search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "National Fresh Water Link"

    • அதிகப்படியான நிலத்தடி நீர் எடுக்கப்படுவதால் நிலத்தடி நீர் மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
    • 12,202 விவசாய பாசனத்திற்கு தரப்படும் நீரின் மூலம் 27,212 எக்டர்நிலம் பாசன வசதி பெறுவதால் 2.50 லட்சம் மக்கள் பயனடைவர்.

    புதுச்சேரி:

    புதுடெல்லியில் 37-வது தேசிய நதிநீர் இணைப்பு நிறுவனத்தின் ஆண்டு பொதுக்கூட்டம் நடந்தது. அதில் புதுச்சேரி மாநிலம் சார்பில் பங்கேற்ற பொதுப் பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் பேசியதாவது:-

    கோதாவரி காவிரி நதி நீர் இணைப்பின் முதல் சாத்திய கூறின் அறிக்கையின் படி, 7,000 மில்லியன் கனமீட்டர் நீர் கிடைக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

    தற்போது மறுமதிப் பீட்டின் அடிப்படையில் கிருஷ்ணா நதியின் பேடி வரதா இணைப்பையும் சேர்த்து 4,713 மில்லியன் கனமீட்டர் நீர் கிடைக்கும் என கணக்கிடப்பட்டு, அதில் புதுச்சேரிக்கு குடிநீர் மற்றும் பொது பயன்பாட்டிற்கு 27 மில்லியன் கனமீட்டர், தொழில் துறைக்கு 35 மில்லியன் கனமீட்டர் என, 62 மில்லியன் கனமீட்டர், அதாவது 2.20 ஆயிரம் மில்லியன் கன அடி நீர் அளிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் விவசாயத் திற்கு நீர் பங்களிப்பு தரப்படவில்லை. புதுச்சேரி குடிநீர் பொதுப்பயன்பாடு, தொழிற்துறை மற்றும் விவசாயம் அனைத்திற்கும் நிலத்தடி நீரையே நம்பியுள்ளது. அதிகப்படியான நிலத்தடி நீர் எடுக்கப்படுவதால் நிலத்தடி நீர் மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

    எனவே புதுச்சேரி விவசாயிகளை பாதுகாக்க தேசிய நீர் வளர்ச்சி நிறுவனம் விவசாய பாசனத்திற்காக புதுச்சேரி பிரதேசத்திற்கு மேலும் 75 மில்லியன் கன மீட்டர் அதாவது 2.75 டி.எம்.சி., நீர் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சங்கராபரணி-தென்பெண்ணை ஆறுகளை இணைப்பதன் மூலம் புதுச்சேரியில் உள்ள 25 படுகையணை மற்றும் 56 ஏரிகளில் 47 மில்லியன் கன மீட்டர் நீரை தேக்கி வைக்க முடியும்.

    12,202 விவசாய பாசனத்திற்கு தரப்படும் நீரின் மூலம் 27,212 எக்டர்நிலம் பாசன வசதி பெறுவதால் 2.50 லட்சம் மக்கள் பயனடைவர்.

    எனவே புதுச்சேரி மாநிலத்தில் உள்ள சங்கராபரணி-தென்பெண்ணை ஆறுகளை இணைக்கும் திட்டத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    கோதாவரி-காவிரி நதி நீர் இணைப்பின் மூலம் புதுச்சேரி மாநிலம் அதற்கு உண்டான நீர் பங்கீட்டளவை மற்ற மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிப்பது போல் அளிக்க வேண்டும்.

    இந்த நீர் பங்களிப்பு காவிரி நீர் ஆணையத்தால் அளிக்கப்பட்டுள்ள நீரின் அளவான 7 ஆயிரம் மில்லியன் கனஅடியுடன் கூடுதலாக தரவேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×