகள் தண்ணீரில் மிதந்தன.
    • பைக்குகள் போன்றவை ஆண்டுதோறும் பழுதடைந்து புதிய பொருட்களை வாங்கும் நிலை உள்ளது.

    தாம்பரம்:

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதில் அனைத்து இடங்களும் மழைவெள்ளத்தில் தத்தளித்தன. வழக்கம்போல் தாம்பரம் அடுத்த முடிச்சூர், வரதராஜ புரம் பகுதிகளில் வீடுகளை தண்ணீர் சூழ்ந்து கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. கடந்த 2015-ம் ஆண்டு பெருவெள்ளத்தை விட இந்த ஆண்டு அதிக பாதிப்பை ஏற்படுத்தி சென்றது.

    முடிச்சூர் ஊராட்சி மற்றும் வரதராஜபுரம் பகுதிகள் அடையாறு ஆற்றை ஒட்டி உள்ளன. இதனால் அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது தண்ணீர் சூழ்ந்து தனி தீவாக மாறின. முடிச்சூரில் இருந்து தாம்பரம் செல்லும் சாலை, முடிச்சூரில் இருந்து மண்ணிவாக்கம் செல்லும் சாலை மற்றும் மணிமங்கலம் செல்லும் சாலைமுழுவதும் துண்டிக்கப்பட்டு மக்கள் வெளியேற முடியாத அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டது.

    கடந்த 2015 -ம் ஆண்டு வெள்ளப்பெருக்கிற்கு பின்னர் பலமுறை அதிகாரிகள், அரசியல் கட்சியினர் முடிச்சூர் மற்றும் வரதராஜபுரம் பகுதிகளை ஆய்வு செய்து அங்கு அடையார் ஆற்றை தூர்வாரி அகலப்படுத்தி கரைகளை பலப்படுத்தினர்.

    மேலும் அடையாறு ஆற்றுக்கு செல்லும், சிறு சிறு கால்வாய்களும் தூர்வாரப்பட்டு அடையாறு ஆற்றுக்கு செல்லும்படி வழி செய்யப்பட்டது. மேலும் முடிச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட அமுதம் நகர், ராயப்பா நகரில் மக்கள் ஆண்டுதோறும் வெள்ளத்தால் பாதிக்கப்படுவதை தடுப்பதற்காக சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் ஆய்வு செய்து சுமார் ரூ.4 கோடி செலவில் கால்வாய் அமைத்து அப்பகுதி தண்ணீர் அடையாறு ஆற்றில் சென்றடையும் வகையில் வழி ஏற்படுத்தினர்.

    ஆனால் தற்போது பெய்த மழையின்போது ரூ.4 கோடியில் அமைக்கப்பட்ட கால்வாயாலும் எந்தப் பயனும் இல்லாமல் அப்பகுதி மீண்டும் வெள்ளத்தில் மூழ்கியது. எப்போதும் போல் முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகள் தண்ணீரில் மிதந்தன. சரியான திட்டமிடல் இல்லாதது, தண்ணீர் செல்வதற்கு அகலமான கால்வாய் மற்றும் ஏரிகள் நிரம்பும்போது வெளியேறும் உபரிநீர் அருகில் உள்ள பகுதிகளுக்கு செல்வதை தடுக்க போதுமான நடவடிக்கைகள் எடுக்காததே இந்த மழை வெள்ள பாதிப்புக்கு காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, முடிச்சூர் மற்றும் வரதராஜபுரம் பகுதியில் ஆண்டுதோறும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படுகிறோம். வீடுகளில் தண்ணீர் புகுவதால் டி.வி., பிரிட்ஜ், வாஷிங் மெஷின், கார்கள், பைக்குகள் போன்றவை ஆண்டுதோறும் பழுதடைந்து புதிய பொருட்களை வாங்கும் நிலை உள்ளது. மழைவெள்ள பாதிப்பிற்கு நிரந்தர தீர்வாக அடையாறு ஆற்றை மேலும் அகலப்படுத்தி ஆழப்படுத்த வேண்டும்.

    மேலும் முடிச்சூர் பகுதியில் உள்ள சீக்குனா ஏரி கால்வாயை கட்டன் கால்வாய் முறையில் அமைத்து அடையாறு ஆற்றில் விட வேண்டும். இதேபோல் முடிச்சூர் லட்சுமி நகர், நேதாஜி நகர் பகுதிகளில் கட்டன் கால்வாய் அமைத்து அடையாறு ஆற்றுக்கு தண்ணீர் செல்ல வழி செய்தால் மட்டுமே இப்பகுதியில் மழைநீர் தேங்காது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கே.பி.கே. சதீஷ்குமார் ஏற்பாட்டில் சென்னை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கே.பி. கந்தன் வழங்கினார்.
    • பகுதி கழக பொருளாளர் கே.குமார் மற்றும் கழக நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொது செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க சென்னை புறநகர் மாவட்டம் சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி, பெருநகர சென்னை மாநகராட்சி 182 - வது வார்டு கந்தன்சாவடிக்குட்பட்ட அம்பேத்கர் சாலை, வீரமணி சாலை, திரு.வி.க. தெரு, ஜீவானந்தம் தெரு மற்றும் பால்ராஜ் நகர் ஆகிய பகுதியில் மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட சுமார் 2 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. அரிசி, போர்வை, பருப்பு, ரவை, கோதுமை, சமையல் எண்ணெய், சேமியா, பிஸ்கட், மிளகாய் தூள், சர்க்கரை, தண்ணீர் பாட்டில் ஆகிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு பையை மாவட்ட எம். ஜி.ஆர். இளைஞர் அணி இணை செயலாளரும் 182 - வது வார்டு மாமன்ற உறுப்பினரும் மாநகராட்சி கழக குழு தலைவருமான கே.பி.கே. சதீஷ்குமார் ஏற்பாட்டில் சென்னை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கே.பி. கந்தன் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் எம். ஜி.ஆர். இளைஞர் அணி துணை செயலாளரும் 193- வது வார்டு மாமன்ற உறுப்பினருமான டி.சி. கோவிந்தசாமி, பகுதி செயலாளர் ஜி.எம். ஜானகிராமன், வட்ட செயலாளர் பி. ராஜேந்திரன், எம். வெங்கடேசன், பி.எல். செந்தில்வேல், பகுதி மகளிர் மகளிர் அணி செயலாளர் அமுதா வெங்கடேசன், பகுதி கழக பொருளாளர் கே.குமார் மற்றும் கழக நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • ஏரியின் மதகு அருகே கரையில் திடீரென உடைப்பு ஏற்பட்டது.
    • ஏரி நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பொருட்கள் அனைத்தும் சேதம் அடைந்தன.

    ஸ்ரீபெரும்புதூர்:

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் ஏரி, குளங்கள் முழுவதும் நிரம்பி உள்ளன. சோமங்கலம் அடுத்த நடுவீரப்பட்டு பகுதியில் உள்ள ஏரியும் முழு அளவில் நிரம்பி காணப்பட்டது.

    இந்த ஏரியின் மதகு பகுதி சேதம் அடைந்து இருந்ததால் பாதுகாப்புக்காக மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் ஏரியின் மதகு அருகே கரையில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் ஏரியில் இருந்த தண்ணீர் சீறிப்பாய்ந்து வெளியேறியது. இந்த தண்ணீர் நடுவீரப்பட்டு, திருவஞ்சேரி கிராமங்களுக்குள் பாய்ந்தது. அதிகாலை நேரம் என்பதால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்த பின்னரே வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியே வந்தனர். அப்போது கிராமம் முழுவதும் ஏரி தண்ணீர் புகுந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதைத்தொடர்ந்து 2 கிராமங்களில் இருந்தவர்களும் பாதுகாப்பாக வெளியேறினர். அவர்கள் அங்குள்ள அரசு பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். திடீரென ஏரி நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பொருட்கள் அனைத்தும் சேதம் அடைந்தன. சுமார் 300-க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்து உள்ளது.

    தகவல் அறிந்ததும் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், அமைச்சர் தா.மோ. அன்பரசன் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்தனர். உடனடியாக ஏரியின் உடைந்த கரையில் மணல் மூட்டைகள் அடுக்கி சரிசெய்யப்பட்டது. எனினும் ஏரியில் இருந்த சுமார் 50 சதவீத தண்ணீர் வெளியேறி விட்டது. இந்த ஏரி சுமார் 175 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. சுற்றி உள்ள கிராமங்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக நடுவீரப்பட்டு ஏரி இருந்தது. இந்த நிலையில் ஏரிக்கரை உடைந்து தண்ணீர் வெளியேறியதால் கிராமமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். ஏரிக்கரை தானாக உடைந்ததா? அல்லது வேறு யாரேனும் உடைத்து விட்டனரா?என்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். நடுவீரப்பட்டு ஏரியில் தண்ணீர் இருப்பை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். தண்ணீர்வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை அதிகாரிகள் செய்து வருகிறார்கள். ஏரிக்கரை உடைந்ததால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

    • மத்திய குழுவினர் 2 பிரிவாக பிரிந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆய்வுக்கு சென்றார்கள்.
    • வேளச்சேரி கல்கி நகர், ஏஜிஎஸ் காலனி, ராம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளை மத்திய குழு ஆய்வு செய்தனர்.

    சென்னை:

    மிச்சாங் புயல் மற்றும் கன மழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன.

    மழை வெள்ள சேதங்களை ஆய்வு செய்ய தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை மத்திய உள்துறை நியமித்தது.

    இன்று மத்திய குழுவினர் 2 பிரிவாக பிரிந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆய்வுக்கு சென்றார்கள்.

    ஒரு பிரிவினர் வடசென்னை பகுதியிலும் இன்னொரு பிரிவினர் தென்சென்னை பகுதியிலும் ஆய்வு செய்தனர்.

    வேளச்சேரி கல்கி நகர், ஏஜிஎஸ் காலனி, ராம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளை மத்திய குழு ஆய்வு செய்தனர்.

    இதையடுத்து மத்திய குழு கூறுகையில்,

    மிச்சாங் புயல், மழை, வெள்ள பாதிப்புகளை மிக சிறப்பாக கையாண்ட தமிழக அரசுக்கு பாராட்டுக்கள் என்றும் வெள்ள பாதிப்புகளில் இருந்து சென்னை உட்பட 4 மாவட்டங்களும் முழுமையாக மீண்டு வருவதற்கான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் எனவும் உறுதி அளித்தனர்.

    • வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை:

    தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யும். திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • புதிய வரவாக மேலும் சில அரிய வகை பறவைகள் வரத் தொடங்கி இருக்கிறது.
    • வெளிநாடுகளில் இருந்து மேலும் பல பறவைகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிது.

    சோழிங்கநல்லூர்:

    மிச்சாங் புயல் காரணமாக பெய்த கனமழையால் சோழிங்கநல்லூர், பள்ளிக்கரணை துரைப்பாக்கம், பெருங்குடி, மேடவாக்கம், சித்தாலப்பாக்கம், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் ஓ.எம்.ஆர். சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலைகளில் மழை வெள்ளம் ஆறாக ஓடியது.

    துரைப்பாக்கம் 200 அடி சாலையில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு ஏற்கனவே ஏராளமான வெளிநாட்டு பறவைகள் வந்து இருந்தன. புயல், மழை காரணமாக அவை வேறு இடங்களுக்கு சென்று விட்டன. இந்த நிலையில் தற்போது மழை நின்றதும் மீண்டும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு வெளிநாட்டு பறவைகள் வரத்தொடங்கி உள்ளது. புதிய வரவாக மேலும் சில அரிய வகை பறவைகள் வரத் தொடங்கி இருக்கிறது.

    ஏராளமான கூழைக்கடா பறவைகள் வந்திருப்பது சில நாட்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. வழக்கமான கூழைக்கடா பறவைகள் தங்கும் இடங்களில் அதனுடன் சேர்ந்து கருப்பு நிற கூழைக்கடாக்கள் இருப்பது தெரிய வந்துள்ளது பள்ளிக்கரனில் வெள்ளை நிற கூழைக்கடாக்கள் மட்டுமே வழக்கமா வரும். கடந்த சில நாட்களுக்கு முன்பு பழுப்பு நிற கூழைக்கடாக்கள் வந்திருந்தன. இப்போது புதிய வரவாக முன் எப்போதும் இல்லாத வகையில் கருப்பு நிற கூழைக்கடாக்கல் வந்துள்ளது. அவை பழுப்பு நிற கூழைக்கடாக்கள் போன்று இல்லாமல் வழக்கமான வெள்ளை கூழைக்கடாவுடன் இணைந்த உலா வருகின்றன.

    தற்போது பள்ளிக்கரணை சதுப்புநிலப்பகுதியல் அதிக தண்ணீர் உள்ளதால் வரும் நாட்களில் வெளிநாடுகளில் இருந்து மேலும் பல பறவைகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் பறவைகள் வரத் தொடங்கி உள்ளதால் அதை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கைவிடுத்து உள்ளனர்.

    • சில இடங்களில் தண்ணீர் வடியாமல் வீடுகள் முன்பு குளம் போல் தேங்கி நிற்கிறது.
    • பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    மிச்சாங் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின. தற்போது வெள்ளநீர் வடிந்து இயல்பு நிலை திரும்பி உள்ளது. எனினும் இன்னும் சில இடங்களில் வீடுகளை சூழ்ந்து வெள்ள நீர் வடியாமல் உள்ளது. வெள்ளவேடு அருகே உள்ள புதுச்சத்திரம் அடுத்த கொட்டம்பேடு, வேப்பம்பட்டு, பெருமாள் பட்டு, திருநின்றவூர் உள்ளிட்ட இடங்களில் சில இடங்களில் தண்ணீர் வடியாமல் வீடுகள் முன்பு குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் கொட்டம்பேடு பகுதியில் மழை வெள்ள நீரை வெளியேற்ற புதுச்சத்திரம்- திருநின்றவூர் நெடுஞ்சாலையை துண்டித்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த தண்ணீர் அருகில் உள்ள கூவம் ஆற்றில் கலக்கும் வகையில் வெளியேற்றப்பட்டு உள்ளது.

    இதன் காரணமாக புதுச்சத்திரத்தில் இருந்து கொசவன்பாளையம், கொட்டம்பேடு, திருநின்றவூர், தாமரைப்பாக்கம் கூட்டுசாலை, புதுவாயல் கூட்டு சாலை வழியாக கும்மிடிப்பூண்டி தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டு உள்ளன.

    புதுச்சத்திரத்தில் இருந்து திருநின்றவூர் வழியாக செல்லும் வாகனங்கள் பூந்தமல்லி சென்று செல்கின்றனர். இதேபோல் திருநின்றவூரில் இருந்து புதுச்சத்திரம் வரும் வாகனங்கள் திருவள்ளுவர் வந்து செல்கின்றன. இதனால் வாகனங்கள் சுமார் 20 கி.மீ, துாரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    • நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 909 ஏரிகள் உள்ளன.
    • 45 ஏரிகள் 25 முதல் 49 சதவீதத்துக்கு மேலும். நிரம்பி இருப்பதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 909 ஏரிகள் உள்ளன.

    இதில் 632 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. மேலும் 111 ஏரிகள் 75 சதவீதத்துக்கு மேலும், 121 ஏரிகள் 50 சதவீதத்துக்கு மேலும் 45 ஏரிகள் 25 முதல் 49 சதவீதத்துக்கு மேலும். நிரம்பி இருப்பதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • மருத்துவ முகாம்கள்காலை 8.05 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது.
    • குழந்தைகள், பெண்கள், முதியோர்களுக்கு நோய் தடுப்பு மருந்துகள், மாத்திரைகள் மற்றும் உரிய ஆலோசனைகள் வழங்கப் பட உள்ளன.

    சென்னை:

    'மிச்சாங்' புயல் மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப் பட்டது.

    சென்னை மற்றும் சுற்றுப் புற பகுதிகளில் ஏராளமான வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விஜய் உத்தரவின் பேரில் மக்கள் இயக்கம் சார்பில் பொது மக்களுக்கு உணவு, பாய், பால், ரொட்டி, ஸ்டவ் மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் வருகிற 14-ந்தேதி (வியாழக்கிழமை) விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது.

    இது குறித்து மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மிச்சாங் புயல் மழை காரணமாக பாதிக்கப்பட்ட சென்னை மக்களின் நலனை பாதுகாக்கும் வகையிலும், காய்ச்சல் உள்ளிட்ட மழைக்கால நோய்களை தடுக்கும் நோக்கிலும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச சிறப்பு மருத்துவ முகாம்கள் வருகிற 14-ந்தேதி அன்று காலை 8.05 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது.

    வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை ஆகிய பகுதிகளில் 25 இடங்களில் பல்துறை மருத்து வர்கள், செவிலியர்கள் பங்கேற்க உள்ள இம்மருத் துவ முகாம்கள் வழியாக குழந்தைகள், பெண்கள், முதியோர்களுக்கு நோய் தடுப்பு மருந்துகள், மாத்திரைகள் மற்றும் உரிய ஆலோசனைகள் வழங்கப் பட உள்ளன. பொதுமக்களின் நலன் காக்கும் இம்மருத்துவ முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    வடசென்னை

    46-வது வார்டு: முல்லை நகர், அசோக் பில்லர், அரசு உயர்நிலைப்பள்ளி அருகில்.

    45-வது வார்டு: பி.பி.ரோடு, கரிமேடு, வியாசர்பாடி, தீயணைப்பு நிலையம் அருகில்.

    35-வது வார்டு: கொடுங்கையூர், முத்தமிழ்நகர், பள்ளிவாசல் அருகில்.

    72-வது வார்டு: கஸ்தூரிபாய் காலனி, ஏ பிளாக், கன்னிகாபுரம், மக்கள் மறுமலர்ச்சி மன்றம் அருகில்.

    75-வது வார்டு: சுப்பு ராயன் 4-வது தெரு.

    65-வது வார்டு: முத்து மாரியம்மன் கோவில் தெரு, எம்.ஜி.ஆர்.நகர் எஸ்.பி.ஐ. அருகில்.

    41-வது வார்டு: கருமாரி யம்மன் தெரு, தூய இருதய மெட்ரிகுலேசன் பள்ளி அருகில், கொருக்குப் பேட்டை.

    தென்சென்னை

    141-வது வார்டு: காமராஜ் காலனி, தி.நகர் பஸ் நிலையம் அருகில்.

    133-வது வார்டு: ஆனந்தன் தெரு, முப்பத்தம்மா கோவில் அருகில்.

    132-வது வார்டு: ஐந்து விளக்கு, புண்ணியகோடி கல்யாண மண்டபம்.

    134-வது வார்டு: பிருந்தா வனத் தெரு, ஹவுசிங் போர்டு அருகில்.

    130-வது வார்டு: அம்மன் கோவில் தெரு, கிழக்கு வடபழனி முருகன் கோவில் அருகில்.

    135-வது வார்டு: 83-வது தெரு, மேல்புதூர், அசோக்நகர்.

    131-வது வார்டு: 61-வது தெரு, அம்மா உணவகம் அருகில், நல்லாங்குப்பம்.

    180-வது வார்டு: திருவான்மியூர் இ.சி.ஆர். சாலை, ஆர்.டி.ஓ. ஆபீஸ் அருகில்.

    178-வது வார்டு: தரமணி, தந்தை பெரியார் நகர், தரமணி பஸ் நிலையம் அருகில்.

    121-வது வார்டு: கணேசபுரம் அருகில், சிட்டி சென்டர் பின்புறம்.

    123-வது வார்டு: லாக்நகர், மந்தவெளி ஆர்.டி.ஓ. ஆபீஸ் அருகில்.

    139-வது வார்டு: பாரதிதாசன் காலனி, ஜாபர்கான்பேட்டை அருகில்.

    140-வது வார்டு: சைதாப்பேட்டை, பனகல் மாளிகை அருகில்.

    120-வது வார்டு: முத்தையா தோட்டம் அருகில்.

    மத்திய சென்னை

    58, 99, 77-வது வார்டுகள்: ஐயப்ப மைதானம், திரு நாராயணகுரு சாலை, பெரியமேடு, சூளை, சென்னை டவுட்டன் பாலம் அருகில்.

    108-வது வார்டு: எம்.எஸ்.நகர், அம்பேத்கர் திடல், மங்களபுரம் போலீஸ் பூத் அருகில், எழும்பூர்.

    84, 95-வது வார்டு: திரு வெங்கடய்யா முதல் தெரு, வில்லிவாக்கம்.

    98-வது வார்டு: குட்டி யப்பன் தெரு, பம்பிங் ஸ்டே ஷன், அயனாவரம் மன நிலை காப்பகம் அருகில், அயனாவரம், கீழ்ப்பாக்கம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மத்திய குழுவினர் 2 பிரிவாக பிரிந்து ஆய்வுக்கு சென்றார்கள்.
    • வெள்ளம் சூழ்ந்த பகுதிகளையும், சாலைகள் சேதமாகி உள்ளதையும் பார்த்தார்கள்.

    சென்னை:

    மிச்சாங் புயல் மற்றும் கன மழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன.

    சென்னையில் பள்ளிக்கரணை, பெரும்பாக்கம், அம்பத்தூர், முடிச்சூர், எண்ணூர் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்கள் உட மைகளையும், வாழ்வாதாரங்களையும் இழந்தனர்.

    மிக கடுமையான பாதிப்புகளை சந்தித்ததால் ரூ.5,060 கோடி நிவாரண நிதி வழங்க வேண்டும் என்றும் பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்ய மத்திய குழுவை அனுப்ப வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

    இதையடுத்து கடந்த 7-ந்தேதி மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் சென்னை வந்தார். ஹெலிகாப்டர் மூலம் வெள்ளம் பாதித்த பகுதிகளை அவர் நேரில் பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து வெள்ள நிவாரண நிதியாக ரூ.450 கோடியையும், சென்னை வெள்ளத் தடுப்பு சிறப்பு திட்டத்துக்காக ரூ.501 கோடியையும் மத்திய அரசு ஒதுக்கியது.

    இதற்கிடையில் மழை வெள்ள சேதங்களை ஆய்வு செய்ய தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை மத்திய உள்துறை நியமித்தது.

    இந்த குழுவில் மத்திய அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அதிகாரிகள் ஏ.கே.சிவஸ்ரீ, பாவ்யா பாண்டே, நிதித் துறையை சேர்ந்த ரங்கநாத் ஆதம், மின்சாரத் துறையை சேர்ந்த விஜயகுமார், சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை துறை அதிகாரி திமன்சிங் ஆகியோர் இடம் பெற்றுள்ளார்கள்.

    இந்த குழுவினர் நேற்று நள்ளிரவு 11.40 மணியளவில் டெல்லியில் இருந்து சென்னை வந்து கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கினார்கள்.

    இன்று காலை 11 மணியளவில் ஆய்வுக்கு புறப்பட்டார்கள். மத்திய குழுவினர் 2 பிரிவாக பிரிந்து ஆய்வுக்கு சென்றார்கள்.

    ஒரு பிரிவினர் வடசென்னை பகுதியிலும் இன்னொரு பிரிவினர் தென்சென்னை பகுதியிலும் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    வடசென்னைக்கு சென்ற குழுவினர் பெரியமேடு-புளியந்தோப்பு டிமலஸ் ரோட்டில் இருந்து தங்கள் ஆய்வை தொடங்கினார்கள். இங்கு வெள்ளம் சூழ்ந்த பகுதிகளையும், சாலைகள் சேதமாகி உள்ளதையும் பார்த்தார்கள்.

    அதைத்தொடர்ந்து பட்டாளம் அங்காளம்மன் கோவில் தெரு, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, சிவராவ் ரோடு, மோதிலால் தெரு ஆகிய இடங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கிய குடியிருப்பு பகுதிகளை பார்வையிட்டனர்.

    அதைத்தொடர்ந்து வியாசர்பாடி அம்பேத்கார் கல்லூரி சாலை சந்திப்பு, ஓட்டேரி நல்லா, டிகாஸ்டர் ரோடு, கணேசபுரம் சுரங்கப்பாதை ஆகிய பகுதிகளை பார்வையிட உள்ளனர்.

    • மழைக் காலங்களில் ஏற்படக் கூடிய நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்க மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது.
    • முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன், மற்றும் அரசு உயர் அலு வலர்கள் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் 'மிச்சாங்' புயல் காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத பெரு மழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த சேதங்கள் ஏற்பட்டது. இந்த இயற்கைப் பேரிடரால் ஏறத்தாழ 1 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டார்கள்.

    பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அமைச்சர் பெரு மக்கள் மற்றும் அரசு உயர்அலுவலர்கள் மேற்பார்வையில் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு தேவையான நிவாரணம் வழங்கப்பட்டு வருவதுடன், சீரமைப்புப் பணிகளும் போர்க்கால அடிப்படையில் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கிய மக்களை மீட்டு பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மருந்து, போர்வை, பாய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டதுடன், மழைக் காலங்களில் ஏற்படக் கூடிய நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்க மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது.

    கனமழையால் பாதிக்கப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகள், தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிகள், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், பொன்னேரி, திருநின்றவூர், மாங்காடு, பூந்தமல்லி, திருவேற்காடு, குன்றத்தூர் ஆகிய நகராட்சிப் பகுதிகளில் உள்ள தெருக்கள், சாலைகளில் தேங்கியுள்ள குப்பைகள் மற்றும் தோட்டக் கழிவுகளை அகற்றி, தூய்மைப் பணிகளை மேற்கொள்ள திருநெல்வேலி, மதுரை, தஞ்சாவூர், வேலூர், சேலம், திருப்பூர், செங்கல்பட்டு, கோயம்புத்தூர், ஈரோடு, திருச்சி ஆகிய மாவட்டங்களிலிருந்து 3449 தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பிற பணியாளர்கள் வர வழைக்கப்பட்டனர்.

    பெருநகர சென்னை மாநகராட்சியின் 22,075 தூய்மைப் பணியாளர்களும், தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். மிச்சாங் மற்றும் கனமழையின் காரணமாக 46,727.66 மெட்ரிக் டன் குப்பை மற்றும் தோட்டக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது.

    கனமழையால் ஏற்பட்ட குப்பைகள் மற்றும் தோட்டக் கழிவுகளை அகற்றிட தாம்பரம் மாநகராட்சி, ஆவடி மாநகராட்சி, கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், பொன்னேரி, திருநின்றவூர், மாங்காடு, பூந்தமல்லி மற்றும் திருவேற்காடு பகுதிகளில் 841 தூய்மைப் பணியாளர்களும் நியமிக்கப்பட்டு, குப்பைகள் மற்றும் தோட்டக்கழிவுகள் அகற்றப்பட்டன.

    கடினமான இச்சூழ்நிலையில் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலிருந்து வந்து குப்பைகளை அகற்றிடும் பணிகளை மேற்கொண்ட 3,449 தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பிற பணியாளர்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாராட்டி ஊக்கத் தொகையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார்.

    அவர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் என மொத்தம் 1 கோடியே 37 லட்சத்து 96 ஆயிரம் ஊக்கத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கும் அடையாளமாக 15 தூய்மைப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என். நேரு, பி.கே. சேகர்பாபு, மேயர் பிரியா, எம்.பி.க்கள் தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், டாக்டர் கலாநிதி வீராசாமி, எம்.எல்.ஏ.க்கள் பரந்தாமன், ஜோசப் சாமுவேல், மூர்த்தி, எபினேசர், துணை மேயர் மகேஷ் குமார், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர், கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன், மற்றும் அரசு உயர் அலு வலர்கள் கலந்து கொண்டனர்.

    ×