என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மாதவிடாய் சுகாதாரம்"
- 12 சதவிகிதப் பெண்கள் மட்டுமே சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்துகின்றனர்.
- 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கண்டிப்பாகப் பேடுகளை மாற்றி விடுங்கள்.
பருவமடைந்த ஒரு பெண்ணிடம் மாதவிடாய் என்றால் என்ன? என்று கேட்கப்படுகிறது. அதற்கு அந்தப் பெண் தன் வெட்கத்தையும் தயக்கத்தையும் மட்டுமே பதிலாக தருகிறாள்.." இது `மாதவிடாய்' என்கிற ஆவணப்படத்தில் வரும் ஒரு காட்சி.. தன் உடலின் இயற்கை மாற்றத்தைப்பற்றித் தெரிந்து கொள்ளவும், பேசவும் தயங்குவதுதான் பெண்ணின் உடல் ரீதியிலான பல பிரச்சினைகளுக்குக் காரணம்.
இந்தியாவில் 12 சதவிகிதப் பெண்கள் மட்டுமே சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்துகின்றனர். பயன்படுத்தாத 88 சதவிகித பெண்களில், 23 சதவிகிதம் பெண்களால் அதை வாங்க முடிவதில்லை. 65 சதவிகித பெண்களுக்கு அதை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரியாததால் அவற்றை வாங்குவதில்லை என்கின்றன ஆய்வு முடிகள். இவை ஒரு பக்கம் இருக்கட்டும்… நாப்கின்கள் உபயோகிப்பதால் ஏற்படுகிற அலர்ஜிகளை அறிந்து கொள்ளவும், அவற்றுக்கான தீர்வுகளையும் தெரிந்து வைத்திருக்க வேண்டியதும் அவசியம்.
நாப்கின்களில் மூன்று அடுக்குகள் இருக்கும். கீழ் அடுக்கு பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்டு, உள்ளாடையில் ஒட்டுவதற்கேற்ப பசையுடன் இருக்கும். அதற்கு மேல் உள்ள அடுக்கானது, வறண்டு வலை போன்று இருக்கும். நடுவில் உள்ள அடுக்கு `பாலிமர் ஜெல்' எனச் சொல்லப்படக் கூடிய பொருளினால் ஆனது.
இந்த வேதிப்பொருளுக்கு உறிஞ்சும் தன்மை இருப்பதால், இதுதான் ரத்தத்தை உறிஞ்சி தன்னுள் தக்க வைத்துக்கொள்கிறது. சிலர் பாலிமர் ஜெல்லுக்கு பதிலாக `செல்லுலோஸ்' என்ற மரக்கூழைப் பயன்படுத்தி நாப்கின் தயாரிக்கிறார்கள். இந்த வேதிப்பொருள்கள் சில பெண்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.
சானிட்டரி நாப்கின்களினால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்? அவற்றை எப்படித் தவிர்க்கலாம்?
* பேடுகளில் உறிஞ்சி வைக்கப்படும் ரத்தமானது, நுண்ணுயிரிகள் வளர்வதற்கு ஏற்றதாக உள்ளதால், பாக்டீரியா தொற்றும், பூஞ்சைத்தொற்றும் ஏற்படும் வாய்ப்புகள் மிகமிக அதிகம். எனவே, 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கண்டிப்பாகப் பேடுகளை மாற்றி விடுங்கள்.
* நாப்கின்களால் தொற்று ஏற்பட்டு அதனால் பிறப்புறுப்பில் எரிச்சல், அரிப்பு, சிறுநீர் வெளியேறும்போது வலி போன்றவை இருந்தால், மருத்துவரின் ஆலோசனையின் பேரில் நுண்ணுயிர்க்கொல்லி ஆயின்மென்ட்களை பாதிக்கப்பட்ட இடங்களில் தடவலாம். பிறப்புறுப்பின் வெளியே தடவும் மருந்துக்கும், உள்ளே தடவக் கூடிய மருந்துக்கும் வேறுபாடுகள் அதிகம். எனவே, இரண்டு மருந்துகளையும் கவனமாகப் பார்த்து உபயோகப்படுத்த வேண்டும்.
* ஓர் அந்நியப் பொருளை உள்ளாடையில் வைத்திருக்கும்போது, அது தொடைகளை உரசுவதால் ஒரு சிலருக்குத் தொடைகளில் புண்கள் ஏற்படுதல், பிறப்புறுப்புப் பகுதி வறண்டு போவது போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும். மருத்துவரின் ஆலோசனையுடன் அதற்கான ஆயின்மென்ட் தடவுவதன் மூலம் பாதிப்பிலிருந்து மீளலாம். நாப்கின்கள் புற்றுநோயை ஏற்படுத்தும் என்பது உண்மையா?
* நாப்கின்களில் உள்ள 'டையாக்சின்' என்ற வேதிப்பொருளானது புற்றுநோயை ஏற்படுத்தும் என்பது, விலங்குகளுக்கான பரிசோதனையில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது மனிதர்களுக்கு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்று இன்னும் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.
* நாப்கின்களில் உள்ள 'பாலிபுரொப்பிலின்', 'பி.பி.ஏ' போன்ற வேதிப்பொருள்கள், சருமப் புற்றுநோயை ஏற்படுத்தும் என்பதும், அறிவியல்ரீதியாக நிரூபிக்கப்படாததுதான்.
* டேம்பூன் என்பவை, மாதவிடாய்க் காலங்களில் பிறப்புறுப்பின் உள்ளே பொருத்திக்கொள்ளக் கூடியவை. இவற்றால் புற்றுநோய் ஏற்படுகிறது என்பது அறிவியல்ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், நாப்கின்களுக்கு அந்த பயம் தேவையில்லை.
* நாப்கின் குறித்த பயம் உள்ளவர்கள் சுத்தமாக துவைத்து காயவைத்த காட்டன் துணிகளை நாப்கின்களாக பயன்படுத்தலாம். அவற்றையும் நான்கு மணி நேரத்துக்கு ஒருமுறை மாற்றிவிட வேண்டும்.
நாப்கின்களை எப்படிப் பயன்படுத்த வேண்டும்?
* மாதவிடாய் நாள்களில் 6 மணி நேரத்துக்கு ஒருமுறை நாப்கினை மாற்ற வேண்டும். ரத்தப்போக்கு அதிகமுள்ள நாள்களில் 3 அல்லது 4 மணி நேரத்திற்கு ஒரு முறை மாற்றுவது நலம்.
* துணியாக இருந்தால் சுத்தமான பருத்தியினால் ஆனதாக இருக்க வேண்டும். உபயோகித்த துணிகளை, சோப்புப் போட்டு சுடுநீரில் அலசி வெயிலில் காய வைக்கவும். பிறகு, மடித்து ஒரு பையில் வைத்து காற்றோட்டமான இடத்தில் பத்திரப்படுத்துங்கள்.
* காயவைத்த நாப்கின் துணிகளை அயர்ன் செய்வதும் கிருமிகள் பரவுவதைத் தடுக்கும். பாதுகாக்கப்பட்ட துணியாக இருந்தாலும் 2 அல்லது 3 மாதத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
சானிட்டரி நாப்கின்களை எப்படி அப்புறப்படுத்த வேண்டும்?
நாப்கின்களைப் பொறுத்தவரை, அதனை பயன்படுத்துபவர்களைவிட மற்றவர்களுக்கு ஏற்படுத்தும் விளைவுகள்தான் அதிகம். ஒரு பெண் உபயோகித்துத் தூக்கி எறியும் நாப்கின் கழிவுகள், சராசரியாக ஒரு வருடத்துக்கு 150 கிலோகிராம் என்கிறது ஓர் ஆய்வு. இதில் உள்ள பிளாஸ்டிக் அடுக்குகள், மண்ணிலிருந்து முற்றிலுமாக மறைய சுமார் 800 வருடங்கள் ஆகலாம் எனக் கணக்கிட்டுள்ளனர்.
நாப்கின்களை செய்தித்தாளில் சுற்றி குப்பையில் எறியும்போது, அதைக் குப்பையிலிருந்து பிரித்தெடுக்கும் சுகாதார ஊழியர்களுக்கு ரத்தத்தினால் ஏற்படக்கூடிய தொற்றுகளான 'ஹெப்பட்டைட்டிஸ் பி', 'ஹெப்பட்டைட்டிஸ் சி' போன்ற பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
எனவே உபயோகித்த நாப்கின்களை நன்கு அலசி பின்பு பேப்பரில் சுற்றி வீசுவது நல்லது. முடிந்த அளவு நாப்கின்களை 'இன்சினிரேஷன்' என சொல்லக்கூடிய முறையில் எரித்துச் சாம்பலாக்கி அப்புறப்படுத்துவது சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கும்.
ஹேப்பி பீரியட்ஸ்!
ரத்தக்கசிவு வெளியே தெரிந்துவிடும் என்ற பயத்தில் சில பெண்கள் சிந்தெடிக் உள்ளாடைகளப் பயன்படுத்துகின்றனர். நாப்கின்களில் காட்டும் அதே கவனம் உள்ளாடைகள் விஷயத்திலும் தேவை. இறுக்கமாக இல்லாத காட்டன் உள்ளாடைகளை மட்டுமே தேர்வு செய்யுங்கள்.
அதீத சுத்தம் என்ற பெயரில் விளம்பரங்களில் காட்டப்படும் கிருமிநாசினிகளைக் கொண்டு பிறப்புறுப்பைக் கழுவுவதோ, சுடுநீரினால் சுத்தம் செய்வதோ வேண்டாம். இவை பிறப்புறுப்பின் இயல்பான அமிலத்தன்மையை மாற்றி, உடலுக்கு நல்லது செய்ய வேண்டிய சில நல்ல நுண்ணுயிரிகளைக் கொன்றுவிடுவதோடு வறட்சியையும், எரிச்சலையும் ஏற்படுத்தும் சிறுநீர் கழித்த பிறகும், நாப்கின்களை மாற்றும் போதும் பிற்பபுறுப்பை குளிர்ந்த நீரால் கழுவினாலே போதுமானது. தொற்றுகளையும் வரவிடாமல் தடுக்கலாம்.
- மாதவிலக்கின்போது பெண் அசுத்தமானவள் ஆவதில்லை.
- வெளியேறுவது அசுத்தமான ரத்தமும் இல்லை.
மாதவிலக்கின்போது பெண் அசுத்தமானவள் ஆவதில்லை. அவளது உடலில் இருந்து வெளியேறுவது அசுத்தமான ரத்தமும் இல்லை. கருவாகாத ரத்தத் திசுக்களே மாதவிடாயின்போது உதிரப்போக்காக வெளியேறுகின்றன. இதை நீங்கள் உணர்வதுடன், உங்கள் பெண் குழந்தைகளுக்கும் பெண் குழந்தைகளுடன் வளரும் ஆண் பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள். `அருவருப்பாக அணுகவேண்டிய விஷயமல்ல அது' என்பதை குழந்தைகளும் புரிந்து கொள்ள வேண்டும்.
மற்ற நாள்களைவிடவும் மாதவிலக்கு நாள்களில் அதிகபட்ச சுத்தம் அவசியம். மாதவிலக்கின்போது குளிக்கக் கூடாது என்றொரு நம்பிக்கை அந்த நாள்களில் இருந்தது. அப்போது குளங்களில் குளிப்பார்கள் என்பதால் சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டு அப்படிச் சொல்லப்பட்டிருக்கலாம். மாதவிலக்கின்போது இருவேளை குளிப்பது உடலைச் சுத்தமாக்குவதுடன், ரிலாக்ஸ் செய்யும், வலிகளையும் குறைக்கும்.
சுகாதாரமான நாப்கின்கள் உபயோகிப்பது, சத்துள்ள உணவுகளை உட்கொள்வது, மன அழுத்தமின்றி இருப்பது போன்றவையும் கடைப்பிடிக்கப்பட வேண்டும். தினமும் இருவேளை குளிப்பது, ரத்தப் போக்கு இருக்கிறதோ, இல்லையோ குறிப்பிட்ட இடைவெளிகளில் நாப்கின்களை மாற்றுவது, சிறுநீர், மலம் கழிக்கும் ஒவ்வொரு முறையும் அந்தரங்க உறுப்புகளை (சோப் உபயோகிக்காமல்) சுத்தமான தண்ணீர்கொண்டு கழுவுவது, தொடைப் பகுதியையும் அந்தரங்க உறுப்பையும் ஈரமின்றி வைத்துக்கொள்வது… இவை அனைத்தும் மாதவிலக்கு நாள்களில் ஒவ்வொரு பெண்ணும் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார முறைகள்.
பிறப்புறுப்புக்குத் தன்னைத் தானே சுத்தப்படுத்திக் கொள்ளும் தன்மை இயல்பிலேயே உண்டு என்பதால், அதற்கெனப் பிரத்யேக சோப் அல்லது திரவம் உபயோகிக்கத் தேவையில்லை. உபயோகித்ததும் தூக்கியெறியக்கூடிய சானிட்டரி நாப்கின்கள், துவைத்து மீண்டும் உபயோகிக்கும் காட்டன் பேடுகள், டாம்பூன்கள், மென்ஸ்ட்ருவல் கப் என எதை வேண்டுமானாலும் அவரவர் வசதிக்கேற்ப உபயோகிக்கலாம்.
எதை உபயோகிப்பதானாலும், அதிகபட்ச சுகாதாரம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். குறிப்பாக மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய காட்டன் பேடுகள், கப் போன்றவற்றை முறையாகச் சுத்தப்படுத்தியே உபயோகிக்க வேண்டும்.
ஒவ்வொரு நான்கு மணி நேரத்துக்கொரு முறையும் நாப்கினை மாற்ற வேண்டும். மீண்டும் உபயோகிக்கும் காட்டன் பேடுகளை லேசான உப்பு கலந்த குளிர்ந்த தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். `பொதுவாக உள்ளாடைகளையே வெந்நீரில்தானே துவைத்து உபயோகிக்கச் சொல்வார்கள்…
நீங்கள் குளிர்ந்த தண்ணீரில் உபயோகிக்கச் சொல்கிறீர்களே' என்கிற கேள்வி எழலாம். வெந்நீரில் ஊறவைத்தால் ரத்தக் கறைகள் அப்படியே நாப்கினில் படிந்து நிரந்தரமாகிவிடும். ஊறியதும் நன்கு அலசி வெயிலில் உலர்த்தியே பயன்படுத்த வேண்டும். சூரிய ஒளியானது இயற்கையான கிருமிநாசினியாகச் செயல்பட்டு, பாக்டீரியாவையும் துர்நாற்றத்தையும் நீக்கிவிடும்.
டாம்பூன்களை ஆறு மணி நேரத்துக்கு மேல் அந்தரங்க உறுப்பினுள் வைத்திருக்கக் கூடாது. நீண்ட நேரம் உபயோகிப்பதன் விளைவாக `டாக்சிக் ஷாக் சிண்ட்ரோம்' என்கிற அரிய வகை பிரச்சினை ஏற்படலாம். இது ஒருவகையான பாக்டீரியா தொற்று. காய்ச்சல், சரும அலர்ஜி, குறை ரத்த அழுத்தம் போன்ற பல பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடியது.
மாதவிலக்கின் போது பயன்படுத்தும் நாப்கின்கள், டாம்பூன்களை உபயோகிப்பதில் இருக்க வேண்டிய அதிகபட்ச கவனமானது அவற்றை அப்புறப்படுத்துவதிலும் இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் எந்த இடத்திலும் அவற்றை டாய்லெட்டினுள் போட்டு ஃப்ளஷ் செய்யக் கூடாது. உபயோகித்ததும் அவற்றை வேஸ்ட் பேப்பரில் சுற்றிக் குப்பைத் தொட்டியில் போடவும்.
அந்த குப்பைத் தொட்டியை உடனுக்குடன் சுத்தப்படுத்த வேண்டும். நீண்ட நேரம் குப்பைத் தொட்டியில் கிடக்கும் உபயோகித்த நாப்கின்கள் கிருமித் தொற்றை ஏற்படுத்தும். அது வேறுவிதமான உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்தும். ஈக்களும் கொசுக்களும் அவற்றை மொய்த்தால் தேவையற்ற நோய்கள் பரவும்.
நாப்கின் உபயோகிப்பதால் சிலருக்கு அலர்ஜி வரலாம். கடுமையான அரிப்பு, அதன் காரணமாக சருமம் சிவந்து புண்ணாவது போன்றவை ஏற்படலாம். அலர்ஜிக்கான காரணத்தை சரும மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு அதற்கேற்ற சிகிச்சையின் மூலம் குணப்படுத்திக் கொள்ள வேண்டும்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்