என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சிக்கன் டிக்கா"
- இந்தியா முழுவதும் பிரபலமாக இருக்கும் ஒரு அசைவ உணவு.
- ரெஸ்டாரன்ட் மெனுக்களில் கட்டாயம் இடம் பிடித்திருக்கும்.
சிக்கன் டிக்கா இந்தியா முழுவதும் பிரபலமாக இருக்கும் ஒரு அசைவ உணவு. இவை இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான ரெஸ்டாரன்ட் மெனுக்களில் கட்டாயம் இடம் பிடித்திருக்கும். ஏனென்றால் அசைவ உணவு பிரியர்கள் மத்தியில் இதற்கு இருக்கும் வரவேற்பு அப்படி. சில ரெஸ்டாரன்டுகள் அவர்களின் வாடிக்கையாளர்களின் பிரத்தியேக அனுபவத்திற்காக இன்னும் ஒரு படி மேலே சென்று சிக்கன் துண்டுகளை மசாலாவில் ஊற வைத்து (ஸ்கியூவர்) குச்சியில் சொருகி சுட்டு சாப்பிடுவதற்கு தயாரான நிலையில் தங்கள் வாடிக்கையாளர்களிடமே கொடுத்து விடுகிறார்கள். ரெஸ்டாரன்டில் வாடிக்கையாளர்களே சிக்கனை சுட்டு சாப்பிடுவதற்கு பல வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.
இதை வெகு சுலபமாக நாம் வீட்டிலேயே செய்து விடலாம். சிக்கனை ஊற வைப்பதற்கு தேவையான மசாலாவை செய்து சிக்கனை அதில் போட்டு சுமார் 2 மணி நேரம் ஊற வைத்து விட்டால் போதும். இதை வெகு எளிதாக ஒரு வாணலியில் வைத்தே வேக வைத்து விடலாம். மேலும் சிக்கன் டிக்கா ஒரு வித்தியாசமான முறையில் சமைக்கப்பட்டு பரிமாறப்படும் உணவு என்பதால் வீட்டில் உள்ளவர்களும் இதை மிகவும் விரும்பி உண்பார்கள்.
தேவையான பொருட்கள்:
போன்லெஸ் சிக்கன்- 1/2 கிலோ
பெரிய வெங்காயம்- 2
பச்சை குடை மிளகாய்- 1
மஞ்சள் குடை மிளகாய்- 1
கேரட்- 1
பெரிய வெள்ளரிக்காய்- 1
எலுமிச்சம் பழம்- 1/2
இஞ்சி, பூண்டு விழுது- ஒரு ஸ்பூன்
தயிர்- 4 ஸ்பூன்
வெண்ணெய்- ஒரு ஸ்பூன்
சீரக தூள்- ஒரு ஸ்பூன்
கரம் மசாலா- ஒரு ஸ்பூன்
மிளகு தூள்- 1/2 ஸ்பூன்
மல்லி தூள்- 1/4 ஸ்பூன்
மஞ்சள் தூள்- 1/4 ஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் தூள்- தேவையான அளவு
உப்பு- தேவையான அளவு
செய்முறை:
முதலில் சிக்கனை நன்கு கழுவி ஒரே அளவிலான துண்டுகளாக வெட்டி கொள்ள வேண்டும். பின்னர் வெங்காயம் மற்றும் குடை மிளகாயை சிக்கன் துண்டுகலுக்கு ஏற்றவாறு நறுக்கி, அடுத்து ஒரு பவுலில் கெட்டி தயிர், மஞ்சள் தூள், மல்லி தூள், சீரக தூள், கரம் மசாலா, அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு, பிழிந்து வைத்திருக்கும் எலுமிச்சை சாறு, மற்றும் இஞ்சி பூண்டு விழுது போட்டு அதை நன்கு கலந்து விடவும்.
பின்னர் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் சிக்கன் துண்டுகள், வெங்காயம், குடை மிளகாய், மற்றும் மிளகு தூளை தூவி நன்கு சிக்கன் துண்டுகளில் மசாலா ஒட்டுமாறு கலந்து விடவும்.
அதன்பிறகு அந்த கலவையை ஒரு பிளாஸ்டிக் கவரை போட்டு அதை நன்கு இறுக்கமாக மூடி அப்படியே எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்து சுமார் ஒன்றரை மணி நேரத்திலிருந்து 2 மணி நேரம் வரை ஊற விடவும்.
சிக்கனை மசாலாவுடன் எவ்வளவு நேரம் நாம் ஊறவிடுகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு அதன் சுவை நன்றாக இருக்கும். 2 மணி நேரத்திற்கு பிறகு ஃப்ரிட்ஜில் இருந்து நாம் ஊற வைத்திருக்கும் சிக்கனை எடுத்து அதை மீண்டும் ஒரு முறை நன்கு கலந்து விடவும்.
பின்னர் ஒரு கரித்துண்டை அடுப்பில் காட்டி அதனை ஒரு கிண்ணத்தை வைத்து அதனை சிக்கன் கலந்து வைத்துள்ள பவுலின் நடுவில் வைத்து அதில் கால் டீஸ்பூன் நெய்விட வேண்டும். அப்போது புகை கிளம்பும் உடனே அதனை மூடிகொண்டு 10 நிமிடம் மூடி வைக்க வேண்டும்.
அடுத்து ஒரு ஸ்கியூவரை எடுத்து அதில் நாம் மூடிபோட்டு வைத்துள்ள சிக்கன் துண்டை சொருகி அதற்கு அடுத்து ஒரு வெங்காயம் அதன் பின்பு ஒரு பச்சை குடை மிளகாய் மற்றும் மஞ்சள் குடை மிளகாயை சொருகி கொள்ளவும். மீண்டும் இதேபோன்று ஒரு ஸ்கியூவரில் அளவிற்கேற்ப சிக்கன், வெங்காயம், மற்றும் குடை மிளகாய் துண்டுகளை சொருகி ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
இரும்பு ஸ்கியூவருக்கு பதிலாக மர ஸ்கியூவரை பயன்படுத்துவதாக இருந்தால் அதை பயன்படுத்துவதற்கு முன் சுமார் அரை மணி நேரத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
இப்பொழுது ஒரு வாணலியை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி வெண்ணெயை ஊற்றி உருகியதும் அதில் சிக்கன் துண்டுகளை சொருகி வைத்திருக்கும் ஸ்கியூவரை வைக்க வேண்டும். ஸ்கியூவரை தொடர்ச்சியாக திருப்பி விட்டு கொண்டே இருக்க வேண்டும் அப்பொழுது தான் சிக்கன் துண்டுகள் அனைத்தும் சமமாக வெந்து இருக்கும்.
இதை ஓனில் செய்வதாக இருந்தால் அவனில் சுமார் 450 டிகிரி பாரன்ஹீட்க்கு ஃப்ரீஹீட் செய்து இந்த சிக்கன் துண்டுகளோடு இருக்கும் ஸ்கியூவர்களை ஒரு தட்டில் வைத்து அதை ஓனில் வைத்து சுமார் 10 நிமிடம் வரை வேக விடவும். 10 நிமிடத்திற்கு பிறகு அவனில் இருந்து அந்த தட்டை கவனமாக எடுத்து ஸ்கியூவரை திருப்பி வைத்து மீண்டும் அதே ஓனில் வைத்து சுமார் 12-ல்ருந்து 15 நிமிடம் வரை அதை வேக விட்டு வெளியே எடுக்கவும்.
அதன்பிறகு இதை ஒரு தட்டில் வைத்து அதனுடன் சிறிது கேரட், வெங்காயம், மற்றும் வெள்ளரிக்காய் துண்டுகளை நறுக்கி வைத்து சுட சுட பரிமாறவும். இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான சிக்கன் டிக்கா தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்