search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பல்லடம் பொதுக்கூட்டம்"

    • பிரதமரின் நிகழ்ச்சியானது பிற்பகல் 2.45 மணி முதல் 3.45 மணி வரை நடைபெற உள்ளது.
    • மதியம் 2 மணியளவில் பிரதமர் மோடி வருகை தந்ததும், பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்தில் பாதயாத்திரை நிறைவு விழா நடக்கிறது.

    பல்லடம்:

    தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை மேற்கொண்ட 'என் மண், என் மக்கள்' நடைபயணத்தை நிறைவு விழாவாகவும், பாராளுமன்ற தேர்தல் பிரசார கூட்டமாகவும் பல்லடத்தில் பிரமாண்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இதற்காக பல்லடம் மாதப்பூர் முத்துக்குமாரசாமி கோவில் மலை எதிரில் உள்ள 1400 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அங்கு இன்று 27-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

    இன்று பகல் 12 மணியளவில் பல்லடம் மாதப்பூரில் 'என் மண், என் மக்கள்' பாதயாத்திரை நிறைவு விழா மற்றும் பா.ஜ.க.வின் பாராளுமன்ற தேர்தல் பிரசார கூட்டம் தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக திருப்பூர், கோவை, சேலம், ஈரோடு உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள், நிர்வாகிகள் குவிந்தனர்.

    இன்று காலை முதல் பொதுக்கூட்டம் மைதானத்திற்கு பொதுமக்கள், பனியன் நிறுவன தொழிலாளர்கள் என ஏராளமானோர் கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் சாரை சாரையாக திரண்டு வந்தனர். அவர்களை பா.ஜ.க.வினர் உற்சாகமாக வரவேற்பு அளித்து மைதானத்திற்குள் அழைத்து சென்றனர். தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் அமருவதற்காக மைதானத்தில் ஏராளமான சேர்கள் போடப்பட்டு இருந்தது. சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பலர் பங்கேற்க திரண்டு வந்தனர். அவர்களை மத்திய பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர சோதனை செய்து மைதானத்திற்குள் அனுப்பி வைத்தனர்.

    கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி மதியம் 1.30 மணிக்கு கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலமாக கோவை சூலூர் விமானப்படை தளத்திற்கு வருகிறார். பின்னர் 2.10 மணிக்கு சூலூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக பொதுக்கூட்டம் நடைபெறும் மாதப்பூர் மைதானத்தை வந்தடைகிறார்.

    அங்கு அண்ணாமலையின் 'என் மண், என் மக்கள்' யாத்திரை நிறைவு விழா மற்றும் பாராளுமன்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். பிரதமரின் நிகழ்ச்சியானது பிற்பகல் 2.45 மணி முதல் 3.45 மணி வரை நடைபெற உள்ளது.



    முன்னதாக ஒத்திவைக்கப்பட்டு இருந்த திருப்பூர் தெற்கு, வடக்கு சட்டமன்ற தொகுதியில் பாதயாத்திரை மேற்கொள்ளும் வகையில் இன்று பகல் 11 மணியளவில் திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து அண்ணாமலை தனது நடைபயணத்தை தொடங்கினார். சிறிது தூரம் வரை நடந்து சென்ற அவர், பின்னர் திறந்த வெளிவாகனத்தில் யாத்திரையை மேற்கொண்டார்.

    பி.என்.ரோடு வழியாக புஷ்பா சந்திப்பு, குமரன் ரோடு, வளம் பாலம், மத்திய பஸ் நிலையம் வழியாக சென்றார். அப்போது திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையம் எதிரே உள்ள குமரன் நினைவு ஸ்தூபிக்கு அண்ணாமலை மரியாதை செலுத்தினார். மேலும் மாநகராட்சி அலுவலகம் அருகே காந்தி சிலை, வித்யாலயாவில் உள்ள தியாகி சுந்தராம்பாள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்கிறார். தொடர்ந்து பல்லடம் சாலை வழியாக மாதப்பூரில் பொதுக்கூட்டம் நடை பெறும் மைதானத்தை சென்றடைகிறார்.

    பாதயாத்திரை நிறைவு விழா நடைபயணம் என்பதால் திருப்பூர் மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


    அவர்கள் அண்ணாமலைக்கு மேள தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். புதிய பஸ் நிலையத்தில் இருந்து மாதப்பூர் வரை வழிநெடுக வரவேற்பு அளிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் கட்சி கொடி, தோரணங்கள், வரவேற்பு பேனர்கள் கட்டப்பட்டு இருந்தது. நடைபயணத்தின் போது பொது மக்கள், வியாபாரிகள் உள்ளிட்டோரிடம் அண்ணாமலை கோரிக்கைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.

    மதியம் 2 மணியளவில் பிரதமர் மோடி வருகை தந்ததும், பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்தில் பாதயாத்திரை நிறைவு விழா நடக்கிறது. இதில் பிரதமர் மோடி அண்ணாமலையுடன் திறந்த ஜீப்பில் 1 கி.மீ., தூரம் சென்று தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்களை சந்திக்கிறார். இதற்காக அங்கு பிரத்யேக சாலை அமைக்கப்பட்டுள்ளது. மேடை அருகே சென்றதும் அண்ணாமலையின் நடைபயணத்தை நிறைவு செய்து வைக்கிறார். பின்னர் பிரதமர் மற்றும் அண்ணாமலை ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.

    பிரதமர் மோடி வருகையையொட்டி 4500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மத்திய சிறப்பு பாதுகாப்பு படை குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். மேலும் பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

    கூட்டத்தில் பிரதமர் மோடி என்ன பேசப்போகிறார் என்று பா.ஜ.க.வினர் மட்டுமின்றி அனைத்து அரசியல் கட்சியினருடன் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

    பொதுக்கூட்டம் மைதானம் 5 லட்சம் பேர் அமரும் வகையிலும், 10 லட்சம் பேர் வரை நின்று பங்கேற்கும் வகையில் தயார்ப்படுத்தப்பட்டு இருந்தது.

    வி.வி.ஐ.பி., மற்றும் வி.ஐ.பி.க்களுக்கு மேடையின் பின்புறம் பிரத்யேக வழித்தடம் ஏற்படுத்தப்பட்டு இருந்தது. உணவுக்கூடம், வாகன பார்க்கிங், கழிப்பிடம், தண்ணீர் விநியோகம் என 5 ஆயிரம் பா.ஜ.க. தொண்டர்கள் சேவைப்பணியில் ஈடுபட்டனர்.

    1.12 ஆயிரம் சதுர அடியில் 3 இடங்களில் உணவுக்கூடங்கள் அமைக்கப்பட்டு, தொண்டர்கள், பொதுமக்களுக்கு உணவு பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டது.

    பொதுக்கூட்ட மைதான வளாகத்திற்குள் மக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் சின்டெக்ஸ் டேங்குகள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டது. இது தவிர 5 லட்சம் தண்ணீர் பாட்டில்களும் தயாராக வைக்கப்பட்டு இருந்தது.பொதுக்கூட்ட அரங்குக்கு வெளியே ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனி கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டு இருந்தது.

    பொதுக்கூட்ட மைதானத்திற்குள் போதை பொருட்கள், நெகிழி பைகள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. காலை 10 மணிக்கு மேல் தொண்டர்கள், பொதுமக்கள், பொதுக்கூட்டம் மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். மதிய உணவு இடைவேளைக்கு பின்பே பொதுக்கூட்டம் தொடங்குகிறது. 10 தீயணைப்பு வாகனங்கள், 30 ஆம்புலன்ஸ்கள் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. மருத்துவ குழுவினரும் தயார் நிலையில் இருந்தனர்.


    பொதுக்கூட்ட மேடையானது தெற்கு நோக்கி இருக்கும் வகையில் 80 அடி நீளம், 60 அடி அகலம் கொண்டதாக பிரமாண்டமாக அமைக்கப்பட்டு இருந்தது. மேடையின் மேல் பகுதியில் தாமரைசின்னம் பொறிக்கப்பட்டு வேண்டும் மோடி, மீண்டும் மோடி என்ற வாசகத்துடன் மோடி மற்றும் அண்ணாமலையின் படங்கள் இடம் பெற்றிருந்தது. 5 லட்சம் சேர்கள் போடப்பட்டு இருந்தது.

    ×