search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏஎன்எஸ் பிரசாத்"

    • குடிநீர் தட்டுப்பாட்டை போக்க எந்த விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் காங்கிரஸ் அரசு எடுக்கவில்லை.
    • பெங்களூருவில் இப்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடி முழுக்க முழுக்க கர்நாடக காங்கிரஸ் அரசின் நிர்வாகத் தோல்வி.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,

    உலகின் முன்னணி பெரு நகரங்களில் ஒன்றான பெங்களூருவில் தற்போது கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    தண்ணீர் இல்லாததால் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை, வீட்டில் இருந்தே பணி செய்ய அறிவுறுத்தியுள்ளது. ஆனால், வீட்டிலும் தண்ணீர் இல்லாததால், வேலை செய்ய முடியாமல் ஊழியர்கள் தவித்து வருகின்றனர். கார்களை கழுவினால் ரூ. 5,000 அபராதம் விதிக்கப்படும் என்று கர்நாடக காங்கிரஸ் அரசு அறிவித்துள்ளது. இதிலிருந்து நிலைமை எந்த அளவுக்கு மோசமடைந்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

    கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு பதவியேற்று ஓராண்டு ஆகப்போகிறது. குடிநீர் தட்டுப்பாடு என்பது ஒரு சில நாட்களில் ஏற்பட்டுவிடும் இயற்கை பேரிடர் அல்ல. போதுமான மழை இல்லை என்பதும், அதனால் அதிகமான மக்கள் தொகை கொண்ட பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு வரும் என்பதும் தெரிந்த விஷயம் தான்.

    ஆனாலும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க எந்த விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் காங்கிரஸ் அரசு எடுக்கவில்லை. பெங்களூருவில் இப்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடி முழுக்க முழுக்க கர்நாடக காங்கிரஸ் அரசின் நிர்வாகத் தோல்வி.

    கர்நாடக முதல்வர் சித்தராமையா - துணை முதல்வர் டி. கே.சிவகுமார் - காங்கிரஸ் அகில இந்தியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே என முக்கோண அரசியலில் சிக்கி கர்நாடக மக்கள் தவிக்கின்றனர். இவர்கள் மூவரும் தங்களுக்குள் ஒருவரையொருவர் வீழ்த்த போட்டி போடுகின்றனரே தவிர, மக்களைப் பற்றி துளியும் கவலைப்படவில்லை. அதன் விளைவுதான் குடிநீர் பஞ்சம்.

    கர்நாடக காங்கிரஸ் அரசில் இந்த மூவர் தவிர, சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோரும் தலையிடுகின்றனர். இந்த ஆறு பேரும் தலையிடுவதால் அரசு நிர்வாகம் செயலிழந்திருக்கிறது.

    காங்கிரஸ் ஆளும் மூன்று மாநிலங்களில் வளமான மாநிலம் கர்நாடகம் என்பதால் அதனை தங்களது கஜானாவாகவே காங்கிரஸ் கட்சி பார்க்கிறது. இதன் விளைவுதான் கார்களை கழுவினால் ரூ. 5,000 அபராதம் என்ற அறிவிப்பு.

    காங்கிரஸ் அரசின் நிர்வாகத் தோல்வியால் ஏற்பட்ட குடிநீர் பஞ்சத்தால் கர்நாடக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதிலிருந்து மக்களைத் திசைதிருப்பவும், கர்நாடக மக்களின் உணர்வுகளைத் தூண்டி அரசியல் ஆதாயம் அடையவும், 'தமிழகத்திற்கு ஒரு சொட்டு கூட தண்ணீர் தரமாட்டோம்' என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்திருக்கிறார்.

    பெங்களூரு குடிநீர் பஞ்சத்தை காரணம் காட்டி உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை தர மறுக்கிறது கர்நாடக காங்கிரஸ் அரசு. இதற்கு கடும் எதிர்ப்பை தமிழக அரசு தெரிவிக்காமல், கர்நாடக அரசுடன் போராடி நீரை பெற்று தராமல் தமிழகத்திற்கு துரோகம் செய்து வருவது கடும் கண்டனத்துக்குரியது

    காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளை வாரி வழங்கியிருக்கும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு, கர்நாடக முதல்வர் சித்ததராமையாவுக்கு கண்டனம் தெரிவிக்க கூட நேரம் இல்லை.

    கர்நாடக அரசு பாடத்திட்டத்தில், ஈ.வெ.ராமசாமியின் இந்து விரோத வரலாற்றை சேர்க்க, கர்நாடக காங்கிரஸ் அரசுடன் தனக்குள்ள நட்பை பயன்படுத்த தெரிந்த முதல்வர் ஸ்டாலினுக்கு, தமிழகத்திற்கு தண்ணீர் கேட்க முடியவில்லை.

    இனியும் தமிழக மக்களை ஏமாற்றாமல், தனது நண்பர்களான கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் ஆகியோருடன் பேசி தமிழகத்திற்கு வர வேண்டிய காவிரி நீரை முதல்வர் ஸ்டாலின் பெற்றுத் தர வேண்டும்.

    இல்லையெனில் வரும் மக்களவைத் தேர்தலில் தமிழக மக்கள் திமுக கூட்டணிக்கு உரிய பாடம் புகட்டுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×