search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pattamudaiyar Shasta. ஆன்மிகம்"

    • நாம் நினைக்கும்போது உதவி செய்யும் தெய்வமே குலதெய்வம் ஆகும்.
    • ஒவ்வொரு குடும்பத்துக்கும் குலதெய்வம் இருக்கும்.

    நாம் நினைக்கும்போது உதவி செய்யும் தெய்வமே குலதெய்வம் ஆகும். ஒவ்வொரு குடும்பத்துக்கும் குலதெய்வம் இருக்கும். குலதெய்வ வழிபாடு அனைவருக்கும் முக்கியமான ஒன்றாகும். நம்முடைய வீட்டில் எந்த சுப காரியங்கள் செய்தாலும், முதலில் குலதெய்வத்தை வணங்கி விட்டுதான் ஆரம்பிக்க வேண்டும். எந்தவொரு நல்ல காரியம் தொடங்கும்போதும் குலதெய்வத்தை வழிபட்ட பின்னர் தொடங்கினால், அது வெற்றியாக அமையும் என்பது நம்பிக்கை. ஆண்டுதோறும் குடும்பத்துடன் குலதெய்வத்தை வழிபடுவதால் வீட்டில் எப்பொழுதும் மகிழ்ச்சி தங்கும்.

    பங்குனி உத்திரம்

    பங்குனி உத்திரம் அன்று குலதெய்வத்தை வழிபட்டால் இரட்டிப்பு பலன் கிடைக்கும். எனவே அன்றைய தினம் குலதெய்வ கோவிலுக்கு மக்கள் தவறாது சென்று வழிபடுகின்றனர். பங்குனி மாதம் உத்திர நட்சத்திரம் அன்று பவுர்ணமி என்பதால், அந்நாளில் குலதெய்வத்தை வழிபடுவதற்கு மிகமிக உகந்ததாகும். அன்று குலதெய்வமான சாஸ்தா, அய்யனாரை மக்கள் தவறாது வழிபடுகிறார்கள்.

    தென் மாவட்டங்களில் சொரிமுத்து அய்யனார் கோவில், கற்குவேல் அய்யனார் கோவில், அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில், கைகொண்டார் சாஸ்தா, பூலுடையார் சாஸ்தா, சூட்சமுடையார் சாஸ்தா, பட்டமுடையார் சாஸ்தா என்று ஆயிரக்கணக்கான கோவில்கள் உள்ளன. சாஸ்தா கோவில்களில் பங்குனி உத்திரத் திருநாளில், சாஸ்தாவை வழிபட்டு விட்டு, அவருடைய காவல் தெய்வங்களான சங்கிலி பூதத்தார், கருப்பசாமி, சுடலை மாடசாமி உள்ளிட்ட பரிவார தேவதைகளை வழிபடுவது சிறப்பு வாய்ந்ததாகும்.

    காவல் தெய்வங்களில் மிகவும் முக்கியமானவராக சங்கிலி பூதத்தார் விளங்குகிறார். சங்கிலி பூதத்தார் அனைத்து சாஸ்தா கோவில்களிலும் காவல் தெய்வமாக இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.

    பாற்கடலில் தோன்றினார்

    ஆதிகாலத்தில் தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக திருப்பாற்கடலை கடைந்தனர். அப்போது கடலுக்குள் இருந்து ஆலகால விஷம் வெளிப்பட்டது. அதனை சிவபெருமான் உண்டு, உலகைக் காத்தார். அந்த கொடிய விஷத்திற்குப் பின்னர் கடலுக்குள் இருந்து பாரிஜாத மரம், காமதேனுப் பசு உள்பட பல அதிசய பொருட்களும், அற்புதம் மிகுந்த தேவதைகளும், தெய்வங்களும் வெளியே வந்தன. அப்படி அமிர்தத்தோடு பலதரப்பட்ட விஷயங்கள் வெளி வரும் நேரத்தில் சங்கொலி முழங்க விசித்திரமான, வீரியமான பலவிதமான பூதகணங்களும் வெளிப்பட்டன.

    தொடர்ந்து அந்த பூதகணங்களுக்கு எல்லாம் ராஜாவான சுவாமி சங்கிலி பூதத்தார், தன் கையில் தண்டத்தை ஆயுதமாகவும், உடலின் மேல் கனத்த இரும்பு சங்கிலிகளை ஆபரணமாகவும் அணிந்தவாறு, பார்த்தாலே பதற வைக்கும் பிரமாண்ட ஆங்கார, ஓங்கார உருவத்தோடும், ஆரவார சத்தத்தோடும் ஆக்ரோஷமாக, பாற்கடலில் தோன்றி வெளியே வந்தார். இதனைக்கண்ட தேவர்கள், அசுரர்கள், முனிவர்கள், சித்தர்கள் அனைவரும் அஞ்சி நடுநடுங்கி, ஓடிப்போய் ஒளிந்து கொண்டனர்.

    அமிர்தத்தோடு பிறந்ததால் சங்கிலி பூதத்தாருக்கு `அமிர்த பாலன்' என்ற பெயரும் உண்டு. கையில் குண்டாந்தடியான தண்டத்தை ஆயுதமாக ஏந்தியுள்ளதால் `தண்டநாதன்' என்றும் கூறுவர். திருப்பாற்கடலில் பிரமாண்ட உருவத்தோடும், அனைவர் கண்களையும் பறிக்கும் முத்து போன்ற பிரகாசத்தோடும் தோன்றியதால் 'ராட்சச முத்து' என்றும் அழைக்கப்படுகிறார்.

    அண்டமெல்லாம் நடுங்கச்செய்த அதிபயங்கர ஆலகால விஷத்தை விழுங்கி அனைத்துலக ஜீவராசிகளையும் அழிவில் இருந்து காப்பாற்றிய சிவபெருமான், பூதகணங்களையும், பூத கணங்களுக்கு எல்லாம் ராஜாவான சங்கிலி பூதத்தாரையும் அமைதிப்படுத்தி, ஆசுவாசப்படுத்தி, அவர்கள் அனைவரையும் தன்னுடைய பிள்ளைகளாக ஏற்றுக்கொண்டு தன்னுடனேயே கயிலாயத்தில் வைத்துக்கொண்டார்.

    காவல் தெய்வம்

    பின்னர் சிவபெருமான் `அனைத்து கோவில்களுக்கும் காவல் தெய்வமாக இருந்து பக்தர்களுக்கு அருள்புரிய வேண்டும்' என்று கூறி சங்கிலி பூதத்தாரை, பூலோகத்திற்கு அனுப்பி வைத்தார். இந்த சங்கிலி பூதத்தார், சொரிமுத்து அய்யனார் கோவிலில் காவல் தெய்வமாக இருந்து அங்கு வரும் பக்தர்களை பாதுகாத்து வருகிறார். அவருக்கு வடை மாலை சாத்தி, சைவ படையல் போட்டு பக்தர்கள் வழிபட்டு வருகிறார்கள்.

    சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆக்ரோஷத்துடன் வீற்றிருந்த சங்கிலி பூதத்தாரை சாந்தப்படுத்த வேண்டும் என்று நினைத்த பக்தர்கள், அதற்காக அகத்திய மாமுனிவரிடம் வேண்டினர். இதனை ஏற்ற அகத்திய முனிவர், சங்கிலி பூதத்தாரை சாந்தப்படுத்தினார்.

    இதனால் அங்கு அகத்திய மாமுனிவருக்கும் சிலை உள்ளது. அவரை வழிபட்ட பின்னரே பக்தர்கள் சங்கிலி பூதத்தாரை வழிபடுகின்றனர். சங்கிலி பூதத்தாரை வழிபடும் பக்தர்கள் இரும்பு சங்கிலியால் தங்களுடைய மார்பில் அடித்துக் கொண்டு நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.

    திருச்செந்தூர் முருகன் கோவிலின் கோபுர வாசலில் இந்த சங்கிலி பூதத்தார், காவல் தெய்வமாக இருந்து மக்களை காத்து வருகிறார்.

    இதேபோன்று நெல்லையப்பர் கோவில், திருக்குறுங்குடி நம்பி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் இவர் காவல் தெய்வமாக இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து பாதுகாத்து வருகிறார்.

    பூதகணங்களுக்கு எல்லாம் ராஜாவாக விளங்கும் சங்கிலி பூதத்தார் சுவாமியை, `பூதராஜா' என்றும் அழைப்பார்கள். இந்த சங்கிலி பூதத்தாரை வழிபடும் பக்தர்கள், தங்கள் குடும்பத்தில் பிறக்கும் ஆண் வாரிகளுக்கு `பூதராஜா', `பூதராசு', `பூதத்தான்', `பூதப்பாண்டி' என்றும், பெண் பிள்ளைகளுக்கு 'பூதம்மாள்' என்றும், தற்போதைய நவீன காலத்திற்கேற்றார் போல் 'பூதராஜா'வை சுருக்கி 'பூஜா' என்றும் பெயர் சூட்டி மகிழ்கிறார்கள்.

    இந்த சங்கிலி பூதத்தாரை பங்குனி உத்திரம் நாளில், படையல் போட்டு வழிபட்டு வரும் மக்களை, அவர் என்றும் பாதுகாத்து அருள்செய்வார். குலதெய்வ வழிபாடுகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, சங்கிலி பூதத்தார் வழிபாடாகும். பங்குனி உத்திரத்தன்று சாஸ்தாவை வழிபட்ட பின், சங்கிலி பூதத்தாரையும் வழிபட்ட பின்னர் மற்ற காவல் தெய்வங்களை பக்தர்கள் வழிபடுவார்கள். ஒவ்வொரு கோவிலிலும் சங்கிலி பூதத்தார், வெவ்வேறு பெயர்களில் மக்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    ×