search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுச்சேரி புதிய சட்டசபை"

    • ஒருங்கிணைந்த சட்டமன்ற வளாகத்துக்கான கோப்பு கவர்னர் தமிழிசை ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.
    • மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் எழுத்துப்பூர்வமான பதில் அளித்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவையில் கடற்கரை சாலையை ஒட்டியுள்ள 200 ஆண்டுகால பழமையான பிரெஞ்சு கட்டிடத்தில் சட்டசபை இயங்கி வருகிறது.

    கடற்கரை சாலையில் தலைமை செயலகம் உள்ளது. பழமையான கட்டிடம் என்பதாலும், இடநெருக்கடியாலும் சட்டசபையை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு கடந்த 30 ஆண்டுக்கு முன்பே முடிவு எடுக்கப்பட்டது.

    கடந்த 2000-ம் ஆண்டில் அப்போது முதலமைச்சராக இருந்த ஜானகிராமன், புதிய சட்டசபை வளாகத்தை பழைய துறைமுக வளாகத்தில் கட்ட பூமி பூஜை போட்டார். அதன்பிறகும் கிழக்கு கடற்கரை சாலையில் அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அமைந்துள்ள பகுதியில் சட்டசபை வளாகம் கட்ட 2 முறை பூமி பூஜை போடப்பட்டது.

    இங்கு நிலம் கையகப்படுத்துவதில் கூட பிரச்சினைகள் எழுந்தது. ஆனாலும் இதுவரை சட்டசபை வளாகம் கட்ட பூர்வாங்க பணிகள் கூட நடக்கவில்லை.

    இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று என்.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா அரசு புதிதாக அமைந்தது முதல் புதிய சட்டசபை வளாகம் கட்ட பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றனர். இதில் சபாநாயகர் செல்வம், அதிக முனைப்பு காட்டி வருகிறார்.

    6 மாடியில் சட்டசபை வளாகமும், 5 மாடியில் தலைமை செயலகமும், ஆயிரம் பேர் அமரும் வகையில் கருத்தரங்கு கூடமும், ஹெலிகாப்டர் இறங்கும் வகையில் இறங்கு தளத்துடன் சட்டசபை வளாகம் அமைக்க வரைபடம் தயாரிக்கப்பட்டது.

    இந்த வரைபடத்தில் முதலமைச்சர் ரங்கசாமி சில திருத்தங்களையும் செய்தார். ஆரம்பத்தில் ரூ.300 கோடியில் ஒருங்கிணைந்த சட்டசபை வளாகம் அமைக்க திட்ட மதிப்பீடு செய்யப்பட்டது. இதில் கூடுதலாக பல இணைப்புகள் சேர்த்ததால் ரூ.615 கோடிக்கு திட்ட மதிப்பீடு உயர்ந்துள்ளது.

    ஒருங்கிணைந்த சட்டமன்ற வளாகத்துக்கான கோப்பு கவர்னர் தமிழிசை ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அவர் சில விளக்கங்களை கேட்டு 2 முறை கோப்பை திருப்பி அனுப்பினார். இதனால் இந்த கோப்பு மத்திய அரசுக்கு செல்லவில்லை.

    இதனிடையே காங்கிரஸ் கட்சியின் புதுவை எம்.பி. வைத்திலிங்கம் பாராளுமன்றத்தில், புதுவை யூனியன் பிரதேசத்தில் புதிய சட்டப்பேரவை கட்டிடம் கட்டுவதற்கு மத்திய அரசால் அனுமதிக்கப்பட்ட மத்திய நிதி உதவி எவ்வளவு? அந்தத் திட்டத்திற்காக மாநில அரசின் நிதி பங்களிப்பு எவ்வளவு? இதுவரை அந்தத் திட்டத்திற்காக மத்திய அரசால் வழங்கப்பட்ட நிதி எவ்வளவு? சட்டமன்ற கட்டிடம் கட்டும் பணி எப்போது தொடங்கும்? என கேள்வி எழுப்பினார்.

    இதற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் எழுத்துப்பூர்வமான பதில் அளித்துள்ளார். அந்த பதிலில், புதுவை அரசிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் படி, புதிய சட்டமன்ற கட்டிடம் கட்டுவதற்கான திட்டமானது பூர்வாங்க, கருத்துரு அளவில்தான் உள்ளது.

    புதுவை அரசால் புதிய சட்டமன்ற கட்டிடம் கட்டுவதற்கான எந்த ஒரு விரிவான திட்ட அறிக்கையும் மத்திய நிதி உதவி கேட்டு மத்திய உள்துறை அமைச்சகத்தால் இதுநாள் வரை பெறப்படவில்லை என கூறியுள்ளார்.

    இதனால் புதுவையில் புதிய சட்டசபை வளாகம் கட்டுவதில் தொடர்ந்து சிக்கல் நிலவி வருகிறது. 30 ஆண்டுக்கும் மேலாக பல்வேறு அரசுகள் எடுத்து வரும் முயற்சி கைகூடுமா? என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.

    ×