search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உயர்வுகள் உங்களைத் தேடி வரும்"

    • ஏதோ ஒரு நெருக்கடியான சூழ்நிலையில் இருக்கின்றீர்களா?
    • தொடர் தோல்வியால் துவண்டுபோய் இருக்கின்றீர்களா?

    அன்பானவர்களே, நீங்கள் வாழ்க்கையில் ஏதோ ஒரு நெருக்கடியான சூழ்நிலையில் இருக்கின்றீர்களா?, உயர் கல்விக்காக, வேலைக்காக, திருமணத்திற்காக, பதவி உயர்வுக்காக, நெடுங்காலமாக காத்திருக்கின்றீர்களா?. தொடர் தோல்வியால் துவண்டுபோய் இருக்கின்றீர்களா?,

    உங்களுக்குரிய வாய்ப்புகள் இன்னொருவரால் தடைப்படுகிறதா?, பிறருக்கு உங்களாலான உதவிகளை செய்தும், நன்றி மறந்து அவர்களால் உங்களுக்கு ஏற்பட்ட துரோகத்தினால் துயரப்படுகிறீர்களா? உங்களால் நன்மை பெற்றவர்கள் உங்களுக்கு எதிராக செயல்படுகிறார்களா?, உங்களுக்கு வரவேண்டிய வாய்ப்புகளை பிறர் தட்டிப்பறித்து விட்டார்களா? கவலைப்படாதீர்கள்.

    உங்கள் வேதனைகள், சோதனைகள், தோல்விகள் விரைவில் மாறும். குறித்த காலத்தில் உங்களுக்குரிய, வாய்ப்புகள், உயர்வுகள், தேவைகள் அனைத்தும் உங்களைத்தேடி வரும்.

    பிரியமானவர்களே! வேதாகமத்தில், `அகாஸ்வேரு' என்றொரு ராஜாவைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. ராஜாவைக் கொல்ல அவரது தளபதிகளில் இருவர் ரகசிய சதித்திட்டம் தீட்டுகிறார்கள். இதை அரண்மனையின் வாசலில் இருந்த மொர்தெகாய் என்ற ராஜ ஊழியன் அறிந்து தடுத்தான். ராஜாவைக் கொல்ல திட்டமிட்டவர்கள் தூக்கில் போடப்பட்டனர்.

    இந்த தகவல்கள் அனைத்தும் ராஜ சமூகத்தின் முக்கிய குறிப்புகளை எழுதும் நாளாகமப் புத்தகத்திலே எழுதப்பட்டது. இதன் பின்னர் மொர்தெகாய் மறக்கப்பட்டுப் போனான்.

    இந்த நிலையில் மன்னர் அகாஸ்வேரு தனது பிரதான மந்திரியாக ஆமான் என்பவனை நியமித்து அவனுக்கு அதிகாரமும், அங்கீகாரமும் அளித்தான். அரண்மனையில் உள்ளவர்களும், மக்களும் ஆமானை வணங்க வேண்டும் என்றும் ராஜா கட்டளையிட்டிருந்தார். ஆனாலும் அரண்மனை வாசலில் இருந்த மொர்தெகாய் அவனை வணங்கவில்லை.

    இதை அறிந்த ஆமான் மொர்தெகாய் மீது மிகுந்த கோபம் கொண்டான். அவனுக்கு தண்டனை அளிக்க திட்டமிட்டு, அதற்காக 50 முழ உயரமான தூக்குமரத்தை தன் வீட்டருகில் நாட்டி விட்டு, ராஜாவிடம் இதைப்பற்றி பேச வேண்டும் என்று தகுந்த சமயத்திற்காக காத்திருந்தான்.

    இந்த நிலையில் ஒரு நாள் இரவு ராஜா தூக்கம் வராத நிலையில் அன்றாட நிகழ்வுகளை குறித்து வைத்துள்ள நாளாகம புத்தகத்தை கொண்டுவரச்சொல்லி நடந்த நிகழ்வுகளை வாசிக்கச்சொன்னார். அப்போது ராஜாவை கொல்ல முயன்றதும், அது மொர்தெகாய் மூலம் தடுக்கப்பட்டதும் ராஜாவுக்கு தெரியவருகிறது.

    உடனே ராஜா, இந்த நல்ல செயலுக்காக மொர்தெகாய்க்கு உரிய மரியாதை செய்யப்பட்டதா என்று கேட்டார். அதற்கு ஊழியர்கள் `அவனுக்கு ஒன்றும் செய்யப்படவில்லை' என்று சொன்னார்கள்.

    அந்த நேரத்தில், மொர்தெகாயைத் தூக்கில் போட மன்னரிடம் அனுமதி கேட்க ஆமோன் வந்திருந்தான். ராஜா அவனை நோக்கி: 'ராஜா கனம் பண்ண விரும்புகிற மனுஷனுக்கு என்ன செய்யப்படவேண்டும்' என்று கேட்டார்.

    அதற்கு ஆமான், `என்னையன்றி யாரை ராஜா கனம்பண்ண விரும்புவார்' என்று தன் மனதிலே நினைத்து, ராஜாவை நோக்கி: `ராஜா கனம் பண்ண விரும்புகிற மனுஷனுக்குச் செய்யவேண்டியது என்னவென்றால், ராஜா உடுத்திக்கொள்ளுகிற ராஜவஸ்திரமும், ராஜா ஏறுகிற குதிரையும், அவர் சிரசிலே தரிப்பிக்கப்படும் ராஜ முடியும் கொண்டுவரப்படவேண்டும்.

    அந்த வஸ்திரமும் குதிரையும் ராஜாவுடைய பிரதான பிரபுக்களில் ஒருவனுடைய கையிலே கொடுக்கப்படவேண்டும். அந்த வஸ்திரத்தால் ராஜா கனம் பண்ண விரும்புகிற மனுஷனை அலங்கரித்தபின், அவனைக் குதிரையின்மேல் ஏற்றி, நகரவீதியில் உலாவும்படி செய்து, எல்லா மக்களாலும் மரியாதை செய்யப்பட வேண்டும்' என்று சொன்னான்.

    அப்பொழுது ராஜா ஆமானை நோக்கி: `சீக்கிரமாய் நீ சொன்னபடி வஸ்திரத்தையும் குதிரையையும் கொண்டுபோய், அரண்மனையின் வாசலிலே உட்கார்ந்திருக்கிற மொர்தெகாய்க்கு அந்தப்பிரகாரமே செய் என்றான்.

    அப்படியே ஆமான் வஸ்திரத்தையும் குதிரையையும் கொண்டுபோய், மொர்தெகாயை அலங்கரித்து, அவனைக் குதிரையின்மேல் ஏற்றி, நகரவீதியில் உலாவும்படி செய்து கவுரவப்படுத்தினான்.

    இதற்கிடையில் ராஜாவிடம் ஆமான், மொர்கதாய்க்கு எதிராக செய்யப்பட்ட அனைத்து காரியங்களும் கூறப்பட்டது. ராஜாவின் நன்மைக்காக பேசிய மொர்தெகாய்க்கு ஆமான் செய்துள்ள ஐம்பது முழ தூக்குமரம் ஆமானின் வீட்டருகில் நாட்டப்பட்டதையும் கூறினார்கள்.

    அப்பொழுது ராஜா கோபமடைந்து `ஆமானைத் தூக்கி அந்த தூக்குமரத்திலேயே போடுங்கள்' என்றார். அப்படியே ஆமானைத் தூக்கில் போட்டார்கள்.

    ராஜாவுக்கு அடுத்த இடத்தில் மொர்தெகாய் உயர்த்தப்பட்டார்.

    இன்றைக்கு நீங்களும் ஒரு கடினமான சூழ்நிலையில் சஞ்சலத்தோடு, வேதனையோடு இருக்கின்றீர்களா, மன விருப்பங்கள் நிறைவேறாமல் கவலையோடு இருக்கின்றீர்களா, கவலைப்படாதிருங்கள், நம்பிக்கையோடு இயேசுவை நோக்கி பார்ப்போம்.

    அரண்மனை வாசலில் இருந்த மொர்தெகாயை பிரதான அமைச்சராக மாற்றிய இயேசு இன்றைக்கும் உங்கள் மன வாஞ்சைகளை நிச்சயமாக நிறைவேற்றுவார். நீங்கள் உயர்த்தப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை. இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்.

    ×