search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தென்மாவட்டங்களில் மழை"

    • கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் குறைகளை தீர்ப்பதற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வாட்ஸ்-அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • பொதுமக்கள் குறைகளை முகநூல் பக்கத்திலும், எக்ஸ் இணையதள பக்கத்திலும் பதிவிடலாம்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் குறைகளை தீர்ப்பதற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வாட்ஸ்-அப் எண். 73730 03588 அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் Collector Thoothukudi என்ற முகநூல் பக்கத்திலும், @Collector Tuty என்ற எக்ஸ் இணையதள பக்கத்திலும் பதிவிடலாம். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

    • 2 நாட்களுக்கு பிறகு கனமழை ஓய்ந்ததால் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடந்தன.
    • மெஞ்ஞானபுரம், திருப்பணி, ஊழிக்குடியிருப்பு சுற்று வட்டார பகுதிகளில் இன்றும் வீடுகளை சுற்றி 7 அடி தண்ணீர் சூழ்ந்துள்ளது.

    தூத்துக்குடி:

    வங்கக்கடலில் ஏற்பட்ட கீழடுக்கு சுழற்சி காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 16-ந்தேதி கன மழை பெய்ய தொடங்கியது.

    17, 18-ந்தேதிகளில் வரலாறு காணாத அளவில் தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது.

    நெல்லை மாவட்டத்தில் பெய்த அதி கனமழை காரணமாக அணைகள் நிரம்பியதால் அணைகளில் இருந்தும், கனமழை காரணமாகவும் தாமிரபரணி ஆற்றில் சுமார் 1½ லட்சம் கன அடி தண்ணீர் சென்றது.

    இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையோர பகுதிகளான ஸ்ரீவைகுண்டம், ஆத்தூர், காயல்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல்வேறு கிராமங்களில் மழை நீர் சூழ்ந்தது.

    மேலும் தூத்துக்குடியில் உள்ள கோரம்பள்ளம் உள்ளிட்ட பல்வேறு குளங்கள் உடைந்ததால் பொதுமக்கள் வெள்ள நீரில் சிக்கி வீட்டுக்குள்ளேயே முடங்கினர்.

    பல்வேறு இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. தூத்துக்குடி மாநகர், திருச்செந்தூர், காயல்பட்டினம் உள்ளிட்ட நகர பகுதிகள் மட்டுமின்றி ஆயிரக்கணக்கான கிராமங்கள் தனி தீவுகளாக காட்சி அளித்தன.

    இந்நிலையில், 2 நாட்களுக்கு பிறகு கனமழை ஓய்ந்ததால் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடந்தன.

    எனினும் சாலைகள் துண்டிப்பு, மின் இணைப்பு, தொலை தொடர்பு வசதிகள் இல்லாததால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மீட்க முடியவில்லை.

    மாவட்டம் முழுவதும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், போலீசார், தீயணைப்பு மீட்பு துறையினர் மற்றும் வருவாய் துறையினர் என பல துறையினரும் மீட்பு பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    எனினும் 5 நாட்களாகியும் பல இடங்களில் இன்னும் வெள்ளம் வடியவில்லை. தூத்துக்குடி மாநகர பகுதிகளான ஸ்டேட் பாங்க் காலனி, தபால் தந்தி காலனி, ராஜகோபால் நகர், முத்தம்மாள் காலனி, ரஹ்மத் நகர், அம்பேத்கர் நகர், கே.டி.சி. நகர், ராஜீவ் நகர், ஆதி பராசக்தி நகர், தனசேகர் நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் இன்னும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    இப்பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கியவர்கள் ஹெலிகாப்டர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மூலம் மீட்கப்பட்டு முகாம்களுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.

    இதே போல ஏரல், ஸ்ரீவைகுண்டம், ஆத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 5-வது நாளாக வெள்ளம் வடியாத நிலையே உள்ளது.

    இந்த கிராமங்களில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகளை சேர்ந்த பொதுமக்கள் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இவர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் சென்று உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.

    ஹெலிகாப்டர்கள் தாழ்வாக பறந்து செல்ல முடியாத இடங்களில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் கயிறு கட்டி சென்று அவர்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர்.

    மெஞ்ஞானபுரம், திருப்பணி, ஊழிக்குடியிருப்பு சுற்று வட்டார பகுதிகளில் இன்றும் வீடுகளை சுற்றி 7 அடி தண்ணீர் சூழ்ந்துள்ளது. அங்கு தவித்த பொதுமக்கள் ஏற்கனவே மீட்கப்பட்டு அருகில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    திருப்பணி பகுதியில் 3 வீடுகள் முற்றிலும் இடிந்தது. கல்விளை உள்ளிட்ட பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட மாடுகள் வெள்ளத்தில் சிக்கி இறந்துள்ளது. சாலோம் நகரில் 10 அடி உயரத்திற்கு தண்ணீர் சூழ்ந்துள்ளது. அங்குள்ளவர்கள் மீட்கப்பட்ட நிலையில் வீட்டின் மாடியில் தவித்த முன்னாள் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரை மீட்பு படையினர் நேற்று பத்திரமாக மீட்டனர்.

    தூத்துக்குடியில் ஏராளமான உப்பளங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் உப்பு உற்பத்தியை தொடங்க இருந்த நிலையில் அது முடியாததால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாக உப்பள தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    மெஞ்ஞானபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 50 அடிக்கு தண்ணீர் உள்ளதால் அது செயல்பட முடியாமல் அங்குள்ள பொருட்கள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. மேலும் மெஞ்ஞானபுரம் போலீஸ் நிலையமும் 5 அடி தண்ணீரில் மிதந்து வருகிறது.

    மெஞ்ஞானபுரம் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 700-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    தூத்துக்குடி மாநகர் பகுதி மட்டுமின்றி மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் வெள்ளத்தில் சிக்கி உள்ள வீடுகளில் வசிப்போர் குடிக்க தண்ணீர் இன்றி தவித்து வருகிறார்கள்.

    அங்கு ரூ.25-க்கு விற்கப்பட்ட ஒரு கேன் தண்ணீர் தற்போது ரூ.100-க்கு விற்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    எனவே தங்களுக்கு உணவு, குடிநீர் வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    தென்திருப்பேரை, மேலகடம்பா, குட்டக்கரை, கேமலாபாத், ஆழ்வார்திருநகரி ஆகிய பகுதிகள் தனித்தீவுகளாக காட்சி அளிக்கிறது. இதே போல் ஏரல் ஆற்று பாலத்தின் ஒரு பகுதி அடித்து செல்லப்பட்டதால் ஏரல் மற்றும் ஆத்தூர் உள்ளிட்ட சில இங்களும் தனித்தீவுகளாக காட்சி அளிக்கிறது.

    இதே போல் மணக்கரை, நடுவக்குறிச்சி, புன்னக்காயல், முக்காணி, உமரிக்காடு, ஆழிக்குடி, ஆழ்வார்தோப்பு, மாவடிப் பண்ணை, குரும்பூர், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் தற்போதும் வெள்ளம் வடியாமல் உள்ளது.

    தூத்துக்குடியில் தவிக்கும் பொதுமக்களுக்கு அரசு சார்பில் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக மதுரை, திருச்சி, சென்னை, கோவை, தஞ்சாவூர் என பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பிஸ்கட், தண்ணீர், பாய், போர்வை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் லாரிகளில் கொண்டு வரப்பட்டு முகாம்களில் உள்ளவர்களுக்கும், வீடுகளின் மாடியில் வெள்ளத்தில் தவிப்போருக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

    • வெள்ளம் வடிய தொடங்கிய நிலையில் நெல்லை மாவட்டத்தில் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது.
    • தூத்துக்குடியில் மழை, வெள்ள பாதிப்புகளை மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.

    தூத்துக்குடி:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18-ந்தேதிகளில் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக இரண்டு மாவட்டங்களிலும் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்து பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

    இந்நிலையில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்யவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தூத்துக்குடி வந்தார்.

    இதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று காலை விமானம் மூலம் அவர் தூத்துக்குடி வாகைகுளம் வந்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் தூத்துக்குடி புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு சென்றார்.

    அங்கு வெள்ள பாதிப்பில் இருந்து மீட்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை சந்தித்து விவரங்களை கேட்டறிந்தார். தொடர்ந்து அவர் குறிஞ்சி நகர் டவர் பகுதியை பார்வையிட்டார். இதனை முடித்து கொண்டு மறவன் மடம் ஊராட்சி அந்தோணியார்புரம் பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

     அப்போது வெள்ள பாதிப்பு குறித்தும், சேதங்கள் குறித்தும் பொதுமக்கள் மீட்கப்பட்டது குறித்தும் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், கலெக்டர் லட்சுமிபதி, மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் அரசு அதிகாரிகள் முதலமைச்சருக்கு விளக்கி கூறினர்.

    அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளத்தில் சிக்கி உள்ள மற்றவர்களையும் போர்க்கால அடிப்படையில் உடனடியாக மீட்டு முகாம்களில் தங்க வைக்கவும், அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்டவைகளை வழங்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    தொடர்ந்து அரசு அதிகாரிகளுடன் வெள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தென்மாவட்டங்களிலும் அதி கனமழையால் மிகப்பெரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
    • தென் மாவட்டங்களில் மழையால் பாதிப்புகளைச் சந்தித்துள்ள மக்களுக்கு உரிய நிவாரணத் தொகைகளும் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன.

    சென்னை:

    தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ரொக்கத் தொகையுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு அரிசி குடும்ப அட்டைதாரா்கள் அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் ரொக்கம், தலா ஒரு கிலோ பச்சரிசி, சா்க்கரை, முழுக் கரும்பு அடங்கிய தொகுப்பு அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில், வரும் பொங்கல் பண்டிகைக்கும் பரிசுத் தொகுப்பை வழங்க தமிழக அரசு தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், மிச்சாங் புயலால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டன.

    இதனால், சுமாா் 30 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.1,486 கோடியே 93 லட்சம் அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இதைத் தொடா்ந்து, திருநெல்வேலி, தூத்துக்குடி தென்காசி, கன்னியாகுமரி ஆகிய நான்கு தென்மாவட்டங்களிலும் அதி கனமழையால் மிகப்பெரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தச் சேதங்களைச் சீர் செய்ய இடைக்கால நிவாரணமாக ரூ. 2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளாா். மேலும், தென் மாவட்டங்களில் மழையால் பாதிப்புகளைச் சந்தித்துள்ள மக்களுக்கு உரிய நிவாரணத் தொகைகளும் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன.

    மழை, வெள்ளத்தால் எட்டு மாவட்டங்களுக்கு கடும் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ள சூழலில், பொங்கல் பரிசுத் தொகுப்பை எப்படி வழங்குவது என்பது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. ரொக்கத் தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கலாமா? என்பது தொடா்பாக பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

    பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த அதிகார பூா்வ அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியாகும் என தலைமை செயலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளைப் பாா்வையிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) தூத்துக்குடி சென்றுள்ளாா்.

    அவா் இன்றிரவு சென்னை திரும்புகிறார். எனவே இன்னும் ஓரிரு நாட்களில் பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டு அதிகாரபூா்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
    • கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை தீர்க்க வாட்ஸ்அப் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி:

    வரலாறு காணாத வகையில் கடந்த 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய்த அதீத கனமழையால் தூத்துக்குடி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழை விட்டும் இன்னும் பல இடங்களில் வெள்ளம் வடியாததால் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை தீர்க்க வாட்ஸ்அப் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    மாவட்ட நிர்வாகம் சார்பில் 93840 56221, 73977 31065 என்ற வாட்ஸ்அப் எண்கள் மூலம் மக்கள் குறைகளை தெரிவிக்கலாம். மேலும் Collector Thoothukudi என்ற முகநூல் பக்கத்திலும், @CollectorTuty என்ற X தள பக்கத்திலும் பதிவிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • வெள்ள பாதிப்பால் தூத்துக்குடியில் 3வது நாளாக விடுமுறை விடப்பட்டுள்ளது.
    • ஏற்கனவே நெல்லை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

    வெள்ள பாதிப்பால் தொடர்ந்து 3வது நாளாக விடுமுறை விடப்பட்டுள்ளது எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

    • வெள்ள முகாம்கள் ஏதும் நடைபெறாத கல்லூரிகள் செயல்படும்.
    • வெள்ளிக்கிழமை முதல் பள்ளிகள் திறக்க ஆய்வு செய்யப்படுகிறது என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

    வெள்ள முகாம்கள் ஏதும் நடைபெறாத கல்லூரிகள் செயல்படும் என்றும் வெள்ளிக்கிழமை முதல் பள்ளிகள் திறக்க ஆய்வு செய்யப்படுகிறது என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

    • வெள்ளத்தில் சிக்கியிருந்த அமைச்சரை, இன்றுதான் மீட்டு வெளியில் கொண்டு வந்திருக்கிறார்கள் என்ற செய்தி வெளிவந்திருக்கிறது.
    • 'இந்தியா' கூட்டணி பேச்சு வார்த்தை நடத்த, டெல்லிக்கு சென்றிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

    திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள, மூத்த அமைச்சர்கள் பலரை நியமித்திருப்பதாக, கடந்த18 அன்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

    அந்த அமைச்சர்களில் ஒருவரான, வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்தின், சொந்த அமைச்சரான அவர்களை, களத்திலேயே காண முடியவில்லையே என்று பொதுமக்கள் உட்பட, நாங்கள் அனைவருமே தேடிக் கொண்டிருந்த போது மூன்று நாட்களாக, மழை வெள்ளத்தில் சிக்கியிருந்த அமைச்சரை, இன்றுதான் மீட்டு வெளியில் கொண்டு வந்திருக்கிறார்கள் என்ற செய்தி வெளிவந்திருக்கிறது.


    தனது அமைச்சரே வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட வேண்டிய நிலைமையில் இருக்கிறார் என்பது கூடத் தெரியாமல், மீட்புப் பணியில் அவரது பெயரையும் சேர்த்து, பெயருக்கு ஒரு பட்டியலை அறிவித்து விட்டு, அவசரகதியாக 'இந்தியா' கூட்டணி பேச்சு வார்த்தை நடத்த, டெல்லிக்குச் சென்றிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

    களத்துக்கு வர இயலாத நிலையில் இருக்கும் அமைச்சர் வந்து, பொதுமக்களை மீட்பார் என்ற வெற்று அறிவிப்பு,  திமுக அரசு, எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை என்பதை வெட்டவெளிச்சமாக்கியிருக்கிறது என்று அண்ணாமலை தெரிவித்தார்.

    • கடந்த 3 நாட்களாக துண்டிக்கப்பட்ட நெல்லை - தூத்துக்குடி சாலையில் போக்குவரத்து தொடங்கியுள்ளது.
    • மழை வெள்ளத்தால் நெல்லையில் உள்ள 840 நியாய விலைக் கடைகளில் 63 நியாய விலைக் கடைகள் பாதிக்கப்பட்டு பொருட்கள் சேதமடைந்துள்ளன.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய்த அதீத கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    தற்போது, வெள்ளம் வடிய தொடங்கிய நிலையில் நெல்லை மாவட்டத்தில் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது.

    இந்நிலையில், நெல்லை மாவட்டத்தின் தற்போதைய நிலை குறித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் கூறியதாவது:-

    * நெல்லை மாவட்டத்தில் உள்ள 1195 பள்ளிகளில் 1108 பள்ளிகள் முழு பாதுகாப்புடன் உள்ளன. மீதமுள்ள பள்ளிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

    * கடந்த 3 நாட்களாக துண்டிக்கப்பட்ட நெல்லை - தூத்துக்குடி சாலையில் போக்குவரத்து தொடங்கியுள்ளது.

    * மழை வெள்ளத்தால் நெல்லையில் உள்ள 840 நியாய விலைக் கடைகளில் 63 நியாய விலைக் கடைகள் பாதிக்கப்பட்டு பொருட்கள் சேதமடைந்துள்ளன.

    இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

    • தாம்பரம், எழும்பூர், ரெயில் நிலையங்களில் பயணிகளை அழைத்து செல்ல ஏராளமான உறவினர்கள் காலை 9 மணி முதல் காத்து இருந்தனர்.
    • தினமும் செல்போன் வழியாக தகவல்களை பரிமாறிக் கொண்டவர்கள் இன்று நேரில் பார்த்ததும் ஆரத்தழுவி கொண்டனர்.

    சென்னை:

    திருச்செந்தூரில் இருந்து கடந்த 17-ந்தேதி இரவு புறப்பட்டு சென்னை நோக்கி வந்த செந்தூர் எக்ஸ்பிரஸ் பலத்த மழை-வெள்ளத்தால் ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

    பாதுகாப்பு கருதி ரெயில் நிறுத்தப்பட்டதால் அதில் வந்த 800 பயணிகள் ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்திலேயே தங்கும் நிலை ஏற்பட்டது. தொடர்ந்து பெய்த கன மழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் பயணிகள் ரெயில் பெட்டியிலும் அங்குள்ள பள்ளியிலும் தங்க வைக்கப்பட்டனர்.

    ஆனால் மழையும் வெள்ளமும் கோர தாண்டவம் ஆடியதால் அவர்களால் அங்கிருந்து வெளியே வர முடியவில்லை. பாதுகாப்பாக ரெயில் பெட்டியிலேயே இருந்தனர். குழந்தைகள், பெரியவர்கள், கர்ப்பிணி பெண் உள்ளிட்ட பயணிகள் பெரும் தவிப்புக்கு ஆளானார்கள்.

    பள்ளியில் தங்கியிருந்த  300 பேர் நேற்று மீட்கப்பட்டனர். அதே போல ரெயிலில் இருந்த 508 பயணிகளை மீட்க தேசிய பேரிடர் மேலாண்மை மற்றும் இந்திய விமானப்படை வீரர்கள் முழு வீச்சில் ஈடுபட்டனர்.

    நேற்று காலையில் இருந்து ஒவ்வொருவராக மீட்கப்பட்டனர். நைலான் கயிறு உதவி மூலம் வெள்ள நீரை பயணிகள் கடந்து வந்தனர். அதே போல பெரியவர்கள் ஸ்ட்ரெச்சர் மூலம் வெளியே கொண்டு வரப்பட்டனர்.

    ரெயிலில் இருந்து 508 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டு பஸ்கள் மூலம் மணியாச்சிக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் அங்கிருந்து சிறப்பு ரெயில் மூலம் அவர்கள் சென்னைக்கு பயணமானார்கள். இரவு 11.15 மணிக்கு மணியாச்சியில் இருந்து 508 பயணிகளுடன் சிறப்பு ரெயில் புறப்பட்டது.

    கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், சிதம்பரம் வழியாக செந்தூர் எக்ஸ்பிரஸ் வரக்கூடிய அதே வழித்தடத்தில் புறப்பட்டு வந்தது. பயணிகளுக்கு இரவு உணவு, காலை உணவு, மதிய உணவு வரை ரெயில்வே துறை சார்பில் வழங்கப்பட்டன.

    காலை 10.30 மணிக்கு எழும்பூர் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த ரெயில் தாமதமாக வந்தது. மதியம் எழும்பூர் வந்து சேர்ந்தது. விழுப்புரத்தில் காலை உணவு வழங்கப்பட்டது. அங்கு சிறிது நேரம் நின்ற ரெயில் பயணிகளுக்கு இட்லி, பொங்கல், வடை மற்றும் குடிநீர் வழங்கப்பட்டன.

    அதனை தொடர்ந்து சிறப்பு ரெயில் திண்டிவனம், செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு நிலையங்களில் நின்றது. பயணிகள் 3 நாட்களுக்கு பிறகு தங்கள் சொந்த ஊரை அடைந்ததால் மகிழ்ச்சி அடைந்தனர். உறவினர்கள் அவர்களை கட்டித் தழுவி கண்ணீர் மல்க வீடுகளுக்கு அழைத்து சென்றனர்.


    தாம்பரம், எழும்பூர், ரெயில் நிலையங்களில் பயணிகளை அழைத்து செல்ல ஏராளமான உறவினர்கள் காலை 9 மணி முதல் காத்து இருந்தனர்.

    ஒவ்வொரு பயணிகளும் குடும்பம் குடும்பமாக சிறப்பு ரெயிலை விட்டு இறங்கி சென்றனர். 3 நாட்களுக்கு பிறகு உறவினர்களை பார்த்ததில் ஆனந்த கண்ணீர் விட்டனர்.

    தினமும் செல்போன் வழியாக தகவல்களை பரிமாறிக் கொண்ட அவர்கள் இன்று நேரில் பார்த்ததும் ஆரத்தழுவி கொண்டனர். இந்த சம்பவம் ரெயில் நிலையத்தில் மற்றவர்களை நெகிழ்ச்சி அடைய செய்தது.

    • தாமிரபரணி ஆற்றின் வெள்ளப்பெருக்கு காரணமாக ஆத்தூர் பகுதி அபாய கட்டத்தில் உள்ளது.
    • 1,500 பேருக்கும் ஆறுமுகநேரி பேரூராட்சி சார்பில் தொடர்ந்து உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் இடைவிடாமல் கனமழை பெய்தது.

    இதில் காயல்பட்டினம் மற்றும் ஆறுமுகநேரி பகுதியில் மட்டும் உச்சபட்சமாக 92.3 சென்டி மீட்டர் அளவிலான மழை பொழிந்து தள்ளியது. யாரும் எதிர்பார்க்காத நிலையில் பெய்த இந்த மழையால் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது.

    இதனால் காயல்பட்டினத்தில் உள்ள திருமண மண்டபங்களில் நூற்றுக்கணக்கானோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பொதுநல அமைப்புகள் சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    2 நாட்களாக இங்கு முற்றிலுமான மின்தடை ஏற்பட்டு பொதுமக்கள் கடும் அவதியை சந்திக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் வெகுண்ட மக்கள் நேற்று மறியல் போராட்டத்தில் இறங்கினர்.

    இதனைத் தொடர்ந்து காயல்பட்டினத்திற்கு 3-வது நாளான நேற்று மின்சாரம் வழங்கப்பட்டது. ஆனாலும் தொலை தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது. இதேபோல் ஆறுமுகநேரியில் 3-வது நாளாக மின்சாரம் தடைப்பட்டும் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டும் உள்ளன.

    மேலும் இங்கிருந்து தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் சாலைகளும் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்து முழுவதுமாக துண்டிக்கப்பட்டு ஆத்தூர், புன்னகாயல், ஆறுமுகநேரி, காயல்பட்டினம், மூலக்கரை, குரும்பூர், திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகள் தனித்தனி தீவுகளை போல காணப்படுகின்றன.

    பக்கத்து ஊர்களில் இருக்கும் உறவினர்களின் நிலைமையை கூட அறிந்து கொள்ள முடியாத அவல நிலையில் மக்கள் தவித்து வருகின்றனர்.

    தாமிரபரணி ஆற்றின் வெள்ளப்பெருக்கு காரணமாக ஆத்தூர் பகுதி அபாய கட்டத்தில் உள்ளது. அங்கு தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பள்ளிகள் மற்றும் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    ஏற்கனவே தாமிரபரணி ஆற்றின் கிளைகளுக்கு இடையில் தீவு போல உள்ள புன்னக்காயல் தற்போதைய வெள்ளம் காரணமாக பெரும் சிக்கலை சந்தித்து வருகிறது.

    ஆத்தூர் அருகே உள்ள தண்ணீர்பந்தல், தலைவன் வடலி ஆகிய கிராமங்கள் முழுவதுமாக தண்ணீரில் மூழ்கின. அங்கு தத்தளித்த மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு ஆறுமுகநேரியில் 2 பள்ளிகளிலும் 3 திருமண மண்டபங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    அங்குள்ள 1,500 பேருக்கும் ஆறுமுகநேரி பேரூராட்சி சார்பில் தொடர்ந்து உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    ஆறுமுகநேரி பகுதிகளில் உள்ள அனைத்து குளங்களில் இருந்தும் அபரிமிதமாக வெளியேறிய தண்ணீரால் மேலத்தெரு, காமராஜபுரம், சீனந்தோப்பு ஆகிய பகுதிகள் மூழ்கடிக்கப்பட்ட நிலையில் அங்குள்ள மக்கள் உணவுக்கு வழியின்றி சிரமப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு இந்து முன்னணி சார்பில் தொடர்ந்து உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    அனைத்து ஊர்களுக்கும் எவ்வித போக்குவரத்தும் இல்லாததால் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஆகிவிட்டன. இதனால் அடுத்தடுத்த நாட்களுக்கான தேவைகளை எப்படி பூர்த்தி செய்வது என்கிற பரிதவிப்பு நிலையில் மக்கள் உள்ளனர்.

    காயல்பட்டினம் பகுதியில் தரைதள வீடுகள் பெரும்பாலாக மூழ்கி விட்டன. அங்கு பெரும் சுகாதார கேடு உருவாகும் நிலை உள்ளது. காயல்பட்டினம் பகுதி நிலைமையை விளக்கி போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடைபெறவும் நிவாரண உதவிகளை வழங்கவும் வலியுறுத்தி முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் மற்றும் பொதுநல அமைப்பின் பிரதிநிதிகள் குழு இன்று சென்னையில் தமிழக அரசின் தலைமைச் செயலாளரை இன்று சந்தித்து பேச இருப்பதாக 'மெகா' அமைப்பின் நிர்வாகியான முகம்மது சாலிக் தெரிவித்துள்ளார்.

    • ஏரல் பகுதியின் சாலை பகுதிகள் முழுவதும் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து தடைபட்டது.
    • தொலை தொடர்பு சாதனங்களும் இயங்கவில்லை.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17-ந்தேதி அதீத கனமழை பெய்தது.

    இதில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மாவட்டத்தில் பல குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதைத்தொடர்ந்து வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களை மீட்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டது.

    இதற்கிடையே அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்பு குழுவினருடன் ஈடுபட்டார். 17-ந்தேதியில் சாத்தான்குளம் பகுதியில் கொட்டும் மழையில் ஜே.சி.பி. எந்திரத்தில் சென்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களை பத்திரமாக மீட்டு அருகில் உள்ள முகாம்களுக்கு அனுப்பி வைத்தார்.

    மேலும் அவர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர், போர்வை உள்ளிட்டவைகளையும் வழங்கினார்.

    தொடர்ந்து அவர் அங்கிருந்து ஏரல் பகுதிக்கு சென்றார். அப்போது கனமழை காரணமாக ஏரல் தாமிரபரணி ஆற்று பாலம் மூழ்கியது. மேலும் ஏரல் பகுதியின் சாலை பகுதிகள் முழுவதும் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து தடைபட்டது. மேலும் தொலை தொடர்பு சாதனங்களும் இயங்கவில்லை.

    இதனால் மீட்பு பணிக்கு சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கடந்த 3 நாட்களாக ஏரலில் சிக்கி கொண்டார்.


    அங்கு பொதுமக்களுடன் வெள்ளத்தில் சிக்கிய அமைச்சர் பொதுமக்களுடன் நிவாரண உதவிகளை செய்தார். எனினும் கடும் வெள்ளம், தொலை தொடர்பு சேவை பாதிப்பு, சாலை துண்டிப்பு காரணமாக தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் அங்கு செல்ல முடியவில்லை.

    இந்நிலையில் இன்று வெள்ளம் ஓரளவு வடிந்ததால் மீட்பு குழுவினரும், தீயணைப்பு துறையினரும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை ஹெலிகாப்டர் மூலம் மீட்டனர்.

    ×