search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராகவேந்திர சுவாமி கோவில்"

    • ஒவ்வொரு பக்தர்களுக்கும் குருவாக இருந்து அருள்பாலித்து வருகிறார்.
    • ராகவேந்திர சுவாமிகளாக சன்னியாசம் ஏற்ற தினம் மார்ச் 12-ந் தேதியாகும்.

    கடலூர் மாவட்டம் புவனகிரி என்ற ஊரில் 1595-ம் ஆண்டு திம்மண்ணபட்டர் - கோபிகாம்பாள் தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாக பிறந்தவர் வேங்கடநாதன். இவருக்கு குருராஜன் என்ற சகோதரனும், வெங்கடம்பா என்ற சகோதரியும் இருந்தனர். வேங்கடநாதன் சிறு வயதிலேயே மிகுந்த ஞானம் கொண்டவராக விளங்கினார். இதன் காரணமாக தனது சகோதரர் குருராஜன் மூலமாக கும்பகோணம் ஸ்ரீமடத்தில் குருகுல பாடம் பயில சேர்க்கப்பட்டார். அப்போது ஸ்ரீ மடத்தை கவனித்து வந்தவர் ஸ்ரீ சுதீந்திர தீர்த்தர் ஆவார்.

    வேங்கடநாதனின் அறிவுக்கூர்மையை கண்டு சுதீந்திரர் மிகவும் மகிழ்ந்தார். அங்கிருக்கும் மற்ற மாணவர்களிடையே வேங்கட நாதனை பற்றி உயர்வாக சொல்லி வந்தார். நாட்கள் கடந்து செல்ல, வேங்கடநாதனுக்கு திருமணம் செய்து வைக்க, அவரது சகோதரர் குருராஜன் நினைத்தார்.

    அதனால் கும்பகோணம் சென்று தனது தம்பியை அழைத்து வந்து, திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார். லட்சுமி கடாட்சம் பொருந்திய சரஸ்வதி என்ற பெண்மணிக்கு, வேங்கடநாதனை மணமுடித்து வைத்தார். ஏழ்மை நிலையில் மிகவும் கஷ்டப்பட்டு தனது இல்லற வாழ்க்கையைத் தொடங்கினார் வேங்கடநாதன்.

    இந்த நிலையில் கும்பகோண ஸ்ரீமடத்தில் வேங்கடநாதனுக்கு பாடம் சொல்லி கொடுத்த சுதீந்திர தீர்த்தர் மிகவும் நோயுற்றார். 'தனக்கு பிறகு மடத்தை யார் கவனித்துக் கொள்வாரோ' என்ற கவலை அவருக்கு தோன்றியது. ஒரு பக்கம் வேங்கடநாதன் தனது மனைவியுடன் கடினமான நிலையில் காலத்தை ஓட்டிக்கொண்டிருந்தார்.

    இந்த நிலையில் அவர்களுக்கு லட்சுமி நாராயணன் என்ற பிள்ளை பிறந்தது. இருவர் இருக்கும்போதே வறுமை சூழ்ந்திருந்த வேளையில், இப்போது மூன்று பேருடன் வறுமையும் வீட்டில் சூழத் தொடங்கியது. வேங்கடநாதனின் மனைவி சரஸ்வதி, "நாம் கும்பகோணம் சென்று உங்கள் குருவிடம் உதவி கேட்கலாமா?" என வேங்கடநாதனை கேட்க, அவரும் "சரி" என்று கூறவே, அவர்கள் கும்பகோணம் புறப்பட்டனர்.

    கும்பகோண ஸ்ரீ மடத்தில் வேங்கடநாதனை கண்டதும், சுதீந்திர தீர்த்தர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். "எனக்குப் பிறகு இந்த மடத்தை நீதான் கவனிக்க வேண்டும், ஆகவே நீ சன்னியாசம் ஏற்று கொள்ள வேண்டும்" என்று வேங்கடநாதனை கேட்டுக் கொண்டார். அதற்கு மறுப்பு தெரிவித்த வேங்கடநாதன், "நான் எனது குடும்பத்துடன்தான் வாழப்போகிறேன். எனக்கு சன்னியாசம் தேவைஇல்லை சுவாமி" என்று கூறி அங்கிருந்து வெளியேறினார்.

    அன்று இரவு வேங்கடநாதனின் கனவில் கலைவாணி சரஸ்வதி தேவி தோன்றி "வேங்கடநாதா, நீ சன்னியாசம் ஏற்றுக்கொள். நீ இந்த உலகை காக்க வந்தவன். உன்னால்தான் உலகம் சுபிட்சமாகப் போகின்றது. கவலை கொள்ள வேண்டாம். உடனே சன்னியாசம் ஏற்றுக் கொள்" என ஆசீர்வதித்து மறைந்தாள். அதன் பின்னர் நரசிம்மர், ராமர், கிருஷ்ணர், வேதவியாசர் போன்றோரெல்லாம் வேங்கடநாதன் கனவில் வந்து சன்னியாசம் ஏற்க வலியுறுத்தினர்.

    பொழுது விடிந்தது. வேங்கடநாதன் தனது குருவான சுதீந்திர தீர்த்தரிடம், தான் கண்ட கனவை விளக்கினார். உடனே சுதீந்திர தீர்த்தரும் ஆனந்தத்தில் திளைத்தார். பின்னர் கி.பி. 1621-ம் ஆண்டு, அப்போதைய தஞ்சாவூர் அரசர் ரகுநாத பூபால் அரண்மனையில், வேங்கடநாதனுக்கு `ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தர்' என்ற திருநாமத்தை சூட்டி தீட்சை அளித்தார். அன்று முதல் வேங்கடநாதன் 'ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தர்' என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார்.

    பல இடங்களுக்கு யாத்திரை சென்று, பல பக்தர்களுக்கு அனுக்கிரகம் செய்து, இறுதியாக மாஞ்சாலி என்ற மந்த்ராலய ஷேத்திரத்தில் 1671-ம் ஆண்டு ஜீவ பிருந்தாவனத்தில் சமாதி ஆனார். இன்று வரையிலும் அவர் பல பக்தர்களுக்கு நல்லாசிகள் வழங்கி கொண்டு, ஒவ்வொரு பக்தர்களுக்கும் குருவாக இருந்து அருள்பாலித்து வருகிறார்.

    வேங்கடநாதனாக இருந்தவர், ராகவேந்திர சுவாமிகளாக சன்னியாசம் ஏற்ற தினம் மார்ச் 12-ந் தேதியாகும். இன்று 12-ந் தேதி (செவ்வாய்க்கிழமை), ராகேந்திரர் சன்னியாசம் ஏற்று 403-வது ஆண்டாகும். இந்த மகிழ்ச்சியான நன்னாளில் உங்கள் பகுதிக்கு அருகில் உள்ள ராகவேந்திர சுவாமி ஆலயங்களுக்கு சென்று அவரை வழிபடுங்கள். நிச்சயம் நீங்கள் கேட்டதை நடத்திக் காட்டுவார்.

    அவர் பக்தர்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரும் அத்யந்த ஞானி ஆவார். அவரால் பலனடைந்தவர்கள் கோடி. அந்த கோடியில் நீங்களும் ஒருவராக இருக்க, இந்த நன்னாளில் ராகவேந்திர சுவாமிகளை வணங்குங்கள்.

    ×