என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கோலவார் குழலாள் ஈஸ்வரி அம்மன்"
- சிவாலய ஓட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது.
- அற்புதங்கள் நிறைந்தது கோலவார் குழலாள் ஈஸ்வரி சோழராஜா கோவில்.
ஆன்மிக பூமியான இந்திய நாட்டின் தென்கோடியில் அமைந்துள்ள புண்ணிய தலமாக இருப்பது கன்னியாகுமரி மாவட்டம். இந்த மாவட்டத்தில் நடைபெறும் 'சிவாலய ஓட்டம்' மிகவும் பிரசித்தி பெற்றது. முக்கடல் சங்கமிக்கும் இங்கு சிவபெருமானுக்கு என பிரசித்தி பெற்ற பல்வேறு கோவில்கள் உள்ளன.
அற்புதங்கள் நிறைந்த கோவில்
அந்த வகையில் பல்வேறு அற்புதங்கள் நிறைந்தது கோலவார் குழலாள் ஈஸ்வரி உடனுறை சோழராஜா கோவில். இந்த கோவில் 'சோழராஜா கோவில்' என்று அழைக்கப்படுகிறது. குமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவில் அருகில் ஒழுகினசேரி பகுதியில் உள்ள பழையாற்றின் கரையில் அமைந்துள்ளது. இது சோழ மன்னர் அமைத்த சிவன் கோவில்களில் ஒன்றாகும்.
தற்போது உள்ள நாகர்கோவில் முன்பு கோட்டார்' என்ற பெயரில் அழைக்கப்பட்டது. பின்னர் நகரமயமாதல் காரணமாக நாகர்கோவில் என்ற பெயரில் நகரப்பகுதிகள் மாறிவிட்டன. ஆகவே நாகர்கோவிலின் நுழைவு வாசலாக ஒழுகினசேரி திகழ்கிறது. 'உலக முழுதுடையான் சேரி்' என்ற பெயரே காலப்போக்கில் மருவி 'ஒழுகினசேரி' என்று மாறியதாக கூறப்படுகிறது.
இங்கு 'அரவ நீள்சடையான்' என்ற பெயரில் மகா தேவரான சிவபெருமான் லிங்க வடிவில் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பூம்குழலி என்ற பெயரில் கோலவார் குழலாள் ஈஸ்வரி அம்மன் வீற்றிருந்து அருள்புரிகிறார்.
தஞ்சை பெரியகோவிலின் கட்டமைப்பு
கி.பி. 10-ம் நூற்றாண்டில் சோழ மன்னர் ராஜேந்திர சோழனின் மகன் ராஜேந்திர சோழீஸ்வரனால் கட்டப்பட்டது, இந்த சோழ ராஜா கோவில். தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலை மாதிரியாகக் கொண்டு இந்த ஆலயத்தை வடிவமைத்து இருக்கிறார்கள். எனவே இதை குமரி மாவட்டத்தில் உள்ள தஞ்சை பெரிய கோவில் என்றும் கூறுகிறார்கள். இங்கு மூலவர் லிங்க வடிவில் எழுந்தருளி காட்சியளிக்கிறார்.
ராஜேந்திர சோழீஸ்வரன், சேர நாட்டை கைப்பற்றும் நோக்கத்துடன் தஞ்சையில் இருந்து பெரும் படைகளுடன் வந்து நாகர்கோவிலில் தங்கி உள்ளார்.
அப்போது அவரது கனவில் சிவபெருமான் தோன்றி அங்கு கோவில் எழுப்பும்படி கூறி மறைந்துவிட்டார். அதைத்தொடர்ந்து இங்கு ராஜேந்திர சோழீஸ்வரனால் கோவில் எழுப்பப்பட்டுள்ளது. இங்கு மூலவரான அரவ நீள்சடையான் சன்னிதி, உயரமான மேடை போல் அமைந்துள்ளது. முன் மண்டபத்தின் படி ஏறி தான் சன்னிதானத்துக்கு செல்ல வேண்டும். சோழ மன்னர் உருவாக்கம் செய்ததால் சோழ ராஜா கோவில்' என்ற பெயரில் பிரசித்திப் பெற்று விளங்குகிறது.
திருமணம் ஆகாத ஆண்கள் மற்றும் பெண்கள் சோழ ராஜா கோவிலுக்கு வந்து வழிபட்டால் தடைகள் நீங்கி, உரிய காலத்தில் திருமணம் கைகூடும். குழந்தை பாக்கியம் வேண்டுவோர் இந்த கோவிலுக்கு வந்து சாமியை வழிபட்டால், குழந்தை தோஷங்கள் நீங்கி, புத்திரபாக்கியம் கிடைக்கும் என்று இங்குள்ள மக்கள் கூறுகிறார்கள். ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் தொடர்ந்து கோவிலுக்கு வந்து சிவனை வழிபட்டால், வாழ்வில் ஏற்படும் சோதனைகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால் வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வந்து வழிபட்டு செல்கின்றனர்.
இக்கோவில் கல்வெட்டுகளில் அரவநீள்சடையான் என்று உள்ளதாகவும், மேலும் சோழீஸ்வரமுடையர், ராஜேந்திர சோழீஸ்வர முடைய நயினார், பெரிய நயினார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இக்கோவில் அமைந்துள்ள சுற்றுப்புறத் தெருக்களும் சோழராஜா கோவில் தெரு என்ற பெயரில் அமைந்துள்ளன.
தஞ்சைப் பெரிய கோவில் விமானத்தின் சாயலில் சிறிய அளவிலான விமானமும், நான்கு பக்க கற்சுவர்களின் மேற்கூரையில் நான்கு மூலைகளிலும் நந்தியின் சிலைகளும் அமைந்துள்ளன. சோழர்கள் காலத்திற்கு பிறகு பாண்டிய மற்றும் திருவிதாங்கூர் மன்னர்களால் இந்த கோவில் புனரமைக்கப்பட்டுள்ளது.
18 அடி உயரமுள்ள சிவலிங்கம் கோவில் கருவறையில் வீற்றிருக்கும் லிங்க வடிவான சிவபெருமானின் மொத்த உயரம் 18 அடி ஆகும். விட்டம் 16 அடி. இதில் 3½ அடி உயரத்திலும், நிலத்தின் அடியில் மீதிமுள்ள 14½ அடி மண்ணில் புதைந்த நிலையிலும் லிங்க வடிவில் கிழக்குப் பார்த்து அருள்பாலித்து வருகிறார். தூய மனதுடன் பக்தி பரவசத்துடன் கருவறையில் இருக்கும் அரவ நீள்சடையானை 'ஓம் நமசிவாய' என்று இருகரம் கூப்பி வணங்குபவர்கள் சிவபெருமானையே நேரில் பார்ப்பது போல் உணர்வதாக கூறுகின்றனர்.
பூமிக்கடியில் இருந்தும் இறைவன் அருள் செய்வதால், நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை இங்கு வந்து முறையிட்டால் உடனே தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இக்கோவிலில் அமர்ந்து ஆழ்நிலைத் தியானத்தில் ஈடுபட்டால் இறையுணர்வு அதிர்வலைகளை உணரமுடியும் என்றும் கூறுகிறார்கள். கோவிலின் சுற்றுப் பகுதியின் தென்மேற்குப் பகுதியில் விநாயகப்பெருமானும், வடமேற்குப் பகுதியில் ஆறுமுக நயினாரும், கிழக்கு பார்த்து தனித்தனி சன்னிதிகளில் அமர்ந்து அருள்புரிந்து வருகின்றனர். இரு சன்னிதிகளுக்கு இடையே நாகராஜரும் அருள்தருகிறார்.
மேலும் தட்சிணாமூர்த்தி மற்றும் ஐயப்பன் சன்னிதிகளும் அமைந்திருக்கின்றன. இந்த கோவிலில் 2 பிரகாரம் உள்ளது. 2 பிரகாரம் கோவிலின் நந்தவனம் ஆகும்.
சிவனை ஓரக்கண்ணால் பார்க்கும் அம்பாள் இத்திருத்தலத்தில் அம்பாள், கோலவார் குழலாள் ஈஸ்வரி என்ற பெயரில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். மற்ற கோவில்களில் அம்பாள் எப்போதும் பக்தர்களை நேரில் பார்த்தபடி அருள்பாலிப்பார். ஆனால் இங்கு அம்மன், தனது முகத்தை சற்று இடதுபுறமாக சாய்த்து, சிவனை ஓரக்கண்ணால் பார்ப்பது போல அமைக்கப்பட்டிருப்பது ஆலயத்தின் தனிச்சிறப்பாகும்.
அம்பாள் சன்னிதிக்கு மேல்பக்கம் ஒரு கிணறு உள்ளது. முன்பெல்லாம் கோவில்களின் விக்கிரங்களை தூய்மைப் படுத்துவதற்கும், அபிஷேகத்திற்கும் கோவிலுக்குள் அமைக்கப்பட்டுள்ள கிணற்றில் இருந்துதான் தண்ணீர் எடுப்பார்கள். காலப்போக்கில் அவை மாறிவிட்டன.
தல விருட்சம் வில்வம்
இக்கோவிலின் தலவிருட்சம் வில்வ மரமாகும். இந்த விருட்சம் அருகில் உள்ள கொன்றை மரத்துடன் சேர்ந்து பூஜிக்கப்படுகிறது. கொன்றை மரம் பங்குனி, சித்திரை மாதங்களில் மாத்திரமே பூக்கிற இயல்பு கொண்டது. ஆனால் இங்குள்ள கொன்றை மரம் வருடத்தில் எல்லா மாதங்களிலும் பூத்துக் குலுங்குவது இக்கோவிலின் சிறப்பு. கோவிலின் வெளிப்பக்கம் பெரிய அளவில் தற்போது சுற்றுச்சுவரும், தென்பகுதியில் ஒரு கலையரங்கமும், கோவில் நுழைவு வாசலுக்கு வடக்கு பக்கம் நவக்கிரக சன்னிதியும், பைரவர் சன்னிதியும் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இக்கோவில் நிர்வகிக்கப்படுகிறது.
குமரி மாவட்டத்தில் சோழர்களின் பண்பாட்டை பற்றி தெரிந்துகொள்ள இந்த கோவில் உதவுகிறது. அதிலும் குறிப்பாக 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த 7 சோழர் கால கல்வெட்டுகள், அவர்கள் நிர்வாகத்தினையும் கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலங்கள் பற்றிய குறிப்புகளும் உள்ளன. கி.பி.17-ம் நூற்றாண்டில் பராக்கிரம பாண்டியன் ஆட்சிக்காலத்தில் இக்கோவில் பழுதுபார்க்கப்பட்டது என்றும் கல்வெட்டுக்கள் கூறுகின்றன.
குமரி மாவட்டம் வரும் ஆன்மிக பக்தர்கள் நிச்சயம் சோழராஜா கோவிலுக்கு வந்து வணங்கினால் ஈசன், அம்பாளின் முழு அருளை பெற முடியும் என்கிறார்கள் இந்த ஊர் மக்கள்.
வருஷாபிஷேகம்
இந்த கோவிலில் கொடிமரம் மற்றும் பலிபீடம் இல்லை. கோவில் நுழை வாசலில் அழகிய கோபுரம் அமைக்கப்பட்டு உள்ளது. 2017-ம் ஆண்டு மே மாதம் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. அதன் பின்னர் வருடம் தோறும் வரு ஷாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வருடத்திற்கான வருஷாபிஷேகம் விரைவில் நடத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. வருஷாபிஷேகம் அன்று சாமிக்கும், அம்பாளுக்கு திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.
பூஜைகள்
இக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி மற்றும் மாதம் ஒரு முறை சங்கடஹர சதுர்த்தி பூஜை விநாயகருக்கு நடை பெறும் முக்கிய பூஜைகள் ஆகும். ஐயப்ப சாமிக்கு பங்குனி உத்திரம் மற்றும் கார்த்திகை மண்டல பூஜை நடைபெறும். தட்சிணாமூர்த்திக்கு குரு பெயர்ச்சி மற்றும் வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் அர்ச்சனை வழிபாடும், மாதந்தோறும் ஆயில்ய நட்சத்திரம் மற்றும் ஆவணி மாதம் ஞாயிற்றுக் கிழமைகளில் நாகர் தேவதை பூஜையும் நடக்கிறது.
மேலும் வைகாசி விசாகம், கந்த சஷ்டி மற்றும் மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமை முருகப் பெருமானுக்கு சிறப்பு வழிபாடு, மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமி மற்றும் ஞாயிறு தோறும் கால பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடை பெறுகிறது. அம்பாளுக்கு மாதந்தோறும் பவுர் ணமி மற்றும் நவராத்திரி பூஜை, ஆடி செவ்வாய் வழிபாடு மற்றும் பரிகார பூஜைகள் அர்ச்சனை செய்யப்படுகிறது.
மூலவருக்கு மாதம் வளர்பிறை பிரதோஷம், தேய்பிறை பிரதோஷம் ஐப்பசி மாதம் அன்னாபிஷேகம், புஷ் பாஞ்சலி, கார்த்திகை, மார்கழி மாதங்களில் சிறப்பு வழிபாடு நடக்கிறது.
குறிப்பாக மகா சிவராத்திரி வழிபாடு கோவிலில் சிறப்பாக நடத்தப்படும். அன்று பக்தர்கள் கூட்டம் கோவிலில் அலைமோதும். தமிழ் மாதம் முதல் திங்கட்கிழமை அன்று திருவிளக்கு பூஜை நடைபெறும். கோவில் நடை காலை 6.30 மணிக்கு திறக்கப்பட்டு 10.30 மணிக்கு அடைக்கப்படும். மீண்டும் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, இரவு 7.30 மணிக்கு அடைக்கப்படும். இந்த கோவிலுக்கு மொத்தம் 7 பிரகாரங்கள் இருந்துள்ளது. ஆங்கிலேயர் வருகை உள்ளிட்ட பல்வேறு படையெடுப்பு காரணமாக 2 பிரகாரங்கள் மட்டுமே தற்போது இருப்பதாக கூறப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்