search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுயம்பு விநாயகர்"

    • காவிரி வடகரைத் தலங்களில் 33-வது தலமாகும்.
    • விநாயகரின் ஆறாவது படைவீடாக போற்றப்படுகிறது.

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் தாலுகாவில் உள்ளது திருநாரையூர். இங்குள்ள சவுந்தர்யேசுவரர் கோவில், தேவாரப் பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் 33-வது தலமாகும். இக்கோவிலின் இடது பக்கம் உள்ள பொள்ளாப்பிள்ளையார் சன்னிதி, விநாயகரின் ஆறாவது படைவீடாக போற்றப்படுகிறது. இந்த பொள்ளாப் பிள்ளையார். சுயம்பு விநாயகராக அருள்பாலிக்கிறார்.

    துர்வாச முனிவர் சிவனை நோக்கி கடும் தவம் செய்து கொண்டிருந்தார். தனது தவத்திற்கு இடையூறு செய்த கந்தர்வன் ஒருவனை நாரையாகும்படி சாபமிட்டார். கந்தர்வன், தன் தவறை மன்னிக்கும்படி வேண்டினான். முனிவர் மறுத்து விட்டார். எனவே இத்தலம் வந்து சிவபெருமானிடம் முறையிட்டான்.

    சிவன் அந்த கந்தர்வனிடம், 'தினமும் காசியில் இருந்து இத்தலத்துக்கு தீர்த்தம் கொண்டு வந்து என்னை அபிஷேகித்து வழிபட்டால் சாப விமோசனம் கிடைக்கும் என்றார்.

    நாரை வடிவில் இருந்த கந்தர்வனும் தன் சக்தியால், அதிவேகத்தில் பறந்து சென்று தீர்த்தத்தை அலகில் சுமந்து வந்து இத்தல இறைவனுக்கு அபிஷேகம் செய்தான். அதைத்தொடர்ந்து நாரையாக இருந்த கந்தர்வனுக்கு, சிவபெருமான் விமோசனம் அளித்தார்.

    நம்பியாண்டார் நம்பியின் தந்தை இங்குள்ள பிள்ளையாருக்கு தினமும் நைவேத்தியம் செய்வார். அவருடன் தினமும் வரும் நம்பியாண்டார் நம்பி இதைப் பார்ப்பார். 'அப்பா வைக்கும் நைவேத்தியத்தை பிள்ளையார் சாப்பிடுவாரா என சிறுவனான அவருக்கு சந்தேகம் எழுந்தது.

    ஒருமுறை தந்தை வெளியூர் சென்றிருந்த நிலையில், விநாயகருக்கு பூஜை செய்து நைவேத்தியம் படைக்கும் பொறுப்பு நம்பியாண்டார் நம்பிக்கு கிடைத்தது. அவர் தன் தந்தைபையப் போல் பிள்ளையாருக்கு பூஜைகளை செய்து, நைவேத்தியம் படைத்தார்.

     பின்னர் அதனை சாப்பிடும்படி பிள்ளையாரை வேண்டினார். பிள்ளையாரோ அமைதியாக இருந்தார். மனம் வருந்திய நம்பி. பிள்ளையாரின் மடியில் தன் தலையை முட்டி அழுதார். உண்மையான பக்திக்கு மகிழ்ந்த பிள்ளையார் உடனடியாக அங்கே தோன்றி, அந்த நைவேத்தியத்தை சாப்பிட்டார்.

    பன்னிரு திருமுறைகளான தேவாரம், திருவாசகம் போன்றவை இன்று நமக்கு கிடைக்க காரணமாக இருந்தவரும், நம்பியாண்டார் நம்பிதான்.

     ஒரு முறை திருமுறை இருக்கும் இடத்தைக் காட்டி அருள வேண்டும் என்று ராஜராஜ சோழன், நம்பியாண்டார் நம்பியை வேண்டினான். அவரும் ஈசனை வேண்டினார். அப்போது 'தில்லை நடராஜர் ஆலயத்தின் தென்மேற்கு மண்டபத்தில் பிள்ளையார் அருளால் சுவடிகள் கிடைக்கும்' என தெய்வவாக்கு ஒலித்தது.

    இதையடுத்து சமயக்குரவர்கள் நால்வரின் சிலைகளையும் வடித்து வைத்து, அவற்றின் முன்னிலையில் திருமுறைச் சுவடிகள் இருந்த அறையை திறக்கச்செய்தான் ராஜராஜ சோழன். பின்னர் திருநாரையூர் நம்பியைக் கொண்டு அவற்றை திருமுறைகளாய்த் தொகுக்கச் செய்தான். இப்படி பன்னிரு திருமுறைகளும் நமக்கு கிடைக்க, நம்பியாண்டார் நம்பி, ராஜராஜ சோழனுடன், திருநாரையூர் பொள்ளாப் பிள்ளையாருக்கும் பங்குண்டு.

    கோவிலுக்கு வெளியே சற்று தூரத்தில் நம்பியாண்டார் நம்பி அவதரித்து வசித்து வந்த பவித்ரமான இடத்தில், தற்போது சிறிய மண்டபத்தில் நம்பி யாண்டார் நம்பி சிற்ப வடிவில் நமக்கு அருள்பாலிக்கின்றார். சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார் கோயில் செல்லும் வழியில் 18 கி.மீ. தொலைவில், திருநாரையூர் உள்ளது.

    ×