search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடைதிறப்பு ரகசியம்"

    • சபரிமலை பிரதிஷ்டை இதற்கு முற்றிலும் விதிவிலக்கு.
    • பகவான் யோக நிலையில் தவம் செய்து கொண்டிருக்கிறார்.

    ஒரு கோவிலுக்கு மிக முக்கியமான நியதி தினசரி பூஜை முறைதான். கோவில் நிர்வாகிகள் இதற்கு உறுதி அளித்தால்தான் அங்கு, விக்கிரக பிரதிஷ்டை செய்யப்படும். ஆனால் சபரிமலை பிரதிஷ்டை இதற்கு முற்றிலும் விதிவிலக்கு, அதற்கு காரணமும் இருக்கிறது.

    சபரிமலை, ஒரு மகா யோகபீடம். அங்கே பகவான் யோக நிலையில் தவம் செய்து கொண்டிருக்கிறார். புராணப்படி அவரைச் சுற்றி எப்போதும் ரிஷிகளும் யோகிகளும் இருந்து கொண்டிருக்கிறார்கள்.

    ஆதிகாலத்தில், மகர விளக்கு வைபவத்துக்கு மட்டும்தான் சபரிமலை கோவில் திறக்கப்பட்டது. அந்த நாளில் பகவான் யோக நிலையில் இருந்து வெளி வந்து தனது கண்களைத் திறந்து தரிசனம் தருவதாக ஐதீகம் உண்டு. ஆண்டுகள் கடந்தன.

    பக்தர்கள் கூட்டமும் அதிகரித்தது. கோவில் நிர்வாகிகள் பகவானிடம் தேவ பிரசன்னம் கேட்டு உத்தரவு பெற்று 5 நாட்கள், பின்னர் 41 நாட்கள், அதன்பின் இரண்டு மாதத்துக்கு ஒரு முறை, இப்போது மாதம் ஒருமுறை என்று கோவில் திறக்கப்பட்டு வருகிறது.

    சபரிமலையில் ஐயப்ப தரிசனம்... ஒரு வருடத்தில் பக்தர்களுக்கு 120 நாட்கள் மீதம் உள்ள நாட்கள் தேவர்களுக்கு என்ற அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது பெரியோர்கள் சொல்லும் கருத்து. பழங்காலத்தில் மகர ஜோதி தரிசனம் மட்டுமே சபரி யாத்திரையாக கருதப்பட்டு வந்தது.

    அப்போதெல்லாம், டிசம்பர் மாத இறுதியில் பக்தர்கள் யாத்திரையைத் துவங்குவர். இதன்படி ஒருவர் சபரிமலைக்குச் செல்ல வேண்டுமானால், அவருடைய விரத நாட்களை அதற்குள் முடித்து பின்னர் இருமுடி எடுத்து செல்ல வேண்டும். இதன்படி செய்ய அவர் கார்த்திகை மாதம் முதல் நாள் மாலையிட்டால்தான் மகர ஜோதி தரிசனத்துக்கு யாத்திரை மேற்கொள்ள முடியும்.

    அய்யன் ஐயப்பன் வலக்கரத்தால் சின்முத்திரை காட்டியபடி அருள்கிறார். நம்மில் பலரும் சுவாமி சின்முத்திரையை தமது கால் மூட்டின் மீது வைத்திருப்பதாக நினைக்கிறார்கள். அப்படியல்ல, அவர் அந்த முத்திரையை தன் மார்புக்கு மிக அருகில் வைத்துள்ளார். இது நம்மை இந்த அண்ட சராசரத்துடன் தொடர்புகொள்ள வழி நடத்தும்.

    சுண்டு விரல், மோதிர விரல், நடுவிரல் என மூன்று நிமிர்ந்த விரல்களும் அகங்காரம், மாயை மற்றும் கர்மாவைக்குறிக்கும். ஆள்காட்டி விரல் ஆத்மாவை குறிக்கிறது. (நாம்-ஜீவாத்மா) கட்டைவிரல் பரமாத்மாவை குறிக்கும்.

    இந்த இரண்டு விரல்களின் இணைப்பு அகங்காரம், மாயை மற்றும் கர்மாவை அகற்றி ஜீவாத்மா பரமாத்மாவுடன் இணையவேண்டும் என்பதைக் குறிக்கும். இந்த சின்முத்திரைக்கு இன்னும் நிறைய விளக்கங்கள் உள்ளன.

    ×